மலையகத் தமிழர்கள் இந்நாட்டில் சுமார் 180 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டிருக்கின்றவர்கள். அதிகமான உபரி உழைப்பும் மூதனக் குவியலும் இவர்களிடமிருந்தே அபகரிக்கப்பட்டது. இரத்தமும் வேர்வையும் கலந்த மலையக தொழிலாளர்களின் உழைப்பினாலேயே இந்நாடு வளம் பெற்றது. ஆனால் அத்தகைய பங்களிப்பினை வழங்கியுள்ள மலையக சமூகம் இன்று பாரதூரமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்நாட்டில் இவர்கள் காலடி வைத்து வாழத் தொடங்கிய கால முதலாகவே இவர்களின் மனிதவுரிமைகள்; மூர்க்கத் தனமான முறையில் மீறப்பட்டுள்ளன. இந்நாடு அந்நிய காலணிதம்துவத்திலிருந்திலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்ற பின்னர் கூட உள்நாட்டு இனக்காலனித்துவவாதிகள் இம்மக்களை பிறிதொரு தளத்தில் ஒடுக்க முற்படுவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய தலைவர்களோ குழுவோ இலங்கையின் நிலப்பிரபுத்துவ சிந்தனையை நிலை நிறுத்துகின்றவர்களாக இருந்தனர் என்பதற்கு 1948 ஆண்டு இம்மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டமை, மற்றும் 1943ல் இலங்கையில் இலவச கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது, மலையகத்தவரின் கல்வி உரிமையை நிராகரித்து அதனை ‘இந்திய முகவரின் பொறுப்பு” எனத் தட்டிகழித்தமை இன்னும் இது போன்ற நிகழ்வுகள் இதற்கு தக்க எடுத்துக் காட்டுகளாகும். அத்துடன் இந்நாட்டில் தொகையில் கூடிய தொழிலாள வர்க்கத்தை கொண்டிருக்கின்ற மலையகத்தவரின் வர்க்க, இனத் தனித்துவத்தையும் தன்னடையாளங்களையும் சிதைப்பதில் ஆளும் வர்க்கம் தமது ஒடுக்கு முறைகளை மேற்கொண்டே வருகின்றன. தொடர்ந்து இம்மக்களை அரையடிமை நிலையில் வைத்து அவர்களின் உபரி உழைப்பை சுரண்டுவதற்கான எத்தனிப்புகளாகவே இச்செயற்பாடுகள்; அமைந்துக் காணப்பட்டன.
இத்தகைய சமூக அரசியல் பின்புலத்தில் இவர்கள் பெற்ற சிறு வெற்றிகள் கூட நீண்ட கொடிய போராட்டத்தின் ஊடாக பெறப்பட்டவையாகும். அவ்வாறு இவர்கள் பெற்ற வெற்றிகளில் தொழிற்ங்க உரிமை முக்கியமாக குறிப்பிடத்தக்கதொன்றாகும். அரையடிமை நிலையில் வாழ்ந்த தொழிலாளர்கள் தமது தொழிற்சார்ந்த பிரச்சனைகளை தற்காலிகமாக தீர்த்துக் கொள்ளவதற்கு தொழிற்சங்கங்கள் உதவின. இத்தொழிற்சங்க உரிமை என்பது இலகுவாக கிடைக்கப் பெற்றதொன்றல்ல. தொழிற்சங்கத்தை அமைப்பதற்காகவே போரட்டங்களை நடாத்துவவதற்கு மலையக வரலாறு அவர்களை நிர்பந்தித்தது. அவ்வாறு தொழிற்சங்க உரிமையை பெற்ற பின் மாற்று தொழிற்சங்க அமைப்பதற்காக, தான் விரும்பிய தொழிற்சங்கத்தில் சேர்வதற்காக, தொழிற்சங்க காரியாலங்களை அமைப்பதற்காக மலையக தொழிலாளர்கள் பெரும் போராட்டங்களை நடாத்தியுள்ளனர். அப்போராட்டங்களில் தமது உடைமைகளை மாத்திரமன்று உயிரையும் இழந்துள்ளனர். அவ்வாறு உயிர் நீர்த்த தியாகிகள் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும். இவை குறித்த தெளிவான கண்ணோட்டமும் நோக்கும் இல்லாதவரையில் எமது சமூக அரசியல் மற்றும் ஸ்தாபன வேiலைகள் திசையற்றதாகயிருக்கும்.
இந்தபின்புலத்தில்; மாற்று தொழிற்சங்க உரிமைக்காக 1956 ஆம் ஆண்டு மே மாதம் 2ம் ஆம் திகதி டயகம தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்(48 நாட்கள் நீடித்திருந்தது) மலயைக வரலாற்றில் குறித்துக்காட்டதக்க தொன்றாகும். இப்போராட்டத்தில் ஏப்ரகாம் சிங்கோ என்ற சிங்களத் தொழிலாளியொருவர் உயிர் நீர்த்தார். 23 வயது இளைஞனான இவர் அல்விஸ் அப்புகாமி முதியான்சலாகெ உக்குமெனிக்கே தம்பதிகளின் ஆறாவது பிள்ளையயாவார் (ஆதாரம்: மாத்தளை- ரோகினி,1993, ‘உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’, குறிஞ்சி வெளியீடு, கொழும்பு, பக.34,35). மலையக மக்களுக்காக உயிர் நீத்த சிங்களத் தோழர் ஏப்ரகாம் சிங்கோ பற்றி நோக்குவதற்கு இப்போராட்டத்திற்கான பின்னணிக் குறித்து நோக்குதல் அவசியமானதொன்றாகும்.
1950களில் தோட்டப்புறங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பே ஒரேயொரு தொழிற்சங்கமாக காணப்பட்டது. காலக்கிரமத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், தத்துவார்த்த பின்னணி, வர்க்க நலன்கள் இன்னும் இது போன்ற அம்சங்கள் காரணமாக மாற்றுத் தொழிற்சங்க அமைப்புகள் தோன்றத் தொடங்கின. அவ்வாறு உருவாகிய அமைப்பே ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் ஆகும். இத் தொழிற்சங்கமானது சட்டப்படி இலங்கை அரசாங்கத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்பாகும். இருப்பினும் அன்று தோட்டப்பகுதிகளில் அதிகாரத்தில் இருந்த துரைமார் சம்மேளனர் தோட்ட நிர்வாகமும் அதனை அங்ரிகரிக்க மறுத்தனர். மலையகத்தில் மாற்றுத் தொழிற்சங்கம் உருவாகுவதை ஏன் அதிகார தரப்பினர் இல்லாதெழிக்க முற்பட்டனர் என்பதற்கு ஓர் ஓப்புவமைக் கருதி மலேசிய தொழிற்சங்க சட்டம் மற்றும் உரிமையுடன்; ஒப்பு நோக்குவது அவசியமாதாகும்:
மலேசியாவில் 1930களின் பிற்பகுதியில் தான் தமிழ் தொழிலாளர்களிடையே தொழிற்சங்க அமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களிடையே தோன்றி முதற் தொழிற்சங்கம் 1936 இல் அமைக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர் சங்கம் (Ciam- Central Indian Association of Malaya) ஆகும். இவ்வமைப்பு பிரித்தானிய எதிர்ப்புணர்வைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதொரு அம்சமாகும். இதன் இன்னொரு பரிமாணமாகவே மலேசிய தொழிற் சங்கங்களின் சம்மேளனத்தின் (Pan - Malayan Federative of Trade Unions- PMFTN) உருவாக்கம் அமைந்திருந்தது. தொடந்து வந்த காலப் பகுதிகளில் கம்யஸ்ட் கட்சியின் தாக்கத்தின் விளைவாக தொழிலாளர்களின் உரிமைகளுக்கான குரல் வலுத்தது. மலேசியாவில் இவ்வெழுச்சியானது ஆளும் வர்க்கத்;தினரையும் ஏனைய இதர வர்க்கத்தினரையும் அதிர்ச்சிச் கொள்ள செய்தது. எனவே இரண்டாம் உலகப் போரின்போது மலேசியாவின் கம்யூனிஸ்ட் கட்சியும் அ.ம.தொ.க ஆகிய இயக்கங்களும் சட்ட பூர்வமான இயக்கங்கள் அல்ல என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்தச் சட்ட திருத்தங்கள் அனைத்தும் அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தை (PMFTU) அழிப்பதற்காக கொண்டு வரப்பட்டவையாகும். புதிதாக திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் 1946ம் ஆண்டு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் 03-11-1946 ஆம் ஆண்டு தன்னை ஒரு சம்மேளனமாக (as federation) பதிவு செய்து கொள்வதற்காக வழங்கப்பட்ட மனு 12-06-1948 இல் நிராகரிக்கப்பட்டதாகக் காலனித்துவ அரசு பி.எம்.எப்.டி.யு (PMFTU) விடம் தெரிவித்தது. அதாவது இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு முன்பு அமுலிலிருந்த சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட மனு, அந்த மனுவை நிராகரிப்பதற்காகவே நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் இருபதுக்கும் மேற்பட்ட மாதங்களுக்கு பிறகு நிராகரிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13ம் தேதியில் ‘பெரிய மற்றும் சக்தி வாய்ந்த தொழிலாளர் அமைப்பு” என்று கவர்னர் எட்வர்ட் ஜென்ட்டால் வர்ணிக்கப்பட்ட அகில மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தடை செய்யப்பட்டது. (கந்தையா ஜீவி, 2006, ‘மலேசிய தொழிற்சங்க போராட்டத்தின் வரலாறு, அரசியல், சமூகவியல் - ஒரு கண்ணோட்டம்” செம்பருத்தி இதழ் (பெப்ரவரி) பக். 36.)
இதன் அடிப்படை பின்னணி, போர்க்குணம் மிக்க தொழிற்சங்கத்திற்கும் அதன் அரசியல் உணர்விற்கும் பதிலாக அடிமையுணர்வையும் காட்டிக் கொடுக்கின்ற பண்பையும் வளர்க்கக் கூடிய தொழிற்சங்கத்தை உருவாக்கியது. 1946 இல் தேசிய தோட்டத் தொழிலாளர்கள் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி அவ்வமைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும் காலனித்துவ வாதிகளின் அற்ப சலுகைகளுக்கும் அடி வருடியாக இருக்கக் கூடிய P.P நாராயணன் என்ற இடைத் தரகரை காலனித்துவ அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது. இவ்விடைத்தரகரே இவ்வமைப்பின் ஏகபோக செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். ஒரு தொழிற்துறைக்கு ஓர் தொழிற்சங்கமே அமைக்க முடியும் என்ற மலேசிய தொழிற்சங்க சட்டத்தை சாதகமாக பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டங்களையும் உரிமைகளையும் மழுங்கடிப்பதில் ஆதிக்க வர்க்கமும் இடைத்தரகர்களும் வெற்றியும் கண்டனர். இவ்வியக்கமானது ஏகாதிபத்திய நலன்களுக்கு தொழிலாளர்களை தாரை வார்ப்பு செய்கின்ற பணியினையும் மறுபுறமாக அவர்களின் குறைந்தபட்ச உரிமை போராட்டங்களை கூட சமரசம் செய்துவிடுகின்ற பணியினையும் சிறப்பாகவே செய்து வருகின்றது. இதன் காரணமாக மலேசிய தமிழ் தொழிலாளர்கள் தமது அடையாளங்களை அரசியல், சமூக பொருளாதார பண்பாட்டுத் துறையில் இழந்து நிற்பது தற்செயல் நிகழ்ச்சி அல்ல.
