லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறச் சென்ற நோயாளியின் பெற்றோர் உறவினர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
நஞ்சு அருந்திய நிலையில் இன்று (07) காலை பாடசாலை மாணவி ஒருவர் லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குறித்த மாணவியின் தந்தை மகாமுனி வீரமலை தெரிவிக்கையில், ´வீட்டுப் பிரச்சினை காரணமாக எனது மகள் இன்று காலை நஞ்சருந்திவிட்டார். அவரை உடனடியாக லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்தோம். 10 நிமிடங்களில் வைத்தியர் வந்து பார்வையிட்டு மகளை வாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார். பின்னர் வாட்டுக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நான்கு தாதியர்கள் இருந்தனர். சுமார் 25 நிமிடங்கள் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. அதனால் நாங்கள் தாதியரிடம் முரண்பட்டோம். அதற்கு ஒரு தாதி ´இங்கு நாய்கள் போல் கத்திக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்கு அவசரம் என்றால் வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும்´ என்று எங்களை திட்டினார். பின்னர் அதில் ஒரு தாதி மகளின் வாய்க்கு ´பட்டை´ ஒன்றை போட்டு வாந்தி எடுக்க வைத்து அவரை நீராட்டி அழைத்து வருமாறு கூறினார். நீர் வசதி இல்லை. எனினும் ஒருவாறு மகளை நீராட்டி கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தோம். அதன் பிறகும் எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை´ என்றார்.
இதனால் பெற்றோர்கள் சத்தமிட்டு பேசியதால் வைத்தியசாலை வைத்தியர் உள்ளிட்ட குழு லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
அதன்பின், சுரேஸ், மகாமுனி வீரமலை உள்ளிட்ட மூவர் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று இரவும் சுகயீனமுற்ற நிலையில் ஆண் ஒருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வைத்தியசாலை ஊழியர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காது இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ரி-20 உலகக் கிண்ண போட்டியை காண்பதில் அதிக அக்கறை செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு மனித உயிரை விட கிரிக்கெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக போய்விட்டது!
இப்படியான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை உண்மை என நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் கல்யாணகுமார் உறுதிப்படுத்தினார்.
வைத்தியசாலை குறைபாடு குறித்து லிந்துலை வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டால், வைத்தியசாலைக்கு உரிய வளம் மற்றும் ஆளணி இல்லை என தெரிவிக்கின்றார்.
லிந்துலை வைத்தியசாலையில் இவ்வாறு அறுவெறுக்கத்தக்க சம்பவங்கள் நடைபெறுவது இன்று நேற்று மாத்திரமல்ல. தொடர்ச்சியாக நடந்த வண்ணமுள்ளது.
கடந்த வாரம் கூட நஞ்சருந்திய நிலையில் பெண் சென்றெகூலஸ் தோட்டத்தில் இருந்து லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணை நீராட்ட குறைந்த அளவு நீர் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. முகம் கழுவ நீர் இல்லை. இளைஞர் ஒருவர் மீன் தொட்டி நீரில் முகம் கழுவியதாக கவலையுடன் தெரிவித்தார்.
கடந்த வருடம் லிந்துலை பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் காயமடைந்தவர்களை பொது மக்கள் தூக்கிக் கொண்டு லிந்துலை வைத்தியசாலைக்கு வந்தபோது அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல அம்பியூலன்ஸ் வசதியும் இருக்கவில்லை.
இந்த விடயத்தை அடுத்தும் பொது மக்கள் - வைத்தியசாலை ஊழியர்கள் இடையே முறுகல் ஏற்பட்டு அந்த விடயமும் லிந்துலை பொலிஸ் நிலையம் வரை சென்றது.
நுவரெலியா மாவட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் ஊழியர் பற்றாக்குறை, நீர் வசதியின்மை, சுகாதார வசதியின்மை, அரச ஊழியர்களின் அசமந்த போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்கள், ஊடகங்கள் பல முறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் ´செவிடம் காதில் ஊதிய சங்கு போல்´ ஆகியுள்ளது.
லிந்துலை வைத்தியசாலை மத்திய மாகாணத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
மத்திய மாகாண சபைக்கு இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 11 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நுவரெலியா மாவட்ட மக்கள் இந்த உறுப்பினர்களுக்கு தங்களுடைய வாக்குகளை வாரி வாரி வழங்கினர்.
மக்களின் வாக்குகள் மூலம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் இருந்து உதயகுமார், ரமேஸ், சக்திவேல், பிலிப், கணபதி கணகராஜ், ராம் ஆகியோரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் சிங் பொன்னையா, சோ.சிறிதரன், சரஸ்வதி சிவகுரு ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சதாசிவமும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து ராஜாராமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
11 பேர் மாகாண சபையில் இருந்தும் என்ன பயன்? லிந்துலை வைத்தியசாலையை நம்பி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். லிந்துலை வைத்தியசாலையை அண்டி வாழும் இந்த மக்களுக்கு குறுகிய நேரத்தில் சென்று சிகிச்சைப் பெற வேறு வைத்தியசாலைகள் இல்லை. இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் செலவிட்டு சென்று சிகிச்சைப் பெறக்கூடிய நுவரெலியா மற்றும் கிளங்கன் வைத்தியசாலைகளே உள்ளன. அதற்கான பொருளாதார வசதி மக்களிடம் இல்லை.
தோட்ட வைத்தியசாலைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. காய்ச்சல் என்று செல்லும் மக்களுக்கு பெனடோல் வழங்கி அனுப்புவதே அதிகமாக நடக்கிறது. நோய்வாய்ப்பட்டால் விதியை நொந்து சாவதை விட வேறு வழியில்லை.
வாக்களித்து மாகாண சபைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்த நினைத்தால் 11 தமிழ் மாகாண சபை உறுப்பினர் சாமிகளும் லிந்துலை வைத்தியசாலை தொடர்பில் தங்கள் கவனத்தை செலுத்தி இன்னும் காலம் கடத்தாது குறுகிய காலத்தில் உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
அப்படி செய்யாவிட்டால் ´நன்றி கெட்டத் தலைவர்கள்´ என்ற அவப்பெயர் உங்களை வந்தடையும் என்பது சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...