மலையக மக்களே...!
நாம் இருநூறு ஆண்டுகால வரலாற்றின் மக்கள். மலையக தேசத்தை உருவாக்கிய சிற்பிகள். வியர்வையே நமது முதலீடு. நாம் அடைந்தது என்ன? மாகாணசபைகள் உருவாக்கப்பட்டு 25 வருடங்களாகியும் அதன் பயன்கள் மலையக மக்களுக்கு கிடைத்தனவா?
அரசியல் விடயங்கள்:
- மாகாண சபைகள் போதிய அதிகாரங்களை கொண்டுள்ளனவா?
- மாகாண சபை நிர்வாகத்தில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மலையக உறுப்பினர்களுக்கு இருக்கின்றதா?
- மாகாண சபைகளின் அதிகார எல்லைக்குள் மலையக மக்களின் வாழ்விடங்கள் அமைகின்றனவா?
- சொந்த வீடோ சொந்த நிலமோ அற்ற மலையக மக்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுக்க மாகாண சபைகளினால் முடிந்ததா?
- திட்டமிட்ட நில பறிப்பை மாகாண சபை உறுப்பினர்களினால் தடுக்க முடிந்ததா?
- மலையகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் கட்டாய கருத்தடையை மாகாண சபை உறுப்பினர்களினால் தடுக்க முடிந்ததா?
- மலையக மக்களுக்கு அவசியமான சுகாதார வசதிகளை மாகாண நிர்வாகத்தினால் பெற்றுக் கொடுக்க முடிந்ததா?
- மாகாண சபையினால் 'மலையக கல்வி'யை வளப்படுத்த முடிந்ததா?
- தமிழ் மொழியின் பாவனையை மாகாண நிர்வாகத்தில் பயன்படுத்த முடிந்ததா?
- மாகாண நிர்வாகம் மலையக மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புக்களை தருகிறதா?
- பெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளை மாகாண சபைகளினால் தடுக்க முடிகிறதா?
- தோட்டத் தொழிலாளர்களின் நாட்கூலியை மாதச் சம்பளமாக்க முடிந்ததா?
- மலையக மக்களின் துணைப் பொருளாதாரமான சிறு விவசாயத்தை கால்நடை வளர்ப்பை மாகாண சபைகளினால் பாதுகாப்பு உள்ளதாக்க முடிந்ததா?
- மலையக பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவர முடிந்ததா?
வராலாற்று ரீதியாக 1948 இல் பறிக்கப்பட்ட எமது குடியுரிமை மீள வழங்கப்பட்டதாக கூறப்படினும் அது உண்மையான குடியுரிமையாக நடைமுறையில் உள்ளதா? நாடு கடத்தப்பட்டோரும், இன வன்முறைகள் மூலம் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்தோரும் உரிமையோடு வாழ்கின்றார்களா?
தனியார், அரசாங்கம், கம்பனிகள் என எமது வாழ்விடங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு கைமாறிய போதும் வாழ்வில் மாற்றத்தை கண்டுள்ளோமா? புள்ளடியால் மாற்றம் கிடைக்குமா? உழைக்கும் மக்களின் உதிரத்தால் ஒன்றிணைந்த நாம் வியர்வையை விற்க இடம் கொடாது எமது வாழ்வுரிமையை பெற ஒன்றிணைவதன் மூலமே எமது தேசியத்தை கட்டிக் காக்க முடியும். சலுகைகளின் மயக்கத்தில் மயங்காது, உரிமைகளே எமது கனவாகட்டும்!
மலையக அரசியல் தலைவர்களே..!
- மலையக மக்களின் தேசியம் தொடர்பில் நீங்கள் முன்வைக்கும் கருத்தியல் என்ன?
- மலையக மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
- மலையகத்தில் சட்டவிரோத பேரின குடியேற்றம் இடம்பெற்று வருகிறதே அதனை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?
- தேர்தல் முடிவடைந்த கனமே ஆட்சியாளர்களுடன் இணையும் உங்களால் மலையக மக்களுக்கான வேலைத்திட்டமோ, உரிய அமைச்சுக்களோ உங்கள் பேரம் பேசும் அரசியல் சக்தியால் பெற முடியாதது ஏன்?
- மலையக மக்களின் தொழிற்சங்க, அரசியல் கட்சிகள் உங்கள் ஏகபோக குடும்ப சொத்தா?
- உங்கள் அதிகார மோகத்திற்காக ஒன்றுமறியாத உழைக்கும் மக்களை மோதவிட்டு சிறைக்குள் தள்ளி வேடிக்கை காட்டுகிறீர்களே ஏன்?
- தேர்தல் மேடைகள், விழாக்கள் தவிர்ந்த வேறு நாட்களில் தோட்டங்கள், லயன்களில் காலடி வைப்பதில்லையே ஏன்?
- மறைமுகமாகவும் நேரடியாகவும் உங்கள் தேர்தல் அரசியல் செயற்பாடுகளில் சாதீய நாற்றம் வீசுகிறதே ஏன்?
- மலையகத்தில் இருந்து பலவந்தமாக வெளித்தள்ளப்படும் இளைஞர், யுவதிககளுக்கான உங்களது வேலைத்திட்டம் என்ன?
- நகரங்களில் தொழில் உரிமை இன்றி அல்லல்படும் இளைஞர், யுவதிகளை பாதுகாகப்பதற்கான உங்கள் திட்டங்கள் என்ன?
- அழிந்துவரும் மலையக பாரம்பரியங்களை பாதுகாக்க உங்களுக்கு மாலைபோடும் மேடைகளை தவிர வேறு திட்டங்கள் இல்லையே ஏன்?
- மலையக மக்களின் வாழ்வியல், கலை, பண்பாட்டு காப்பக கருத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதே ஏன்?
- மலையக மக்களின் மூச்சான பெருந்தோட்டத்துறை அழிந்து வருகிறதே. அதனை தடுக்க ஏதேனும் விசேட திட்டம் செயற்படுத்தியுள்ளீர்களா?
- 12 சதவீதத்திற்கும் அதிகமாக ஒரு இன மக்கள் வசிக்கும் பிரதேச செயலகப் பிரிவில் அவர்களின் மொழி நிர்வாக மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? (ஆகக்குறைந்தது அம்பகமுவ, நுவரெலியா பிரதேச செயலகம்/சபைகளில்)
- ஸ்ரீபாத கல்வியல் கல்லூரியை மலையக மக்களின் கைகளுக்குள் கொண்டுவருவதற்கும் பாடசாலை மாணவர் இடைவிலகலை கட்டுப்படுத்துவதற்கும் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்கள் என்ன?
- மலையகத்திற்கான பல்கலைக்கழக தேவையை வலியுறுத்த நீங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்ன?
- சிறையில் உள்ள மலையக கைதிகளை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?
- மலையக மக்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப் படுத்தப்படவில்லையே ஏன்?
நாம் ஒரு தேசியமாய் இணைவோம். ஐக்கியமாய் எழுவோம்.
மலையக சமூக ஆய்வு மையம்
அடையாளம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...