Headlines News :
முகப்பு » , » சக்தி. அ. பாலஐயா

சக்தி. அ. பாலஐயா


இலங்கையில் மத்திய மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த கவிஞர், நலிவுற்ற மக்களின் ஏக்கத்துக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாக வீச்சுமிக்க தமது எழுத்துக்களாலும், வீராந்த பேச்சுக்களாலும் சிறந்த பணியாற்றி வருபவர். கைதேர்ந்த ஓவியர். பல்கலைகளிலும் ஆற்றல் வாய்ந்த கலைஞராவார். கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் போதனாசிரியராகப் பணிபுரிந்து சிற்பம், சித்திரம், வண்ண வேலைகள் தொடர்பான துறைகளில் பல கலைஞர்களை உருவாக்கியவர். மும்மொழி வல்லுனர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என பல்துறையிலும் புகழுக்குரிய சக்தி. அ. பாலஐயா மலையக மக்கள் எழுச்சிக்கு பாடுபட்டவர்களில் ஒருவர்.

இலங்கையில் மத்திய மலையகத்தில் விஸ்வநாதர், இலக்குமி அம்மை தம்பதியினரின் புதல்வராக 1925ஆம் ஆண்டு ஜுலை 26 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தபால ஐயா தனது பத்தாவது வயதிலேயே ‘பாரதியின் தாக்கம்’ என்னும் தலைப்பில் தனது முதல் கவிதையை எழுதினார். காந்தி பக்தராகவும் கதராடை அணிபவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட தலைவர்களின் ஆற்றல், பெருமை, தியாகம் ஆகியவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மிக்கவராகவும் அந்தப் பத்து வயதிலேயே இவர் இருந்திருக்கின்றார் என்பது ஆச்சரியத்தைத் தருகின்றது.

பத்து வயதிலேயே பாட்டெழுதத் தொடங்கினாலும் அதை அவர் ஏனோ தொடரவில்லை. ஓர் ஓவியராகவே தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வந்தார். ஆனாலும், இவருக்குள்ளே ஒரு கவிஞன் உருவாகிக் கொண்டே இருந்தான். 

படிப்பை முடித்துக் கொண்ட சக்தி ஓர்  ஓவியராகவே தனது வாழ்வைத் தொடங்கினார். ஒரு Commercial Artist  ஆகத் தொழிலை மேற்கொண்ட இவர் ஒரு சில நூல்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் அட்டைப் பட ஓவியங்கள் வரைந்துள்ளார். வீரகேசரியின் ஆசிரியர் திரு. லோகநாதனின் சிறுகதைத் தொகுதி – சீ.வி. நடத்திய ‘கதை’ என்னும் சஞ்சிகை போன்றவைகளை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இலங்கை அரசின் நுண்கலைக் கல்லூரியில் 1943 – 1944 ஆம் ஆண்டுகளில் கலை ஆசிரியராக பயிற்சி பெற்ற இவர், ஆங்கிலக்கலை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும், ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் அரசாங்கக் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும் 1951வரை பணிபுரிந்துள்ளார்.

‘Ceylon Teachers College’  மற்றும் ‘Hay Wood’s College Of Fine Arts’ ஆகிய கலைக் கூடங்களில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றிய சக்தியின் ஓவியக் கண்காட்சிகள் கொழும்பிலும் பிற இடங்களிலும் 1948 – 49 ஆம் ஆண்டுகளில் பிரசித்தம் பெற்றன. காலப்போக்கில் இவரது சிந்தனைகள் கவிதைக்கு வித்திட்டன. 1949க்குப் பின் வீராவேசம் கொண்ட இவருடைய கவிதைகளும், கட்டுரை இத்தியாதி எழுத்துக்களும் வீரகேசரி, தினகரன், சுதந்திரன், ஈழநாடு போன்ற ஏடுகளில் அடிக்கடி பிரசுரம் பெற்றன. கல்கி மற்றும் சி. என். அண்ணாத்துரை அவர்களின் திராவிட நாடு போன்ற தமிழக ஏடுகளிலும் சக்தியின் எழுத்துக்கள் இடம்பெற்றன.

ஓவியக் கலைஞர்கள் பற்றிய வரலாற்று கட்டுரைகளை யும்ää ஓவியங்கள் கூறும் தத்துவங்கள் பற்றியும் விரிவாக பத்திரிகைகளில் எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் துணை ஆசிரியராகவும் ‘தமிழ் ஒலி’யின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சொந்த பத்திரிகையான “வளர்ச்சி” யில் 1956ம் ஆண்டில் எழுதிய எழுச்சிமிகு கட்டுரைகளை தமிழகத்தில் ‘திராவிட நாடு’ மறுபிரசுரஞ் செய்துள்ளது. 

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணை விளைவாகவே ஆரம்பகால மலையக இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன என்னும் உண்மை மலையக இலக்கியம் பற்றிய ஆரம்பத் தேடல்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே உணர்ந்துவரும் ஒரு முக்கியமான விடயமாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலக் கோப்பித் தோட்டக் குடியேற்றத்திலிருந்து, பிந்திய தேயிலைத் தோட்டக் குடியேற்றக் காலத்திலிருந்தும் இத்தென்னிந்திய மக்கள், மலையகத் தொழிலாளர்கள் பட்டதுன்ப துயரங்களும் அனுபவித்த வேதனைகளும், பட்டாளத்துக் கட்டுப்பாடுகள் போன்ற வெள்ளைக்காரர்களின் இராணுவ அடக்கு முறைகளும் எழுத்திலடங்காதவைகள்.

தங்களின் சக்தி உணராமல், உழைப்பின் பயன் உணராமல் சோர்ந்தும் சோம்பியும் கிடந்த இவர்களைத் தட்டி எழுப்புவதையே குறிக்கோளாகக் கொண்டதாய்க் கிளம்பியதே மலையக இலக்கியம். இவ்வெழுத்து முயற்சிகளின் முன்னோடிகளாக விளங்கும் கோ. நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, கே. கணேஷ், சக்தி பாலையா போன்றவர்கள் சமகாலத்தவர்கள். இவர்களுடைய சிந்தனைகளும் ஒன்றாகவே இருந்திருக்கின்றன. இந்த மக்களின் விழிப்பு, விடிவு, சுதந்திரச் சமத்துவம் ஆகியவைகளே இவர்களுடைய எழுத்துப் பணிகளின் முனைப்பான அம்சங்களாக இருந்தன. ‘நடேசய்யரின் சாதனைகள்’ என்று நிறைய விஷயங்களை தனது கட்டுரைகள் மூலம் வெளியிட்டவர் மக்கள் கவிஞர் சி.வி.

சி. வி. க்கு பரவலான அறிமுகத்தினையும் ஏகோபித்த புகழையும் கொடுத்த ‘In Ceylons Tea Gardens’  எனும் ஆங்கிலக் கவிதை நூலை ‘தேயிலைத் தோட்டத்திலே’ என்று தமிழாக்கித் தந்தவர் கவிஞர் சக்தி .அ. பாலையா. இந்தத் தமிழாக்கம் வீரகேசரியில் தொடராகப் பிரசுரிக்கப்பட்டது. பிறகு செய்தி ரா.மு. நாகலிங்கம் அவர்களால் செய்தி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. (ஆங்கில மூலம் 1954- மொழி பெயர்ப்பு 1969)

 ‘கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் கவிதைத் தொகுதியைத் தமிழாக்கும்போது கவிஞரவர்களின் உள்ளத்தையும் உணர்வையும், ஏழ்மையில் வாடும் மலையத் தொழிலாளர்களின் பால் அவர் கொண்டிருக்கும் பாசமும் பரிவும் அலைத்திரல்களாக எனது சிந்தனைகளைத் தழுவித் தொடர்ந்தன....

கவிஞரின் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழ்க் கவிதையாக்கும்போது அவரது மூலக் கருத்துணர்வில் கலந்திட விழைந்திருக்கின்றேன். கருத்தாழம் வழுவாதிருந்திடக் கவிஞரின் கவிதைகளில் ஊடுருவும் மலையக மக்களின் உணர்வாம் கருப் பொருளைத் தழுவியே தமிழ்க் கவிதைகளை தந்திட முயன்றிருக்கின்றேன்….|| என்று இந்த நூலுக்கான முன்னுரையில் சக்தி குறிப்பிட்டிருந்தாh.;

 1963ல் தினகரனின்  கலை மண்டலம் பகுதியில் ‘மேல் நாட்டு ஓவியர்கள்’ என்னும் தலைப்பில் பல ஆக்கங்களைப் படைத்துள்ளார். அதே காலகட்டத்தில் சுதந்திரனில்  மலை நாட்டு அறிஞர்கள்  என்னும் தலைப்பில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். 


 சக்தி பாலையா, தனிவழிக் கவிராயர், மலையரசன், லக்ஷ்மி ஆகிய புனைப் பெயர்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவர் தமிழ் ஒளி (1954) வளர்ச்சி (1956) ஆகிய சஞ்சிகைகளையும் வெளியிட்டுள்ளார். 1956ன் அரசியல் கெடுபிடிகள் பற்றி நாம் அறிந்ததே. சிங்களம் மட்டும் சட்டத்தின் மூலம் தமிழுரிமை  பறிக்கப்பட்டு சிங்களப் பேரினவாதம் முனைப்புப் பெற்ற காலம் அது. அரசின் பேரினவாதத்திற் கெதிராகவும் அரசியல்வாதிக ளையும்ää சிங்களத் தலைவர்களையும் நேர்மையான வழியில் நடக்கும் படியும் அறிவுறுத்துவதற்காக வென்றே சக்தி பாலையா அவர்கள் இந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். ‘வளர்ச்சி’ பத்திரிகையின் அன்றைய ஆசிரியத் தலையங்கங்கள் மிகவும் காத்திரமானதாகவும்ää காரசாரமானதாகவும் இருந்தன. அவற்றின் முக்கியம் கருதி அறிஞர் அண்ணாவின் “திராவிட நாடு” இத்தலையங்கங்களை மீள் பிரசுரம் செய்து வந்தது.

