Headlines News :
முகப்பு » » இலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ்

இலங்கை மலையகத்தமிழர் தொடரும் அடிமை வாழ்வு - இளைய அப்துல்லாஹ்

நூல் - இனத்துவ முரண்பாடும் மலையக மக்களும்
(கட்டுரைகள்) தொகுப்பு - தை. தனராஜ்,  ஏ. எஸ். சந்திரபோஸ்
வெளியீடு - அமரர்.  இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு மெனிங்டவுன்,  மங்களறோட்,  கொழும்பு-8விலை - 200. 00 (இலங்கை ரூபாய்) பக்கம் - 260

இறப்பர் மரமானேன் நாலு பக்கம் வாதுமானேன் எரிக்க விறகுமானேன் இங்கிலீஸ்காரனுக்கு ஏறிப்போக காரானேன் என்பது இலங்கை மலையக நாட்டார்பாடலில் பிரபல்யமான பாடலாகும்.  தனது வேதனையை அவலத்தை மலையக தொழிலாளி இப்படி பாடுகிறார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஆங்கிலேயர்களால் கூலிகளாக அடிமைகளாக கொண்டு வரப்பட்ட தமிழர்கள் இருநூறு வருடங்கள் கழிந்த பின்னும் அதே அவலப்பட்ட வாழ்வுதான் வாழ்கிறார்கள்.

சனி ஞாயிறு நாட்களில் நாவலப்பிட்டி,  ஹட்டன்,  கண்டி போன்ற மலையக நகரங்களுக்கு போனால் மலைத்தோட்டங்களில் இருந்து டவுண் பகுதிக்கு சாமான்கள் வாங்க வரும்பொழுது அவர்களை காணலாம்.  ஏழைத்தொழிலாளர்கள் என்ற அவலம் அவர்கள் முகங்களில் நிரந்தரமாக எழுதியிருப்பதை பார்க்கலாம்.  அது சிங்கள அரசியல்வாதிகளால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுக்கொண்டே வருகிறது.

யாழ்ப்பாணத்தில் தமிழர் இயக்கங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய போதெல்லாம் ஒன்றுமறியாத மலையக தமிழர்கள்@ தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக சிங்களவர்களால் தாக்கப்பட்டார்கள்.  அவர்களது ஏழைக்குடிசைகள் எரிக்கப்பட்டன.  ஆனால் யாழ்ப்பாண தமிழர்கள் இன்றும் ~தோட்டக்காட்டான்| என்றுதான் அவர்களை அழைக்கிறார்கள் அதுதான் முரண்.

அமரர். இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு,  மலையக மக்கள் தொடர்பான மிக முக்கியமான பணியை ஆய்வு ரீதியாக செய்திருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில் மலையகத்தமிழருக்கு எதிரான வன்முறைகள்,  1983 கறுப்பு  ஜூலை வன்முறைகள் பதுளை மாவட்ட மலையக தமிழ் மக்களின் கல்வியில் ஏற்படுத்திய தாக்கங்கள்,  மலையக கல்வி அபிவிருத்தியில் இன முரண்பாடுகளின் தாக்கம்,  மலையக நாட்டார்பாடல்கள், பெருந்தோட்ட காணிப்பங்கீட்டில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான பாதிப்பு, இன ஒடுக்குமுறையும் இந்திய வம்சாவளித்தமிழர்களின் இனத்துவ அடையாளங்களும்,  இலங்கை பாராளுமன்றத்தில் மலையக தமிழரின் பிரதிநிதித்துவம்,  இலங்கையின் மக்கள் தொகைப்பரம்பலில் மலையக தமிழர்களின் பரம்பலும் முரண்பாடுகளும், மலையக பெண்களின் பொருளாதார அபிவிருத்தியில் இன முரண்பாட்டின் தாக்கம்.  என மலையக மக்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் தொடர்பாக இந்நூலின் கட்டுரைகளில் ஆராயப்படுகின்றன. சு. விஜயகுமார், மூ. சந்திரகுமார், ஆ. கலையரசு, சு.  அமிர்தலிங்கம், வெ.  கணேசலிங்கம், பெ. சரவணகுமார், அ. சண்முகவடிவு, சி. புஸ்பராஜ். ரெ. புனிதா, நான்ஸி, க. விஜயசாந்தினி, பெ. ராமகிருஸ்ணன், பா. பானுமீரா, ப. ஷோபா, த. விமலேஸ்வரி ஆகியோர் இந்தத்தொகுப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சனையை நாடுதழுவிய ரீதியில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இனத்துவேசத்தை ஊட்டி வளர்க்க பயன்படுத்தியது.   அதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் மலையக தமிழர்கள்.  அவர்களுக்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது.  ஆனால் 1979 ஜூலைமாதம் கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச்சட்டம் பின்னர் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக்கப்பட்தன் பின்பு மலையக தமிழ் மக்களும் பயங்கரவாதிகள் என்று கைது செய்யப்பட்டு இன்னும் 30 வருட காலமாக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.  இந்தக்கட்டுரைகளில் ஆழமாக இந்த விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசியலில் பேரம் பேசும் சக்தியாக மலையக தமிழர்கள் இருந்தபோதும் தொடர்ச்சியாக வந்த தொழிற் சங்கங்கள் படிப்பறிவில்லாத மக்களை வைத்து அரசியல் பேரம் பேசினவே தவிர அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. இன்றுவரை நிலமை அதுதான். இலங்கையில் வாழுகின்ற சிங்களவர்கள் தமக்கு தேவையான பாராளுமன்ற  பிரதிநிதித்துவத்தை பெறுகின்ற போதிலும் மலையக தமிழ் மக்கள் இன்று வரை தமது பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதில் இருந்தும் ஏமாற்றப்படுகின்றனர்.  தொழில் சங்கங்கள்; ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி என்ற இரண்டு பெரும் கட்சிகளுக்கு பின்னால் நின்று கொண்டு அரசியல் செய்வதனால் மலையக தொழிலாளர்களுக்கான உரிமைகள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.

1960 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறீமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தில் மூன்று லட்சம் இந்தியா வம்சாவளியினருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் ஐந்து லட்சத்து இருபத்தையாயிரம் பேருக்கு இந்தியா பிரஜாவுரிமை வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை.  பின்னர் இந்திரா-சிறீமா இணக்கப்பாட்டின்படி எழுபத்தையாயிரம் பேருக்கு இலங்கை பிரஜாஉரிமையும் எழுபத்தையாயிரம் பேருக்கு இந்திய பிரஜா உரிமை வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.  ஆனால் இவை எதுவுமே நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து அவர்கள் இலங்கை இந்திய அரசுகளால் ஏமாற்றப்பட்டதை ~இன முரண்பாடு தொடர்பான கண்ணோட்டம் கட்டுரை ஆதாரங்களோடு முன்வைத்துள்ளது.

1956 ஆம் ஆண்டு இலங்கையின் அப்போதைய பிரதமரான பண்டார நாயக்கா கொண்டு வந்த தனிச்சிங்கள அரச கருமமொழி சட்டம் மலையக தமிழ் மக்கள் அரச அலுவலகங்களில் தமது தேவைகளை தாய்மொழி மூலம் செயற்படுத்த முடியாமல் அல்லலுற்றனர்.  அரசாங்க அலுவலகங்களில் தமிழர்கள் புறக்கணக்கப்பட்டு சிங்களவர்கள் அதிக அளவில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.  இந்தச்சட்டத்தினூடாக மலையக தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். 1985 இல் திம்பு பேச்சுவார்த்தைகளின் போது மலையக தமிழ் மக்களின் குடியுரிமை பிரச்சனையும் பேசப்பட்டது.  ஆனால் இன்னும் முழுமையாக தீர்க்கப்படாத பிரச்சனையாகவே இது இருக்கிறது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் காலம்காலமாக வாழ்ந்து வந்த தமிழர்களின் விகிதாசாரத்தை குறைக்கவும் சிங்கள ஆதிக்கத்தை நிலைநாட்டவும்  பெரும்பான்மை சிங்கள மக்களை தோட்டங்களில் இலங்கை அரசாங்கம் குடியமர்த்துகிறது.

கலாசார ரீதியாக தமிழ் மக்களை சிங்கள மக்களோடு இணைக்கும் நடவடிக்கை நடைபெறுகிறது.  சிங்கள பாடசாலைகளுக்கு தமிழ் மாணவர்களை சேர்த்தல், பௌத்த விகாரைகளுக்கு வழிபாட்டுக்காக செல்லும்படி மென்மையாக வற்புறுத்துதல் , பிள்ளைகளுக்கு சிங்கள பெயர்களை வைக்க வற்புறுத்துதல், மரண மற்றும் திருமண சடங்குகளில் சிங்கள கலாசரத்தை தழுவி செய்தல், பேச்சுவழக்கில் சிங்கள மொழியின் கலப்பு, பௌத்த கலாசாரத்துக்கு உரித்தான ஆடைகளை அணிதல் என்று தமிழ் சமூகத்திற்கான கலாசாரா அடயாளங்களை இல்லாமலாக்கி நாளடைவில் அவர்களை பௌத்த சிங்களவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.

1956, 1977, 1978, 1981, 1983 இனக் கலவரங்களினால் சமூகத்தில் வசதிபடைத்தவர்கள் இந்தியாவை நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.  அதன் பின்பு கலாசார ரீதியான தாக்குதல்கள் தொடர்வதாக இந்தக்கட்டுரைகளில் பதியப்பட்டுள்ளன. இலங்கையில் வாழும் மலையக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிரந்தரமானதாகவும் திட்டமிட்ட முறையிலும் நடைபெறுவதை அவதானிக்கலாம். இலங்கை மலையக சமூகத்தின் பல்பக்க பார்வையாக அரசியல், சமூகம், கலாசாரம், இன ஒடுக்குமுறை போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஆய்வு ரீதியான கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  இலங்கை மலையக மக்களின் வாழ்வு தொடர்பாக அறிய விரும்பும் வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இந்த தொகுப்பு மிக முக்கியமானதாகும்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates