இலங்கையில் மலையக மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்பட்டுவருவதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நவி பிள்ளை பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை கொழும்பில் இன்று சந்தித்தபோது, மலையக மக்களின் உரிமைப் பிரச்சனைகள் பற்றி குரல்கொடுத்துவரும் அருட்தந்தை கீதபொன்கலன் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளார்.
பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்ட பின்னரும் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை என்றும் அவர்கள் இன்னும் வம்சாவளிப் பிரஜைகளாக அங்கீகரிக்கப்படாமல் 'பதிவுப் பிரஜைகள்' என்றே கணிக்கப்படுவதாகவும் அருட்தந்தை கீதபொன்கலன் நவி பிள்ளையிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக மக்களின் நிர்வாகப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக தாய்மொழி நிராகரிக்கப்பட்டு சிங்கள மொழியே நடைமுறையில் இருப்பதால் தோட்டத்துறை மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவருவதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையரிடம் விளக்கிக்கூறப்பட்டுள்ளது.
மலையக மக்களின் காணி உரிமை, மொழி உரிமை மற்றும் பிரஜாவுரிமைப் பிரச்சனைகள் நவி பிள்ளையிடம் பேசப்பட்டன
மலையக மக்களின் பிறப்பு அத்தாட்சி, மரணச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட சிவில் ஆவணங்களும் சிங்கள மொழியிலேயே பதியப்படுகின்றன.
அதுதவிர காணி உரிமையும் பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்கத்தின் வசமுள்ள தோட்டக்காணிகளில் தொழிலாளர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதால் அவர்கள் ஏனைய சமூகங்களைப் போல நிம்மதியாக வாழமுடியாதிருப்பதாகவும் அருட்தந்தை கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கடந்த காலங்களில் பல்வேறு இன வன்செயல்களுக்கு முகங்கொடுத்துள்ள மலையக மக்கள் இன்னும் பல தோட்டங்களில் பாதுகாப்பற்ற நிலையிலேயே வாழ்ந்துவருவதாகவும் கடந்த யுத்த காலத்தில் மலையகத்திலிருந்து பலர் கைதுசெய்யப்பட்டும் காணாமல்போயும் உள்ளதாகவும் மலையக மக்களின் சார்பில் நவி பிள்ளையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர், தனது தந்தையாரும் இந்தியாவிலிருந்து தென்னாபிரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டவர் தான் என்றும் இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகள் பற்றி தான் அறிந்துள்ளதாகவும் பதில் கூறியதாக அருட்தந்தை கீதபொன்கலன் கூறினார்.
நன்றி - ஈழநாதம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...