1948ல் இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்தகையுடன் மலையக மக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து மலையகத் தலைவர்கள் நடத்திய சக்தியாக்கிரகத்தில் சக்தீயும் கலந்துகொண்டார்.

1956ன் சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து 1957ல் தமிழ்த் தலைவர்கள் நடத்திய எதிர்ப்புக் கூட்டங்களிலும் இவர் கலந்து கொண்டார். ‘மனோதத்துவமும் கலையும், போதனா முறையும்’ என்னும் பயிற்சி நூலினை 1952ஆம் ஆண்டு வெளியிட்டார்.

 ‘சொந்த நாட்டினிலே’ என்னும் தேசியப் பாடல்கள் அடங்கிய நூலினை மொழியுரிமைக்காக 1956ல் வெளியிட்டார். வீரகேசரியின் துணை ஆசிரியராகச் சில காலமும் சி.வி.யின் “மாவலி” சஞ்சிகையின் இணை ஆசிரியராகச் சிலகாலமும் பணிபுரிந்துள்ளார். 1960களின் ஆரம்பத்தில் ‘இந்திய வம்சாவழிப் பேரவை’ என்னும் அமைப்பினைத் தொடங்கி மலையக மக்களின் நிலைமைகளை இந்திய இலங்கை அரசினர்களுக்கு அறிவிப் பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளுக்கான விடிவுகளைத் தேட ஒரு வழி சமைத்தார்.

1981ல் பஸ்ஸிலிருந்து விழுந்து ஒரு கோர விபத்துக்குள்ளானார் சக்தீ. அது பற்றி அவர் கூறுகையில், அவரது மன உறுதியும், வாழ்வின் மீதான அவரது திடமான நம்பிக்கையும், திண்மையும் புலனாகிறது.

    ‘நான் பஸ்ஸினடியில் கிடக்கின்றேன். நான் கிடப்பது பஸ் சாரதிக்குத் தெரியாது. இடது காலின் மேல் பஸ்ஸின் பின் சில்லு ஏறியபோது கால் எலும்புகள் கரகரவென நொறுங்கும் மெல்லிய ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. சில்லு படிப்படியாக எனது முழங்கால், தொடை என்று ஏறி கத்த முடியவில்லை. சத்தம் வர மறுக்கிறது. அப்போது தான் யேசுநாதரின் கிருபையால் அது நடந்தது. யாரோ எனது நெஞ்சுக்குள் புகுந்து தொண்டை வழியாக வெளியேறி கத்து, கத்து என சத்தமிட்டார்கள். கத்தினேன். பஸ்ஸின் சில்லு அசையாமல் நின்றுவிட்டது. என்னை எப்படி வெளியே எடுத்தார்கள் என்ன செய்தார்கள். ஒன்றுமே தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் கிடந்தேன்.

    மாதக்கணக்கில் மருத்துவமனைக் கட்டில் பிறகு இரண்டு கால்களையும் முழங்காலுடன் வெட்டினால் தான் உயிர் பிழைப்பேன் என்றார்கள் டாக்டர்கள். இரண்டு கால்களையும் இழந்த பிறகு நான் எப்படி வாழ்வது. பிடிவாதமாக மறுத்து விட்டேன். மரணத்துடன் வருடக்கணக்கில் போராடி பலவிதமான சுய வைத்தியங்கள் செய்தேன்.

    பிறகு மெதுவாக ஊன்று கோல்களுடன் எழுந்து நடமாடினேன் என்று கூறும் சக்தீ இப்போது ஊன்றுகோலினையும் வீசி எறிந்துவிட்டு மிகவும் சாதாரணமாக எதுவுமே நடவாதது போல் மீண்டும் தனது வேலைகள், இலக்கியக் கூட்டங்கள் என்று உலாவருகின்றார்.
      இவரது கலை இலக்கியப் பணிகளுக்காக அரசாங்கம் கவிச்சுடர் பட்டமளித்துக் கௌரவித்தது (1987). தமிழ் ஒளிபட்டமும் விருதும் 1993ல் வழங்கப்பட்டது.  இலங்கை கம்பன் கழகம் 1998ஆம் ஆண்டு “மூதறிஞர்”; விருதளித்தது. கலாசார அமைச்சு ~~கலாபூஷணம்|| விருதும் வழங்கி இவரை கௌரவித்துள்ளது.

      தேசிய அருங்கலைச்சபை மற்றும் அரசின் மலையகக் கலாசார மேம்பாட்டுக்குழு ஆகியவற்றின் அங்கத்தவராக இருந்து கவிஞர் சக்தீ பணியாற்றி வருகின்றார். இவர் இதுவரை எழுதியுள்ள நூல்களாவன
  • மனோதத்துவமும் கலையும் போதனா முறையும் 1952 
  • சொந்த நாட்டிலே – தேசிய கீத நூல் 1956
  • தேயிலைத் தோட்டத்திலே – மொழிபெயர்ப்புக் கவிதை நூல் 1969
  • சக்தீ பாலஐயா கவிதைகள் - துரை வெளியீடு 1998
நன்றி - அவர்கள் நம்மவர்கள்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates