Headlines News :
முகப்பு » , , , , » இலங்கையில் "றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI" தலையீடு - என்.சரவணன்

இலங்கையில் "றோ, சீ.ஐ.ஏ, மொசாட், MI5, ISI" தலையீடு - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 40


1980 களில் ஒரு புறம் ஜே.ஆர் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முயற்சி மேற்கொள்வதற்கு தள்ளப்பட்டிருந்து. இந்தியாவின் அழுத்தப் பிடியில் இருந்து விடுபட முடியாதபடி சிக்கியிருந்தது ஜே.ஆர்.அரசாங்கம். அதேவேளை ஜே.ஆரால் பட்டைத் தீட்டப்பட்ட இனவாத சக்திகள் எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஜே.ஆருக்கு எதிராக ஐக்கியப் படத் தொடங்கின.

குறிப்பாக “மவ்பிமே சுரகீமே வியாபாரய” (தேசத்தைப் பாதுகாக்கும் இயக்கம்) தொடங்கப்பட்டது. அரசாங்கத்தின் தீர்வு முயற்சிகளை எதிர்த்து போராடுவது, சிங்கள மக்களை “தமிழ் பயங்கரவாதத்துக்கு” எதிராக அணிதிரட்டுவது என்பனவே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.

இதே நோக்கத்துக்காக அப்போது தலைமறைவாக இருந்த ஜே.வி.பி தமது முன்னணி அமைப்புகளில் ஒன்றாக “தேஷப்பிரேமி ஜனதா வியாபாரய” (தேசபக்த மக்கள் இயக்கம்) எனும் அமைப்பை இயக்கி வந்தது. ஆனால் மகா சங்கத்தைச் சேர்ந்த “சோபித்த தேரர்” போன்றோர் அவர்களின் கொள்கைகளுடன் சற்று வேறுபட்டு இருந்தனர். (ஆம் சாட்சாத் மைத்திரிபால தலைமையிலான “நல்லாட்சி அரசாங்கத்தை கொணர்வதில் பிரதான பாத்திரம் வகித்த அதே சோபித்த தேரர் தான்.)

ஆக “சிங்கள பல மண்டலய” (சிங்கள அதிகாரச் சபை), சிங்கள வீர விதான, தேசிய சங்க சபை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மட்டுமன்றி ஐ.தே.க அரசாங்கத்திற்குள் இருந்த சிறில் மெத்தியு போன்றோரும் கூட ஒன்றிணைந்தனர்.

இந்த இயக்கம் மிகவும் வேகமாக தென்னிலங்கையில் பலமடைந்து வந்தது. ஓரளவு மத்தியஸ்த நிலைப்பாடு கொண்ட பிக்குகள் என்று அறியப்பட்டவர்கள் கூட இதில் தம்மை இணைத்துக் கொண்டனர்.  இவர்கள் அனைவரும் “இணைப்பு சி” திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்காக முழுமூச்சுடன் செயற்பட்டனர்.

ஜனாதிபதி ஜே.ஆரும், பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலியும்
1984 ஜனவரியில் ஜே.ஆர். சர்வகட்சி மாநாட்டைக் கூட்டியபோது  டில்லியில் ஒப்புக்கொண்ட “இணைப்பு – சி” திட்டத்தை அல்ல முன்வைத்தார். தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஒவ்வாத திரிக்கப்பட்ட பல அம்சங்களை மாற்றியிருந்தார். இந்தியாவையும், இந்திராவையும் அப்படி அதிருப்திகொள்ளச் செய்வதற்கான உளப்பலம் ஜே.ஆருக்கு எங்கிருந்து வந்தது? இதன் விளைவுகளை அவர் அறிந்துதான் வைத்திருந்தாரா? சர்வகட்சி வட்டமேசை மாநாடு என்பதானது வெறும் கண்துடைப்புக்காகத்தான் நடத்தினாரா? இது போன்ற கேள்விகளுக்கு பதிலை அன்று நிலவிய சர்வதேச சதிவலைப்பின்னலையும், அதற்கான பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழலையும் சேர்த்துத் தான் விளங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது.

