முத்து சிவலிங்கம் |
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அண்மைய இந்திய விஜயம் மற்றும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தை தினக்குரலுக்காக நேர் கண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நேர்காணல் வருமாறு ;
கேள்வி : மலையகப் பெருந்தோட்ட காணிப் பங்கீடு தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளீர்களா ?
பதில் : இது விடயமாக நாம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். பிரதேச மற்றும் சனத்தொகை அடிப்படையில் காணிப் பகிர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது முக்கிய கோரிக்கையாக உள்ளது. நாம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அதற்கு இணக்கமும் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்டங்களில் வேலையின்றி இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கே இந்த காணிப் பகிர்வின் போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த காணிப் பகிர்வின் போது பெருந்தோட்ட இளைஞர்களுக்கு துரோகம் இழைக்கப்படமாட்டாதென நாம் நம்புகிறோம்.
கேள்வி : கடந்த 1 1/2 மாதங்களாக தொடரும் லிந்துலை பம்பரகலை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளீர்களா?
பதில்: பம்பரகலைத் தோட்டத் தொழிலாளர்களை இத்தகைய போராட்டத்தில் இறக்கி விட்ட தொழிற்சங்கங்கள் இது குறித்து பார்த்துக் கொள்வார்கள். இந்தப் போராட்டம் தொடர்பில் தொழிலாளர்கள் சார்பில் எமக்கு அறிவிக்கப்படவில்லை. இந்தப் போராட்டம் தொடர்பாகவும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அட்டன் தொழில் திணைக்களத்தில் மூன்று சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை . எனவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர்களே அதனைத் தீர்த்து வைப்பார்கள்.
கேள்வி : 13 ஆவது திருத்தம் தொடர்பில் தங்களின் நிலைப்பாடு என்ன ?
பதில் : 13 ஆவது திருத்தம் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் எமது நிலைப்பாடு. இத் திருத்தம் ஒழிக்கப்படுமாயின் அது சிறுபான்மையினருக்கு பாதகமாகவே அமையும். இது தொடர்பிலான எமது நிலைப்பாட்டை நானும் அமைச்சர் ஆறுமுகனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளோம். மலையகச் சமூகத்திற்கு இருக்கும் பிரச்சினைகள் வட, கிழக்கு மக்களுக்கு இருக்கும் பிரச்சினையை விட மாறுபட்டவை.
கேள்வி : அண்மைய இந்திய விஜயத்தின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறுவீர்களா?
பதில் : இந்தச் சந்திப்பின் போது 13 ஆவது திருத்தம் தொடர்பில் எமது குழு எந்தவொரு பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. மலையக மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு போதியளவு நிதி கிடைக்கப் பெறுவதில்லை. எனவே , இந்திய அரசின் உதவிகளை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பாகவும் மலையக மக்களின் வீடமைப்புத் திட்டம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. மலையகத்திலுள்ள லயன் குடியிருப்பு முறைகளை ஒழித்து தனி வீட்டுத் திட்டங்களை அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியிடம் கலந்துரையாடிய போது அவர் இது விடயமாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சந்திக்குமாறு கூறினார்.
இதனையடுத்தே நாம் எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் , நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம். 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எனினும் சில ஊடகங்கள் நாம் 13 ஆவது திருத்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகளை வெளியிட்டிருந்தன. 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்குதல் அல்லது திருத்தம் செய்தல் எனக் கூறிக்கொண்டு எமது மலையக சமூகத்தின் பிரஜாஉரிமையில் கைவைப்பதற்கு இந்தியா ஒரு போதும் இடமளிக்கக்கூடாது என நாம் இச் சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியிடம் கேட்டுக் கொண்டோம்.
கேள்வி : 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான சட்ட மூலம் பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் நீங்கள் அதற்கு ஆதரவாகவா, எதிராகவா வாக்களிப்பீர்கள் ?
பதில் : அது குறித்து நாம் எமது உயர் மட்ட குழுவுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிப்போம். நாம் எடுக்கும் முடிவுகள் எமது மக்களைப் பாதிக்காத வகையிலேயே இருக்கும். மீண்டும் கூறுகிறேன் வட கிழக்கு மக்களுக்கும் மலையக மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகள் மாறுபட்டவை.
கேள்வி: மலையக பெருந்தோட்ட இளைஞர்களுக்கு கூற விரும்புவது ?
பதில் : மலையக பெருந்தோட்ட இளைஞர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி புறநகர்ப் பகுதிகளில் தொழில் செய்யும் நிலை தற்போது அதிகரித்துள்ளது. இவ்வாறு வெளியில் செல்பவர்களில் 20 வீதமானவர்கள் மாத்திரமே சொந்த வீடுகளை அமைத்துக் கொண்டு இருக்கின்றனர். 70 வீதமானவர்கள் பெருந்தோட்டப்புறங்களை பதிவாகக் கொண்டவர்கள். பெருந் தோட்ட இளைஞர்கள் தோட்டத்தில் தொழில் செய்ய வேண்டும் என நான் சொல்லவில்லை. சொந்த இடங்களை விட்டு வெளியில் சென்று வாழ்வதால் மலையக சமூகத்தின் இருப்பு இன்று குறைவடைந்து கொண்டு செல்கின்றது.
எனவே, பெருந்தோட்ட இளைஞர்கள் தோட்ட குடியிருப்புகளை கிராமங்களாக மாற்றிக் கொண்டு தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள முன்வர வேண்டும். இல்லையேல் எமது சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகி விடும் என்றார்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...