Headlines News :
முகப்பு » , , , , » இந்திரா கொலையால் இல்லாமல் போன இணைப்பு “சி” - என்.சரவணன்

இந்திரா கொலையால் இல்லாமல் போன இணைப்பு “சி” - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 39
இனப்பிரச்சினைக்குத் தீர்வுப் பொறிமுறை என்கிற பேரில் தமிழ் மக்களை ஏமாற்றும் பொறிமுறைக்குள்  கடந்த கால அரசாங்கங்களைப் போலவே ஜே.ஆரும் எந்தெந்த வழிகளில் இறங்கினார் என்பதை பார்த்துக் கொண்டு வந்தோம். சிறுபான்மை தேசிய இனங்களையும், பெரும்பான்மை தேசிய இனத்தினதும் அபிலாஷைகளையும் ஒரு சேர திருப்திபடுத்த முடியாது என்பது வரலாற்று அனுபவம். ஆனால் அந்த அத்தனை அனுபவத்துக்கும் பிறகும் சகல அரசாங்கங்களும் அந்த முயற்சியில் இறங்கியிருக்கின்றன. தோல்வியும் கண்டிருக்கின்றன. இன்றுவரை தோல்வி கண்டு வருகின்றன.

இனங்களுக்கிடயிலான அடிப்படை அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிச்சயம் அந்த இனங்களை ஓரளவு சமரசத்துக்கு கொண்டு வந்தால் தான் முடியும் என்பது நிதர்சனமே. அதில் நிச்சயம் எந்த இனமும் முழுத் திருப்திக்கும் உள்ளாக்க முடியாது என்பதும் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டிவரும் என்பதும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாலான யதார்த்தம்.

சமரசங்களும், விட்டுக்கொடுப்புகளும் பக்கசார்பானதாகவே இருந்து வந்தது தான் தீர்வு முயற்சிகளின் வரலாறு. இந்த பக்க சார்பென்றால் என்ன என்பதற்கான அளவுகோளை இனப் பெருமித அடிப்படையிலிருந்து கணிக்க முடியாது. அது ஜனநாயக உரிமை சார் தளத்திலிருந்து அணுகப்படவேண்டியது. தமிழர் தரப்பிலிருந்து சிங்களத் தரப்பு எதிர்பார்க்கின்ற சமரசம் என்பது சரணடைவைத் தான் என்பது காலாகாலம் அம்பலப்பட்டிருக்கிறது.

சிங்களத் தரப்புக்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது தான் தமிழர் பிரச்சினையை தீர்த்தாகவேண்டும் என்கிற முடிவுக்கு இதுவரை வந்திருக்கின்றனர். அதே வேளை சிங்களத் தரப்பையும் சேர்த்து சமகாலத்தில் திருப்திபடுத்த வேண்டும் என்கிற முடிவு அவர்களை அரசியல் குருட்டுத் தனத்துக்கு அழைத்துச் சென்று விடுகிறது. ஈற்றில் சிங்களப் பேரினவாதத் தரப்பை திருப்திபடுத்துகின்ற தமிழர்களுக்கான தீர்வு என்கிற இடத்தில் வந்து ‘அடைத்து’ விடுகிறார்கள்.

77 வந்தவுடனேயே தமிழர்களுக்கெதிரான  கலவரம், கலவரம், சிறிமா குடியியல் பறிப்பு, யாழ் நூலக எரிப்பு, மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்,  ஜனாதிபதித் தேர்தல்,சர்வஜன வாக்கெடுப்பு என்பவற்றைக் கையாண்ட விதம், 1981 கலவரம், 83 கலவரம், தமிழர் குரலை நசுக்க கொண்டுவரப்பட்ட 6வது திருத்தச் சட்டம் எஎன்பவற்றில் அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிரான போக்கைக் கைகொண்ட ஜே.ஆர். அரசாங்கம் இனபிரச்சினைத் தீர்வில் அக்கறை கொள்வதாக பாசாங்கும் காட்ட வேண்டியேற்பட்டது. வட்டமேசை மாநாட்டு முஸ்தீபுகள் இந்த போக்கைத் தான் எடுத்துக் காட்டின.

கண்துடைப்புக்கொரு சர்வகட்சி மாநாடு

6வது திருத்தச் சட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும் போதே சர்வகட்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. அந்த மாநாட்டில் வடக்கில் ஏற்பட்டுள்ள “பயங்கரவாத” நிலைமை குறித்தும், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6வது திருத்தச் சட்டத்துக்கான தேவை குறித்தும் கூட ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 1983 யூலை 18 அன்று வெளியான செய்திகளின் படி சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கான ஜே.ஆரின் அழைப்பை பிரதான எதிர்க்கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி புறக்கணித்தது.

அமிர்தலிங்கம் அது பற்றி குறிப்பிடுகையில் “குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாடானது, நாட்டில் பயங்கரவாதம் பற்றி ஆராய்வதற்காக மட்டுமே கூட்டப்படுகிறதேயன்றி, தமிழ் மக்களின் துன்பங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அல்ல” என்றும் கூடவே “ஆனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் இதில் பங்குபற்றுமானால், தாம் தமது முடிவை, மன்னாரில் நடக்கவிருந்த தமது மாநாட்டில் மீள்பரிசீலனை செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  அதைவிட “குறித்த சர்வகட்சி வட்டமேசை மாநாட்டில், தமிழ் பிராந்தியங்களின் சுயநிர்ணயம், ஆயுதப் படைகளை வாபஸ் பெறுதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோருக்கான பொதுமன்னிப்பு பற்றியும் ஆராயப்பட வேண்டும்” என்று கருத்து வெளியிட்டார்.

77 தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகவும் அதற்கான சரவகட்சி மாநாட்டை நடத்துவதாகவும் சொன்ன ஜே.ஆர். குறுகிய காலத்திலேயே தமிழர் விரோத போக்குகளைக் கையாண்டு அம்பலமானது. விஞ்ஞாபனத்தில் ஒப்புக்கொண்டபடி சர்வகட்சி மாநாட்டை நடத்த அரசாங்கத்துக்கு ஏன் 5 வருடங்களுக்கு மேல் சென்றது. அதன் நிகழ்ச்சிநிரலில் எனாயவற்றிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் நாட்டின் மையப் பிரச்சினைக்கு கொடுக்கமுடியாது போனது ஏன். பாரியதொரு இனக்கலவரமும், சர்வதேச அழுத்தமும் வராவிட்டால் இந்த சர்வகட்சி மாநாடும் கிடப்பில் போடப்பட்டிருக்குமா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.

ஆக சிங்களத் தரப்பு பலமாக இருக்கின்ற காலங்களில் எல்லாம் இனப்பிரச்சினைத் தீர்வை கிடப்பில் போடப்பட்டோ, அலட்சியப் படுத்தப்பட்டோ, தமிழர் தரப்பின் கோரிக்கைகளை உதாசீனம் செய்தோ தான் வந்திருக்கிறது.

ஜே.ஆர். அதன் பின்னர் “பயங்கரவாதம் பற்றி ஆராய்வதற்கென கூட்டப்பட்ட சர்வகட்சி வட்ட மேசை மாநாட்டின் நிகழ்ச்சி நிரலினுள், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான பரிந்துரைகளும் உள்ளடக்கப்படும்” என்றும் ஜே.ஆர் அறிவித்தார். 

சமூக ஆதரவு

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என்று நீண்ட காலமாகப் கோரிய மதபோதகர்கள், ஜனநாயக – சிவில் அமைப்புகள் உள்ளிட்ட கற்றோர் குழாமிடமிருந்து சர்வகட்சி வட்டமேசை மாநாட்டுக்கு ஆதரவு பெருகியது

ஏற்கெனவே ஜே.ஆர்.அரசாங்கம் தீர்வு முயற்சிகளை இழுத்தடித்து வருவது குறித்தும், அரச பயங்கரவாதத்தின் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நசுக்கி வருவது பற்றியும் இப்படியான அமைப்புகள் பல அறிக்கைகளையும், சிறு கைநூல்களையும் வெளியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருந்தன. 1982 ஜனவரி 1 அன்று வெளியிட்ட அப்படிப்பட்ட ஒரு அறிக்கை அன்று மிகவும் பிரசித்தமான.

கட்சிகள், சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், புத்திஜீவிகள் என 25 பேர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

இனபிரச்சினை பற்றிய ஆவணங்களைத் தொகுப்பவர்கள் இந்த அறிக்கையையும் சேர்த்து தொகுத்திருப்பதை பரவலாகக் காண முடியும். தேசிய சமாதானப் பேரவை சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட “இலங்கையின் இனப் பிரச்சினை : நேற்று – இன்று – நாளை 1815 -2009” என்கிற 776 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களின் தொகுப்பு நூலிலும் இந்த ஆவணம் இடம்பெற்றிருக்கிறது. இந்த பெறுமதி மிக்க ஆவணத் தொகுப்பு துரதிர்ஷ்டவசமாக சிங்களத்தில் மட்டும் தான் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேற்படி அறிக்கையை ஒரு துண்டுபிரசுரமாக நவ சம சமாஜக் கட்சியின் காரியாலயத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். கையெழுத்திட்டவர்களில் அக்கட்சியும் ஒன்று. இதில் கையெழுத்திட்டவர்களில் ஆச்சரியப்படத்தக்க ஒருவரும் இருக்கிறார். இலங்கையின் சிங்கள பௌத்த சித்தாந்த வழிகாட்டியாகவும், பேரினவாத கருத்துருவாக்கத்துக்கு கடந்த மூன்று தசாப்தங்களாக பெரும்பங்காற்றி வருபவருமான நளின் டீ சில்வா அவர்களின் ஒருவர். அந்த ஆவணத்தில் சில வரிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
* பிச்சைக்காரனின் புண்ணைப் போல சதா இருக்கும் வகையில் இந்த இனப்பிரச்சினையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஆளும் வர்க்கம் வரலாறு முழுதும் நடந்துகொண்டுள்ளது.
* தமிழ் மக்கள் சலுகைபெற்ற தரப்பினர் என்கிற புனைவை அறிவுடையோர் கூட நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
* நாட்டின் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை ஈட்டிக்கொடுக்கின்ற மலையகத் தமிழர்கள் மனிதர்களை விட இழிவாக நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்கள் மரணபீதியுடனும், பல்வேறு அடக்குமுறைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள்.
*வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் போராளிகள் பிழையான போராட்ட முறையில் இறங்கியிருந்தாலும் கூட அவர்கள் சிங்கள மக்களுக்கு எதிராக போராடவில்லை. தம்மீதான அடக்குமுறையை தொடுத்திருக்கும் அரசுக்கு எதிரான போராட்டம் அது. அடக்குமுறையின் வடிவமாக தங்கள் முன் இருக்கின்ற படையினருக்கு எதிராக இனப் பாரபட்சமின்றி போராடுவதை காண முடிகிறது.
*யாழ் நூலக எரிப்புச் சம்பவத்திலும், மலையகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக அடிக்கடி நிகழும் தாக்குதல் சம்பவங்களிலும் ஈடுபடுவது சாதாரண இனவாத சிங்கள மக்கள் அல்ல. அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர், உறுப்பினர்களின் ஆயுதக் கோஷ்டிகளின் ஒரு பிரிவினரே இதில் ஈடுபட்டுள்ளனர்.
*எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறக்கூடிய கடிகாரகுண்டைப் போல எச்சரித்துக்கொண்டிருக்கிறது இன்றைய இனச்சிக்கல்.
போன்ற விடயங்களை விபரமாக விளக்கி தீர்வுக்கான 6 அம்சக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்கள் அவர்கள்.

பார்த்தசாரதியின் பாத்திரம்

83 இனக்கலவர நிலைமையைத் தொடர்ந்து ஜே.ஆருக்கு கடுமையான கண்டனத்துடன் கடிதம் அனுப்பிவைத்தார் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி. தமது நிலைப்பாட்டை ஜே.ஆருக்குத் தெரிவிப்பதற்காக வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை உடனதியாக அனுப்பிவைத்தார். அதன் பினர் ஓகஸ்ட் மாதம் 17 அன்று ஜே.ஆருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி உங்களோடு கலந்து பேச பார்த்தசாரதியை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். 24 ஆம் திகதி அமைச்சரவையில் இதனை ஜே.ஆர் தெரிவித்தபோது இந்த வருகைக்கு இடமளித்தால் பெரும் அவமானமாக ஆகிவிடும் என்று பொருமினார்கள். 25 அன்று வெளியுறவு செயளாளரான ஜி.பார்த்தசாரதி வந்து சேர்ந்தார். 1984இல் பேச்சுவார்த்தைக்கான சிறப்புத்தூதுவர் அவர் தான். ஓகஸ்ட் தொடக்கம் டெசம்பர் மாதம் வரை அவர் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரை நாட்டைவிட்டு வெளியேறும்படி சிங்கள் பௌத்த பிக்குகள் கோஷமிட்டார்கள். பார்த்த சாரதி நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக; ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சர்வகட்சி வட்டமேசை மாநாட்டை முன்னெடுப்பதாக உறுதியளித்தார்.

பார்த்தசாரதி ஜெயவர்த்தனவையும், தமிழ்த் தலைவர்களையும் சந்தித்தார்.

நாமும் கொழும்பு செல்லவேண்டும் என பாரதப் பிரதமர் கேட்டுக்கொண்டார். நானும் சம்பந்தனும் சென்னையிலிருந்து செல்ல தலைவர் மு.சிவசிதம்பரமும், ஆனந்த சங்கரியும் ஏனையோரும் கொழும்பு வந்து சேர்ந்தனர். நீலன் திருச்செல்வமுமுமாக சேர்ந்து பார்த்தசாரதியுடன் விவாதித்ததன் பின்னர் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதைத் தான் “இணைப்பு சி” (Annexure C) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

அமிர்தலிங்கத்தின் கட்டுரைகளைக் கொண்ட “ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை” என்கிற நூலில் அவரே இந்த நிகழ்வை இப்படி விளக்குகிறார்.
“இலங்கை, இந்தியாவைப் போன்ற பல மாநிலங்களைக் கொண்ட ஓர் ஐக்கிய ராஜ்ஜியமாக வேண்டுமென்றும் அதில் இந்திய மாநிலம் ஒன்றிற்கு இருக்கும் அதிகாரங்களைக் கொண்ட ஒரு தமிழ் மொழிவாரி மாநிலம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஆக்கப்படவேண்டுமென்றும், அந்த அதிகாரங்களை வரையறுத்துக் குறிப்பிட்டு அப்பாத்திரம் தயாரிக்கப்பட்டது. சுதந்திரத் தமிழீழத்துக்கு குறைந்த கோரிக்கைகயை நாம் முன்வைக்க முடியாதென்பதை அவருக்கு நாம் தெளிவு படுத்தினோம்.
அப்பத்திரத்தை தமது கருத்தாக இலங்கை அரசுக்கு கொடுக்கப்படமாட்டாது என்றும் அக்கருத்துக்கு யாரும் பொறுப்பேற்கத் தேவையில்லாத (non paper) பத்திரம் என்றும் பார்த்தசாரதி விளக்கினார். ஆனால் இலங்கை அரசு இந்தத் திட்டத்திற்கு வெகு தொலைவில் நின்றது. பார்த்தசாரதி தோல்வியுடன் இந்தியா திரும்பினார்.”
பார்த்தசாரதியுடன் கொழும்பில் தனிமையாக நடந்த கலந்துரையாடலில் ஜே.ஆர். வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு மறுப்பு தெரிவித்தார். இந்த ஆவணத்தைப் பற்றி இந்திரா காந்தி நவம்பர் 30 அன்று ஜே.ஆருடன் கலந்துரையாடினார். ஆனால் இறுதியில் ஒரு சமரசத்துக்கு வந்ததன் பின்னர் தான் அந்த ஆவணம் முடிவு செய்யப்பட்டது. “இணைப்பு A” என்பது ஊடகங்களுக்கான ஆவணம், “இணைப்பு B” என்பது சர்வகட்சி மாநாட்டுக்கான நிகழ்ச்சித்திட்டம், “இணைப்பு - சி” என்பது   14 அம்சங்களைக் கொண்ட இரண்டு பக்கத் திட்டம்.

இந்தத் திட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மூலம்  சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்டது. அதுவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்மொழிவாக. முதலில் வெளியேறியது மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன. பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சி பெப்ரவரி 6 அன்று அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. தமிழ்க் கட்சிகள் மாத்திரமே அதனை ஆதரித்து இருந்தனர். அங்கு எஞ்சியிருந்த பலமான குரலாக இருந்தவர்கள் மகாசங்கத்தினர் தான். ஒரு கட்சியாக இல்லாத போதும் மகாசங்கத்தினரை அந்த சர்வ கட்சி மாநாட்டில் அங்கம் வகிக்கச் செய்திருந்தார். அவர்கள் தான் அங்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்கள். ஜே.ஆரின் மறைமுகக் குரலாக இருந்தார்கள். ஜே.ஆருக்கு இலகுவாக தப்பித்துக் கொள்ள முடிந்தது.

தொண்டமானின் வகிபாகம்
இதற்கிடையில் இன்னொரு பக்க தூது முயற்சியும் நிகழ்ந்தது. கொழும்புக்கும் டெல்லிக்கும் இடையிலான இலங்கைத் தரப்பின் தூதரக தொண்டமான் இயங்கினார். டீ.சபாரத்தினம் தொண்டமானின் சரிதம் எழுதிய “அடிமைத்தனத்திலிருந்து வெளியே” (Out of Bondage) என்கிற நூலில் இந்த சந்தர்ப்பத்தில் தொண்டமானின் பாத்திரம் பற்றிய பல விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

1983 நவம்பர் 23இலிருந்து 29வரை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு இந்திரா காந்தியின் தலைமையில் புதுடில்லியில் நிகழ்ந்தது. அந்த மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து ஜனாதிபதி ஜே.ஆருடன் தொண்டமானும் குழுவில் அங்கம் வகித்திருந்தார். தொண்டமானுக்கு பிரேத்தியேக அழைப்பு பார்த்தசாரத்திக்கூடாக விடுக்கப்பட்டிருந்தது. 24ஆம் திகதி ஜே.ஆரின் பேச்சின் போது தான் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களைப் போல அகிம்சாவாதி என்றும் கூறினார்.

அடுத்த நாள் இந்திராகாந்தியும் தொண்டமானும் சந்தித்துக் கொண்டபோது ஜே.ஆர் ஜனாதிபதி ஜே.ஆர். உங்கள் தந்தையாரைப் பற்றி பெரிதாக நினைவுகொண்டார்” என்று கூறிய போது, அதற்கு பதிலளித்த இந்திரா

“அந்தக் கிழவன் எனது தந்தையாரை நினைவுகொள்ளவில்லை, நான் என் தந்தையாரைப் போல நடந்துகொள்ளவில்ல என்பதை இந்த உலகத்துக்கு கூறியிருக்கிறார்.” என்று நகைப்புடன் தெரிவித்திருக்கிறார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் மறைமுக வெறுப்புணர்ச்சி சூடு பிடித்திருந்த காலம் அது.

பொதுநலவாய மாநாடு நடந்து முடிந்ததன் பின்னர் நவம்பர் 31 அன்று இந்திராவுக்கும் ஜே.ஆருக்கும் இடையில் நீண்ட உரையாடல் நிகழ்ந்திருக்கிறது. அங்கு வைத்து தான் “இணைப்பு - சி” திட்டத்திற்கு ஜே.ஆரை சம்மதிக்கச் செய்தார்கள். வடக்கு – கிழக்கு இணைப்பு விடயத்தில் மாத்திரம் தான் ஜே.ஆரிடமிருந்து இணக்கத்தைப் பெற முடியாது போனது.

இந்த சம்மதத்துக்குப் பின்னர் இந்திரா காந்தி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னைத் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தனோடு தொண்டமானையும் ஒன்றாக சந்தித்து ஜே.ஆருடனான உரையாடலைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டது. அமிர்தலிங்கம் அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய முடிவையிட்டு தான் தமிழ் மக்களை எதிர்கொள்ள முடியாது போகும் என்பதையும் தெரிவித்த அவர், கிழக்கில் சிங்கள மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளை தவிர்த்தும், அம்பாறையில் முஸ்லிம்களுக்கான தனி அதிகார அலகை ஏற்படுத்துவதன் மூலமும் வழிகாணலாமே என்று அவர் பிரேரித்திருக்கிறார்.

தொண்டமான் இலங்கை வரும் வழியில் சென்னைக்குச் சென்று எம்.ஜீ.ஆரை சந்தித்து புதுடில்லியில் கண்ட இணக்கத்தைப் பற்றி விளக்கி விட்டு கூட்டணியினரை இதனை சம்மதிக்கச் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கருணாநிதியை சந்திக்க எடுத்த முயற்சி அவர் சந்திக்க மறுத்ததால் சாத்தியப்படவில்லை. இது பற்றி சென்னையில் நிகழ்ந்த பத்திரிகையாளர் மாநாட்டில் தொண்டமான் விளக்கியிருக்கிறார்.

கொழும்பு திரும்பியவுடன் கொள்ளுப்பிட்டியில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலும் தொண்டமான் வடக்கு கிழக்கு தவிர்ந்த மற்றைய விடயங்கள் இணக்கம் காணப்பட்டதையும், நாட்டின் எதிர்காலம் கருதி அதற்கும் ஒரு வழி கண்டு விடுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இணக்கத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தையை பார்த்தசாரதி மீண்டும் வந்து தொடர்வார் என்றார் அவர்.

இணைப்பு – சி ஆவணத்தை தமது முன்மொழிவாக வெளியில் வைக்க எந்த தரப்பும் முன்வராத நிலையில் அதனை தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஆவணமாக முன்வைத்தார்.

இந்த விபரங்கள் மேற்படி நூலில் மேலும் விரிவாகவே இருக்கிறது.

இந்தியா மீதான எதிர்ப்பலை தென்னிலங்கையில் மேலெழுந்தது. குறிப்பாக பாராளுமன்றத்தில் கடுமையான வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன. இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்குமானால் 24 மணிநேரத்திற்குள் இங்குள்ள தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள் என்று காமினி திசாநாயக்கா பகிரங்கமாக கூறியதும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது. இலங்கையை இந்தியா ஆக்கிரமிக்கப் போகிறது என்கிற பீதியை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாலேயே பரப்பப்பட்டது.

ஈழத்தை உருவாக்குவதற்காக தமிழ் கெரில்லாக்கள் தமிழ் நாட்டிலிருந்து புறப்பட்டுவந்து இலங்கையை ஆக்கிரமிக்கத் திட்டமிட்டிருப்பதாக அன்றைய தகவல் அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸ் கொழும்பில் அறிவித்தார். இலங்கை யுத்தத்துக்கு தயாராக வேண்டும் என்று அறிவித்து வரும் போது இந்தியாவோ இலங்கை யுத்த மனநிலையை உருவாக்கிவருகிறது என்று குற்றம் சுமத்தியது.


இந்திரா கொலையின் எதிரொலி

பௌத்த பிக்குமார்களும், எதிர்க்கட்சிகளும் அதனை எதிர்ப்பதாகக் கூறி நடைமுறைப்படுத்துவதில் ஜே.ஆர் நழுவினார். நிலைமை சூடுபிடிக்கும் போது குனிவதும், சூடு தணிந்தபின் எகிறுவதும் இலங்கையின் இனத்துவ வரலாற்றுப் போக்காகவே ஆகிவிட்டது. யூலை இனக்கலவரத்தின் சூடு தணிந்து ஏனைய விடயங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலில் முன்னுரிமைபெறத் தொடங்கியதும் பார்த்தசாரதியின் யோசனைகள் உதாசீனம் செய்யப்பட்டன.


இலங்கையின் போக்கு குறித்து அதிருப்தியுற்றிருந்த இந்திரா காந்தி 83 ஓக்டோபர் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்திற்கு அமெரிக்க சென்றிருந்தார். அங்கிருந்து பார்த்தசாரதி அவசர செய்தியை அமிர்தலிங்கத்துக்கு அனுப்பினார். பிரதமர் இந்திரா காந்தி உடனடியாக புறப்பட்டு அமெரிக்கா வரும்படி கூறப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் விரைந்தார். அங்கு இந்திரா காந்தி பல உலகத் தலைவர்களுக்கு அமிர்தலிங்கத்தை அறிமுகப்படுத்தி அங்கு அவர்களுக்கு தமிழர்கள் படும் துயரத்தை எடுத்துச் சொல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இலங்கையின் இனப்பிரச்சினையை சர்வதேச அளவில் அறியச் செய்யும் வாய்ப்பாக அமைந்தது. இந்திரா காந்தியின் உதவியால் இந்தியாவில் 110க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் போராட்ட இயக்கங்களுக்கான பயிற்சிமுகாம்கள் இயக்கப்பட்டன. இந்திய அரசின் நேரடி மற்றும் மறைமுக ஆயுத, மற்றும் நிதி, போர்ப்பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 டிசம்பர் ஆகும் போது 1100க்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகள் பயிற்சியை முடித்து இருந்தார்கள் என்று எம்.ஆர்.நாயாயண சுவாமி எழுதிய “இலங்கையில் புலிகள்” (Tigers of Sri Lanka) நூலில் குறிப்பிடுகிறார்.

சர்வகட்சி மாநாடு தொடர்ந்தும் 1984இல் இணக்கம் எட்டப்படாமல் இழுபறிப்பட்டு இழுத்துக்கொண்டே சென்றது. இதற்கிடையில் இந்திரா காந்தி ஒக்டோபர் 31 சுட்டுக்கொல்லப்பட்டார். ஜே.ஆருக்கு இருந்த மிகப் பெரும் நிர்ப்பந்தம் அகன்றது. நவம்பர் 15 அன்று நடத்தப்படவிருந்த சர்வகட்சி மாநாட்டுக்கான திகதி ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 26 அன்று அந்த “இணைப்பு - சி” திட்டம் அமைச்சரவைத் தீர்மானத்திற்கிணங்க கைவிடப்பட்டது. சர்வகட்சி மாநாடு மொத்தம் 37 தடவைகள் கூடியிருந்தது. கிட்டத்தட்ட 15 மாதகால முயற்சி அர்த்தமற்றுப் போனது.

இதே “இணைப்பு - சி” திட்டம் தான் மேலும் விரிவாக இந்தியாவின் கடும் மிரட்டலுடன் இலங்கை - இந்திய ஒப்பந்தமாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.ஆர். உடன்பட நேரிட்டது. அதுவும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் புதல்வன் ராஜீவ் காந்திக்கு ஊடாக.

சர்வகட்சி, வட்டமேசை, தெரிவுக்குழு போன்ற சொல்லாடல்கள் இலங்கையின் இனத்துவ தீர்வரசியலில் வெற்று அலங்காரச் சொற்களாக மாத்திரமே சுருங்கிப் போய்விட்டன. அப்பேர்பட்ட சொல்லாடல்கள் மீதான நம்பிக்கையை கூட தமிழ் மக்கள் இழந்து நெடுங்காலமாகிவிட்டது.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்


Share this post :

+ comments + 1 comments

விரிவான சிறப்பாண தகவல்கள் கொண்ட கட்டுரை

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates