Headlines News :
முகப்பு » , » திரும்பிப்பார்க்கின்றேன் : ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம் - முருகபூபதி

திரும்பிப்பார்க்கின்றேன் : ஒரு கூடைக்கொழுந்தின் இலக்கிய வாசம் - முருகபூபதி

சாயி இல்லத்தில் பக்தர்களின் பாதணிகளை  ஏந்திய  எளிமையான மலையகப்படைப்பாளி என்.எஸ்.எம்.  ராமையா

                                                                                                   
இயற்கைச்  சூழலின்   மத்தியில்   ஏகாந்தமாயிருந்து  கலையம்சம்   மிக்க – கலை - இலக்கியங்களைப் படைக்க    வேண்டிய    மணிக்கரங்கள் இரும்புக்கடையின்   மத்தியில்     கணக்கு    ஏட்டுடன்   சதா   கருமமாற்றம் நிலை    என்றுதான்   மாறுமோ ?     என்று    நண்பர்     மேகமூர்த்தி     பல வருடங்களுக்கு    முன்னர்     என்.எஸ்.எம்.     ராமையாவைப் பற்றி மல்லிகையில்    எழுதியது    நினைவுக்கு  வருகிறது.

ஒரு கூடைக் கொழுந்து
மேகமூர்த்தி     இன்று    கனடாவில்.   முன்பு    வீரகேசரியில்     துணை ஆசிரியராக     பணியிலிருந்தவர்.   தற்பொழுது     வீரகேசரி   மூர்த்தி    என்ற பெயரில்   எழுதிவருகிறார். நானும்   முதல்   முதலில்  என்.எஸ்.எம்.   அவர்களை    அந்த இரும்புக்கடையில்தான்     சந்தித்தேன்.     அறிமுகப்படுத்தியவர்  மு.கனகராசன்.

அமைதி - அடக்கம் - பணிவு – மறந்தும்    சுடுசொல்    பாவிக்கத்    தெரியாத அப்பாவித்    தனமான   குண    இயல்புகள்  -  எதனையும்    ரசித்துச்   சிரிக்கும் பொழுது  குழந்தைகளுக்கே  உரித்தான    வெள்ளைச் சிரிப்பு இவ்வளவற்றையும்   தன்னகத்தே    கொண்டிருந்த  அந்த   வித்தியாசமான மனிதரிடத்தில்    நல்ல    ரஸனையைக்  கண்டேன்.     தர்மாவேசத்தை என்றைக்கும்  கண்டதில்லை.

நாம்    அவரை   இராமையா    என்று     அழைப்பது   அபூர்வம்.    அவரது முதல்     எழுத்துக்கள்தான்     இலக்கிய     உலகில்     பிரபலமானவை. மலைநாட்டு     எழுத்தாளர்     சங்கத்தின்     தலைவராக     விளங்கிய போதும்கூட   தலைவர்களுக்கே     உரித்தான    கம்பீரம்   காத்து   இமேஜ் தேட முயலாமல்    எளிமையாக     வாழ்ந்தவர்.

ஈழத்து    மலையக   இலக்கிய    வரலாற்றில்    என்.எஸ்.எம்.  அவர்களுக்காக சில     அத்தியாயங்கள்     உண்டு.     மலையக    மக்களின்     ஆத்மாவை   இவரது    கதைகளில்    கண்ணுற்றேன்.

சென்னை    வாசகர்   வட்டம்    தொகுத்தளித்த     அக்கரை    இலக்கியம்   நூலில்     இவரது    வேட்கை    சிறுகதையும்     இடம்பெற்றது.    பல   தரமான வானொலி    நாடகங்களின்   சிருஷ்டி    கர்த்தா    இவர்.

மலையகத்தை    விட்டு    அவர்    எப்போது     கொழும்புக்கு    வந்து நிரந்தரமானாரோ     நான்     அறியேன்.  மலையகத்தில்    அவர் மேற்கொண்ட   தொழிலும்     தெரியாது.    எனினும்     நானறிந்த    என்.எஸ்.எம்     கொழும்பில்   -    சோனகத் தெருவில்    ஒரு   இரும்புக்கடையில்    கணக்கெழுதியவர்தான்.    நேரம்    கிடைத்த   பொழுது இலக்கியம்    படைத்தார்.

அந்த   - நேரம் -  சீராகக் கிடைக்கவில்லையே    என்பதுதான்  ஈழத்து இலக்கிய     உலகிற்குக் கிட்டிய    பெரிய நட்டம்.    எனினும்      அவரது    -  ஒரு கூடைக் கொழுந்து  -    உட்பட    பல    சிறுகதைகள்    இன்னும்   பல தலைமுறை    காலத்திற்கு   நின்று    நிலைத்துப் பேசும்.

1973   ஆம்   ஆண்டு -மலைநாட்டு   எழுத்தாளர்   சங்கத்தின்    ஆண்டுப்     பொதுக் கூட்டம் ஹட்டனில்.  கூட்டத்துடன்   ஆண்டுவிழா.    வீரகேசரி     பிரசுரமான    கோகிலம்     சுப்பையா    எழுதிய    தூரத்துப் பச்சை   நாவல்    வெளியீட்டு நிகழ்வும்     இடம்பெற்றது.     தமிழகத்திலிருந்து     பிரபல     இடதுசாரித் தலைவர்     தோழர்    பாலதண்டாயுதமும்    வருகை    தந்து   கலந்து கொண்ட நிகழ்ச்சி.

இவ்விழாவில்     கலந்து  கொண்ட    ஒரே    அரசில்     அங்கம்    வகித்த அமைச்சர்    குமாரசூரியரும் -     ஜ.தொ.கா.    தலைவர்    அஸீஸ_ம்   மேடையில்     கருத்து     ரீதியாக    பகிரங்கமாக     மோதிக் கொண்டார்கள்.

தொழிலாளர்களின்     பிரச்சினைக்கு   இடைத் தரகர்கள்    (தொழிற்சங்கங்கள்)    அவசியமில்லை    என்ற    தோரணையில்    மிகவும் சிறுபிள்ளைத்தனமாக     அமைச்சர்    பேசினார்.

நீண்ட    காலம்   தொழிற்சங்க    வாழ்வில்   ஈடுபட்டுள்ள    அஸீஸ்   சும்மா இருப்பாரா?    அவரைப்    பொறுத்தவரையில்    இந்த    அமைச்சர்      நேற்றுப் பெய்த   மழைக்கு   இன்று   முளைத்த    காளான்   அல்லவா? வெகுண்டெழுந்தார்.     மலையக     தொழிற்சங்கங்கள்     வென்றெடுத்த உரிமைகளைப்     பட்டியலிட்டுப்    பேசினார்.


தோழர்    பாலதண்டாயுதம்     அனுபவமிக்க     பழுத்த    அரசியல்வாதி. குழம்பியிருந்த     மக்களுக்குத்     தெளிவு    ஏற்படும்    விதமாகப் பேசி   பாராட்டுப் பெற்றார்.   நிறைகுடங்கள்     தழும்புவதில்லை.    அந்த  நிகழ்ச்சி முடிவுற்றதும்    என்.எஸ்.எம். மிடம்    கேட்டேன்.    (அன்று    அவர்தான் மலைநாட்டு    எழுத்தாளர்    சங்கத் தலைவர்)

என்ன   -   இது - ?  இலக்கியவாதிகளின்    கூட்டத்தில்   அரசியல்வாதிகள் ஆதாயம்    தேடுகிறார்கள் ?

என்.எஸ்.எம்    அமைதியாக  -   நண்பரே  -   உங்கள்     கேள்வியிலேயே   பதில் உள்ளது.    தோழர்     பாலதண்டாயுதம்     தக்கபதில்    சொல்லிவிட்டார். இருந்தாலும் - இந்த    அரசாங்க    அரசியல்   வாதிகளை   அழைத்தால் இதுதான்    நடக்கும்   என்பதும்    தெரியும்.

இப்பொழுது    இவர்களின்    அரசு     பதவியில்.    எமது  சங்கம்   இவர்களை அழைத்திருக்கிறது.    வேறு    ஒரு   அரசாங்கம்   இப்போதிருந்தால்  அதனைச்    சார்ந்தவர்கள்    வந்திருப்பார்கள்.   ஒரு   அமைப்பின் தலைவராக    இருக்கும்போது     எனது     விருப்பு     வெறுப்புகளுக்கு   ஏற்ப தன்னிச்சையாகச்     செயற்பட முடியாது.     அமைப்பின்    தீர்மானங்களுக்கு நானும்      கட்டுப்பட வேண்டியுள்ளது     என்ன    செய்வது ?  என்றார்.

பின்னாளில் -   சில    வருடங்களுக்குப் பிறகு   – அரசாங்கம்    மாறியது. தொண்டமான்     அமைச்சரானார்.    இ.தொ.கா. தேவராஜ்   அரசியலில் பிரபலமானார்.

இதே  மலைநாட்டு    எழுத்தாளர்    சங்கத்தின்    சார்பில்   கொழும்பு   - தப்ரபேன்    ஹோட்டல்    மண்டபத்தில்    கூட்டம்.     என்.எஸ்.எம்.   தலைமை.    அமைச்சர்    தொண்டமானும்   தேவராஜூம்    பேசினார்கள்.

கூட்ட   முடிவில்    என்.எஸ்.எம்     என்னைப்    பார்த்தார்.   நான்    வாய் திறப்பதற்கு     முன்பு   -   பூபதி    உமக்கு    அன்றே     சொன்னதைத்தான் மீண்டும்    சொல்லலாம்   -   எனக் கூறி    அமைதிக்கு    வழி தேடினார்.

ஈழத்து  இலக்கிய   உலகம்     பதவியில்    உள்ள    அரசை    அல்லது அதிகாரத்தில்    உள்ள     இயக்கத்தை    அனுசரித்தே    இயங்குகிறது என்பதற்கு     ஈழத்தின்     தெற்கும்   வடக்கும்    ஒரு காலகட்டத்தில் உதாரணமாக  விளங்கின.

அதிகாரத்தில்    அமருவோரை    அனுசரித்துப் போகும்   சமரச   மனப்பாங்கு, கலை  -  இலக்கியவாதிகளிடம்     இருக்கும்    வரையில்    இரு  தரப்புக்கும் சங்கடம்    இல்லைத்தான்.     யார்  -   யார் - எந்தெந்த     சந்தர்ப்பங்களில் எத்தகைய     சூழ்நிலையில்    இவ்வாறு     மேடைகளில்    தோன்றுகிறார்கள் என்பது    விமர்சனத்துக்குரியதுதான்.

இன்றைய     காலகட்டத்தில்    பல     மாற்றங்கள்     நிகழ்ந்துள்ளன. இலக்கியவாதிகளாகவும்      ஆத்மீகவாதிகளாகவும்     விளங்கியவர்கள் அரசியல்வாதிகளாகிவிட்டனர்.       அதனால்     தவறொன்றும்   இல்லை. ஆனால்     இலக்கிய    மேடைகளில்    தமது   அரசியல்     ஆதாயம் தேடுவதற்கு     முனையும்பொழுதுதான்     பிரச்சினைகள்    தலைதூக்கும்.

அரசியல்வாதிகள்    இலக்கிய   மேடையில்    ஏறினால்   என்ன நடக்கும் ? என்பது    அனுபவபூர்வமாகத்   தெரிந்தமையினால்தான்  2011   இல்   நாம் கொழும்பில்       நடத்திய    முதலாவது     சர்வதேச     தமிழ்    எழுத்தாளர் மாநாட்டில்    அரசியல்வாதிகளுக்கு   மேடைதரவில்லை.     அத்துடன் பூமாலைகளையும்      பொன்னாடைகளையும்     வெற்றுப்புகழாரங்களையும் முற்றாக     புறக்கணித்தோம்.

மாநாட்டின்     பின்னர்     அதுபற்றி    எழுதிய    ஒரு   இலக்கிய நண்பர் அரசியல்வாதிகள்     இனிமையாக    பழிவாங்கப்பட்ட      மாநாடு எனக்குறிப்பிட்டார்.

என்.எஸ்.எம்    வாழ்வில்    சோகமான     அத்தியாயங்கள்தான்     அதிகம். எத்தனை    சோகங்கள்    அவருள்    முகிழ்த்திருந்த     போதிலும்     சாந்தமான அவரது    முகத்தில்     மாற்றத்தினைக்   காண   முடியாது.    சலனங்கள் அற்ற     முகத்துக்குச்     சொந்தக்காரர்   அவர்.

அவர்  -  ஏழு   நாட்களுக்குள் - அடுத்தடுத்து    தனது   இரண்டு    பெண் செல்வங்களை     நோய்    அரக்கனுக்குப்    பலி     கொடுத்த   பரிதாபத்தை இங்கு    எழுத    வார்த்தைகள்    இல்லை.   அவரைப்   படைத்தவன் - அவரை இப்படியாக     கோரமாக     வஞ்சித்திருக்கக்கூடாது.    மரணத்தின் கொடுமையை   அதுவரும்     போதுதான்  நாம்    உணர்கின்றோம். அக்கொடுமைக்கு     என்.எஸ்.எம்.    ஆளாகியவர்.

இனவாத     பெருநெருப்பு    தென்னிலங்கையில்     கோரத்தாண்டவமாடிக் கொண்டிருந்த   (1983)  காலம் .   25   மைல்     தூரத்திலிருந்த    எனக்கு    என்.எஸ்.எம்.மின்    பிள்ளைகள்     இருவர்    நோயினால்   பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து     இறந்துவிட்டார்கள்     என்ற    சோகமான     செய்தி தாமதமாகவே    கிடைத்தது.

நண்பர்     தெளிவத்தை    ஜோசப்    மூலம்     இச்செய்தி    அறிந்து    நண்பர் மு.கனகராசனுடன் -   ராமையாவைத்     தேடி    அவர்    பணிபுரிந்த இரும்புக்கடைக்கே     ஓடினோம்.    அங்கே    என்.எஸ்.எம்   அமைதியாக அமர்ந்து    கணக்கு    எழுதிக் கொண்டிருக்கிறார்.

நான்   இயல்பாகவே    மரணத்தை    வெறுப்பவன்.   அதிலும்   பச்சிளம் பிள்ளைகளின்    மரணத்தைத்   தாங்கும்   வலிமை    அற்றவன்.  அன்று ராமையாவைக்     கண்டபோது    நெஞ்சில்    அடைத்து  பொங்கிய  சோகத்தை    அடக்க    மிகவும்    சிரமப்பட்டேன்.

அருகே    இருந்த     அம்பாள்கபேயில்   போய்    அமர்ந்து    அவருடன்   துயரம் பகிர்ந்து    கொண்டோம்.    அந்த    பரபரப்பான   வியாபார   பிரதேசத்தில்   நாம் அமைதியாக    அமர்ந்து     பேச பொருத்தமான   இடம்    அந்த   அம்பாள்கபே தான்.

பின்னாளிலே     ராமையாவை –  பாபர்   வீதியில்    அமைந்த  சாயி இல்லத்தில்     அவர்   மேற்கொண்டிருந்த        பணியைக் கண்டு திகைத்துப்போனேன்.   ஒரு   அன்பரை      காண்பதற்காக    நான்    சாயி   இல்லம்   சென்றிருந்த    வேளை    அங்கு    பஜனை   ஆரம்பமாக விருந்தது.

சாயி  பஜனைக்காக    அங்கு    குழுமியவர்களின்   பாதணிகளை   பக்குவமாக   வாங்கி   அங்கிருந்த   ராக்கைகளில்   சீராக   அடுக்கி வைத்துக் கொண்டு     நிற்கிறார்    எங்கள்    ராமையா.

மலையக       மக்களின்     ஆத்மாவைப்     பிரதிபலித்த  -  அற்புதமான சிருஷ்டிகளைப்    படைத்த    அந்த    மணிக்கரங்கள் - சோனகத்   தெருவில் இரும்புக்கடையில்    கணக்கு   ஏட்டை     புரட்டிக் கொண்டும்    பாபர் வீதி சாயி    இல்லத்தில்     பக்தர்களின்    செருப்புகளை     ஏந்தி    பத்திரப்படுத்திக் கொண்டுமிருக்கிறதா?

என்ன    விந்தையான    மனிதர்   இவர் ?

எனது    திகைப்பை   புரிந்து    கொள்ளாமலே   -  வாருங்கள்  -  செருப்பை  இங்கே    தாருங்கள்  -  என்றார்.

அந்த   மணிக்கரங்கள்    என்    செருப்பை   ஏந்தக் கூடாது.    நானே   எடுத்து ராக்கையில்   வைத்தேன்.    தேடி    வந்த    அன்பர்   பற்றிய    நினைவை மறந்து  -   ராமையாவின்    பணி  கண்டு   சிலிர்த்துப் போனேன்.

 நான்   இன்றைக்கும்கூட  ஒரு   சாயி   பக்தன்  அல்லன் -  ஆனால்   அந்த பிரார்த்தனையில்    அமைதியும்   மனச்சாந்தியும்    கிட்டுவதை உணர்ந்தேன்.    என்.எஸ்.எம்    தனது     வாழ்வின்   சோகங்களுக்கு - இந்தப் பிரார்த்தனையின்     மூலம்தான்     அமைதியையும்    மனச்சாந்தியையும் தேடுகிறார்     என்பதை     புரிந்து கொள்ள  முடிந்தது.

இது    பற்றி    பிறகு     வீரகேசரி    வாரவெளியீட்டில்    இலக்கியப் பலகணி யிலும்     எழுதினேன்.

அவுஸ்திரேலியாவுக்கு    நான்     வந்ததன்   பின்னர் - இராமையா    உடல்  நலம்     குன்றி    மருத்துவ சிகிச்சைக்கு   உட்படுத்தப்பட்டுள்ளார்    என்ற தகவலை    நண்பர்    டொமினிக்ஜீவா      மல்லிகையில்    எழுதித்தான் தெரியும்.

இந்தக்   கவலையை   சிட்னியில்     இருக்கும்    மாத்தளை    சோமுவுடன் பகிர்ந்து கொண்டதுடன்    நின்றுவிடாமல்    என்னாலியன்ற    சிறு   உதவியை    கொழும்பில்    நண்பர்    ராஜஸ்ரீகாந்தன்   ஊடாக வழங்கியபொழுது     சலனங்களைக்    காட்டாத     அம்மனிதரின்   கண்கள் கலங்கி    விட்டதாக     நண்பர்   எனக்கு    எழுதியிருந்தார்.

ராமையாவும்     அன்போடு   எனக்கு   கடிதம்    எழுதினார்.  இன்றும் அக்கடிதம்    என்னிடத்தில்    பத்திரமாக  உண்டு.

ஒரு   நாள்   இரவு   நண்பர்  பிரேம்ஜியுடன்   தொலைபேசியில்   கதைக்கும்  பொழுது   அன்று   பகல்   இராமையா    இறந்து   விட்டதாக   அறிந்து அதிர்ந்தேன்.

( ராமையா     இறந்த    செய்தியை    அன்று      எனக்குச்சொன்ன      பிரேம்ஜியும்     இந்தப்பத்தியை       எழுதிக்கொண்டிருக்கும்    பொழுது     இறந்துவிட்டார்     என்ற சோகத்துடன்தான்      இதனை    பதிவுசெய்கின்றேன்.)

தாமதமின்றி     சென்னையில்    வசிக்கும்    எம்  இருவரதும்   நண்பர் பத்திரிகையாளர்   எஸ்.எம்.கார்மேகத்துக்கு   தகவலைக் கூறி    இருவரும் தொலைபேசியிலேயே    துயரம்   பகிர்ந்து    கொண்டோம்.   பின்பு – எஸ்.எம்.கார்மேகம்    அவர்கள்  -  ராமையாவைப் பற்றி    உருக்கமான  கடிதம் ஒன்றை    எனக்கு   எழுதியிருந்தார்.

ராமையாவின்   மறைவையடுத்து     இறுதிச்சடங்கில்   அமைச்சர்கள்- அரசியல் - கலை  -  இலக்கிய  பிரமுகர்கள்    கலந்து   கொண்டதைப் பார்த்த ராமையாவின்    வீட்டின்   அயல்வாசிகள்  -   இப்படியும்   ஒரு   பிரபலமான மனிதர்  -   இங்கே   எமக்கருகில்    வாழ்கிறார் - என்பதை   அறியாமல் இருந்திருக்கின்றோமே    என    மூக்கில்   விரல்    வைத்து   வியந்தார்களாம்.

கண்களுக்கு     அருகே     இமை     இருந்தாலும்    அந்தப் பாதுகாப்பு  கவசம் கண்களுக்குத்    தெரிவதில்லை   அல்லவா?

அந்த   மலையக    இலக்கிய    மேதையின்    மறைவின்    பின்னர்   அவருக்காக இரங்கலுரை    நிகழ்த்திய    அரசியல்  பிரமுகர்கள்   -   அவர்   வாழும் காலத்தில்   அவரைப் பற்றி   சிந்தித்ததே    இல்லை.   பத்திரிகை செய்திகளினாலும் - விளம்பரங்களினாலும்    பிரபலம்     தேடிக் கொண்ட மனிதர்    அல்ல    ராமையா.     படைப்பாளுமை    மிக்க    அமைதியான   இலக்கிய கர்த்தா.

தமிழகத்தின்    அக்கரை   இலக்கியம்   தொகுப்பு    இனங்கண்டு  கொண்ட அளவிற்குத்தானும்    மலையக    அரசியல்      தொழிற்சங்க    உலகம்    இவரை   இனங்     காணவில்லை.      இந்தப் புறக்கணிப்புகளைப் பற்றி என்றைக்குமே     அக்கறை    கொள்ளாத    நண்பர்   மு.நித்தியானந்தன் - மலையக    இலக்கிய     உலகிற்கு    ஆக்கபூர்வமாக   பங்களிப்பு    நல்கினார் என்பதை     இச்சந்தர்ப்பத்தில்   கூறுதல்   பொருத்தம்.

மு.நித்தியானந்தன்

மு.நித்தியானந்தன்     இல்லையென்றால்    இராமையாவின்   ஒரு  கூடைக் கொழுந்து    (1980   இல்    தேசிய    சாகித்திய    விருது    பெற்றது)  சிறுகதைத் தொகுப்பை   தமிழ்   இலக்கிய   உலகம்  கண்டிருக்காது.   நித்தி  -  தெளிவத்தை ஜோசப்பின்    நாமிருக்கும்   நாடே –  ஸி.வி.வேலுப்பிள்ளையின்   வீடற்றவன்    முதலானவற்றையும்    தனது   வைகறை   வெளியீடாகக்    கொணர்ந்தார்.

என்.எஸ்.எம்   மாத்திரம்   அல்ல – அவரைப்   போன்ற   பல   அற்புதமான மலையக - இலக்கிய   கர்த்தாக்கள் - மலையக   அரசியல்   இயக்கங்களினால் - அவற்றின்   தலைவர்களினால்    கண்டு   கொள்ளப்படவில்லை.   அவர்கள் கண்டுகொள்ள   முயலவுமில்லை.

இறந்த பின்பு – பத்திரிகைகளுக்கு  அஞ்சலி  -  அனுதாபச் செய்திகள்  வழங்கி தமது    இருப்பை  க்காட்டிக்     கொண்டவர்களை    இனம்    காணவேண்டிய அவசியமும்    எமக்கு   இல்லை.

எனினும்    இராமையாவை -    அவரைப் பீடித்திருந்த    வறுமையிலிருந்து - இந்த   மலையக அரசியல்   சக்திகள்    காப்பாற்றவில்லையே    என்ற    ஆத்திரம்   மனதை   பாரமாக   அழுத்துகிறது.

தனது    முப்பது   வருட   (1961 -1990)   இலக்கிய   வாழ்வில்    பதினான்கு சிறுகதைகளையே   ராமையா   எழுதியிருப்பதாக    தெளிவத்தை  ஜோசப் தன்னுடைய     மலையகச்சிறுகதை     வரலாறு   நூலில்    பதிவு  செய்துள்ளார்.   ( துரைவி  வெளியீடு 2000)

குறைந்த    எண்ணிக்கையில்    கதைகள்     எழுதியிருந்தபோதிலும்    ராமையா    இலக்கிய   உலகில்    பிரசித்தமாகவே    அறியப்பட்டவர். அவரது     கதைகளின்    சிறப்பும்   தரமும்தான்   அதற்குக்காரணம்.

செ.யோகநாதன்    தமிழ் நாட்டில்    தொகுத்து    வெளியிட்ட ஈழத்துச்சிறுகதைகள்    தொகுப்புகளில்    ஒன்றின்     பெயர்    ஒரு கூடைக்கொழுந்து     என்றே     அச்சிடப்பட்டிருக்கிறது.

10-10-1989 ஆம்   திகதி    ராமையா   எனக்கு    எழுதியிருந்த    சிறிய    கடிதத்தின் இறுதியில் - அங்கு    இலங்கை    நண்பர்கள்    பலர்    இருப்பதாக    அறிந்தேன். எல்லோரையும்    நமது   மண்ணிலே    (இலங்கையில்)   சந்திக்கும்    வாய்ப்பு கிட்டும்   என்றும்    நம்புகிறேன்.    என்று    எழுதியிருந்தார்.

நம்பிக்கைதான்     வாழ்க்கை    என்பார்கள்.    ஆனால்     அவர்  நம்பிக்கையோடு    காத்திருந்த    என்னைப்போன்ற    பலரை   பார்க்காமலேயே    விடைபெற்றுவிட்டார்.

நன்றி - தேனீ
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates