ஒரு பெரும்பான்மை தேசிய இனத்தின் ஒடுக்குதலுக்கு அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் சிறுபான்மை இனங்கள் உட்படும்போது, அதில் இருந்து தம்மை மீட்டுக் கொள்வதற்கு சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு உள்ள உரிமையை மறுக்க முடியாது. இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஏனைய ஒடுக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களையும் உள்ளடக்கி பயணிக்கக் கூடியதாக இருக்கின்றமை கவனத்திற்குரியது.
எனினும், இன ஒடுக்குமுறைக்கு எதிரான சிறுபான்மையினரின் போராட்டங்கள் எனப்படுபவை பல சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மையினருக்கு பாதகமாகவும் பெரும்பான்மை இனத்தின் ஒடுக்குதலுக்கு சாதகமாகவும் வெளிப்பட்டிருக்கின்றமையானது சிறுபான்மை தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் தந்திரோபாயங்களுக்கு அப்பால் அதன் நேர்மை பற்றிய பிரச்சினையாகும். மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் முகம்கொடுத்து வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் ரீதியாக அணித்திரள வேண்டிய தேவை உள்ளது.
எனினும், அந்த அணித்திரள்வுகள் இன ஒடுக்குதலை முறியடிக்க பயன்படுகின்றதா என்பது பற்றி மலையக அரசியல் வரலாறு சொல்லும் பாடமோ வேறு. மத்திய மாகாண சபை தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்து முடிவுபெற்றுள்ள நிலையில் மலையக மக்களின் அபிவிருத்தி என்ற கோஷத்துக்கு அப்பால் இன ஒடுக்குதலுக்கு எதிராக அணி திரள்வோம், மறைமுகமாகவேனும் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை காப்போம் என்ற விதத்தில் வெளிப்படப் போவது உறுதி. எனவே, இம்முறை தேர்தல் களம் மலையக இன ஒடுக்குதலுக்கு என்ன சாதிக்கப்போகிறது என்பது பற்றி தேட வேண்டியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ள அதேவேளை, கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகிறது. அரசாங்கத்துடன் போட்டியிடுவதற்கான நியாயமாக, தற்போதைய அரசாங்கத்தினால் மலையகமக்கள் பெற்றுள்ள வரப்பிரசாதங்களை அதிகரிக்கவும் மலையக மக்களுக்கு வழங்கியுள்ள அரச நியமனங்களை மேலும் பெற்றுக் கொள்வதோடு மலையகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் சலுகைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்
என்பதை இ.தொ.கா. குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து இ.தொ.கா. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னுமாக இன்று வரை தொடரும் பேரினவாத ஒடுக்குமுறையினால் ஒரு தேசிய இனமாக மலையக மக்கள் எழுச்சியுற்று தனித்துவமான அபிலாஷைகளைக் கொண்டுள்ளனர் என்ற யதார்த்தத்தைத் தொடர்ந்தும் நிராகரித்து வருகிறது. தமது கள பிரதேசமாக உள்ள நுவரெலியா மாவட்டத்தில் தனது தனித்துவத்தைப் பேண அரசுடன் இணைந்து போட்டியிடும் இ.தொ.கா. கண்டி, மாத்தளை மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவதன் உபாயம் என்ன என்பதை விளங்கிக் கொள்வது கடினமன்று. இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன் கொள்கை முடிவுகள் மரபு ரீதியான மலையக அரசியலில் இருந்து மாறுபட்டவையன்று.
மலையகத் தேசியத்தை மையப்படுத்தி இ.தொ.கா. அரசியலுக்கு மாறாக வெளிப்படுத்திய மலையக மக்கள் முன்னணி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பாராளுமன்றத்தை நோக்கிய அரசியல் பயணத்தின் விளைவாக இன்று பேச்சளவில் மலையக தேசியத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று தேர்தல் களத்தில் மட்டும் மலையக தேசிய சுலோகத்தை வெளிப்படுத்தும் ம.ம.முன்னணி, இ.தொ.கா. போன்று ஆளும் கட்சியில் அங்கம் வகிப்பதன் மூலமே மலையக மக்களின் எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்ற நிலைப்பாட்டின் காரணமாக மலையக தேசியத்தை முன்னெடுப்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் இணைந்து இ.தொ.கா. போட்டியிடுவதால் அரசாங்கத்துடன் அங்கம் வகிக்கின்ற அங்கம் வகிக்காத சில தமிழ்த் தொழிற் சங்கங்கள் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றினூடாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகிறது. இதே வகையான கூட்டு முயற்சி கண்டி மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மனோ கணேசன் ஜனநாயக மக்கள் முன்னணி அரசின் பொருளாதார அரசியல் சமூக பிரச்சினைகளைப் பற்றி பேசினாலும் மலையக மக்களுக்கு பேரினவாதத்தினால் வரலாற்று ரீதியாக ஏற்படுத்தப்பட்ட தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் பேச முடியாது. காரணம் அதில் முக்கிய பங்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு உண்டு.
தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடான 13 இல் குறைப்பும் பின் அழிப்பும் சிறுபான்மை இனங்கள் மீதான நேரடி மறைமுக ஒடுக்குமுறைகளும் இடம்பெற்றுவரும் பின்னணியில் அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி மலையக தேசிய அரசியலை நிலை நாட்டி மலையக மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசியல் பணியை செய்யும் தலைமைகள் இன்று மலையகத்தில் இல்லை என்பது தெளிவு. 13 ஆவது திருத்தத்தின் அதிகாரத்தை குறைப்பதனால் மலையக மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றவாறே இ.தொ.கா. நிலைப்பாடு உள்ளது.
மலையக மக்கள் முன்னணி கொள்கையளவில் 13 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக இருக்கின்ற போதும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் முன்னெடுத்து அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. மத்திய மாகாண சபை தேர்தல் களத்திலும் பின்னரும் அதன் நிலைப்பாடுகள் எப்படி அமையப் போகின்றன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மலையக மக்கள் உரிமைகள் நிலைநாட்டப்பட மலையக மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்க வேண்டும் என்பது போய் இன்று அனைத்திலும் ஆளும் கட்சியின் பக்கம் இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத கொள்கை மலையக அரசியலில் ஆட்சி செய்து வரும் நிலையில் மலையக தேசியம் என்பது வெறும் வாக்குப் பெறுவதற்கான துருப்புச் சீட்டாக மட்டுமே இருக்கப் போவது உறுதி.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...