இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தொடர்புடைய பக்கங்கள்
தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக் கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதேசத் தலைவர்களே தங்களைத் தாக்கியதாக மனோ கணேசன் தரப்பினர் கூறுகின்றனர்
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 520 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோருகின்றது.
அந்தக் கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், கொட்டகலையில் தம்மை போராட்டம் நடத்தவிடாமல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களும் ஆதரவாளர்களும் தமக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்னவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அங்கிருந்த காவல்துறையினரும் தம்மை அங்கு போராட்டம் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே தாம் பத்தனை நகருக்குச் சென்று போராட்டம் நடத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலைத் தொடர்ந்து16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு பத்தனை நகரில் தமது கண்டனக் கூட்டத்தை நடத்தியது
மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய, வீ.ராதாகிருஷ்ணன், பி.திகாம்பரம் உள்ளிட்டோர் தலைமையிலான பல்வேறு அரசியல்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொட்டகலை நகரில் மனோ கணேசன் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் முத்து சிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் மறுத்தார்.
தமது கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்துகொள்ளப்பட்ட சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆளும் மகிந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளுக்கு பி.பி.சி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...