இந்த
காலகட்டத்தில் மலையகம் என்ற சொல் ஊடகங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதை
அவதானிக்க முடிகிறது. அதற்கான காரணத்தை தேடிப் பார்;த்தால் மத்திய மாகாண சபைத் தேர்தல் என்று
தெரியவருகிறது.
தேர்தலுடன் சேர்த்து
மோதல் என்ற சொல்லும் ஒட்டிப்பிறந்துள்ளதாக எண்ணத் தோன்றுகிறது. காரணம் தோட்டத்
தொழிலாளர்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினையில் நாட்டம் காட்டாத தொழிற்சங்கங்கள்
தேர்தல் காலத்தில் தங்கள் பதவி ஆசனங்களை தக்க வைத்துக் கொள்வதற்கு தொழிலாளர்கள்
காலடியில் குட்டிபோட்ட பூனைபோல் சுற்றித்திரிகின்றன.
மத்திய மாகாண
சபைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் சூடுபிடித்து எரியத்
தொடங்கிவிட்டன. அதற்கு சிறந்த உதாரணம் கொட்டக்கலை - கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர்களுக்கு இடையிலான குழு
மோதலாகும்.
குருநாகல் மாவட்;டத்திற்கு பிடித்த விருப்பு வாக்கு பைத்திய ஒரு
கட்சி குழு மோதல் நோய் அப்படியே மத்திய மலைநாட்டிற்கும் தொற்றியுள்ளது.
இலங்கையில் சுமார்
180 வருடகாலத்திற்கு
மேற்பட்ட வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில்
இன்னும் பிரகாசமான ஒளி பிறந்ததாக தெரியவில்லை.
கூலி அடிமைகளாக
வந்த மக்களுக்கு பிரித்தானியர் கட்டிக் கொடுத்த குதிரைபட்டி போன்ற லயன்
குடியிருப்பு இன்னும் அப்படியே உள்ளது.
மலையகத்தின் பல
பகுதிகளில் மக்கள் சேறு கலந்த அசுத்தமான குடிநீரை பருகிவருகின்றனர்.
மலையக மண்வாசனை
அப்படி இருப்பது போல சில மலையக மக்கள் கிராமங்களில் மண்ணெண்ணை வாசமும் நீடிக்கிறது
காரணம் மின்சார வசதியில்லை.
சொல்வதற்கு
வெட்கம் தான் இருந்தாலும் சொல்ல வேண்டிய நிலை... மலையக தோட்டத் தொழிலாளர் வர்க்கம் இன்னும்
தேயிலை காடுகளிலும் ஆறுகளிலும் ஓடைகளிலும் பொட்டல் காடுகளிலும் மலம் கழிக்கிறது.
கல்வி அறிவில்
இன்னும் கடை வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
வேலை
வாய்ப்பின்றி மலையக இளைஞர்கள் முதலாலி வர்க்கத்தின் அடிமைகளாகி வருகின்ற அதேவேளை.
யுவதிகள் காமன்ட் வேலை என்ற பெயரில் காமக்குழிக்குள் தள்ளப்படுகிறன்றனர்.
மலையகத்தில் ஒரு
தேசிய பாடசாலை இல்லை, நமக்கென்று ஒரு
பல்கலைக்கழகம் இல்லை.
மலையக மக்கள்
வாழ்கின்ற பத்துக்கு பத்து லயன் காம்பராவை உரிமை கோர முடியாது காணி உரிமை இல்லை.
மலையக இளைஞர் யுவதிகளை
கொழும்பிற்கு வேலைக்கு அனுப்பாதிருக்க மலையகத்தில் தொழில் பேட்டைகளை ஆரம்பிக்கலாம்
அதற்கான இயற்கை வளம், இடவசதி உள்ளிட்ட
அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் அதனை பேரம்பேசி பெறுவதற்கு மலையக மக்களை உறவு
கொண்டாடும் தலைமைத்துவங்களுக்கு வக்கில்லை.
இப்படி இன்னும்
ஆயிரம் ஆயிரம் உரிமை பிரச்சினைகள் மலையக மக்களுக்கு உள்ளன. ஆனால் மாறி மாறி மாகாண
சபை, பாராளுமன்ற ஆசனங்களில்
அமரும் மக்கள் தலைமைகள் வயிற்று பசிக்கு சோறு கேட்கும் அந்த மக்களுக்கு குச்சி
மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதுபோல கூரைத்தகடு, விளையாட்டு மட்டை, சீமெந்து, டென்ட், நாட்காலி, ஒலிபெருக்கி... என இன்னும் பல குறைந்தவிலை
பொருட்களை கொடுத்து காலா காலம் ஏமாற்றி வருகின்றனர்.
தோட்டப்
புரங்களில் கொங்கிரீட் பாதைகள் அமைப்பில் மாத்திரமே இந்த தலைமைகள் போட்டிப்
போட்டுக் கொண்டு வெற்றிபெற்று வருகின்றனர். அதிலும் பல குறைகள்.
எனவே மலையக
மக்களின் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத இந்த சுயநலவாத அரசியல்
தலைமைகளைதான் அந்த மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் தலைவர்களாக்குகின்றனர்.
இதுதான் எம்மக்களின்
தலைவிதியோ என்று சகித்துக் கொள்ளவும் தோனுகிறது.
சாராய அசியல்,
ஊடக, பொருளாதார கவர்ச்சி அரசியல் என்பவற்றால் மக்கள்
சிந்தையிழந்து போயுள்ளனர்.
இவ்வாறான
நிலையில் சுயநல அசியல் தலைமைகள் தங்கள் பதவி ஆசன போட்டிக்காக தேர்தல் காலங்களில்
பண பலத்தை வைத்து மோதல் கலாசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதில்
கவலைக்குரிய விடயம் என்னவென்றால் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களை எவ்வித வளர்ச்சியும்
இன்றி அடிமைகளாக அப்படியே வைத்திருக்க நினைக்கும் அந்த சுயநல அரசியல்
தலைமைகளுக்காக அப்பாவி தோட்டம் தொழிலாளர் வர்க்கமே தங்களுக்குள் முட்டி மோதிக்
கொள்வதாகும். மோதலில் அரசியல் தலைவர்கள் எவருலும் காயப்படுவதில்லை. கத்திக்குத்து
வாங்குவதில்லை. சிறைக்குச் செல்வதில்லை. இவை அனைத்துக்கும் பலிகடவாவது அப்பாவி
தோட்டத் தொழிலாளர் வர்க்கமே..
அன்றாடம்
உணவுக்காக வியர்வை சிந்தி உழைக்;கும் அந்த
மக்களுக்கு அரசியல் வன்முறை தேவைதானா? தங்களது உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடினால் உற்சாகப்படுத்தலாம். ஆனால்
தங்களை அழிக்க நினைப்பவர்களுக்காக தாங்கள் அழிவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த சம்பள உயர்வு
கொட்டக்கலை போராட்டத்திலும் தொழிலாளர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது
தொழிலாளர்களே கல்லெறிந்தமை மலையகத்தின் கறுப்பு வரலாறாகும்.
மலையகம் இன்று
ஒரு வகை மாயைக்குள் புதைந்து கிடக்கிறது. அதிலிருந்து மக்கள் வெளியில் வர
வேண்டும். வெளி உலகத்தை காண வேண்டும். தங்கள் உரிமைகள் என்ன என்பதை அறிய வேண்டும்.
அதனை பெற்றுக் கொள்ள ஜனநாயக ரீதியில் போராட வேண்டும். அதனை பெற்றுக் கொடுக்க
முன்வரும் பொதுநல அரசியல் தலைவர்களை ஜனநாயக வாக்குரிமை மூலம் தெரிவு செய்ய
வேண்டும்.
எனவே இந்த
இடத்தில் எம்தமிழ் மலையக பெற்றோர், சகோதர, சகோதரிகள், நலன்விருபிகளுக்கு ஒரு பகிரங்க கோரிக்கை
விடுக்க விரும்புகிறேன்.
தயவுசெய்து
மலையகத்தின் அடிதடி அரசியல் செய்ய விரும்பும் குண்டர்களுக்கு, காடையர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்க
வேண்டாம். அவர்களுடைய மோதல் கலாசாரத்திற்கு துணைபோக வேண்டாம். அப்படி துணைபோனால்
படுகுழியில் நீங்களே விழுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். பிள்ளைகள் பெற்றவர்களே
அடிதடி அரசியலுக்கு துணைபோய் நீங்கள் சிறைக்குச் சென்றால் உங்கள் பிள்ளைகளை,
மனைவி குடும்பத்தை யார் கவனிப்பது?
சிந்தியுங்கள்.. அண்ணன்
தம்பிமாரே அடிதடி குண்டர் அரசியல் கலாசாரம் கொண்டவர்களுடன் நீங்கள் கைகோர்த்துச்
சென்று சிறைக்குச் செல்ல நேர்ந்தால் உங்கள் பெற்றோர், குடும்பத்தினரை யார் பார்ப்பது? சிந்தியுங்கள்... நீங்கள் சிறை சென்ற பின்
உங்கள் அரசியல் தலைவர்கள் உங்கள் குடும்பங்களுக்கு மாதாந்த செலவுக்கு குறிப்பிட்ட
தொகை பணம் வழங்குவார்களா? கோடிக்கணக்கில்
சந்தா பணம் பெறும் இந்த தொழிற்சங்க தலைவர்கள் உங்களுக்கு மலசலகூடம் கட்டித்தரக்கூட
முன்வருவதில்லையே பிறகு எப்படி சோறு தர வழி செய்வார்கள்? சிந்தியுங்கள்...
என் மலையக
சொந்தங்களே! ஏமாந்தது போதும் விழித்தெழுங்கள் புதிய மலையகம் படைக்க புறப்படுங்கள்
உங்கள் ஜனநாயக வாக்குரிமையை சிந்திந்து பயன்படுத்துங்கள்.. மலையக மக்களின்
உரிமைக்காக குரல் கொடுக்கும் நல்ல படித்த அனுபவமுல்ல மனிதர்கள் இம்முறை தேர்தலிலும்
போட்டியிடுகின்றனர். அவர்களை அடையாளம்
கண்டு தேர்ந்தெடுங்கள் அதன்மூலம் நமது அடையாளத்தை நிச்சயம் உறுதிப்படுத்த
முடியும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...