”வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியது போலவே கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்”.
தொல்.திருமாவளவனின் இக்கூற்று சாதாரணமானதுதான்.ஆனால் நியாயமானதா என நோக்கின் அதில் நெருடல்கள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டுப் போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள தொல்.திருமாவளவனுக்கு அவசியம் இருந்தாலும் அதனை நிறைவேற்ற மலையகத் தமிழர் அமைப்புகளுக்கு போதிய வாய்ப்புகள் இல்லை.
தமிழர் பிரச்சினை வட கிழக்கிலும் அதனை சார்ந்து மலையக பிரதேசங்களிளும் இன வண்முறைகளாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான சொத்துகளும் அழிந்தன என்பது மறுப்பதற்கில்லை. ஆயினும் தமிழர்கள் என்ற பொதுமைக்கு அப்பால் வடகிழக்கு தமிழர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினைகளின் தன்மையிலும்,வடிவத்திலும் போராட்ட முறைமைகளிலும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வண்முறைகளை சற்று பின்னோக்கி பார்த்தால்;
இலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாக
1883ம் ஆண்டு கொழும்பு நகரில்கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு ஆகும்.
1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம்வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும். அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கலவரம் வரை வளர்ந்தது.இதற்கு வேறுகாரணங்களும் இருந்தன.
1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான கலவரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது.
1948 இல் நாடு விடுதலை பெற்ற பின்னர் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக 1958ல் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய இனக்கலவரம் ஆகும்.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது
1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது
2000 பிந்துனுவெவை கலவரம் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிராமத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலைச் செய்யப்பட்டனர் பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை,அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன
இலங்கையில் எந்தப்பகுதிலிருந்தும், எந்த வடிவத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டால் அதில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் மலையகத்தமிழர்களாய் தான் இருப்பார்கள்.
மலையகத்தமிழர்களின் போராட்டவடிவம் வேறுபட்டது. அது வாழ்வதற்கான போராட்டம். சொந்த காணிக்காக, குடியிருப்புக்காக, கல்விக்காக, சமூக அபிவிருத்திக்காக, தொழில் வாய்ப்புக்காக போராடுகின்ற அடிப்படை போராட்டமாக இருக்கின்றது. இருந்தப்போதும் பொதுவான தமிழின உணர்வின்பால் உந்தப்பட்டு ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களின் நிலை என்ன? அவர்களைப்பற்றி பேசுவோர் யார்? அவர்களின் தியாகங்களின் பெறுமதி என்ன? நமக்கென்ன என்று இருக்காமல் ஈழத்தின்விடிவுக்காய் ஓடிய நம் இளைஞர்களையும், குரல் கொடுத்த அரசியல் கட்சி களையும் ஈழ வாதிகள் எவ்வாறு அணுகினார்கள்?
நமது பிரச்சினைகளப்பற்றியும்,போராட்டங்களை பற்றியும் நாம் மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறோம். தமிழகத்தின் தலைவர்களுக்கு தம் சமுகம் சார்ந்த, சிறுபாண்மைக்குள் சிறுபாண்மை இனமொன்று இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டுக்கொள்ளாமலேயே சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வடகிழக்கு பிரச்சினைகளுக்கு, தமிழர் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கிருந்தாலும். எமது பிரச்சினைகளின் தன்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.
நன்றி -Tamilwin
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...