Headlines News :
முகப்பு » » "இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தவர்கள் தோட்டத்தொழிலாளர்களே" எம். திலகராஜ்

"இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அரசியல் அடையாளம் கொடுத்தவர்கள் தோட்டத்தொழிலாளர்களே" எம். திலகராஜ்

தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் எம். திலகராஜ் சொல்கிறார்

இலங்கையில் இரண்டு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வாழ்க்கை வரலாற்றைக் கொண்டிருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு ‘மலையகத் தமிழர்கள்’ என்கிற தனியான அங்கீகாரத்தையும் தனித்துவ அரசியல் அடையாளத்தை யும் பெற்றுக்கொடுத்தது பெருந்தோட்டத் தொழிலாளர்களே என தொழிலாளர் தேசிய முன்னணி யின் செயலாளர் நாயகம் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 7 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை வெளிநாடு வாழ் இந்தி யர்களுக்கான மாநாடு நடைபெற்றது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகா ரங்கள் தொடர்பான அமைச்சர் வயலார் ரவி தலைமையில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் சார்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு தமது தொழிற்சங்க பலத்தின் ஊடாகவே சுதந்திரத்துக்கு முன்பிருந்து இது நாள்வரை தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொண் டுள்ளனர். மலையகத் தொழிற்சங்க வரலாற்றின் ஆரம்பகர்த்தாவான கோ. நடேசய்யர் இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரப்பட வேண்டியவர்.

1947 ஆம் ஆண்டு  அரசவைக்கு இந்திய வம்சாவளி தோட்டத் தொழி லாளர்களின் பிரதிநிதிகளாக ஏழு பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய பெருமை தொழிலாளர் சமூகத்தையே சாரும். அதேபோல இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்களான ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தொழிற்சங்க பலத்துடனான வாக்குகளினாலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கொழும்பில் வாழும் இந்திய வம்சாவளி வர்த்தக சமூகத்தினர் உள்ளடங்கலான தமிழர்களின் பங்களிப்போடு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி தமிழர்களாகிய எமக்கு இலங்கையின் குடியுரிமை பறிக்கப்பட்டிருந்த சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் ‘மலையகத் தமிழர்’ எனும் பொது அடையாளத்தை உருவாக்குதில் இலங்கை திராவிடர் முற்போக்கு கழகத்தின் தலைவராக இருந்த தோழர் இளஞ்செழியன் முன்னோடி யாக இருந்துள்ளார். அதேபோன்று அந்த கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிலும் கல்வியாளர்களை உருவாக்குவதிலும் முன்னோடியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் இரா. சிவலிங்கத்தின் பங்களிப்பையும் மறந்துவிட முடியாது.

இன்று இலங்கைத் தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத் தோடு அவர்கள் பெற்ற சர்வதேச வியாபகத்துக்கு மத்தியில் இந்திய வம்சாவளி தமிழர்கள் தம்மை மலையகத் தமிழர்கள் எனும் கருத்துருவாக்கத்தின் கீழ் இலங்கையில் தனித்தேசிய இனமாக அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டுள் ளனர். அவர்களால் அடையப்பட வேண்டிய இலக்குகள் இன்னும் பல எட்டப்பட்டிருப்பினும் ‘மலையகத் தமிழர்கள்’ எனும் கருத்துருவாக்கத் தின் பிரதான சக்தியாக திகழும் தோட்டத் தொழிலாளர்கள் வெவ்வேறு அரசியல் தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்களாக இருந்தபோதிலும் கூட ‘தொழிற்சங்கக் கட்டமைப்பு’ என்கின்ற பொது அடையாளத்தினால் மலையகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதில் உறுதியாகவும் நிரந்தரமாகவும் செயற்பட்டு வருகின்றனர். மலையக சமூகம் பல்வேறு சமூக நிலைமாற்றங்களை அடைந்து வருகின்ற போதிலும் இன்னும் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் மூல சக்தியாக தொழிற்சங்க கட்டமைப்பேயுள்ளது.

தொழிலாளர் தேசிய சங்க கல்வியாளராகவும் இலங்கை இந்திய காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் இருந்த வி.கே. வெள்ளையன் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் கல்வியாளரும் இலக்கிய படைப்பாளியுமான சி.வி. வேலுப்பிள்ளை அவர்களால் பல புதிய பரிமாணங்களை அடைந்தது. இன்று நாம் இச்சங்கத்தின் சார்பாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதில் தொழிலா ளர்களின் பங்களிப்பு அளப்பரியது.

ஒரு தோட்டத் தொழிலாளியின் பிள்ளை என்ற வகையில் இவ்விடயத்தில் பெருமை அடைகின்றேன். சி.வி. அவர்கள் பிறந்த அதே மடகொம்பரை தோட்டம் மலையகத்தின் முக்கிய அரசியல்வாதிகளை பிரசவித்துள்ளது. அமரர் சி.வி. வேலுப்பிள்ளை 1947 ஆம் ஆண்டே மடகொம்பரை மண்ணிலிருந்து நாடாளுமன்றம் சென்றார்.

அவரைத் தொடர்ந்து முன்னாள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் அமைச்சருமான எம்.எஸ். செல்லச்சாமியும் மலையக மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை தோற்றுவிப்பதில் முக்கிய தூணாகவிருந்த அமரர் வி.டி. தர்மலிங்கம், தற்போது எமது அமைப் பின் தலைவராக இருக்கின்ற பாராளு மன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் உட்பட நானும் அரசியல் பாரம்பரிய முள்ள தோட்டமான மடகொம்பரை தோட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்விப் பாரம்பரியம் ஒன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மலையக மக்கள் மத்தியில் இருந்து வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணிகள், முகாமைத்துவ பட்டதாரிகள் என தொழில் துறையினர் உருவாகத்தொடங்கியுள்ளனர். தொழிலாளர் பரம்பரையாக இலங்கைக்குச் சென்ற இந்திய வம்சாவளி தமிழர்களில் இருந்து இன்று இருவர் இலங்கை நாட்டில் நீதிபதிகளாகவும் பதவி பெற்றுள்ளனர். அதில் ஒருவர் மலையகப் பெண். நான் கல்வி கற்ற இந்திய வம்சாவளி மக்களின் முதன்மை கல்லூரியாக திகழும் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் மாணவர்கள் என்ற அடிப்படையில் எமது கல்லூரியும் பெருமை பெறுகின்றது.

இந்த புலமையாளர்களின் எண்ணிக்கை தொடர்பில் வாதங்கள் முன்வைக்கப்படலாம். ஆனால் ஒரு தேயிலை தோட்டத் தொழிலாளியின் பிள்ளையாக பத்து அடி அகலமும் 12 அடி நீளமும் உள்ள லயன் அறைகளில் இருந்து வைத்தியராக பொறியியலாளராக பட்டம் பெறுவது என்பது ஒரு சவால் நிறைந்த முயற்சியே. இன்றும் கூட லயன் அறையே எங்கள் வீடாகக் கொண்ட நானும் கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் எனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளேன். எனது உயர் கல்விக்காக நான் பெற்றுக்கொண்ட ஒரே உதவு தொகை இந்திய அரசாங்கத்தினால் இலங்கையில் வழங்கப்படும்  CEWET (Ceylon Estate Workers Education Trust Fund எனப்படும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான மாதாந்த உதவு தொகை மாத்திரமே.

அதேநேரம் இந்தியாவில் வந்து கல்வி கற்பதற்காக உள்ள புலமைப்பரிசில் பரிசில்கள் தொடர்பில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தற்போது இருக்கின்ற புலமைப் பரிசில் நடைமுறைகளின் கீழ் வறுமை நிலையிலுள்ள தோட்ட பகுதி மாணவர்களின் சேர்க்கை மிக குறைவாகவேயுள்ளது. அல்லது அவை சென்று சேர்வதில் பல இடர்பாடுகள் உள்ளன. இந்திய வம்சாவளியினர் அல்லாதோரும் கூட இந்த வாய்ப்புக்களை பெற்றுவருகின்ற சூழ்நிலையில் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை உள்வாங்கும் வகையில் இந்திய அரசாங்கம் நடைமுறைகளைச் செய்ய வேண்டும்.

இலங்கையில் நடைமுறையிலுள்ள லிவியி OCI (Overseas Citizen of India)  வெளிநாட்டில் வாழும் இந்திய பிரஜைகள் என்கின்ற நடைமுறை எந்த சந்தர்ப்பத்திலும் தோட்டத் தொழிலார்களை உள்வாங்கப் போவதில்லை.

ஏனெனில் மூன்றாவது தலைமுறையாக வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாம் இந்தியாவில் வாழ்ந்ததற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனைச் சமர்ப்பிக்கும் சாத்தியம் எந்தவொரு தொழிலாளிக்கும் இருக்கப்போவதில்லை.

ஆனால் PIO (Persons of Indian Origin)  எனப்படுகின்ற வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் எனும் வகுதியின் கீழ் அதற்காக வழங்கப்படும் அட்டை (PIO Card) தோட்டத் தொழிலாளர்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியும். எனினும் இரட்டை குடியுரிமை அந்தஸ்துள்ள இலங்கை போன்ற நாடுகளில் ஜியிலி முறையை அறிமுகப்படுத்த முடியாத நிலைமை காணப்படுகின்றது.

அதற்கு மாறாகவே லிவியி நடைமுறையிலுள்ளது. ஆனால் லிவியி பெறுவதற்கான சான்றுகளை சமர்ப்பிக்க முடியாத லட்சக்கணக்கான தோட்டத்தொழிலாளர்களைவிடுத்து 5 சதவீதத்துக்கும் குறைவான வீதத்தினரே அதனை அனுபவிக்கக் கூடியதாகவுள்ளது.

எனவே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தமது பண்பாடு, கலாசார, சமூக பழக்க வழக்கங்களினால் மாத்திரமே இந்திய வம்சாவளிகளாகவுள்ளனர். அதைவிடுத்து இங்கு வருகை தந்திருக்கும் சர்வதேச ரீதியாக வாழும் ஜியிலி சமூகத்தினர் அனுபவிக்கக்கூடியதான ஜியிலி விarனீs சலுகைகளை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. அதற்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை.

எனவே இந்திய கலாசார பண்பாடு பழக்க வழக்கங்களின் ஆணிவேராகவும் அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ஆதாரபூர்வமான இந்திய வம்சாவளி தன்மை குறித்த கவனம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்று.

நன்றி - தினகரன்
SUNDAY JANUARY 23, 2011
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates