பதுளையிலிருந்து தென்கிழக்கே பசறைக்குச் செல்லும் பாதையில் இரண்டோ, மூன்றோ மைல் தொலைவில் அமைந்திருக்கும் - நிலவரைபடத்துக்கும் கண்ணாமூச்சிக் காட்டும் ‘தெளிவத்தை” என்ற தோட்டத்துப் பெயரை, நவீன தமிழ் இலக்கியத்தின் --------- பொறித்து வைத்த இலக்கிய பெருமகன் தெளிவத்தை ஜோசப்.
ஐம்பது ஆண்டுகால இலக்கியப்பணியில், தனது எழுத்தின் வலிமையால் மலையக இலக்கியத்தின் செழுமையை கடல் கடந்தும் நிறுவிய ஆளுமை அவருடையது.
மலையக இலக்கியம் என்ற பச்சை மண்ணில் தெளிவத்தை ஜோசப்பின் தசைநார்கள் நெய்யப்பட்டடிருக்கின்றன என்றால், அதுசரியாய்ச் சொன்னதாகவே அமையும். ‘தெளிவத்தை’ என்ற பதுளையின்; புவியியல் பிராந்திய அலகினைத் தனது பெயரோடு இணைத்து, தமிழ் இலக்கிய உலகில் ஜோசப் நிகழ்த்தியிருப்பது சாதனை.
மனித ஜீவிகளாகவே கருதப்படாத ஒருசனக் கூட்டத்தின் தீனக்குரலை தீவிர மூர்ச்சனையோடு எழுத்தியக்கத்தில் பதிவு செய்த பெரும் வியக்தி அவர். ’தோட்டக்காட்டுக் கதையா? தூக்கிப்போடு குப்பையில்” என்ற பிறத்தியான் மனோபாவம் மேலோங்குகின்ற சூழலில், தனது சூழலின் நிதர்சனத்தை, அதன் வெம்மையின் தவிப்பை, சிறுமையின் இழிவை, மனிதாயத்தின் மென்னுணர்வை, சுரண்டலின் சூக்குமத்தை, இனவாதத்தின் நச்சுக்கொடுக்குகளை, இருண்மையின் வியாபகத்தை, அநாதரவின் பச்சாதாபத்தை, உணர்வுகளின் இடத்தை தந்திரமும் வக்கிரமும் அபகரித்துவிட்ட அவலத்தை தெளிவத்தை ஜோசப் தனது கதைகளிலே மீட்டியிருக்கிறார்.
மலையக மக்களின் பேச்சுவழக்கை, கவித்துவவீச்சோடு, உரைநடையில் வளர்த்த மேன்மை அவருடையது. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு அதுவரை பரீச்சயப்பட்டிராத புதிய மொழியாளுகையை ஜோசப் கதைகள் அறிமுகம் செய்தன.
மலையக சமூக மாந்தரின் ஆத்திரங்கள், ஆற்றாமைகள், ஏக்கங்கள், ஆவேசங்களை அவரது சிறுகதைகள் ஜீவத்துடிப்புடன் இலக்கியார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளன. லயக்கூச்சலை, பீலிக்கரை சண்டையை, மனிதார்த்தமான பரிவுடன் பார்க்கும் அவரது பார்வைக்கோணம் வித்தியாசமானது. லயக் காம்பராவில்,பெரட்டுக்களத்தில், சம்பளவாசலில், இஞ்சின் காம்பிராவில், கவ்வாத்துமலையில், துரை ஆபீசில் என்று மலையகத்தின் பல்வேறு களங்களில் விரியும் வாழ்க்கைக் கோலங்களில் தோய்ந்த தன் அனுபவங்களைச் சிறுகதைகளில் வெளிப்படுத்துவதில் அவரது சிருஷ்டிகரம் பூரணத்துவம் கொண்டிருக்கிறது.
இலங்கை இந்திய அரசுகளின் பேச்சுவார்த்தைகளில், இலங்கை அரசின் அக்கறைகளில் வெறும் எண்ணிக்கை மூடைகளாகவே தெரிந்த இந்த சமூகக் கூட்டத்தில் தனி மனித உணர்வுகள் எவ்வளவு உக்கிரங்கொண்டு காணப்படுகின்றன என்பதை ஜோசப்பின் கதைகள் வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
பந்தபாசங்கள் என்பனவெல்லாம் வெளிறிப்போய், அற்பப் பொருளாய் நலன்களுக்குமேல் சிந்திக்கமுடியாத மௌடீகத்தில் மாய்ந்து போனஅவலம் நம் நெஞ்சைச் சுடுகிறது. உழைப்பு என்பதன் மகத்துவம் அழிந்து போய்,அது சிறைவாழ்வின், நரக இருப்பின் பிசின் போலாகிவிட்டது.
இந்த மலையகத் தமிழர்களின் நாளாந்த வாழ்வின் சகல கூறுகளையும் துல்லியமாகத் தெரிந்த மகத்தான கலைஞனின் படைப்புகளாக ஜோசப்பின் சிறுகதைகள் திகழ்கின்றன. அவருக்குச் சொல்வதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. அவரது அனுபவங்கள் அவரைப் புடம் போட்டிருக்கின்றன. தோட்டத்துப் பெரியதுரை, சின்னதுரை, கண்டாக்கையா, கணக்கப்பிள்ளை, சின்னவர், கங்காணி, தொழிலாளி, கிளார்க்குகள், ஆசிரியர்கள், டிரைவர்மார், மெக்கானிக்குகள், சிறுவியாபாரிகள் என்று மலையகத்து மாந்தர் அனைவரதும் பிரத்தியட்ச நிலைகளை ஜோசப் நேராக எதிர்கொள்கிறார். அவர் சுவாசித்த மலையகக் காற்று, அவர் நடந்த லயத்துப்பாதை, அவர் திரிந்த லயங்கள், அவர் அனுபவித்த ஊவாக்கட்டவளை பஸ்சேவை, எல்லாமே மூக்கும் முழியுமாய் அசலான கதைகளாக நமக்குக் கிடைத்திருக்கின்றன.
மனித ஜீவன்களின் மீதான கனிந்த பார்வையும், மனிதாபிமானக் கசிவும் மிகுந்த பல கதைகள் அவரது முப்பது வயது காலப்பகுதியிலேயே எழுதப்பட்டுவிட்ட கதைகளாகும்.
தெளிவத்தை ஜோசப் விலங்குகள் மீது கொண்டிருக்கும் நேசம் ஈழத்து எழுத்துக்களில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் அப+ர்வமானஅம்சமாகும். ‘அது” என்ற கதையில் சேனையை நாசமாக்கும் குரங்குக் கூட்டத்தை அழிக்க எண்ணி, நிறைமாதச் சினைக்குரங்கை–பாய்ந்தோட முடியாமல் ‘இரு கைகளையும் ஒன்றாய் குவித்து கும்பிட்ட” தாய்க்குரங்கை தடியால் பிளக்கும் கொடூரம் நம் நெஞ்சை உறையப் பண்ணிவிடும். நாய்கள், பசுமாடுகள், குரங்குகள் ஆகிய விலங்குகளை மையமாகக் கொண்டு ஜோசப் எழுதியுள்ள கதைகள் தமிழச் சிறுகதைப் பரப்பில் முன்னுதாரணமாய் அமையத்தக்க தனித்துவம் கொண்டவை.
‘இறுமாப்பு’என்ற கதையில் வேப்பமரத்தின் உச்சிக்கிளையில் வெட்டி, பூஞ்செடிகளை நாசஞ்செய்யும் இடத்தில் ஜோசப்பின் எழுத்து மனிதன் இயற்கையின் மீது மேற்கொள்ளும் அராஜகத்தின் மீது தார்க்கோல் சூடு போடுகிறது.
பல இடங்களில் உயிரினங்கள், மரஞ்செடிகள், இயற்கை மீதான ஜோசப்பின் கனிவான பார்வை இந்தியாவின் மா.கிருஷ்ணனை நினைவிற்கு கொண்டுவருகிறது.
மலையக மக்களின் வாழ்க்கையை அற்புதமாகச் சித்திரித்த ஜோசப், தலைநகர் கொழும்புக்கு தொழில் நிமித்தம் குடிபெயர்ந்த பின்னரான அவரது தலைநகர் வாழ்வு அரை நூற்றாண்டை எட்டிப் பிடிக்கப் பார்க்கிறது.
கொழும்பு நகர் ஐம்பது ஆண்டுகால போர்த்துக்கேய, டச்சு, பிரிட்டிஸ் காலனித்துவத்தின் சிருஷ்டி. அது காலாகாலமாக பல்லின மக்களின் வாழ்விடமாகவே வளர்ந்து வந்திருக்கிறது.
1880 களிலேயே யாழ்ப்பாணத் தமிழர்கள் செறிந்து வாழும் புறநகர்ப் பகுதியாக வெள்ளவத்தை தோற்றம் காணஆரம்பித்துவிட்டது. 1905 இல் யாழ்.கொழும்பு புகையிரதசேவையின் பின் யாழ் மக்கள் கொழும்பை நோக்கிப் பெயர்வது வேகம்பெறத் தொடங்கியது. .................என்பது பேட்டை என்பதன் திரிபாகும். 1820களில் கொழும்பில் மாத்திரம் 2450 நாட்டுக்கோட்டைச் செட்டிமார் வர்த்தக, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். சிற்றூழியர்களாக வேலை பார்த்த இந்தியர்கள் கிட்டங்கிகளில் தங்கி வேலை பார்ப்பவர்களாக இருந்தனர். பெருந்தொகை நகரசுத்தித் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஒதுக்குப்புறச் சேரிகளில் விடப்பட்டனர்.
இலங்கையின் அதி உன்னதக் கட்டிடக் கலைஞன் ஜெவ்ப்ரிபாவாவின் சிருஷ்டித் திறனில் கொழும்பின் கட்டிடக்கலை புதிய உச்சத்தைத் தொட்டதாயினும், தலைநகரின் சிறுபான்மை இனத்தவர் மீதான அச்சுறுத்தலும் இந்தியர்களுக்குக் குறிப்பாக மலையாளிகளுக்கு, முஸ்லிம்களுக்கு, தமிழர்களுக்கு எதிரானவன்முறை தலைநகரில் வரலாறு முழுவதும் தொடர்ந்திருக்கிறது. 1983 இல் கொழும்பில் வெடித்த இன வன்முறை நாகரீக சமூகம் வெட்கித் தலைகுனிய வேண்டியநிலைக்கு வீழ்ச்சியுற்றமைக்கு சாட்சியாகும்.
அண்மைக்காலத்தில் இடம்பெற்ற கொடூர யுத்த காலகட்டத்தில் கொழும்பில் தமிழர்கள் அடைய நேர்ந்த அச்சம், பீதி, அவலம், துன்பம் என்பனவற்றை ஜோசப் மிகக் கூர்மையாகத் தனது சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார். நள்ளிரவுத் தேடல்கள், சுற்றிவளைப்புகள், வீதிகள் முழுவதும் உருவாகியிருந்த செக்பொய்ண்டுகள், வாகனங்களில் வழிமறித்து எந்த இடத்திலும் ஆயுதப்படையினர் மேற்கொள்ளும் சோதனைகள், விசாரணைகள், பொலீஸ் நிலையங்களில் தமிழர்கள் தம்மைப் பதிவுசெய்து காட்டவேண்டிய பத்திரங்கள், அடையாளஅட்டை சோதனைகள் என்று தமிழர்கள் தலைநகரில் பீதியில் உறைந்து போயிருந்த காலத்தை ஜோசப்பின் கதைகள் அசலாக சித்திரித்திருக்கின்றன.
சிங்களம் தெரியாத யாழ்ப்பாணத்து இளைஞர்கள் இந்த இராணுவ, பொலீஸ் விசாரணைகளின்போது சிக்கிக்கொண்டுவிட்டால், அவர்கள் கிரிமினல் குற்றம் இளைத்தவர்களைப் போல நடத்தப்படும் கொடூரத்தை சிலகதைகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழ் மக்கள் மனதில் தோன்றும் அச்சமும், பீதியும் தெருவில், இராணுவச் சோதனைச் சாவடிகளில், பஸ் பயணத்தில் ரயிலில் மட்டுமல்ல, அவர்களின் வீட்டுவாசல்வரை வந்து விரவுவதை ஜோசப் கதைகள் பேசுகின்றன.
மனைவி பொட்டு வைத்துக் கொண்டு போகலாமா, தாலிக்கொடியைப் போட்டுக் கொள்ளலாமா என்று கண்ணுக்குப் புலப்படாத கண்காணிப்பின் வலியகரங்கள் தமிழர்களின் படுக்கையறைவரை வந்து விட்ட நிலை, தமிழர்கள் பிரத்தியேகமாக எதிர்நோக்கும் பீதி நிறைந்தவாழ் நிலையாகும்.
புதிதாக முகவரி தேடும் வெளியாட்கள் தமிழர்களாக இருந்துவிட்டால் அதுவும் சிங்களம் தெரியாதவர்களாக இருந்தால் படும்பாடுகள் ஜோசப்பின் கதைகளில் நுட்பமாக சித்திரிக்கப்பட்டுள்ளன.
அதேசமயத்தில், மனிதாபிமாமிக்க சாதாரணமான சிங்களக் கதாபாத்திரங்களின் ஊடாட்டமும் தலைநகர் வாழ்வில் வௌ;வேறு பரிமாணங்களாகும்.
யுத்தகாலத் தலைநகர் வாழ்வில் தமிழர்கள் அனுபவித்த அச்சங் கலந்த வாழ்வை ஜோசப் நிரந்தர இலக்கிய ஆவணமாகப் பதிவு செய்திருக்கின்றார்.
ஏங்கே அடக்கு முறையும் பாரபட்சமும், ஒதுக்குமனோபாவமும் அராஜகமும் கட்டவிழ்த்து விடப்படுகிறதோ, அங்கே ஒரு மனிதாபிமானம் மிகுந்த கலைஞனின் இதயம் தோய்ந்து போவதில் வியப்பேதுமில்லை.
தங்களின் வாழ்விடங்களைத் தொலைத்து, நீங்கி, இழந்து அவற்றை மீண்டும் நினைவூட்டும் பதிவுகளை வரைபடமாக, ஓவியமாக இழப்பினை நினைவு கூரும் ஆவணமாக வு.சணாதனன் வெளியிட்டிருக்கும் வுhந ஐnஉழஅpடநவந வுhழஅடிர வடபுலத்தில் வாழ்வைத் தொலைத்த 80 பேரின் கதைகளை யுத்த சாட்சியமாக்கியுள்ளது. அதற்கு நிகராக, தலைநகர்த் தமிழர்களின் யுத்தகால நெருக்கடியின் அவலத்தை தெளிவத்தை ஜோசப் மகத்தான எழுத்தோவியமாகத் தந்துள்ளார்.
சுய கௌரவத்தோடு, சமத்துவ உரிமையோடு, அச்சமின்றி ஒரு சிறுபான்மை இனம் வாழும் நிலைதான் ஒரு சமூகத்தின் அதியுயர் நாகரீக செழுமைக்கு எடுத்துக்காட்டாகும். அது விண்ணைத் தொட முயலும் கோபுரங்களாலும் வழுக்கிக்கொண்டு போகும் சாலை அமைப்புக்களாலும், பிரமாண்ட கட்டடங்களாலும் உருவாவதில்லை.
தெளிவத்தை ஜோசப்பின் தலைநகர் சிறுகதைகள், தமிழர் தம் வாழ்வியலின் நெருக்கடிமிக்க காலப்பகுதிகளை இலக்கிய எடுத்துரைப்பிலே கோர்த்திருக்கிறது.
தெளிவத்தை ஜோசப்பின் எழுத்துநடை வசீகரமானது, கவித்துவ வேகம் கொண்டது, மின்னலாய் வெட்டிச் செல்லும் துரிதம், சிக்கனமான சொற் பிரயோகம் காட்சியைக் கண்முன்னால் பரப்பும் லாவகம், இறுக்கமான வர்ணனை,துல்லியமான விபரிப்பு அனைத்துமே ஈழத்தின் முதன்மையான சிறுகதை எழுத்தாளராக அவரை நிலைநிறுத்த உதவுகின்றன. ஈழத்தின் நவீன இலக்கிய உரைநடை தெளிவத்தை ஜோசப்பின் எழுத்தால் புதுமெருகுபெற்றிருக்கிறது.
அறுபத்தைந்து கதைகளுக்குமேல் எழுதியிருக்கும் ஜோசப்பின் பதினொரு சிறுகதைகள் ‘நாமிருக்கும் நாடே” என்ற தலைப்பில் 1979 இல் பிரசுரமாகி இன்று 34 ஆண்டுகள் கடந்து தான் அவரது ‘மீன்கள்’ ‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்” என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாவது என்பது ஈழத்து பிரசுர உலகின் தாமத குணத்தைச் சுட்டுவதாகும்.
ஜோசப்பின் சிறுகதைத் தொகுப்பினை வெளியிடும் இந்தத் தீவிரமுயற்சியில் பாக்யா பதிப்பகத்தின் மல்லியப்புசந்தி திலகர் மேற்கொண்டிருக்கும் அயராத உழைப்பிற்கு மலையகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.
எண்பதாண்டுகளின் வாயிலில் நிற்கும் தெளிவத்தை ஜோசப் சகலரது அபிமானத்திற்கும், பாராட்டுக்கும், மதிப்பிற்கும் உரியவராகத் திகழ்வது அவரது உயர்ந்த பண்பாட்டிற்கும், விசால மனதிற்கும் சாட்சி சொல்வதாகும்.
மெல்லிய துடிதுடிப்பான ஜோசப்பின் தோற்றத்தில் எண்பது வயதின் முத்திரை பதியவேயில்லை. பதுளையில், யாழ்ப்பாணத்தில், கொழும்பில், லன்டனில் நான் சந்தித்த ஜோசப்பின் வாழ்வில் இந்த ஆண்டுகளின் எண்ணிக்கை என்பது பொருட்டல்ல.
ஜோசப்பின் கலாபூர்வமான எழுத்திற்கு தமிழ் கூறும் நல்லுலகு செங்கம்பளம் விரித்து பாராட்டுப் பண்பாடுகிறது.
‘எங்கே தேயிலை விளைகிறதோ, அதுமலை முகடாக இருந்தால் என்ன, சமவெளியாக இருந்தாலென்ன அந்த இடம் புனிதம் பெறுகிறது” என்று 12ஆம் நூற்றாண்டு ஜப்பானிய வாசகம் கூறுகிறது‚ ஜோ ‚ உங்கள் எழுத்தால் மலையக இலக்கியமும் புனிதம் பெறுகிறது‚
மு.நித்தியானந்தன்
லன்டன்
10.02.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...