இவ்வகையில் இலங்கையை நோக்குகின்ற போது மலேசியாவில் காணப்படுவது போன்று ஒரு தொழிற்துறைக்கு ஒரு தொழிசங்கம் என்ற சட்டம் இலாதிருப்பது முற்போக்கான அம்சமாகும். 1956 ஆம் ஆண்டிலே எஸ். டபிள்ய+. ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த போது தேசிய முதலாளித்துவ சக்தி என்றவகையில் மக்கள் நலன்சார்ந்து பல செயற்றிட்ட்ங்களை கொண்டு வந்தது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட நெற்மசோதா சட்டத்தின் மூலமாக இந்நாட்டில் வாழ்ந்த நிலமற்ற விவசாயிகள் பலர் நன்மையடைந்தனர். பஸ் போக்குவரத்து, மற்றும் பாடசாலைகள் என்பன தேசிய மயமாக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் பொதுமக்கள் சார்பானதாக அமைந்திருந்தன. யாவற்றுக்கு மேலாக விதேச ஆதிக்கத்தை தகர்க்கும் வகையில் திருகோணமலை, கட்டுநாயக்கா போன்ற இடங்களில் இருந்து வந்த பிரித்தானிய படையனிகளை வெளியேற்றியமை இந்நாட்டின் சுயாட்சி பாதுக்கக்ப்பட்டது. இவ்வகையில் உள்ளுர் அபிவிருத்யையும் விதேச எதிர்ப்புணர்வையும் கொண்டிருந்த ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் தான்(திரு. எஸ். டபிள்ய+. ஆர்.டி. பண்டாரநாயக்க காலத்தில்) இந்நாட்டில் அதிகமான தொழிற்சங்கள் பதிவு செய்யப்பட்டன. அவை ஜனநாயக முறையில் இயங்குவதற்கான சாத்தியங்கள் காணப்பட்டன. இவ்வாறதோர் காலப்பகுதியில் தான் மலையகத்தில் தொழிற்சங்க உரிமை மறுக்கபட்டன. மலையக மக்களை இந்தியாவிலிருந்து வந்து இங்கு குடியேறியவர்கள் என்ற நிலைப்பாட்டில்; அவர்களை வெறுமனே உழைப்பை வழங்கும் மந்தைக் கூட்டங்களாகவும்- அரை அடிமைகளாகவும் நோக்கியதன் வெளிப்பாடே அவர்களின் உரிமைகள் கவனத்திலெடுக்கப்படாது போனதற்கான அடிப்படையாகும்.
இந்தப் பின்னணியில் தோட்டத்துறையில் முதலாளிமார் சம்மேளனத்தை பொறுத்த மட்டில் அவர்கள் மாற்று தொழிற்சங்க உரிமையை மறுத்தனர். தொழிலாளர்கள் இவற்றை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். இவ்வகையில் டயகம தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கதொன்றாகும். இப்போராட்டத்தில் தலை தாங்கியவர் ஏப்ரகாம் சிங்கோ என்ற சிங்கள தொழிலாளியாவார். தோட்டப்பகுதியில்; சிங்களவர்களர்கள் சிறு தொகையினர் வாழ்ந்து வந்தனர்;. அவர்களில் சிலர் தோட்டத்துடன் இணைந்த லயன் வாழ்க்கை முறையில் வாழ்ந்தனர். வேறு சிலர் நாட்டுப்புரம் என்றழைக்கப்படுகின்ற தோட்டப்புறத்துடன் இணைந்திருக்க கூடிய கிராம பகுதமியில் வசித்து வந்த அதே சமயம் தோட்டத்துறைசார்ந்த தொழிலில் ஈடுப்பட்டு பின் தமது நாட்டு;ப்புரத்திக்கு திரும்புவர்;. இனவாதம் இனவெறி; என்பனவற்றைக் கடந்து மனிதநேயத்துடனாக உறவு இவர்களிடையே வலுப்பெற்றிருந்தது. தோட்டப்பபுற தொழிலாளர்களிடையே இவ்வாறான தமிழ்- சிங்கள உறவுகள் எவ்வாறு ஊடாடியிருந்தது என்பது பற்றி மலையக இலக்கியங்கள் அழகுற பதிவாக்கியிருக்கின்றன. மலரன்பணின் ‘தார்மீகம”; என்ற கதையில் வரும் அப்புகாமி, இனவன்செயலின் போது நீ தழிழன் பக்க இருக்கிறயாடா என சிங்கள இனவெறியர்கள் கூக்குரலிட “நான் தமிழன் பக்கதில்லடா நாயத்தின் பக்கத்தில் நிற்கிறேன்டா” என பதிலளிளப்பது இனவெறியையும் முரண்பாடுகளையும் கடந்து தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு எவ்வாறு வலுவடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. அவ்வாறே இக்கதையாசியரின் ‘நந்தாவதி’ என்ற சிறுகதை, இன ஒற்றுiயையும் முரண்பாடுகளையும் சித்திரித்து நிற்கின்றது. புலோலிய+ர் சதாசிவம் எழுதிய ‘மூட்டத்தினுள்ளலே’ என்ற நாவலில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் பெருமாள், அவருக்கு துணையாகவரும் சிறிசேனா, குமாரிகாமி, மற்றும், யாவற்றுக்கும் மேலாக இனவாதம் இன்முறையாக மாறி கோர தாண்வமாடும் தருணத்திலும் பெருமாளை காதலித்த திருமணம் செய்துக் கொள்ளும் சோமாவதி; இனவெறியர்களை எதிர்த்து நிற்கின்றாள். இந்த இலக்கிய சாட்சியங்களுக்கு அப்பால் தோட்டப்பகுதியில் வாழும் சிங்கள மக்கள் தமிழ் தொழிலாளர்களின் வழிப்பாடுகள், திருவிழாக்கள், கலை நிகழ்ச்சிகள் யாவற்றிலும் கலந்து கொள்வதுடன் அவற்றை தங்களுடைய பண்பாட்டம்சகளாகவே நோக்கி வந்தனர். எடுத்துக்காட்டாக ஹட்டன் பிரதேசத்தை அருகாமையிலுள்ள ஓஸ்போன் தோட்டத்தில் காமன் கூத்து நிகழ்த்துகின்ற போது பண்டா என்ற சிங்கள தொழிலாள தோழர் வருடாவருடன் தூதனாக பங்கெடுத்து ஆடிவருவதை இக்கட்டுரையாசியர் தமது காமன் கூத்து(மல்லிகை) பற்றிய கட்டுரையில் பதிவாக்கியிருக்கின்றார். இன்று இனவாதம் மேலோங்கிய நிலையில் இவ்வுறவு நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். ஏப்ரகாம் சிங்கோ இவ்வாறான தோட்டப்புற வாழ்வுடன் தம்மை இணைத்துக் கொண்ட தொழிலாளியாவார்.
மலையகத்தில் தொழிற்சங்க உரிமைக்கான போராட்டம் தொழிலாளர்களிடையே வேர் கொண்டு மலையகமெங்;கும்(குறிப்பாக அக்கரபத்தனைப் பகுதியில்) கிளைபரப்பிய போது துரைமார் சம்மேளனத்தை ஆட்டங்காணச் செய்தது. 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இப்போராட்டத்திற்hகன தயார் படுத்தலையும் அதற்கான கூட்டங்களையும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அமரர்கள் அஸிஸ், சி.வி. வேலுப்பிள்ளை முதலானோர் மேற்கொண்டதாக அறிய முடிகின்றது. இந்நிலையில் பொஸிசார்(ஏற்கனவே துரை பங்களாவில் தயாராக இருந்ததாகவும் கள ஆய்வின் மூலமாக அறிய முடிகின்றது) வரவழைக்கப்பட்டு இப்போராட்டத்தை ஒடுக்க முற்பட்டனர். “வேலையில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினார்கள்” என்ற குற்றச் சாட்டின் பேரில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர்கள் குற்றம் சாட்டப்பட்டு எட்டு தொழிலாளர்கள் பொஸிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் இப்போராட்டம் நீடித்த வேளையில் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டது. இத்துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி உயிர் நீத்த மலையக தியாகி தான் ஏப்ரகாம் சிங்கோ (ஆதாரம்: S. Nadasan, 1993, A History of the Up-Country Tamil People in Sri Lanka, Nandala Publication, Hatton, p. 241).
உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டங்களில் சட்டம் அதனை முதலாளிகளுக்கும் ஏகபோக ஆதிக்கசக்திகளுக்குமே சாதமாக பயன்படுகின்றது என்பது இலங்கைக்கு மாத்திரம் உரிய யாதார்த்தம் அல்ல. அந்தவகையில் காவல் துறை பொது மக்களின் நலனை விட ஏக போக சக்திகளின் நலனையே அது காக்க முனைகின்றது என்பதை அறிய இத்தகைய போராட்டங்கள் வழிவகுக்கின்றன. இதன் மூலமாக பொதுமக்களின் புரிதல் வளர்வதுடன் இத்தகை அராஜகங்களை எதிர்த்து போராடவும் அவர்களை துண்டுகின்றது. அந்தவகையில், இத்தோழரின் இறப்பை தொடர்ந்து பல்லாயிரக்கானக்கான( 30, 000க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டதாக திருவாளர்கள் எஸ். நடேசன், டி. அய்யாத்துரை முதலானோர் பதிவாக்கியுள்ளனர்). தொழிலாளர்கள் இறுதி யாத்திரையில் கலந்துக் கொண்டனர். தொழிலாளர்களின் விட்டுக் கொடுக்காத இப்போராட்டத்தில் அவர்களது கோரிக்கைகள் வெற்றிப்பெற்றன. தொழிலாளர்கள் மாற்றுத் தொழிற்சங்கத்தை உருவாக்குகின்ற உரிமையையும் தாம் விரும்பிய தொழிற் சங்கத்தில் சேருகின்ற உரிமையையும் பெற்றனர். இவ்விடயம் தொடர்பில் மாத்தளை ரோகினி தமது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“ஏப்ரகாம் சிங்கோவின் மரணத்திற்குப் பின்பும் 48 நாட்கள் டயகம தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர். இத்துப்பாக்கி பிரயோகத்தின் எதிரொலியாக அன்று பிரதமராக இருந்த எஸ். டபிள்ய+. ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் உடனடியாக தொழில் ஆணையாளர், தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்க தலைவர்கள் அடங்கிய ஒரு மநாட்டைக் கூட்டி பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற் சங்கத்தையும் தோட்ட முதலாளிமார் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். தோட்டங்களில் பொலிசார் அத்துமீறி பிரவேசிக்க கூடாதெனவும் உத்தரவிடப்பட்டது. இது இப்போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்”(மே.கு.நூ. ப.36).
இவ்வாறு தொழிலாளர்கள் போராட்டம் செய்து, தமது உயர்களை தியாகம் செய்து வெற்றிப்பெற்ற பின்னர் கூட அவர்களுக்கு அவ்வுரிமைகள் வழங்கப்படவில்லை என்பதை தொடர்ந்து வந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதே ஆண்டு நல்லத்தன்னி தோட்டத்தில் நடைப்பெற்ற போராட்டமும் கருமலை என்ற தொழிலாள தோழனின் இறப்பும் இதற்கு சான்றாக அமைகின்றது. துரைமார்களும் அவர்கள் சார்ந்த அமைப்புகளும் தொழிற்சங்கத்தை தமக்கு சாதமான வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள இரண்டு வகையான தத்திரரோபாயங்களை மேற் கொண்டனர். ஓன்று, தொழிற்சங்கத்தில் முக்கிய அங்கத்தினராக இருந்தவர்களுக்கு அற்ப சொற்ப சலுகைகளை வழங்கி அவர்களை தம்பக்கம் ஈர்த்துக் கொண்டனர். இத்தகைய செயல்களுக்கு அடி பணியாதவர்களை தமது கையாட்கள் மூலமாக தீர்த்துக் கட்டினர்.
‘இத்தகைய செயலை முறியடிக்கும் வகையில் தோட்ட நிர்வாகத்திற்கு தலைவணங்காதவகையில் செயற்பட எண்ணிய தொழிலாளர்கள் சிலர், 1956ம் ஆண்டு, தாம் வேலை செய்து வந்த மஸ்கெலியா நல்லத்தண்ணி தோட்டத்திலே தொழிற்சங்கத்தை அமைக்க முற்பட்டனர். இதனைப் பொறுக்காத தோட்ட நிர்வாகம் பொய் முறைப்பாடுகளை செய்து புதிய தொழிற்சங்கம் அமைக்க முற்பட்டவர்கள் மேல் சுமத்தி, போலிசில் முறையிட்டனர். அதன் விளைவாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். போலிசாரின் கையில் சிக்குப்படாமல் தப்பினான், ஒரு இளைஞன். அவர் தான் கருமலை. கருமலையை தீர்த்துக்கட்ட தம் கையாட்கள் நால்வரை ஏவி விட்டனர், தோட்ட நிர்வாகம். இந்நால்வரும் கருமலையை அடித்தே கொன்று விட்டனர்’(ஸ்ரீகாந்த்-டிக்கோயா, 1987, உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள், மக்கள் மறுவாழ்வு ஐந்தாவது ஆண்டு நிறைவு மலர், சென்னை,ப.104).
இவ்விடத்தில் முக்கியமான செய்தியொன்றும் கூறவேண்டியுளளது. ஏப்ரகாம் சிங்கோ பற்றிய பதிவுகள் மிக மிக குறைவாகவே காணப்பகின்றன. மனிதர்களுக்கே உரித்தான ஞாபக மறதி, இவ்வகையான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வழங்குவதில் உள்ள அரசியல் பீதி அல்லது தயக்கம், இதனுடன் தொடர்பான பலரின் மறைவு என்பன இவ்வகையான ஆய்வுகளை மேற்கொள்வதில் பல தடைகளை ஏற்படுத்தியுள்ளன என்பது உண்மைதான். ஆனால் இவற்றையும் மேவி பல பதிவுகள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சி.வி வேலுப்பிள்ளை தமது “வீடற்றவன்” நாவலில் டயகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஏப்ரகாம் சிங்கோவின் நினைவு சின்னம் பற்றி குறிப்பிடுகின்றார். அத்துடன் ஏப்ரகாம் சிங்கோவின் இறுதி நிகழ்வுகளிலும் கலந்து தலையையேற்று உரையாற்றியிருக்கின்றார். அவ்வுரையின் பின்வரும் பகுதி அவதானத்திற்குரியது:
தொழிற்சங்கத்தை தோட்டங்களில் ஸ்தாபிப்பதற்கு தொழிலாளர்கள் தங்களின் உயிரைப் பலிக்கொடத்த நிகழ்ச்சி 1940 முதல் தொடர்ச்சியாக இன்றவரை இருந்து வருகிறது. இவைகள் மலையக தொழிற்சங்க சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. டயகம தோட்டத்தில் புதிய தொழிற்சங்கத்தை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட நிருவாகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எழுந்த போராட்டத்தில் கிடைக்கும் வெற்றி ஏனைய தோட்டத் தொழிலாளர்களுக்கும் உச்சாகமூட்டுவதாக இருக்கும்” (மாத்தளை ரோகிணி, மே. கு.நூ.ப.36).
மலையக தியாகிகள் தொடர்பாக டிக்கோயா ஸ்ரீகாந்த்- எழுதிய உரிமைப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள், என்ற கட்டுரையும் ஆதே தலைப்பில் மாத்தளை ரோகினி(டி. அய்யாதுரை) எழுதிய நூலிலும் ஏப்பிரகாம் சிங்கோ பற்றிய செய்திகள் உள்ளன. தொழிற்ச்கவாதியான திரு. எஸ் நடேசனின் A History of the Up-Country Tamil People in Sri Lanka நூலிலும் ஏப்ரகாம் சிங்கோவின்; வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி குறிப்பிடுகின்றார். சு.முரளிதரன் தமது “தீவகத்து ஊமைகள்” என்ற கவிதைத் தொகுப்பில் ஏப்ரகாம் சிங்கோ பற்றி பதிவை தருகின்றார். அத்துடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் வெளியீடான மாவலி பத்திரிக்கையில் மலையக தியாகிகள் பற்றிய தொடர் கட்டுரைகள் வெளிவந்தள்ளன. அக்கட்டுரையில் ஏப்ரகாம் சிங்கோ பற்றிய குறிப்புகள் காணப்பட்டமை குறிப்பிட தக்கவையாகும். “பேராசிரியர் கைலாசபதி: சமூகமாற்றத்திற்கான இயங்காற்றல்”(2011) என்ற இக்கட்டுரையாசிரியன் நூல் ஏப்ரகாம் சிங்கோவிற்கே சமர்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரகாம் சிங்கோ பற்றியோ காத்திரமான ஆய்வுகளோ அல்லது குறிப்புகளோ இல்லாத சந்தர்ப்பத்தில் மேற்குறித்த முயற்சிகள் மெத்த பெரும் சாதனைகளாகவே அமைந்திருக்கின்றன. தொடர்ந்து இத்துறையில் ஆக்கப் ப+ர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும். ஆழமான கனதியான கள ஆய்வுகள் மூலமாகவே இதுதொடர்பில் பல விடயங்களை வெளிக் கொணரக் கூடியதாக இருக்கும். நேரடி அனுபவம், சமூக நடைமுறையின் ஊடாக பெறப்பட்ட அனுபவம் என்பன இதுவிடயத்தில் முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டியவைகளாகும்.
மலையகத் தமிழர்கள் இந்நாட்டின் தேசிய இனமாக காணப்படுகின்றமையினால் வரலாறு வழி வந்த இவர்களின் தனித்துவங்களும் தன்னடையாளங்களும் இந்நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களிலிருந்து வேறுப்பட்டதாக காணப்படுகின்றது. அவர்கள் தமது சாதாரண உரிமைகளுக்காக கூட நீண்ட நெடிய போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெரும்பாண்மையான தொழிலாளர்களை கொண்டிருந்தமையினால் இவர்களின் போராட்டங்களில் தொழிலாளவர்க்க உணர்வே முனைப்படைந்திருந்தது. அதன் பின்னணியில் வெம்மை சூழ் கொண்டெழுந்த இத்தகைய போராட்டகளும் உயரி தியாகங்களும் வாழ்வதற்கான போராட்டம் மட்டுமல்ல, அது மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றுவதற்காக போராட்டமாகவே அமைந்திருந்தன. அந்தவகையில் இம்மக்களின் போரட்டங்கள் யாவற்றிலிலும் ஜனநாயக தன்மையும் சமூகமாற்றப் போராட்டத்திற்கான உந்துதலும் புதிய சமூகத்தை உருவாக்குவதற்hகன பாட்டாளிவர்க்க உணர்வும் அதன் உயிர்நாடியாக அமைந்தியிருந்தன. மலையகத்தில் வெகுஜன சமூக சக்திகளை கட்டியெழுப்பும் பணிகளில் ஈடுப்பட்டிருப்போர் மலையக மண்ணில் தோன்றிய போராட்ட வரலாறு பற்றிய தெளிந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது அவசியம். இன்று பல வடிவங்களில் முனைப்படைந்து வருகின்ற இனவாத சூழலில் ஓர் உழைக்கும் மக்கள் நலனிலிருந்து அந்நியமுறாமல், இன மத மொழி வேறுப்பாடுகளுக்கு கடந்து மனிதன் மனிதனாக வாழ்வதற்கான பதாகையை முன்னெடுத்து செல்கின்ற போது ஏப்பிரகாம் சிங்கோ போன்ற மலையக தியாகிகள் நினைவுக் கூற வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நன்றி: குவர்னிகா
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...