பிராந்திய அரசியலின் செல்வாக்கு

சோவியத் யூனியன், அமெரிக்கா ஆகிய முகாம்களுக்கு இடையில் நிகழ்ந்துகொண்டிருந்த பனிப்போரில் இந்தியா சோவியத் முகாமைச் சார்ந்திருந்தது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க தலையீட்டை கட்டுப்படுத்துவதற்கான சோவியத் யூனியனின் கருவியாக இந்தியா தொழிற்பட்டது. இந்தியாவின் நிலைப்பாடும் அமெரிக்க எதிர்ப்பாகத் தான் இருந்தது.

இந்த நிலையில் டில்லியில் செப்டம்பர் மாதம் அணிசேரா நாடுகளின் மாநாடு டில்லியில் நிகழ்ந்தது. அணிசேரா மாநாட்டின் தலைவியாக இந்திரா அப்போது இயங்கினார். அங்கு அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. செப்டம்பர் 28 அன்று இந்திரா காந்தி ஆற்றிய உரை மிகவும் முக்கியமானதொரு உரை. அந்த மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க எதிர்ப்பாளர்களான பிடல் காஸ்ட்ரோ, யாசிர் அரபாத் போன்றோர் இந்திராவுக்கு நெருக்கமாகவும், ஆதரவாகவும் இருந்தார்கள்.

அது போல அதே ஆண்டு 1983 நவம்பர் 23-29  வரையான நாட்களில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு நடந்தது. இந்திரா காந்தி அதற்கு தலைமை வகித்தார். அந்த மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. கிரெனடா நாட்டின் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புகெதிரான தீர்மானம் பிரதான தீர்மானங்களில் ஒன்று.

1984 செப்டம்பரில் நியுயோர்க்கில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரின் போது இந்திரா காந்தி சந்தித்த இரு தமிழ் டொக்டர்களிடம் இலங்கையின் மீது படையெடுக்க இந்திய இராணுவத்தை தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் ஆனால் அங்கிருக்கும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி தான் தயங்குவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது பற்றிய விபரங்களை “இலங்கை தமிழ் தேசியம்” (Sri Lankan Tamil Nationalism) என்கிற நூலில் ஏ.ஜே.வில்சன் குறிப்பிடுகிறார்.

அமெரிக்கா இந்தியாவுக்கு எதிராக இந்தியாவின் அயல் நாடுகளை சரிகட்டி தம் பக்கம் ஈர்த்துவைத்திருந்தது. 1977 ஆம் ஆண்டு ஜே.ஆரின் ஆரசாங்கத்தின் திறந்த பொருளாதாரக் கொள்கை, அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை என்பன அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தவையே. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவை பகைத்துக் கொண்டு ஆட்சிசெய்ய முடியாத ஒரு நிலை அயல் நாடுகளுக்கு இருக்கவே செய்தது. ஆக இந்தியாவையும் அமெரிக்காவையும் ராஜதந்திர ரீதியில் கவனமாகக் கையாளும் நிலை இலங்கைக்கு இருந்தது.


அமெரிக்காவில் ஜே ஆர்.
இந்தியாவின் தலையீட்டை ராஜதந்திர ரீதியில் கட்டுப்படுத்த ஜே.ஆர் அமெரிக்காவுக்கு ஓடினார். 1984 யூன் மாதம் 18 ஜே.ஆரை அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரேகன் வெள்ளை மாளிகையில் பலமான வரவேற்பளித்து விருந்து கொடுத்தார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியில் ரோநால்ர் ரேகனின் உரைக்கு அடுத்ததாக ஜே.ஆரால் உரை நிகழ்த்தப்பட்டது. அவ்வுரையில் இலங்கையில் தலைதூக்கியுள்ள “தமிழ் பயங்கரவாதத்தையும்”, இந்தியாவின் தலையீடு பற்றியும் போட்டுக்கொடுக்க தவறவில்லை. ஜே.ஆரின் பேச்சின் மைய நோக்கமும் அதுதான்.
“இலங்கையின் வடக்குப் பகுதியில் பிழையாக வழிகாட்டப்படும் தமிழ் பயங்கரவாத குழுக்கள் ஐக்கிய இலங்கையை பிரிப்பதற்காக இயங்கிவருகிறார்கள். இந்த பயங்கரவாத குழுக்கள் மிகவும் சிறியவை. அவர்கள் கொள்ளைகளிலும், கொலைகளிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அவர்கள் மாக்ஸிய தேசமொன்றை உருவாக்குவதும் அவர்களின் இலக்கு. இலங்கையையும், இந்தியாவையும் சேர்த்துத் தான். தமிழ் நாட்டிலிருந்து அதனைத் தொடங்குகிறார்கள். இதுவரை 147 அப்பாவிகளைக் கொன்றுள்ளார்கள்.
ஜனாதிபதி அவர்களே உங்கள் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரத்து சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். ஐ.நாவும் தங்கள் நாடும் இணைந்து வளர்ந்துவரும் நாடுகளில் தலைதூக்கிவரும் பயங்கரவாதத்துக்கு எதிராக இயங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”
என்று அந்த உரையில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிடியில் இலங்கை

இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும் போதெல்லாம் இந்தியாவுக்கு எதிரான, அமெரிக்காவுக்கு சார்பான நாடுகளிடம் இலங்கை அரசு உதவிகோரி மண்டியிட்டது இந்த போக்கின் விளைவுகளால் தான்.

ஜெயவர்த்தனா 80களின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இஸ்ரேலுக்கும், பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ஒட வைத்ததும் இந்தியாவைத் தாக்குபிடிப்பதற்கான பலத்தை அதிகரிப்பதற்காகத் தான். இதன் விளைவால் தான் இந்தியா தம்மீது படையெடுக்கப்போகிறது என்கிற பிரச்சாரம், பாதுகாப்பு அமைச்சின் உருவாக்கம், புதிய ஆயுதக் கொள்வனவு, படைப்பெருக்கம் அனைத்தையும் துரிதமாக மேற்கொண்டது. இந்த பயம் என்பது மனப்பிரமையால் வந்ததல்ல.

1985 டிசம்பரில் ஜே.ஆர் பாகிஸ்தான் சென்று அந்நாட்டுத் தலைவர் ஜெனெரல் சியாவை சந்தித்த போது நேரடியாகவே பல இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். அதற்கு முன்னர் அளித்துவந்த இராணுவப் பயிற்சியை மேலதிகமாக விஸ்தரிப்பதற்கு அவர் உடன்பட்டார். 

பாதுகாப்பு அமைச்சராக லலித் அத்துலத் முதலி பதவியேற்றதும் “பயிற்சியளிக்கப்பட்ட ஒவ்வொரு புலிக்கும் நூறு இராணுவத்தினர் இங்கே பயிற்சியளிக்கப்படுவார்கள் என்று இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அதேவேளை தமிழகத்தில் ஈழ ஆதரவு சக்திகள் இலங்கைத் தமிழர்களுக்கு பலமான ஆதரவை வழங்கினார்கள். எதிர்க்கட்சிகளும், ஆளுங்ககட்சியும் கூட தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்தன. இலங்கை அரசுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகள் வழங்குவதைக் கண்டித்து 12.10.1983இல் நிகழ்ந்த பேரணியின் இறுதியில்  தமிழக முதல்வராக இருந்த எம்.ஜீ.ஆர். அமெரிக்க தூதுவர் கான்சல் ரோய் விட்டேக்கரிடம் மனுவையும் அளித்தார்.

வேர்ணன் வோல்ட்டர்

83இன் இறுதியில் அமெரிக்க தூதரகத்தில் இருந்துகொண்டு இயங்கிய சீ.ஐ.ஏ. உளவுப்பிரிவின் பிரதித் தலைவர் தான் வேர்ணன் வோல்டர் (Vernon A. Walters) கொழும்பிலேயே தங்கியிருந்து இலங்கை அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி வந்தார். பிற்காலத்தில் அவர்  அமெரிக்காவுக்கான ஐ.நா பிரதிநிதியாகவும், ஜேர்மன் போன்ற நாடுகளுக்கான தூதுவராகவும் இருந்தவர். இஸ்ரேலிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும்படி ஆலோசனை வழங்கியதும் அவர் தான்.  அமெரிக்க ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரான வேர்ணன் வோல்ட்டர் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தை வரைவதற்கு வழிகாட்டியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து தான் இஸ்ரேல் இராணுவ நிபுணர்கள் இலங்கை வந்தடைந்தார்கள். இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவருக்குப் பதிலாக அவசர அவசரமாக புதிய ஒருவர் மாற்றப்பட்டார்.

இந்த நிலைமைகளால் மாதுறு ஓயா திட்டத்திற்கு சவூதி அரேபியா வழங்கவிருந்த நிதியுதவியை நிறுத்தியது. இலங்கையிடமிருந்து தேயிலையை கொள்வனவு செய்துவந்த முதன்மை நாடுகளில் ஒன்றான ஈராக் கொள்வனவை குறைத்துக்கொண்டது. எகிப்தும் தேயிலை ஏலச் சந்தையிலிருந்து விலக்கிக்கொண்டது. குவைத் இலங்கையிலிருந்து வரும் தொழிலாளர்களை மட்டுப்படுத்தியது. ஜோர்தான் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேலுடனான இலங்கை உறவைப் பற்றி பரிசீலிக்குமாறு எச்சரித்தது. ஈரான் புதிதாக அனுப்பியிருந்த இலங்கைக்கான தூதுவரை விலக்கி ஈரானுக்கு திருப்பி அழைத்துக்கொண்டது. சிரியா, பாலஸ்தீன் மற்றும் ஒபெக் நாடுகளின் அமைச்சர்கள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராயவேண்டும் என்றனர்.

ஆனால் இத்தனையையும் மீறி இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் வழிகாட்டளின் கீழ் இருப்பதே பாதுகாப்பானது என்று எண்ணியதால் இஸ்ரேலுடனான உறவை பகைத்துக் கொள்ளவில்லை. அதற்கு கொடுத்த விலை அரபு நாடுகளுடனான பகை. அதே வேளை இந்த சூழலைப் பயனடுத்தி ஜே.ஆருடன் “அமெரிக்காவின் குரல்” (Voice Of America) நிலையத்துக்கு 1000 ஏக்கர்களை வழங்கும் ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்துகொண்டது.

“இணைப்பு சி” திட்டத்தை றேகன்  நிர்வாகம் எதிர்த்ததும் கூட அத்திட்டத்தின் மீதான ஜே.ஆரின் உதாசீனத்துக்கு காரணங்களில் ஒன்று. திருகோணமலை தமிழர் கைகளுக்குப் போனால் அது இந்தியாவின் செல்வாக்குக்குள் சென்று விடும் என்கிற ஒரு அச்சமும் அதற்கான காரணம். இத்தனைக்கும் “இணைப்பு சி” திட்டத்தில் திருகோணமலை துறைமுகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வகையிலேயே தயாரிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை இந்தியாவின் இராணுவ ஆக்கிரமிப்புக்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஜே.ஆரை எச்சரித்ததும் அவர் தான். டெல்லிக்குச் சென்று அவ்வாறானதொரு இராணுவ ஆக்கிரமிப்பை செய்ய முற்படக்கூடாது என்று கேட்டுக்கொண்டதாக கே.எம்.டி.சில்வாவின் “பிராந்திய அதிகாரமும் சிறிய அரசுகளின் பாதுகாப்பும் – இந்தியா – இலங்கை 1977-1990” என்கிற நூலில் விளக்குகிறார்.  இந்தியாவில் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்ட தளங்கள், முகாம்கள் பற்றிய புகைப்படங்களை இலங்கை அரசுக்கு கொடுத்து உறுதிப்படுத்தியவரும் வேர்ணன் வோல்டர் தான். வேர்ணன் வோல்டர் இலங்கையில் இருந்த போது திருகோணமலை படைத்தளத்தைப் பற்றி இந்திய அதிகாரிகளுடன் பேசி அவர்களை பீதிக்குள்ளாக்கிய சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

அமெரிக்கா திருகோணமலையில் தளத்தை அமைக்கக்கூடும் என்கிற பயம் இந்தியாவுக்கு இருந்தது. “வொய்ஸ் ஒப் அமெரிக்கா” என்கிற பெயரில் அமெரிக்கா திருமலையில் நிலைகொள்ள முயற்சித்ததும் உண்மை தான். இந்தியாவின் இந்த பயத்தை 1983 இணைப்பு சி, மற்றும் 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றில் திருகோணமலை விவகாரம் தீர்வு யோசனைகளில் ஒன்றாக உள்ளிடப்பட்டிருந்தமை என்பவற்றின் மூலம் நாம் உணரலாம்.

இந்தக் காலப்பகுதியில் இலங்கை அமெரிக்க உளவுப்பிரிவான சீ.ஐ.ஏ (Central Intelligence Agency). பிரித்தானிய உளவுப் பிரிவான MI5 (Military Intelligence, Section 5), பாகிஸ்தானின் உளவுஸ்தாபனமான ISI (Inter-Services Intelligence) மற்றும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட் (Mossad) ஆகியவற்றின் தயவை நாடியிருந்தது. அவை “பயங்கரவாத எதிர்ப்பு”க்கான உதவி என்கிற பேரில் இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவின. ஆனால் லண்டனிலும், பிரித்தானியாவிலும் தமிழ் சமூகத்தின் பரப்புரை செல்வாக்கு பெற்றிந்ததன் காரணமாக அந்த உதவிகள் மட்டுப்படுத்தபட்டிருந்தன.

மொசாட்டின் மோசடி

இவற்றில் மொசாட்டின் பணி மிகப் பெரியது.

“By way of Deception” (ஏமாற்றுவதன் மூலம்) என்கிற நூல் 1990இல் வெளியானது. 1990இல் உலகில் அதிக விற்பனையான நூலாக அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நூல் அது. இதை எழுதிய விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனத்தில் உளவாளியாக பணிபுரிந்த கனேடியர். அந்த நூல் உலகளவில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய நூல். 2004 இல் வெளியாகி உலகைக் கலக்கிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" (Confessions of an Economic Hit Man) நூலும் ஏகாதிபத்தியத்தின் சதி ஏஜென்டாக பணியாற்றிய 'ஜோன் பெர்க்கின்ஸ்' எழுதி ஒரு தசாப்தமாக தமிழுலும் பிரபலமாக பேசப்படுவதுப்படுவது தான். ஆனால் விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி சொல்லும் கதை நேரடியாக இலங்கையுடன் தொடர்புபட்டது. (அது பற்றிய விரிவான கட்டுரையை இந்த இணைப்பில் பெறலாம்)

அந்த நூலில் இலங்கை பற்றி வெளிவந்த பகுதியின் மொழிபெயர்ப்பை சரிநிகர் பத்திரிகை 1991இல் வெளியிட்டிருந்தது. ஒஸ்ட்ரோவ்ஸ்கி ஆரம்பத்தில் இரகசிய கொலைகளை செய்வதற்கு நியமிக்கப்பட்ட்போதும் அதனை மறுத்து பின்னர் மொசாட்டின் பயிற்சியாளராகவும், களநிலை உத்தியோகத்தராகவும் 1982-1986 காலப்பகுதியில் பணியாற்றியாவர். ஆனால் 1986இல் மொசாட்டின் பணிகளை வெறுத்து வெளியேறி தப்பித்து வாழ்ந்தவர். 

அதில் பணியாற்றிய காலத்தில் இலங்கை அரசாங்கத்தை தம் வழிக்குக் கொணர செய்த பின்புலச் சதிகள், பின்னர் தமிழ் இயக்கங்களுக்கு பயிற்சியளித்த அதே இஸ்ரேல் இராணுவத் தளத்தில் (Kfar Sirkin) இலங்கைப் படையினருக்கும் அதே விதமான பயிற்சிகள் வழங்கப்பட்ட விதம், ஆளையாள் தெரியாதபடி பயிற்சிபெற்ற அவர்கள் நேரடியாக பரஸ்பரம் மோதிச் சாவதற்கான பயற்சி அளிக்கப்பட்ட அந்த களம் குறித்தெல்லாம் அந்த நூலில் விலாவாரியாக விளக்குகிறார். தமிழ் இளைஞர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பிவைத்த இந்திய றோ (Research and Analysis Wing) உளவு நிறுவனத்திற்கோ அல்லது தமது இராணுவத்துக்கு கொமாண்டோ பயிற்சியளிப்பதற்காக அனுப்பிய இலங்கை அரசாங்கத்துக்கோ கூட இந்த விபரங்கள் எதுவும் தெரிந்திருக்கவில்லை.

இராணுவப் பயிற்சி மட்டுமன்றி, இலங்கையில் போர்பயிற்சி, போர்த் தளபாடங்களை விற்பது என பல பணிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணத்தைக் கறப்பதற்காக ஜே.ஆருக்கு வழங்கிய குறுக்கு வழி ஆலோசனையும் இங்கு முக்கியமானது. அதாவது உலகவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கென பெற்ற கடன்களையும் உதவிகளையும் பெற்று அவர்களுக்கு கள்ள கணக்கு காட்டுவது, உத்தேச செலவை விட குறைந்த செலவில் முடிப்பதற்கான இஸ்ரேலிய திட்டம், இஸ்ரேலிய நிபுணர் வரவழைப்பு என அத்தனையும் புட்டுபுட்டு வைக்கிறார். அதுமட்டுமன்றி இலங்கையில் நுழையுமுன்னர் ஜனாதிபதி ஜே.ஆரின் மருமகளை திட்டமிட்டு நட்புகொள்வது தொடங்கி தமது வேளை கச்சிதமாக முடிக்கும் வரை அந்த நூலில் தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஜே.ஆரின் ஏற்பாட்டில் மாதுறு ஓயா பகுதியில் இருந்த முகாமில் மொசாட்டைச் சேர்ந்த 50 பேர் இலங்கை இராணுவத்தினருக்கு பகிரங்கமாக பயிற்சியளித்தார்கள். பிற்காலத்தில் ஏராளமான தகவல்கள் இது குறித்து வெளியாகியிருக்கின்றன. 

இலங்கையின் மீது இந்திய-அமெரிக்க இராஜதந்திர பலப்பரீட்சை தமிழ் மக்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலில் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி இலங்கையின் மீது புறச் சக்திகளின் தலையீடு பிரச்சினையின் மையத்திலிருந்து வேறு திசைக்கு இழுத்துச் சென்றது. அந்தப் புறச்சக்திகளின் ஆடுகளமாக இலங்கையும் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையும் ஆனது. தமிழ் மக்களின் தலைவிதி மட்டுமல்ல இலங்கையின் ஒட்டுமொத்த தலைவிதியும் இலங்கைக்கு வெளியில் தீர்மானிக்கப்படுகின்ற நிலை தலைதூக்கியது. அடுத்த மூன்று தசாப்தங்களுக்கும் இனப்பிரச்சினையின் திசைவழியை அவர்கள் தான் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதை தமிழர் தரப்பும் எதிர்பார்க்கவில்லை. சிங்களத் தரப்பும் கணிக்கவில்லை.

துரோகங்கள் தொடரும்...

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates