மு.சி கந்தையாவின் ‘நிசங்களின் சத்தம்’ மலையக சமூகத்தின் நினைவுப் பதிவுகள்
கவிஞர் மு.சி. கந்தையா எழுபதுகளில் இலங்கையில் மலையக இலக்கியத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். அரசியல் சமூக நெருக்கடிகளின் காரணமாக தாயகம் திரும்பிய பின்னரும் தொடர்ந்து சமூகச் செயற்பாடுகளில் ஆர்வம் காட்டி வருபவர். மலையகச் சமூகம் பொறுத்து பல்வேறு பரிமாணங்களும், வௌ;வேறு வரலாறுகளும் முன் வைக்க கூடிய ஒரு சூழலில், அத்தகைய சமூக உருவாக்கத்தில் வேர்கொண்டு பின், நசிந்து போன அரசியலின் விளைப்பொருளான சமூக முரண்பாடுகள்- இனமுரண்பாடுகள் எவ்வாறு இம்மக்களை இந்நாட்டிலிருந்து அந்நியப்படுத்தி இந்தியாவிற்கு புலம்பெயர வைத்தது என்பது குறித்து சிந்திக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகும். தனிமனித அளவிலும் சமுதாய அளவிலும் மனித உறவுகள் மாறுகின்ற போது தம் காலத்து பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் சிறப்பாக அடையாளம் கண்டுக் கொண்ட ஒருவராலேயே காலத்தை வென்று நிற்க கூடிய படைப்புகளை உருவாக்க முடியும். அந்தவகையில் அந்தவகையில் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தாரை வார்த்து இம் மண்ணில் மதர்த்து தளைத்து நிற்கும் தேயிலைச் செடிகள்: அவை பலி கொண்ட சோகமிக்க சமூகத்தின் குரலே மு.சி. கந்தையா என்ற மனிதனையும் கவிஞனாக்கியிருக்கின்றது. மலையக மக்கள் இம் மண்ணில் வஞ்சிக்கப்பட்ட போது தமது பூர்வீக மண் தம்மை காக்கும்- இன்பத்தை தரும் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றவர்கள் எவ்வாறு அரசியல் அநாதைகாளக்கப்பட்டு இன்னும் “சிலோன் காரர்கள்”; என்ற அடையாளத்துடன் வாழ்கின்ற அவலம், இவரது கவிதைகள் சமூகப் பொறுப்புணர்வுடன் பட்டைத் தீட்டுவதற்கு ஏதுவான சூழலை உருவாக்கியிருக்கின்றது. ஒருவகையில் இவரது கவிதையின் களம் வௌ;வேறு சூழலாக இருந்த போதினும் அதன் மையச்சரடாக விளங்குவது மலையக சமூக பின்புலமே. அத்தகைய வாழ்க்கை அனுபங்களை கொண்டு சிறந்த படைப்பாளியாகவும், சமூக ஆளுமையாகவும் உருவாகியுள்ள மு.சி. கந்தையா மலையக சமூகத்தின் அனுபவபிரதியாக விளங்குகின்றார். இத்தகைய வாழ்வியல் அனுபவங்களினுள்ளிருந்து எழும் இலக்கிய பிரதிகள் தான் மலையக சமூகத்தின் எதிர்காலவியலை உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தோற்றுவித்திருக்க கூடிய கூறுகளில் ஒன்றாகும். இத்தகைய சூழலில் உருவான மனிதர்களின் பிரசன்னத்தின் வெளிப்பாடாகவும் இத்தொகுப்பு கவனத்தைப்பெறுகின்றது. மலைகய சமூகத்தின் நிலைக் குறித்து “சோரம் போகும் அதிகாரம்”; என்ற கவிதையில் அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:
துச்சாதனர்களுக்கும்
ஆதிகார சோரத்திற்கும்
மேய்ச்சல் நிலமாக!
இம்மலைப் பிரதேரத்தை
மலடாக்கும்…
ஆட்சிமையின் ஆயுதங்கள்
முனை மழுங்க
ஊதாரி எண்ணங்களால்
ஊமையாகிப்போயின…
இம்மண்ணின் ஆளுமைக்கு
புதிய வேர்கள் முளைத்து எழட்டும்!
மலையக மக்களின் தோட்டப்புற வாழ்வுடன் இணைக்கப்பட்ட அரை அடிமை நிலை- அதனடியாக தோன்றிய வர்க்க இனத்துவ அடக்குமுறைகள்- கூடவே அம்மக்கள் தமக்காக செய்த கலகங்கள் யாவும் அவர்களை இந்நாட்டின் தனித்தவமான இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்தகைய தேசியத்தின் அடியாக எழக் கூடிய எழுச்சிகள் மாற்றங்கள் ஒருவகையில் இந்நாட்டின் ஆதிக்க சக்திகளை கதிகலங்கவே செய்திருக்கின்றன. எனவே மலையக மக்களுக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமாக கட்டவழித்து விடப்பட்ட இனவண்முறைகள் மற்றும் காலத்திற்கு காலம் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் இம்மக்கள் ஒரு தனித்துவமான இனம் என்ற இருப்பை சிதைப்பதற்கான முயற்சிகளே. இத் தொகுப்பின் உயிர் நாடியான நிஜங்களின் சத்தமும் அதுதான். இவ்வாறே ‘ இறந்தகாலம் பெற்ற நிகழ்காலம்’ என்ற கவிதையும் மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வரலாற்றை பதிவாக்கும் முயற்சியின் வெளிப்பாடாகும்.
இவ்வாறே மலையகத்தில் பெருந்தோட்டதுறையில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு கூடிய லாபத்தை பெறவேண்டும் என்ற நலனும் பரந்துப்பட்ட தொழிலாளர்களை பெரும் பாண்மையாக கொண்டிருந்த மலையக சமூகத்தின் ஒரு சமூகமாக உருவாக்கத்தை சிதைக்க வேண்டும் என்ற நசிந்து போன அரசியல் பின்னணியுமே இலங்கை இந்தியாவுடனான சமரங்களை மேற்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியிருந்தது. அதேசமயம், 1960களின் ஆரம்பத்தில் இந்தியாவிற்கு சீனாவுடனான முரண்பாடுகள், இந்தியா பாக்கிஸ்தான் முரண்பாடுகள் , பர்மா இந்தியர்களை துரத்தியடித்த சம்பவங்கள் யாவும் இலங்கையுடன் சுமூகமான உறவை பேன வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் இவ்விரு நாட்டினரதும் ஏகபோக நலனை அடிப்படையாகக் கொண்டே சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. இவ்வொப்பந்தம் இம்மக்களை அரசியல் அநாதைகளாக்கியதுடன் அம்மக்களின் இயல்பான வாழ்வும் ஈவிரக்கமற்ற முறையில் சிதைக்கப்பட்டது. இச் சம்பவத்தை மலையகத்தில் தோன்றிய பல இலக்கிய படைப்புகள் பதிவாக்கியிருக்கின்றன.
இலங்கைப் பொருளாதார
வண்டியில்
பல்லும் சில்லூமாகி
காப்பி தேயிலை
இரப்பருக்குள்
புதைந்தவர்களின்
வாரிசுகள்!
நாடுகள் விட்டு நாடுகள்
கடத்தப்பட்டு
‘மேய்ப்பர்கள் இல்லாத’
மந்தைகளாகிப் போன
தலைமுறையின்
விழிகள் அலைகின்றன
மூலத்தின் முகவரியைத் தேடி…!
என இக்கவிஞரும் அச்சம்வம் பற்றி எழுதுகின்றார். மேலும் இத்தகைய அரசியல் நெருக்கடிகளின் காரணமாக மீண்டும் தமது பூர்வீக மண்ணுக்கு செல்கின்ற போது ஏற்படுகின்ற முரண்களை வெளிக் கொணர்வதாக அவரது ‘திறந்துக் கிடக்கும் வானம்’ என்ற கவிதை அமைந்துள்ளது. அதில் பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்;;;;;:
கிழடு தட்டிய…
கையூட்டலுக்கு…
தேர்வானைக் கதவுகள்
ஆடைகளை இழக்கும்!
சாதி சான்றிதழுக்கும்
பேரங்கள் பேசும்…
கிராமத்து கடைநிலை அதிகாரங்கள்!
மலையக மக்களில் 90 சத வீதமானோர் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகவும் நகர சத்திகரிப்பு தொழிலாளர்களாகவும் காணப்பட்டனர். மிக சிறு தொகையினரே சொத்துடமைப்பெற்றவர்களாக இருந்தனர். இவர்கள்; இலங்கையை வருமானத்தை பெறுகின்ற இடமாக இலங்கையை கருதியதுடன் தமது சொத்துகளுக்கு பாதுகாப்பளிக்கும் பூமியாக இந்தியாவை கருதினர். “இச்சிறுதொகையினர் சந்திர மண்டலத்திற்கு சென்றால் கூட பிழைத்துக் கொள்ளக் கூடியவர்கவர்ளாக இருந்தனர்” என்பார் மலையக சமூக ஆய்வாரள் பி.ஏ. காதர். இத்தகைய சிறுப்பாண்மையினரின் நலனை கொண்டு இந்தியாவை மலையக மக்களின் சொர்க்க பூமியாக காட்ட முனைவதும் அதன் பின்னணியில் தமது இருப்பை சிதைக்கும் வகையில் ‘இந்தியத் தமிழர்கள்’ என அழைக்க முற்படுவதும் எத்தகைய கையாலகாதனம் என்பதை அண்மைகால ஆய்வுகள்(மல்லியப்பு சந்தி திலகர் சூரிகாந்தி பத்திரிகையில் எழுதிவரும் தொடர் அவதானத்திற்குரியது) எடுத்துக்காட்டுகின்றன. இது போக இந்தியா இன்னொரு வல்லரசாக வளர்ந்து வரும் நாடாகும். அந்நாட்டில் தொழில் போட்டி என்பது கடுமையானதாக காணப்படுகின்றது. இந்த சூழலில் அடிநிலைக்; கூலித் தொழிலில் ஈடுப்படுவதாக இருந்தாலும் கடுமையான தொழில் போட்டியை சந்திக்கவேண்டிய சூழல் காணப்படுகின்றது. இவ்வாறாதோர் சூழலில் இலங்கையிருந்து தாயகம் திரும்பியவர்கள் சந்திக்க நேர்ந்த கொடூரங்கள் சொல்லில் அடங்காதவைகள். இத்தகைய நடப்பியல் வாழ்க்கையை நேர்மையாக அரசியல் தளத்தில் நின்று புரிந்துக் கொண்டமையாலேயே சமூக ஏற்றத்தாழ்வுகளின் மீதாகவும் அதன் போலித்தனங்களுக்கு எதிராகவும் அவரால் கவித் தீ உமிழ முடிந்நது.
துண்டு நிலங்களும்
சட்டத்தால் பறிக்கப்பட்டு
வாழ்வுரிமையை
இழக்கபோகும்
ஏங்களின் வரலாறு!
மீண்டும் ஓர்
அகதிகள் முகாமில்..
தஞ்சம்
கோரும்- என்
ஆறாம் தலைமுறை!
என்ற வரிகள் கூடலூரில் பிரிவு 17 இல் உள்ள நிலங்களில் குடியேற்றப்பட்ட தாயகம் திரும்பியவர்களின் நிலையை அழகுற எடுத்துக்காட்டுகின்றது. இங்கு முரண்பாடுகளையும் இடர்பாடுகளையும் சரியாக அடையாளம் கண்டுக் கொண்டமையினாலேயே வாழ்க்கையின் மீது ஒரு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்தி வாழ்வக்காக போராட வேண்டும் என்ற உந்துதலையும் மு.சி. கந்தையாவின் கவிதைகள் எமக்கு தருகின்றன.
இலங்கையில் மலையக மக்களை வர்க்க அடக்குமுறைகள் எந்தளவு பாதித்திருந்ததோ அதேயளவில் இனவொடுக்கு முறைகளும் இம்மக்களைப் பாதித்திருந்தது. இந்நாட்டில் இனவொடுக்கு முறை மலையக மக்களைப் பாதித்ததை விட வடக்கிழக்கு மக்களையே அதிகமாக பாதித்தது என்ற போதினும் நசிவு தரும் அரசியல் போக்கின் பரிமாணத்தை இவ்விரு மக்கள் குழுமத்தினரும் சந்திக்க தவறவில்லை.
தேசத்தின் நிர்வாக
பல்லுக்கும் சில்லுக்கும்
சத்துணவாக்கப்பட்டது!
சுனநாயக தேவதை
ஆடையணிய மறுத்த
அந்தக் கருப்ப நாட்களில்
இன ஒழிப்பு நாட்டின்
மூலை முடுக்கெல்லாம்
சனநாயகப்படுத்தப்பட்டது!
என (அ)சிங்க(ள)வாதம் என்ற கவிதையில் வரும் வரிகள் இந்நாட்டில் பேரினவாதம் குமிழிட்டு மேற்கிழம்பியதை; எடுத்துக் காட்டுகின்றன. இவ்வாறே இத்தொகுப்பில் அமைந்துள்ள ‘நெருப்புக்கு முத்தம்’, ‘யுத்தக் காடுகள்’, ‘ஈழக் குருதியில் என் மண்ணும்’ , மனிதம் வீழ்ந்த போது’ ஆகிய கவிதைகள் இலங்கையில் தமிழ் தேசியப் போராட்டம் பற்றியதாக அமைந்திருக்கின்றன. யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இலக்கியம் படைத்தவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு சாட்சியாக யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன. பேராசிரியர் அ. மார்க்ஸின் இலங்கை குறித்த ஆய்வுகள்; தமிழ் தேசிய போராட்டம் பற்றிய நடுநிiலான பார்வையை முன் வைக்கின்றது. இத்தொகுப்பில் பேரினவாதம் வெளிக் கொணரப்பட்டளவிற்கு தமிழ் பாசிசத்தின் இன்னொரு பக்கம் வெளிக் கொணரப்படவில்லை என்பது இத்தொகுப்பில் காணப்படுகின்ற மிக முக்கிய குறைப்பாடுகளில் ஒன்றாகும்..
பொதுவாகவே ஒடுக்குமுறைக்குட்பட்ட சமூகங்களிலும் அவ்வொடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்களே. தெலுங்கானா போராட்டமாக இருந்தாலென்ன? இரசிய புரட்சியாக இருந்தாலென்ன அல்லது இரண்டாம் உலகப் போராக இருந்தாலாலென்ன அவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. இந்தச் சூழல் இந்தியாவிற்கு ஒன்றும் அந்நியமாதல்ல. மேற்குவங்காளத்தை சேர்ந்த நயன்தாரா என்ற பதினொரு வயது சிறுமி காவல் துறையினரால் பாலியல் வன்பனர்ச்சிககுட்ட பட்ட கொடுமை குறித்து கவிஞனின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது:
நான் குதறப்பட்ட பொழுது..
எனது நரம்புகளின் ஒட்டுமொத்த
கதறல் ஒலி
உங்கள் செவிகளுக்குள்
எட்டியிருக்க நியாயமில்லை!
…
சீருடைக்குள் புகுந்த
கொடியக் குறியான
அநாகரிக ஆணிகளை
எந்தக் கொதிவுலையில்
இட்டுருக்கப் பொகின்றீர்கள்….?
அண்மையில் டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி காமுகர்களால் மிகக் கொடுரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் இதற்கு தக்க எடத்துக்காட்டாகும். அவ்வாறே இன்று பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முகைள் உலகெங்கும் வௌ;வேறு வடிவில் நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அண்மைக்காலத்தில் நமது கவனத்தை ஈர்த்த சம்வம் வாத்சாத்தி பழம் குடியினருக்கு எதிராக வனத்துறை அதிகாரிகள் மூலம் இந்திய அரசு மேற்கொண்ட தாக்குதல்களாகும். இச்சம்பவத்தின் போது அச்சமூகத்தை சார்ந்த பெண்கள் வனத்துறை அதிகாரிகளால் மிக கொடுரமாக வன்புனர்ச்சிக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் சிறு நீர்கழிப்பதற்காக அனுமதி கேட்கப்பட்ட போது கூட “நாங்க உங்களோட படுத்தவங்க படுத்தவங்க தானே, பாவாடையை தூக்கிகிட்டு எங்க முன்னாடியே போங்க, நாங்கதான் முழுசா பாத்திட்டோமே அப்புறம் என்ன வெட்கம்” எனக் கூறியதால் பயத்தில் சிலர் பாவாடையுடனே சிறுநீர் போயுள்ளனர். இது போக குழந்தைப்பிறந்து ஒரு மதமே ஆகியிருந்த பச்சை உடம்புக்காரி தன் நிலைக் குறித்து கதறி அழுத போது அந்த காமகர்கள் விட்டப்பாடிலில்லை.( பெ.சண்முகம், புதுவிசை ஜனவரி-2012)இவ்வாறாக பெண்களுக்கெதிராக நடைப்பெற்றுவரும் கொடுமைகள் ஒருப்புறமிருக்க பெண்கள் அரசியல் உணர்வுப் பெற்று இயக்கபணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவர்கள் சந்திக்க நேர்ந்த பாதங்கள் சொல்லில் அடங்காதவை. அந்தவகையில் 1971-இலங்கையில் ஏற்பட்ட ஜே.வி.பி(மக்கள் விடுதலை முன்னணி) கிளர்ச்சியின் போது அவ்வியக்கத்தில் அங்கம் வகித்த மனம்பேரி என்ற பெண் காவல் துறையினரால் கொடுரமாக கற்பழிக்கப்பட்டு நிர்வாணமாக தெருவில் இழுத்து செல்லப்பட்ட கொடுரத்தை இத்தொகுப்பில் உள்ள “மனதில் மனம்பேரி” என்ற கவிதை சிறப்பாக பதிவாக்குகின்றது. அத்தகைய துயர் நிறைந்த வாழ்வை சாட்சியாக பதிய வைக்கின்றார் இக்கவிஞர். இக் கவிதைகள் சம்பவத்தை பதிவாக்குவதாக மட்டுமன்று அத்தகைய கொடுரங்களுக்கு எதிரான ஆத்திரத்தையும் உருவாக்குகின்றன.
இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான விடயமும் சுட்டிகாட்ட வேண்டியது அவசியமாகும். தனிநபர்களைப் பாடுகின்ற போதிலும் கூட அவ்வாளுமைகளை சமூக பின்புலத்துடன்- அரசியலுடன் இணைத்துப் பார்க்கின்ற ஒரு போக்கை நாம் இக் கவிஞரில் காணக் கூடியதாக உள்ளமை முக்கியமான அம்சமாகும். ‘சிவானந்தன் நினைவாக’, ‘மனதில் மனம்பேரி’, ‘வீசுவானந்தன் நினைவாக’, ‘பகவத்சிங் பதிவால்…’ ஆகிய கவிதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவ்வாறே ஒரு ஒடுக்கு முறைக்குள்ளான சமூகம் பற்றிய கரிசனைக் கொள்கின்ற மனிதனொருவர் ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் பால் அவரது கவனத்தை செலுத்துவது தார்மீகமாகதொன்றாகும். மாதேஸ்வர மலைக் கிராமங்களின் நடைப்பெற்ற மனிதவதைகள் குறித்து ‘நிசங்களின் சந்தம்’(இத்தொகுப்பின் தலைப்பு) என்ற கவிதை சித்திரிக்கின்றது.
முடிவாக நோக்குகின்ற போது, கவிஞர் கூற முயலும் பொருள் சமுதாயம் சார்ந்தது. அவர் தம் கருத்துக்களை கவிதை வடிவில் விருத்தி செய்துக் கொண்டு போகின்றார். தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் காணப்படும் கொடுமைகள் அடக்குமுறைகள் தொடர்பாக எழுகின்ற கோபத்தின் வெளிப்பாடாகவும் அவரது கவிதைகள் அமைந்திருக்கின்றன. இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக நோக்கினால் அடிநிலையில் இருந்து அல்லற் படுகின்ற தொழிலாளர்கள், பெண்கள் ஆகியோர் மீதே பெரும்பாலும் அவரது பார்வை விழுந்திருக்கின்றது என்பதை இலகுவாகவே காணலாம். அந்தவகையில்; இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் யாவும் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும் மக்களில் வேர் கொண்டு மக்களிடையே பரவ முயற்சிக்கின்றன. கவிதைக்கே உரித்தான அழகியல் கூறுகளும், புதிய சிந்தனைகளும் கொண்டு அடக்குமுறைகளுக்கும் அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் எதிரான கலகங்களை கவிதையாக்கும் ஆளுமை இக்கவிஞரில் சிறப்பாகவே உள்ளது. தொடர்ந்து சமூகமாற்றத்துக்கான வழி முறைகள் யாவை என்பது பற்றிய தேடுதல்கள் ஊடாக அவரது கவிதைகள் செழுமைப்பட வேண்டியுள்ளது. அவை மக்களை ஒன்றுப்படுத்தி அவர்களது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்ற செய்வதாக இருக்கவேண்டியது நமது கால புறப்பாட்டின் தேவையாகும் என்பதை உணர்ந்து கவிதைகள் படைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
நன்றி: மகுடம்( மலையக சிறப்பிதழ்)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...