Headlines News :
முகப்பு » , » நாம் பேசுவோம் ; நமக்கான விடுதலை குரலை ...!

நாம் பேசுவோம் ; நமக்கான விடுதலை குரலை ...!


எழுத்து சான்றுகளிலிருந்து வரலாறு தோன்றினாலும் நமக்கு உழைப்புதான் நமக்கான வரலாறாக கட்டியம் கூறி நிற்கிறது.

சாதியம் நின்று கொல்ல, வறுமை போக்க புதிய இடம் தேடினோம். கங்காணிகளிடம் அகப்பட்டு அடி மாடுகளை போல மலைகளை நோக்கி ஒட்டி செல்லப்பட்டோம்;

கடல் கடந்தோம்; நமக்கான பாதைகளை நாமே கண்டோம் ; நடந்தோம் ; பல்லாயிரம் உயிர்களை பறிகொடுத்தோம் ;

எஞ்சிய உயிரை கொண்டு மலைகளை பொன்விளையும் பூமியாக காப்பி ,தேயிலை பயிர்களால் மாற்றினோம்.

உழைப்பை சுரண்ட தெரிந்த வெள்ளையனுக்கு உழைக்கும் கைகள் வேண்டும் என்பதால் உடலில் உயிரை தேக்கி வைக்கும் அளவிற்கே 'படியளந்தான் ' என்பதை நாம் அறிவோம் .

ஒன்றரை நூற்றாண்டு இலங்கையின் எல்லா இன மக்களுக்கும் ( பூர்வீக இலங்கைத்தமிழர் ,சிங்களவர் ,இஸ்லாமியர் ) எதோ ஒரு வகையில் நம் உழைப்புதான் உதவியிருக்கிறது .ஆனாலும் அடக்குமுறை சட்டங்களாலும் . துரோக உடன்படிக்கைகளாலும் நாம் சிதறடிக்கப்பட்டோம். உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தோம் . 'காடையர்களின் ' வன்முறையில் உறவுகளை இழந்தோம். தாய் நிலத்தை நோக்கி விரட்டப்பட்டோம் . புதிய சூழலும் உறவை பணமாக பார்த்த சொந்தங்களும் தேயிலை காடுகளையே தேடும் நிலைக்கு தாய் தமிழகத்தில் ஆளானோம். தேயிலை தோட்ட வாழ்வின் இருநூறு ஆண்டு காலங்களை நிறைவு செய்ய போகிறோம் . நம்மை கடலின் இருகரைகளில் தத்தளிக்க செய்த துரோக உடன்படிக்கையான சிறிமாவோ பண்டாரன நாயக்க - லால்பகதூர் சாஸ்திரி (1964) ன் ஐம்பது ஆண்டு காலம் 2014 உடன் நிறைவுறுகிறது. இலங்கை ,இந்தியா என இரு நிலங்களிலும் நம் வாழ்வு சில மாற்றங்களுடன் அதே கொத்தடிமை முறை தொடர்கிறது. தொண்ணூறுகளுக்கு பின் அமுலான உலக மயம் , அதன் தொழில் முதலீடுகள் , நில ஆக்கிரமிப்புகள் எஞ்சிய வாழ்வையும் சிதறடித்து ' சுதந்திர அடிமையாக ' மாற்றுகிறது . இலங்கையில் தொழிற்சங்கவாதம் . வாக்கு சீட்டு அரசியல் , குழு மனப்பான்மை , போன்ற எல்லைகளுக்குள் நம் அரசியல் முன்னெடுப்புகள் முடங்கிபோகிறது . ஓரளவு கல்வியும் , சமூக விழிப்புணர்வும் உள்ள பலர் தங்கள் 'அடையாளத்தை ' மறைப்பதில் விழிப்பாக உள்ளனர். இங்கே தொன்று தொட்டு பேசி வருகிற ஈழ விடுதலை அரசியலின் பெருத்த ஓசையில் நம் குரல் காணாமலே போகிறது . இருக்கும் ஓரிரு தலைமைகளும் தன் பிழைப்புவாத வாழ்க்கைக்கு தொழிலாளிகளை வாக்கு வங்கி அரசியலுக்கு மடை மாற்றி பேரம் பேசுவதிலும் , அவர்கள் விழிப்பு அடைந்து விடாத படியும் கவனமாக 'பார்த்து'கொள்கின்றனர்.

ஆக நமக்கு அரசியல் வரலாறு துரோகத்தாலும், துரோக தலைமைகளாலும் நம் வாழ்வு மூழ்கடிக்கபட்டிருக்கின்றன. இது இரு நாடுகளிலும் பொருந்தும் என எண்ணுகிறேன்.

இப்படியான சூழலில்தான் " பச்சைரத்தம்" ஆவணப்படம் உருவானது. தேயிலை தோட்ட தொழிலாளியின் மகனான எனக்கு மேற்கண்ட வாழ்வின் உண்மைகளும் , நண்பர்கள் , சமூக ஆர்வலர்களின் உதவிகளும் இப்படம் உருவாக காரணமாக இருந்தது. பல முறை படப் பிடிப்புகள் . நிதி போராட்டங்களுக்கு பிறகு முழுப்படம் உருவானது .பல ஊர்களுக்கு சென்று நண்பர்களின் உதவியோடு இதுவரை இருபது இடங்களுக்கு மேல் திரையிடபட்டுள்ளது.இணையத்தின் மூலம் நூற்றுகணக்கான நண்பர்கள் பார்த்துள்ளனர். இரண்டாயிரம் குறுந்தகடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழின் முன்னணி இதழ்கள் , அரசியல் ஏடுகள் . தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இப்பட செய்திகள் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளது. தமிழின் முக்கிய ஆளுமைகள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் தலைமைகள் , திரைப்பட இயக்குனர்கள் போன்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பொதுவெளியில் விவாத பொருளாக இலங்கை -தமிழகம் தேயிலை தோட்ட தொழிலாளிகளின் வாழ்வு பேசு பொருளாக மாறி இருக்கிறது என்பதில் இப்படத்திற்கும் சிறு பங்கு உண்டு என்பதை மகிழ்வோடு சொல்லிகொள்கிறேன் . இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் 'வனசாட்சி ' நாவலும் , பத்திரிக்கையாளர் இரா . வினோத் அவர்களின் 'தோட்டகாட்டி ' கவிதை தொகுப்பு .இந்த வேளையில் தமிழக தேயிலை தோட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு டேனியல் அவர்களால் ஆங்கிலத்தில் red tea என எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்ப்பான 'எரியும் பனிக்காடு ' என்கிற நாவல் . இந்த நாவலின் காட்சி ஊடகமாக திரைப்படமான திரு பாலா அவர்களின் 'பரதேசி ' என எல்லாமே தேயிலை தோட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டவை. நமக்கு இப்படைப்புகளின் மீது சில விமர்சனங்கள் இருப்பினும் அதை தவிர்த்து பொதுவெளியில் நம் வாழ்வை நமக்காக பேசியவை என்பதையும் மகிழ்வோடு எண்ணி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

இப்போது இலங்கையின் இன்னொரு விடயமான மலையகம் பற்றியும், அதன் விடுதலை, மக்களின் எதிர்காலம் பற்றியும் பேசுவதை காண முடிகிறது .இணையதளங்களிலும், வலைப்பூ , முக நூல்களிலும் குறைந்த பட்ச உரையாடல்கள் , செய்திகள் , காண முடிகிறது. சர்வதேச அளவிலான ஒத்த கருத்துடைய நண்பர்களை இனம் காணவும், ஜனநாயக பூர்வமான உரையாடல்களை தொடரவும் முடிகிறது. நம் வாழ்வின் அரசியல் , கலை ,கல்வி , ஜனநாயக கோரிக்கைகள் போன்றவை குறித்து ஆழ்ந்து பேசுவோர் இரு நாடுகளிலும் குறைவாக இருப்பினும் நம்மிடம் உள்ள சில முரண்பாடுகளை களைந்து கூடி முன்னெடுப்புகளை மேற்கொண்டால்தான் நிறைவாக சில பணிகளை செய்ய முடியும் என எண்ணுகிறேன் . நமக்காக நாம் பேசுவோம் ; அனைத்து ஜனநாயக சக்திகளையும் குறுகிய இனம் ,மதம் , மொழி கடந்து நமக்காக ஒருங்கிணைப்போம்; பிற மக்களின் விடுதலை கோரிக்கைக்கும் குரல் கொடுப்போம் ; அணியமாவோம்.

இதே வேளையில்" பச்சை ரத்தம்" படத்தின் ஆங்கில மொழியாக்கம் செய்யவும், அதன் இரண்டாம் பாகம் தொடரவும் பெரும் நிதி தேவை படுகிறது. தங்களால் முடிந்த நிதி உதவியை செய்தால் சிறப்பாக இருக்கும். மேலும் படம் பற்றிய நேர்காணல்கள்,கட்டுரைகள் ,முழுப்படம் காண கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.நன்றி.

http://thavamuthalvan.wordpress.com/
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates