Headlines News :
முகப்பு » » இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது : மனோ கணேசன்

இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என தொண்டமானுக்கு சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது : மனோ கணேசன்

மனோ கணேசன்
இன்று அதிகாலை இரண்டு மணியளவில் இரத்தினபுரி மாவட்ட வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் அலுபொல தோட்டத்தில் வாழும் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இன கோஷ்டி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

தமது குடியிருப்புகளுக்குள் நுழைந்தவர்களின் மீது தமிழ் தொழிலாளர்களும் எதிர்த்தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு தரப்பினரும் காயப்பட்ட நிலையில் தற்போது பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இதே பகுதியில் கலபொட தோட்டத்திலும், இரண்டு நாட்களுக்கு முன்னர் நிவித்திகல பகுதியில் தொலஸ்வல என்ற தோட்டத்திலும், சில நாட்கள் முன்பு பெல்மதுல்ல பகுதியின் லெல்லுபிடிய, கோணகும்புற ஆகிய இரண்டு தோட்டங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் சமீப காலத்துக்குள் நடைபெற்றுள்ளன.

பெரும்பான்மை இன கிராமத்தவர்களால் சூழப்பட்ட இரத்தினபுரி மாவட்ட தோட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் இத்தகைய இனவாத தாக்குதல்கள் தொடர்பில் விசேட அக்கறை செலுத்தி, அவற்றை அரசாங்க உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து இத்தகைய சட்டவிரோத சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுசெயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு நான் பகிரங்க கோரிக்கை விடுக்கிறேன்.

சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து தமிழ் பிரதிநிதித்துவம் பெற்றுகொடுக்க அன்று உழைத்த எனக்கு, இரத்தினபுரி தமிழர்களை பாதுகாத்திடுங்கள் என்று தொண்டமானுக்கு இன்று சொல்வதற்கு முழுமையான உரிமை இருக்கின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுவோம் இயக்கத்தின் ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர்களின் மீது இனவாத தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி விட்டது. தனிப்பட்ட முரண்பாடுகளால் ஏற்படும் சம்பவங்கள் இனவாத தோற்றம் பெற்று, பெரும்பான்மை இனத்து காடையர்களால் வீடு புகுந்து தமிழ் தொழிலாளர்கள் தாக்கப்படுவது வழமையாகிவிட்டது. எங்காவது தொழிலாளர்கள், கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது.

தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் தொடர்பாக இன்று அதிகாலை மூன்று மணிக்கு எனக்கு அந்த தோட்டத்து மக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்தார்கள். அது தொடர்பாக அந்த வேளையில் செய்யக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நான் மேற்கொண்டேன். சில மாதங்களுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட தோட்ட ஆலயத்துக்குள் புகுந்து சில பெரும்பான்மையினர் காடைத்தனம் செய்திருந்தனர். அதிலும் நான் தலையிட்டிருந்தேன். அந்த சம்பவம் தொடர்பாக ஒரு வழக்கு இப்போது நிலுவையில் உள்ளது. அந்த பழைய விரோதத்துடன், இன்றைய சம்பவம் சம்பந்தப்பட்டது. இன்றைய சம்பவத்தில் சுமார் 30 குண்டர்கள் மதுபோதையில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கலகம் விளைவித்துள்ளனர்.

கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது நமது கட்சியும், மலையக மக்கள் முன்னணியும் இ.தொ.கா.வுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்ட காரணத்தாலேயே அங்கு வெற்றி கிடைத்தது. எம்மைப் பொறுத்தவரையில் அந்தக் கூட்டு அமைக்கப்பட்டதன் பிரதான நோக்கம், தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவரும் இரத்தினபுரி தமிழ் மக்களின் பாதுகாப்பு என்பதாகும்.

இரத்தினபுரியிலும், கேகாலையிலும் கிடைத்த வெற்றிகள் இ.தொ.காவின் தனிப்பட்ட வெற்றிகள் அல்ல. இது சப்ரகமுவயில் வாழும் சிறு குழந்தைக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்ட வெற்றிகள் ஏதோ தங்களது கட்சியின் தனிப்பட்ட சொந்த வெற்றிகள் போல் இ.தொ.கா. அரசாங்கத்துக்கு காட்டிக்கொண்டது எமக்கு தெரியும். அதைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. நான் தமிழ் இனத்தைத்தான் பார்க்கிறேனே தவிர தேர்தல் அரசியலை பார்ப்பது இல்லை. இது தமிழ் மக்களுக்கு தெரியும். ஆனால் மக்களை பாதுகாக்கும் கடைமையில் இருந்து இ.தொ.கா. தவறுமானால் வாக்கு வாங்கிக் கொடுத்த நான் சும்மா இருக்க மாட்டேன். எனவே அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்துடன் அங்கம் வகிக்கும் இ.தொ.கா, தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இரத்தினபுரி தமிழர் தொடர்பாக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறையாக்க வேண்டும்.

பகல் வேளையில் சம்பவங்கள் நடைபெற்றால், இரவு வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து பெரும்பான்மை இனத்து காடையர்கள் தாக்குவார்கள் என இரத்தினபுரி தோட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் அச்சத்துடன் இரவுகளில் விழித்திருந்து வாழும் நிலைமை நீங்க வேண்டும். இரத்தினபுரியில் இனிமேலும் இனவாத சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates