Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்

இலங்கையின் முதலாவது தலித் பத்திரிகை : மலையகத்தின் "ஆதி திராவிடன்" - என்.சரவணன்

நூறாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1919ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வெளியான ஆதிதிராவிடன் (Audi Diraviden) பத்திரிகையானது  இலங்கையின் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிகையாகும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முதலாவது பத்திரிகையாகும். இந்திய வம்சாவளியினரில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக வெளியானது. ஆதி திராவிடர் என்போர் யார். ஆதிதிராவிடன் பத்திரிகையை வெளியிட்டவர்கள் யார்? எந்த சங்கத்தால் வெளியிடப்பட்டது? அப்பத்திரிகையின் உள்ளடக்கம் என்ன? இலங்கையில் திராவிட இயக்கங்களில் வருகை? திராவிட சித்தாந்தத்தின் இலங்கை வடிவம் எப்படி இருந்தது? என்பது பற்றிய தேடலை இக்கட்டுரை ஆற்றுகிறது.

தமிழகத்தில் திராவிட இயக்கங்களின் வளர்ச்சியிலும், திராவிடக் கருத்துக்கள், சாதி எதிர்ப்பு, சாதி மறுப்பு, சாதியொழிப்பு, போன்ற கருத்துக்களின் வேகமான வளர்ச்சிக்கு அன்றைய பத்திரிகைகளும், நாடகங்களும் முக்கியமான காரணங்கள். இவை பல்வேறு உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியில் நடத்தப்பட்டன.

பத்திரிகையில் சாதியெதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு எழுதியமைக்காக ப.இராகவன் என்பவர் கொலை செய்யப்பட்ட செய்தியை அயோத்திதாசர் நடத்திய “தமிழன்” என்கிற பத்திரிகையில் 1913 மார்ச்சில் வெளிவந்த இதழில் பதிவு செய்தார்.

திராவிட இயக்கங்களும், அதன் சித்தாந்தங்களும் தமிழ் நாட்டில் முளைவிட்ட வேளையில், தலித்மக்கள் தம்மை ஆதி திராவிடர் என்று அழைத்துக்கொண்டார்கள். சாதிப்பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டு வந்த அவர்கள் ஆதி திராவிடர்கள் என்கிற அடையாளத்துக்குள் வந்தமை ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.

இலங்கைக்கு குடிபெயர்ந்த இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் இந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தோன்றிய இயக்கம் தான் “இலங்கை இந்தியர் சங்கம்”. அந்த சங்கத்தினால் தான் ஆதி திராவிடர் பத்திரிகை வெளிக்கொணரப்பட்டது.

ஆதி திராவிடன் இலங்கையின் முதலாவது தலித் இதழ் மாத்திரமல்ல, மலையகத்தின் முதலாவது பத்திரிகையும் கூட. 

மலையகத்தை நாம் ஒரு தலித் சமூகமாக இனங்காண்கிறோம். மலையகம் தொடர்பாக வெளிவந்த முதல் பத்திரிகை தொழிலாளர் உரிமை சார்ந்து வெளிவரவில்லை என்பதையும், அப்பத்திரிகை தாழ்த்தப்பட்ட மக்களுக்கான பத்திரிகையாகத்தான் வெளிவந்தது என்பதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆதி திராவிடர் கருத்தாக்கம்

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி பறையர்களால் பறையர்களை மட்டுமே சுட்டுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டது என்ற வாதம்  இக்கட்டுரையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

ஆதி-திராவிடர் என்ற சொல்லாட்சி உச்சபட்ச தீண்டாமைக்குள்ளான பறையர், பள்ளர், சங்கிலி போன்ற பெயர்களால் அழைக்கப்பட்ட மக்கள் பிரிவினர் அனைவரையும் சுட்டுவதற்காகவே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் டாக்டர் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களை “தலித்” என்கிற சொல்லாடலுக்கூடாக அழைக்கத்தொடங்கியதன் பின்னர் இந்தியா முழுவதும் அந்த சொல் விரவியது. 90களில் அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்வுகள் தமிழகத்தில் பெரும் தலித் எழுச்சியைக் கொண்டுவந்தது. அம்பேத்கரின் எழுத்துகள் அனைத்தும் தமிழுக்குக் கொண்டுவரப்பட அந்த நூற்றாண்டு எழுச்சி காரணமானது. “தலித்” இயக்கங்கள், இலக்கியங்கள், தலித் அரசியல் கருத்தாக்கம் என அனைத்தும் வெகுஜனமயப்பட அந்த எழுச்சி காரணமானது. தலித் என்கிற பதம் அதன் பின்னர் ஆதி திராவிடர், பஞ்சமர் போன்ற பதங்களுக்கு மாற்றீடாக நிலைகொண்டது அதன் பின்னர் தான்.

தலித் என்கிற சொல்லாடல் வெறுமனே தாழ்த்தப்பட்டவர்களை அடையாளப்படுத்த மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. மாறாக அது சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டதால் அதை முற்போக்குத் தளத்தில் அனைவருமே கையாள்கிற சொல்லாட்சியாக வலுப்பெற்றது.

அம்பேத்கர் இப்படிக் கூருகிறார் “பெயர்கள் ஒரு முக்கியமான நோக்கத்தைக் கொண்டுள்ளன. அவை சமூகப் பொருளாதாரத்தில் மகத்தான பங்கை வகிக்கின்றன.  பெயர்கள் என்பவை அடையாளக்குறிகள்.  ஒவ்வொரு பெயரும் ஒரு குறிப்பிட்ட விஷயம் பற்றிய குறிப்பிட்ட கருத்துக்களையும் எண்ணப்போக்கையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.  அது ஒரு ‘லேபிள்’ அடையாளச்சீட்டு. இந்த அடையாளச்சீட்டிலிருந்து அது என்ன என்பதை மக்கள் தெரிந்துகொள்கிறார்கள்” (அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும், 1997: 467).

அதுவரை ஆதி திராவிடர் சொல்லாட்சியானது தாங்கள்தான் தென்னிந்தியாவின் பண்டைய மக்களென அடையாளப்படுத்திக் கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுண்மையை முன்வைக்கிறது மேலும் ஆதி-திராவிடர் சாதிகளைக் கடந்து சாதியற்ற, சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் கருத்தியலாகப் பரிணமிக்க முயன்றிருக்கும் வரலாற்றினையும் நிறுவுகிறது.

நால்வருண அமைப்பில் இடம்பெற்றிராத உச்சபட்ச தீண்டாமைக் கொடுமைக்குள்ளான புறத்திலுள்ள மக்கட்பிரிவினரான பறையர், பஞ்சமர், தீண்டத்தகாதோர், ஹரிஜன போன்ற பெயர்களால் அவர்களின் விருப்பத்திற்குட்பட்டே அழைக்கப்பட்டனர். தீண்டத்தகாதோர், ‘தீண்டப்படாதவர்’ அருவருப்பூட்டுகிற; பயமுறுத்துகிற சொல்லாடலாக சமூகத்தில் எப்படி நிலைபெற்றது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.காந்தியின் “ஹரிஜன்” (‘ஹரி’யின் மக்கள்) என்கிற கருத்தாக்கமானது “ஹரிஜன்” என்கிற பெயர் எவ்வளவு புனிதமாகயிருந்தாலும் சரி, அது யாரைக் குறிக்கிறதோ அவர்கள் மனத்தில் தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை அப்பெயரே புகுத்திவிடுகிறது தென்று நான் நினைக்கிறேன்.  அவர்கள் எவ்வளவு முன்னேற்றமடைந்தாலும், ஹரிஜன் என்ற பெயராலேயே அழைப்பதாயிருந்தால், அத்தகைய எண்ணத்தை அவர்கள் மனத்திலிருந்து அகற்றவது மிகவும் கடினமாக இருக்கும். ஹரிஜன் என்றவுடனேயே, தீண்டாமை, தாழ்த்தப்பட்டதென்பவை தான் பாமர மக்களுக்குப்படும்.  இயற்கையிலேயே இத்தகைய எண்ணத்தைப் புகுத்தாமலும், எடுத்தவுடனேயே தாழ்த்தப்பட்ட நிலையைக் குறிக்காமலும் உள்ள ஒரு பெயரை உபயோகிப்பது நல்லதல்லவா? மற்ற வகுப்பினரையும் தழுவக்கூடிய ஒரு பெயரை உபயோகிப்பது உசிதமல்லவா? (தமிழ் ஹரிஜன், 1946: 5). 

தமிழ்ச்சமூகத்தில் நால்வருணம் பிற்காலத்தில் கலந்தது தான் ஆனால் கம்மாளர் (அரசாணை எண். 1802) இடையர் (யாதவ மித்ரன், 1930) போன்ற சாதிகள் தங்கள் சாதியின் பெயரை விஸ்வபிராம்மணன், யாதவ் என்று மாற்றிக்கொண்டனர்.  தீண்டத்தகாதோர், பஞ்சமர், பறையர், சாதிக்கு புறத்தேயுள்ளோர் என அழைக்கப்பட்ட மக்கள், தங்கள் மீதான தீண்டாமை ஒடுக்குமுறைக்கெதிராக காலனிய ஆட்சிக் காலத்தில் திரட்சி பெற்றபோது அம்மக்கள் ஆதி-இந்து (Nandini Gooptu, 2006), ஆதி-தம் (Ronki Ram, 2004), ஆதி-திராவிடர் போன்ற பெயர்களில் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். மண்ணின் மைந்தர்கள், ஆரியருக்கு முற்பட்டோர் என்ற உரிமையைக் கொண்டாட இவர்கள் ஆதி என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினர் (Gail Omvedt, 1991: 18-19; Susan Bayly, 2000: 246). இப்படித்தான் திராவிடத்தைக் கைக்கொண்டனர்.

ஆதி திராவிடர் என்கிற சொல்லாட்சிக்கு உரியவர்கள் பறையர்கள் என்றும், பள்ளர் சக்கிலியர் ஆகிய சாதிகள் உள்ளடங்காது என்கிற வாதமும்; எங்களை அந்த சொல்லாட்சிக்குள் அடைக்காதீர்கள் என்று அல்லர், சக்கிலியர் தரப்பில் இருந்தும் ஆங்காங்கு சலசலப்புகளைக் காண முடிகிறது.பஞ்சமர், பறையர் ஆகிய பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி-திராவிடர் என்று மாற்றம் செய்வதற்கான போராட்டம் 1892-ஆம் ஆண்டு முதலே நடைபெறத் தொடங்கியிருக்கிறது. ஆதி-திராவிடர் என்கிற சொல் ஆரம்பத்தில் பறையர்களால் முன்வைக்கப்பட்டாலும் அது அது தமக்கானது என்று பறையர்கள் வாதிட்டதில்லை. ஆதி திராவிடர் என பெயர் மாற்றக் கோரி சென்னையில் 1922 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேர் பங்கேற்ற பேரணி நடத்தப்பட்டிருக்கிறது. பின்னர் அது பறையர்களுக்கு மட்டுமே உரியது அல்ல; மாறாக உச்சபட்சத் தீண்டாமைக் கொடுமைக்குள்ளான பள்ளர், சக்கிலியர் போன்ற சாதிகள் அனைவருக்குமான பெயராகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அயோத்திதாசர்


அயோத்திதாசர் ஆதிதிராவிடர் கருத்தை உள்வாங்கி அதனை பின்னர் பரப்பிச் சென்றதில் முக்கிய முன்னோடி. ஆதி திராவிடர்களுக்கும் பௌத்தத்துக்கும் உள்ள உறவைப் பற்றி அவர் நிறைய எழுதியிருக்கிறார்.  இலங்கைக்கு அவர் மேற்கொண்ட விஜயத்தின் போது அவர் பௌத்த தீட்சை பெற்று பௌத்தராக ஆனார். அந்த விஷயத்தைப் பற்றியும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்ட நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானது “பஞ்ச மகா விவாதங்கள்”. அந்த ஐந்து விவாதங்களின் இறுதி விவாதம் பாணந்துறையில் நிகழ்ந்தது. அன்றைய சிலோன் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் கெபர் (John Capper) பாணந்துறை விவாதம் பற்றி எழுதிய தொடரானது பின்னர் பிரசித்திபெற்ற நூலாக 1878 இல் அமெரிக்காவில் வெளிவந்தது (The great debate – Buddhism and Christianity – face to face). இலங்கையில் ஏற்பட்ட பௌத்த எழுச்சியில் இந்த நூலுக்கு பெரும் பாத்திரம் உண்டு. இந்த நூலை வாசித்த அமெரிக்காவை சேர்ந்த கேணல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் இந்த நூலின் மீதும், அந்த விவாதத்தின் மீதும் அந்த விவாதத்தை நடத்தியவர்களின் மீதும் ஈர்ப்புகொண்டார்.

அதன் பின்னர் அவர் விவாதத்தில் தொடர்புடைய மிகெட்டுவத்தே குணானந்த  தேரர், ஹிக்கடுவே சுமங்கல தேரர் ஆகியோருடன் கடிதத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். இந்தத் தொடர்பு அவரை இலங்கை வருகைக்கு வித்திட்டது.

அமெரிக்காவில் முதலாவதாக பௌத்தத்துக்கு மாறியவராக அறியப்பட்டவர் அவர். இந்த நிலையில் தான் பாணந்துறை விவாதம் குறித்த நூலை அறிகிறார். இலங்கை வரத் தீர்மானிக்கிறார். 1875 ஆம் ஆண்டு அவர் நியுயோர்க்கில் பிரம்மஞான சங்கத்தை (Theosophical Society) எலேனா ப்லாவட்ஸ்கி என்பவருடன் இணைந்து தொடங்கினார்.

அதன் பின்னர் 1880, மே 17 அன்று காலியில் பெரும் வரவேற்புடன் இலங்கை வந்தடைந்தார். ஜூன் 17 இல் பிரம்மஞான சங்கத்தை காலியில் அமைத்தார். அச்சங்கத்தின் தலைமையைப் புத்தர் பிறந்த பூமிக்கு மாற்றுவதற்காக  இந்தியாவில் பல இடங்களைத் தேடியலைந்து இறுதியில் சென்னை அடையாரில் 1882 இல் பிரம்மஞான சங்கம் நிறுவப்பட்டது.

அயோத்திதாசரின் இலங்கை விஜயம்

1882 இல் ஒல்கொட், பிளாவுட்ஸ்கி அம்மையார் ஆகியோரை சாதித்த பண்டிதர் சென்னையில் ஆன்னி பெசென்ட் மற்றும் அயோத்திதாசர் ஆகியோருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட பஞ்சமர்களுக்கான சிறுவர் பள்ளிகளை அமைப்பதில் ஒல்கொட் ஈடுபட்டார். ஒல்கொட்டின் வருகைக்கு முன்னரே பண்டிதர் பௌத்தத்தின் பால் ஈர்க்கப்பட்டிருந்தார்.

1890இல் அயோத்திதாசப் பண்டிதர் ஒல்கொட் மற்றும் பிளாவுட்ஸ்கி அம்மையார் ஆகியோருடன் இலங்கை சென்று அங்கு சுமங்கல தேரரின் மூலம் மூவரும் பஞ்சசீல தீட்சை பெற்று பௌத்தர்களாகினார்கள். இலங்கையிலிருந்து திரும்பிய சில ஆண்டுகளில் 1898 இல் அவர் தென்னிந்திய சாக்கைய பௌத்த சங்கத்தை உருவாக்கி மீண்டும் தென்னிந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சியை உருவாக்கினார்.  அதே ஆண்டு அவர் “புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி” என்கிற நூலை வெளியிட்டார்.

“சாதிபேதமற்ற திராவிடர்களே இத்தேசத்தின் பூர்வ குடிகள் ஆகும். இவர்கள் பெரும்பாலும் தமிழ் பாஷா விருத்தியைக் கோரி நின்றவர்கள் ஆதலின் தென்னாட்டுள் தமிழர் என்றும், வடநாட்டார் திராவிடர் என்றும், திராவிட பெளத்தாள் என்றும் வழங்கி வந்ததுமின்றி, இலங்கா தீவகத்திலுள்ளோர் சாஸ்திரங்களிலும் சரித்திரங்களிலும் இப் பூர்வக்குடிகளைத் திராவிட பெளத்தர்கள் என்று வரைந்திருப்பதுமன்றி வழங்கிக் கொண்டும் வருகின்றார்கள்”

(தமிழன் 2:21, நவ 4, 1908.) என அயோத்திதாசர் தரும் திராவிட அடையாளம் என்பது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களை, அதிலும் குறிப்பாகச் சாதிபேதமற்ற தமிழர்களையே அடையாளப்படுத்தியிருப்பது முக்கியமான ஒன்றாகும்.

அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்கள் இப்பத்திரிகையின் வரவில் செல்வாக்கு செலுத்தியிருந்தபோதும் அவரைப் பற்றிய எந்த விபரங்களோ கருத்துக்களோ கிடைக்கப்பட பத்திரிகைகளில் இருக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்.

ஆதி திராவிடர் கருத்து இலங்கையில் நிலைகொள்ளவில்லை.

நடேசய்யர் மலையக தொழிற்சங்க விடயத்தில் பெரும் முற்போக்கு பாத்திரத்தை வகித்தபோதும் ஒரு பிராமணராகவே வாழ்க்கை நடத்தியவர். அவரின் எழுத்துகளிலோ, செயலிலோ சாதிய விடுதலைக்கான கூறுகள் இருந்ததில்லை எனக் கூற முடியும். நடேசய்யர் திராவிட அல்லது ஆதி திராவிட கருத்துகளால் கவரப்பட்டவர் இல்லை.

ஆதி திராவிட கருத்தாக்கம் மலையகத்தில் சுமார் அரை நூற்றாண்டு காலம் செல்வாக்கு செலுத்தியிருக்கிறது என்பதற்குப் பிற்காலத்தில் 1942 ம் ஆண்டு யூன் 28 அன்று ஏ.எம் துரைசாமி; புசல்லாவையில் இலங்கை இந்திய ஆதி திராவிடர் காங்கிரஸ் என்கிற அமைப்பைத் தொடங்கியதை உதாரணமாகக் கொள்ளலாம். அது தொடர்பாக அன்று வீரகேசரியில் வெளிவந்த ஒரு செய்தி இப்படிக் குறிப்பிடுகிறது.

“இலங்கை இந்தியா ஆதித்தமிழர்களும் தற்காலம் தாழ்த்தப்பட்ட மக்கள் எனப்படுவோருமாகிய பல்வேறு வகுப்பினர்கள் அடங்கிய பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 கபுசலாவை சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்றது. இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திரளாக பொது ஜனங்களும் பல பிரமுகர்களும் சமூகமளித்திருந்தார்கள். கூட்டத்திற்கு திரு ஏ எஸ் ஜேசுபாபாதம் தலைமை வகித்தார். அச்சமயம் தாழ்த்தப்பட்ட மக்களெனப்படுவோரின் பல்வேறு வகுப்பினர்களை ஒன்று சேர்ப்பதற்காகவும் அவர்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதற்காகவும் இன்னும் அவர்களுக்காக வேண்டி எல்லாவித தொண்டுகளில் ஈடுபடவும் ஒரு ஸ்தாபனம் ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து திருவாளர்கள் கே ராஜலிங்கம் எஸ் சோமசுந்தரம் கே எஸ் எஸ்பி மற்றும் பலரும் பேசிய பின்; "இலங்கை இந்திய ஆதித் தமிழர் காங்கிரஸ்" என ஏகமானதாக ஸ்தாபிக்கப்பட்டது.”

1934 ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதி வெளியான “ஆதி திராவிடன்” பத்திரிகையின்படி கே.சுப்பையா அவர்களால் கண்டியில் உள்ள ஆதி திராவிடன் பிரஸில் அச்சிட்டு வெளியானதாகக் கூறுகிறது. அதாவது ஒரு அச்சகம் நடத்துமளவுக்குப் பலமாக “ஆதி திராவிடன்” பத்திரிகை இருந்திருக்கிறது என்று உணர முடிகிறது. இந்த அச்சகம் இல.11. அல்லுலுவ ரோட், கண்டி என்கிற விலாசத்திலிருந்திருக்கிறது.

இதே வேளை பத்திரிகையின் உள் பக்கங்களின் கீழ் கோட்டின் கீழே பெரிய எழுத்தில் சில பழமொழிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் சில “முக்குலம்” பற்றியதாக இருக்கிறது. உதாரணத்துக்கு

“முக்குல (திராவிடர்) வீரர் உயர்வுறல் திண்ணம்”

“ஒப்புடன் நாளும் (முக்)குல சேவை, செய்து தப்பாமல் வெற்றி சாதித்திடுக”

“ஏதும் முக்குலப் புத்திரர் இழிவுற்றிருப்பினும், சோதரரெனவே தாங்கி நடத்துக”ஆதிதிராவிட கருத்துருவாக்கமானது தாழ்த்தப்பட்ட “தீண்டத்தகாத” பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளைக் குறிப்பதற்கான சொல்லாடலாகவே பிறப்பெடுத்திருந்தது. ஆனால் முக்குலம் என்பது “கள்ளர், மறவர், அகமுடையார்” ஆகிய சாதிகளைக் குறிப்பதாக பொதுவில் பொருள் கொள்ளப்படுகிறது. மலையகத்தில் முக்குலத்தோர் என்போர் ஆதி திராவிடர்களை ஆதிக்கம் செலுத்தும் ஆதிக்கச் சாதிகளாக அடையாளம் காணப்படுபவர்கள் ஆக; இங்கே ஆதிதிராவிடர் x “முக்குலம் என்கிற முரண்பட்டதும் குழப்பகரமானதுமான அணுகுமுறைகளைக் காண முடிகிறது. அதேவேளை முக்குலத்தவரின் ஆதிக்கம் அன்றிருந்ததை விட பிற்காலத்திலேயே அதிகம் தலை தூக்கியிருப்பதையும் உணரமுடியாமலில்லை.

மேற்படி பத்திரிகையின் முதலாவது ஆசரியராக எஸ்.பி.கோபாலசாமி அது 1919 இல் தொடங்கப்பட்டபோது பணியாற்றியிருக்கிறார்.  பின்னர் அதன் ஆசிரியராகவும், பதிப்பாசிரியராகவும் கே.சுப்பையா இயங்கியிருக்கிறார். அவரின் கட்டுரைகளைக் கூட அதில் காண முடிகிறது. ஆனால் உள்ளடக்கத்தில் சுமார் 70சத வீதத்துக்கும் அதிகமாக தமிழக செய்திகளும், விபரங்களும், கருத்துக்களுமே உள்ளடங்கியுள்ளன. இலங்கை பற்றிய செய்திகள் குறைவாகவே உள்ளன.

எனவே ஆதி திராவிடர் பற்றிய தமிழக நிலைமைகளையும், கருத்துக்களையும் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பரப்பும் இலக்கைக் கொண்டே அது இயங்கியிருக்கிறது என்று பொருள்கொள்ளலாம்.

மலையகத்துக்குத் தாயகத் தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகள்; அவர்களைத் தமிழகத்துடன் உணர்வுப்பூர்வமாகப் பிணைக்க உதவிற்று என்கிற நிலை இருந்தது. அவ்வப்போது தமிழகத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் ஊடாகவே நடப்பு செய்திகளையும், விபரங்களையும் அறிந்து கொண்டிருந்தார்கள். ஆறுதலையும், ஆனந்தத்தையும் கூடவே ஏக்கத்தையும் அடைந்தார்கள்.

ஆனால் அப்பத்திரிகைகள் தோட்டத் தொழிலாளர்களிடம் நேரடியாக வந்து சேருவதற்குக் காலம் எடுத்தது. அதை விலை கொடுத்து வாங்கவும், வாசிப்பறிவு உடையவர்களும், அப்பத்திரிகையை அடையவும் சிலரே இருந்தார்கள். அவர்களிடம் சேரும் பத்திரிகை தோட்டத்தில் பொது வெளியிலும் வேலை இடங்களிலும் ஒருவர் உரத்து வாசிக்க மற்றவர்கள் செவி கொடுத்துக் கேட்கும் வழக்கமே இருந்தது. அவ்வாறு  தோட்டத் தொழிலாளர்களை வந்தடைய சில வேலைகளில் மாதங்களும் ஆகலாம். அத்தனை பழைய செய்திகள் காலம் தாழ்த்தி அவர்களுக்குக் கிடைத்தாலும். அதுவே அவர்களை இன்பமூட்டுபவையாகயும், ஆறுதல் தருபவையாகவும் இருந்தன.

அவ்வாறு தமிழகப் பத்திரிகைகளுக்குக் கணிசமான சந்தை இலங்கையில் இருந்தது.

நடேசய்யர் இலங்கைக்குப் புறப்பட்டு வந்ததே தமிழகத்தில் வெளியாகிக்கொண்டிருந்த தனது பத்திரிகைக்குச் சந்தா சேர்ப்பதற்கும், சந்தையை உருவாக்கிக் கொள்வதற்கும் தான். அப்படி வந்தவர் மலையகத் தொழிலாளர்களின் துயர் வாழ்க்கையைக் கண்டு அவர்களுக்காகச் சேவை செய்ய நிரந்தரமாகத் தங்கிவிட்டவர் தான் அவர். எனவே மலையகத் தமிழர்களின் இலக்கிய கலாச்சாரத்தை வளர்த்து விட்டத்திலும் அன்று இலங்கை வந்து சேர்ந்த தமிழகப் பத்திரிகைகளின் வகிபாகம் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்கக் காலகட்டத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. அதுபோல இவ்விதழ் வைதீக சார்பு கருத்துக்களை வெளியிட்டு வந்த போதிலும் சாதி ஒழிப்பு மனுதர்ம எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை போன்ற குறிக்கோள்களில் எவ்விதக் கருத்தியல் சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் நடைபெற்ற முதல் சாதிமறுப்பு மணம், மதமாற்றம் பற்றிய சில புதிய தகவல்களையும் ஆதிதிராவிடன் பதிவு செய்துள்ளது.

1920 மார்ச்சில் சங்கர கண்ணப்பர் எழுதிய 'நாம் சூத்திரர்களா? என்ற கட்டுரை இடம் பெற்றுள்ளது. இரண்டாவது இதழில் வெளிவந்த கட்டுரைகளின் விவரம் வருமாறு, "மானிட சரீரமும் அதன் வாழ்க்கையும்”, “ஆதிதிராவிட சமூகத்தினரின் முன்னேற்றம்” “பெண்கல்வி” (தொடர்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

தென்னிந்திய தமிழ்ச்சாதி அமைப்பின் அடக்குமுறைகள், இலங்கையிலும் வேறு வடிவங்களில் தொடர்ந்தன. இலங்கையின் மலையகப்பகுதிகளில் குடியேறிய தமிழர்களிடம் சாதியம் வேரூன்றியிருந்தது. குடியானவ சாதிகளான (வேளாளர், மொட்டை, சோழிய சைவ வேளாளர்) முக்குலத்தோர். (கள்ளர், மறவர், அகம், படியார்) சிறுபான்மையின செட்டி, ரெட்டி, வண்ணார், கொட்டி வண்ணார், அம்பட்டர் ஆகியோர் அடங்குவர். இக்குடியானவரான சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களான பள்ளர், பறையர், வண்ணார் இவர்களைக் கீழான சாதிகளாகவே கருதினர். இவர்களில் 90 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தனர். இவ்வாறாக தமிழக சாதியத்தின் நீட்சி இலங்கையிலும் தொடர்ந்து நீடித்தது.

மலையகப்பகுதிகளின் சாதியக் கொடுமையைவிட இறுக்கமான சாதியமைப்பு இலங்கையின் வடபகுதி வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும், சிங்களச் சமூகத்திலும் நிலவியது. தமிழகத்தில் தம்மை ஆதிக்கம் செலுத்திய சாதியினர் இலங்கையில் அத்தனை பெரிய எண்ணிக்கையில் இராதது ஆறுதலாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினருக்குள் இருந்த படிநிலை ஒழுங்கில் இருந்த ஆதிக்கமும், எண்ணிக்கையில் குறைந்த அளவில் இருந்த ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளும், பாரபட்சங்களும் இருக்கவே செய்தன. சாதி ஒடுக்குமுறையானது தமிழக அனுபவத்திலிருந்து மாறுபட்டிருந்தாலும் அளவிலும், பண்பிலும், வடிவத்திலும் வேறு பட்டிருந்தது.

வடக்கு கிழக்கு  தமிழ்ப்பகுதிகளிலும், தமிழர்கள் குடியேறிய மலையகம், கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக் கல்வி, சமய, பண்பாட்டுத் தளத்தில் நீக்கமற நிறைந்திருந்தது. வடக்கில் மோசமான தீண்டாமையும், பாரபட்சமும் உச்சத்தில் இருந்தன. அங்கே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அடிமைகளாக இருந்தனர். இவற்றுக்கு எதிரான போராட்டங்கள் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல வலுக்கத் தொடங்கின. இவ்வாறாக சாதிய முரண்பாடுகளும், மோதல்களும் நிகழ்ந்த காலகட்டத்தில் இலங்கையில் ‘ஆதிதிராவிடன்' இதழ் தோன்றுவதற்கான சூழல் உருவாகியது. (இரா பாவேந்தன்)

இதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து கூலிகளாக சென்ற தமிழர்கள் பலரும் இணைந்து, 1912 ஆம் ஆண்டு 'இலங்கை இந்தியச் சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பில் இந்து தமிழர்களும், கிறித்தவத் தமிழர்களும் இடம் பெற்றிருந்தனர். இந்த அமைப்பின் சார்பில் 1919ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆதிதிராவிடன் இதழ் வெளியிடப்பட்டது.


ஆதிதிராவிடன் இதழ் 1/8 அளவில் 16 பக்கங்களைக் கொண்ட முதல் இதழ் ஆதிதிராவிடன் ஒரு சிறந்த மாதாந்திரத் தமிழ்ப் பத்திரிக்கை என்ற வாசகத்துடன் 1919 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகியது. "தெய்வமிகழேல், சக்கரநெறிநில் ஊக்கமது கைவிடேல்” என்ற முழக்கத்துடன் கொழும்பு அல்பட்ர்ரோடு பொல்வத்தை இந்திய இலங்கைச் சங்கத்தின் சார்பில் வெளிவந்துள்ளது.

இந்த இதழ் கொழும்பு எண் 27, Barber Street, Robert Printers என்கிற அச்சகத்தில் அச்சிடப்பட்டு. ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வெளி வந்துள்ளது. ஆதிதிராவிடன் இதழின் முதல் கால் பக்கத்தில் இதழின் பெயர் முழக்கங்கள் இடம் பெற்றிருந்தன. இதழுக்குப் பக்க எண்கள் தொடர் எண்களாக இட்டுள்ளனர். சில இதழ்களில் ஆதிதிராவிடர் பஞ்சாங்கம் வெளிவந்துள்ளது.

1919 தொடக்கம் 1921 வரையான ஈராண்டுகள் வெளியான ஆதி திராவிடன் இதழ்களைத் தொகுத்து 2008 ஆம் ஆண்டு இரா.பாவேந்தன் ஒரு நூலை வெளியிட்டிருக்கிறார். அத்தொகுப்பில் தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகளும் செய்திகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பில் தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மகாத்மா ஜோதிராவ் ஃபூலே இயக்கத்தைச் சார்ந்த மன்னர் சத்ரபதி சாகு மகாராசர் ஆற்றிய உரையின் தமிழ் வடிவமானது ஃபூலே இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஓர் அரிய ஆவணமாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.1934 ஆம் ஆண்டு 5 சதத்துக்கு விற்பனையான “ஆதி திராவிடன்” சஞ்சிகையை இலங்கை - இந்தியச் சங்கம் என்கிற அமைப்பின் மூலமாகவே நடத்தப்பட்டிருக்கிறது.

ஆரம்ப இதழ்களில் இலங்கை - இந்தியச் சங்கத்தின் கூட்ட அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. அக்கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் பற்றியும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய விபரங்களும் கூட அதில் இடம்பெற்றுள்ளன. அத் தீர்மானங்களில் ஒன்று சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் திராவிடன் இதழை இனாமாக கொடுக்கப்படவேண்டும் என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. (மலர் 2, இதழ் 3)

இலங்கை - இந்தியர் சங்கத்தின் ஒவ்வொரு கூட்டங்களின் போதும் புதிய ஒருவர் தலைமை தாங்கும் மரபை பின் பற்றியிருக்கிறார்கள். ஆதி திராவிடன் பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.பி.கோபாலசாமியும் அவ்வாறு சில தடவைகள் தலைமை தாங்கியிருக்கிறார் என்றும் அப்பத்திரிகை செய்திகளில் இருந்து அறிய முடிகிறது. இதன் உப ஆசிரியராக பொ.கனகசபை செயற்பட்டிருக்கிறார். (மலர் 2. இதழ் 8)

இந்த சங்கத்தின் தீர்மானங்களை இன்று பார்க்கையில்

தமிழகத் தலைவர் ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கு அனுதாபக் கடிதம் அனுப்புவது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றுவது,

இலங்கையிலும், தமிழகத்திலும் இறந்தவர்கள் பற்றிய அனுதாபக் கட்டுரைகளை வெளியிடுவது, பத்திரிகைக்கு நெருக்கமானவர்களின் குடும்ப திருமண நிகழ்வுகளைப் பற்றிய செய்திகளை வெளியிடுவது,

தமிழகத்தில் நடந்த சில தேர்தல்களில் ஆதிக்கச் சாதி வெறிபிடித்தவர்களை வெற்றிபெற விடாமல் செய்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு சாதகமானவர்களை வெற்றி பெறச் செய்யப் பரிந்துரைகளைச் செய்வது போன்ற விபரங்கள் அதிகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.

தமிழகத்தில் இடம்பெறும் சாதியக் கொடுமைகள் பற்றிய செய்திகளும் தொடர்ச்சியாகப் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது. சில உண்மைக் கதைகளும் பிரசுரமாகியுள்ளது.

இப்பத்திரிகையின் சாதியெதிர்ப்பு போக்குக்கு ஆதரவு தெரிவித்து ஒரு வாசகர் வாழ்த்தி பணஉதவி செய்த கடிதம் ஒன்று 1920ஆம் ஆண்டு வெளியாகியிருக்கிறது.

கனம் தங்கிய ஐயா பத்திராதிபர் அவர்கட்கு,

ஐயா! தாங்கள் அன்புடன் அனுப்பிய சஞ்சிகைகளும் மற்றும் சபையின் சட்டதிட்டமுதலான வகைகளையும் கண்ணுற்றேன், நம்மிந்திய சோதர சோதரிகள் தவறுதலுண்டாகுங்கால், அவர் கட்கு வேண்டிய உதவிகள் புரியுமாறு செய்திருக்கும் ஏற்பாடு களை வாசித்து அகமகிழ்ந்தேன்.

‘குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்

நடைமெலிந்தோமாரூர் நண்ணினு நண்ணுவர்'

என்னும் மூதுரைப்படி இவ்வேழை ஆதிகுலத் திருக்குலத் தாராகிய, கலிவாகு, வீரவாகு மற்றும் சக்கரவர்த்திகட்கு இத்தகைய இழிகாலமுண்டான நாள் முதல் இதுவரை ஜாதியெனும் தீராத சுழற் காற்றில் அகப்பட்டு அவதிப்படுபவர்களை ஈடேற்றுவான் வேண்டி இலங்கை இந்தியர் சங்கம் இதன் அங்கங்களாகிய தங்கங்களே! உங்கள் பெருமுயற்சிக்கு அதிக நன்றிபாராட்டுகிறேன். கடவுள் உங்களோடு இருப்பாராக.

‘ஆதி திராவிடன் நிதிக்காக' தங்கள் பேருக்கு ரூபா 8.00 இன்றையத் தினம் மணியாடர் செய்திருக்கிறேன். இவ்வுலகில் இவன் ஜீவனோடிருக்கும் வரை தமிழ் வருஷாவருஷம் ரூபா 10 பத்து சங்கத்திற்கு அனுப்பி வைப்பேன். எனையாளும் ஈசன் கிருபையுண்டாகவேணும்.

அன்பை அதிகமாக நேசிக்கும்,

எம்.எஸ்.லாசரஸ் 19, ஏப்ரல் 1920

மேற்படி கடிதத்தின்படி ஆண்டுதோறும் 10 ரூபாயை கொடுப்பதாகக் கூறியிருக்கிறார். பத்திரிகையின் விலை அப்போது ஐந்து சதம். மாதப் பத்திரிகை என்கிற வகையில் சந்தா கட்டினால் கூட அதற்கு ஆகும் 60 சதம் தான். தபால் செலவையும் சேர்த்து அப்போது வருடாந்த சந்தாவாக ஒரு ரூபாவை அறவிட்டிருக்கிறார்கள் எனும் போது இந்த பத்து ரூபாய் அன்றைய காலத்தில் பெரிய தொகை தான். லாசரஸ் என்கிற அந்த வாசகர் சாதி எதிர்ப்புக்காக இயங்குவதையொட்டி பாராட்டிருக்கிற விதத்தில் அன்றைய காலப்பகுதியில் அரிதான பணியாகத் தெரிவதுடன், ஒரு துணிச்சல் மிக்க ஊடக முயற்சியாகவும் “ஆதி திராவிடன்” பத்திரிகையைக் குறிக்க முடியும்.

ஆதிதிராவிடன் பத்திரிகை ஆரம்பத்தில் இருந்ததை விட போகப்போகத் தீவிரமும், கனதியும், தரமும் கொடிய பத்திரிகையாக ஆகியிருப்பதை 1934 ஆம் ஆண்டு பத்திரிகையைக் காணும் போது இனங்கண்டுகொள்ள முடியும்.

இந்த இடைக்காலத்தில் தமிழகத்தில் பகுத்தறிவு இயக்கத்தின் வளர்ச்சி, ஈ.வே.ரா பெரியாரின் வகிபாகம் போன்றவையும் ஊக்கியாக அமைந்திருக்க வேண்டும்.

தீண்டாமை பற்றி ஆதரவாகவும் எதிராகவும் வெளிவந்த கருத்துக்களைத் தொகுத்து “பகுத்தறிவு ஏ”, “பகுத்தறிவு பி” என்கிற உப தலைப்பிட்டு முழுப்பக்கம் வெளிவந்திருக்கிறது.

பெரியார் கூறிய

“தீண்டாமை கொண்ட மதத்திற்கும் குஷ்டரோகம் நிறைந்த மனிதனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை”

என்கிற கருத்தும் அதில் இடம்பெற்றுள்ளது.

மேலும் நீதிக்கட்சியைப் போல “தினசரி” நடத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் இதற்கு அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து உட்சாதி, மத, வர்க்கப் பாகுபாடுகளை விட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகோள் விடுத்திருக்கிறது ஆதி திராவிடன்.

'திராவிடர் இவ்வளவு முன்னேற்றமடைந்ததற்கும் அடைந்துவருவதற்கும் காரணம் அவர்களால் நடத்தட் பெற்றுவரும் 'ஐஸ்ற்றிஸ்" "திராவிடன்" பத்திரிகைகளே. அதுபோல நாமும் நம் குறைகளை கவர்மெண்டாருக்கும் எடுத்தோதி நன்மைபெற நமக்கென ஆங்கிலத்திலும், திராவிடத்திலும் தினசரி இன்றேல் வாரப் பத்திரிக்கைகள் இன்றியமைதனவாம். மேற்கூறிய விஷயத்திற்கு நம்மவ ரெல்லாரும் (பள்ளர் பறையர் சக்கிலி என்ற முப்பிரிவாகும்) எச்சமயத்தாராயினும், என்னிமையிள்ளோராயினும் ஒன்றுபட்டு ஒற்றுமையுடனும் விடாமுயற்சியுடனும் பிரச்சார வேலை செய்யவேண்டும். (ஆதிதிராவிடன் 15 நவம்பர் 1921)

அதுவரை காலம் பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்துகொண்டிருந்த நிலை இருக்கும் போதும் ஆதி திராவிடன் தமிழகத்துக்கு அனுபபட்டிருக்கிறது. ஆதிதிராவிடன் இதழ் தபால் மூலம் தமிழகம், கோலார் தங்கவயல் பகுதி, பர்மா ஆகிய இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டாம் வருட நிறைவின் போது தபால் செலவு பற்றிய சிக்கலை எடுத்துக் கூறும் ஒரு விளக்கமான செய்தி வெளியாகியிருக்கிறது. அதன்படி தமிழக சந்தாக்காரர்கள் தபால் செலவை கருத்திற்கொண்டு புதிய விலையை ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். (1920 ஜனவரி ஆதி திராவிடன்)

மலையகப் பகுதிகளில் ஏமாற்றிப் பிழைக்கும் சம்பவங்கள் பற்றிய எச்சரிக்கை செய்திகளும் காணப்படுகின்றன.

நோட்டீஸ்

(Dentist) பல்கட்டும் வேலை செய்கிற ஒருவன் நாளது மாதம் 1-தி யாக கலகாவில் வந்து அனேகம் ஆட்களுக்கு பல்கட்டுகிறதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஏய்த்துப் போட்டுப்போய்விட்டான். தேடியும் அகப்படவில்லை. அவன் சிங்களமனுஷன், உயரமானவன், மெலிந்தவன், சப்பாத்து கால்சட்டை உடுத்தியிருப்பான். இவன் அநேகமாய் சின்ன டவுன்களில் உலாவித்திரிந்து மனுஷரை ஏமாற்றுகிறான். ஆகையால் இப்படிப்பட்டவனைப் பற்றி எச்சரிக்கையாக விருக்கவும்.

ஏ.ஏ. ஆபிரகாம் மலர் 2 இதழ் 6 பக் 85

அதே வேளை ஆதி திராவிடன் பத்திரிகையும் “இலங்கை தேசிய காங்கிரஸ்” அமைப்பும் உருவானது ஒரே காலத்தில் தான்.

7வது இதழில் இப்படி ஒரு செய்தி காணப்படுகிறது.

“இது நிற்க, நாளது செப்டம்பர் மாதம் இவ்விலங்கையில் நடக்கும் இலங்கை நேஷனல் காங்கிரஸ்க்கு, நம்மவர்களின் நலவுரிமைகளைப் பற்றி பேசுவதற்காக மேற்படி இலங்கை இந்திய சங்கத்தின் பேரால் கனம் லாரி முத்துகிருஷ்ணா அவர்களையும், கனம் ஏ.எஸ்.சாம்ஜான் அவர்களையும் பிரதிநிதியாக அனுப்பப்பட வேண்டுமென கனம் கே.பி.சிவன் அவர்கள் கொண்டுவந்த பிரேரணையை கனம் பி.கனகசபை அவர்கள் ஆமோதித்தனர்.”

இந்த செய்தி இலங்கை – இந்தியர் சங்கம் அன்றைய முக்கிய இலங்கைத் தலைவர்கள் இணைந்து ஆரம்பித்த பிரதான அரசியல் இயக்கமான இலங்கை இந்தியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. துரதிருஷ்டவசமாக அவர்கள் எத்தகைய கோரிக்கைகளை முன்வைத்துக் கதைத்திருக்கிறார்கள், யாரைச் சந்தித்தார்கள்? எப்போது, அதன் பிரதிபலன்கள் ஏதும் உண்டா என்பது போன்ற விபரங்களை அறிய முடியாத அளவுக்கு; நம்மிடம் எந்த ஆதாரங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

நம் கைவசம் கிட்டிய 1934 ஆம் ஆண்டு பத்திரிகை கண்டியில் இருந்து வெளியாகியிருக்கிறது. 1919 ஆம் ஆண்டு பத்திரிகை கொழும்பு நகரிலிருந்து வெளியாகியிருக்கிறது. இரா.பாவேந்தர் ஆதி திராவிடன் பத்திரிகையின் இரண்டாண்டு உள்ளடக்கங்களை மாத்திரம் தொகுத்து நூல் வெளியிட்டிருக்கிறார். இவை இரண்டும் வேறு வேறா அல்லது ஒரே பத்திரிகை தானா? இடையில் நின்று போனதா? பத்திரிகையின் காரியாலயம் கொழும்பில் இருந்து கண்டிக்கு மாற்றப்பட்டதா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் அதன் பெயரும், உள்ளடக்க அரசியலும் தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பதால் இது ஒன்றாகவே இருக்கும் என்கிற ஊகத்துக்கு வர முடியும். அந்த முடிவில் இருந்தே இக்கட்டுரை பார்க்கப்பட்டிருக்கிறது.

19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழ்ப் பதிப்புத் துறை என்பது யாழ்ப்பாணத்திலேயே மையம் கொண்டிருந்தது. அது மட்டுமன்றி அச்சுத்துறையானது நாவலர் மற்றும், நாவலர் வழிவந்த சாதி ஆதிக்க சக்திகளின் பிடியிலேயே இருந்தது. மிஷனரிகளின் பத்திரிகைகள் சாதி இறுக்கங்கள் இன்றி ஓரளவு தளர்வாக இயங்கினாலும் கூட அவை தாழ்த்தப்பட்டவர்களுக்கான நேரடி பத்திரிகையாக இருந்ததில்லை. அப்படிப் பார்க்கும் போது ஆதி திராவிடன் பத்திரிகை ஒரு முற்போக்கானதும் துணிச்சலானதுமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது.

இன்று ஆதி திராவிடன் பத்திரிகையின் ஒரு  இதழைக் கூடப் பெற முடியவில்லை. குறிப்பாக இலங்கை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் ஒரு பிரதியும் இல்லை (இ.சிவகுருநாதன், 1993). அது எப்போது நின்றுபோனது? ஏன் நின்றுபோனது? போன்ற விபரங்களைக் கூட மேலதிகமாக அறிய முடியவில்லை. இக்கட்டுரையானது இந்த இடத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு அதன் தடங்களைத் தேட உந்துதலாக இருக்கட்டும்.

நன்றி - தாய்வீடு - ஏப்ரல் - 2023

Reference

  1. திரிசிரபுரம் ஆ.பெருமாள் பிள்ளை, ஆதி திராவிடர் வரலாறு, சென்னை, விக்டோரியா அச்சுக்கூடம், 1922.
  2. D.கோபால செட்டியார், ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம். கிரநதி ராமேஸ்வாமி செட்டியார், அச்சியந்திரசாலை, சென்னை, 1920
  3. என்.சரவணன், 1915 : கண்டி கலவரம், புக்வின் பதிப்பகம், 2017
  4. ஆதி திராவிடன், ஓகஸ்ட் 1, 1934.
  5. இரா, பாவேந்தன், ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு, சந்தியா பதிப்பகம், 2008
  6. இ.சிவகுருநாதன், இலங்கையில் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி, பாரி நிலையம், சென்னை, 1993

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates