Headlines News :
முகப்பு » , , , » பிரதே சபைகள் - மலையகத்தை முன்னிறுத்திய ஒரு பார்வை - மல்லியப்புசந்தி திலகர்

பிரதே சபைகள் - மலையகத்தை முன்னிறுத்திய ஒரு பார்வை - மல்லியப்புசந்தி திலகர்



அறிமுகம்
அண்மைக்காலமாக மலையகப் பெருந்தோட்டங்கள் தொடர்பில் கவனத்தைப் பெற்ற விடயமாக மாறியிருப்பது பிரதேச சபைகளின் அதிகரிப்பும் பிரதேச சபைகள் ஊடாக பெருந்தோட்ட பகுதிகளுக்கு சேவையாற்றுவதற்கான அதிகாரமும் பற்றியதான சட்ட ஏற்பாடுகளும் திருத்தங்களும் ஆகும். பிரதேச சபைகளின் அதிகரிப்பு என்பது இன்றைய நிலையில் நுவரெலியா  மாவட்டத்துடன் மாத்திரம் தொடர்பு பட்டதாக உள்ள நிலையில் பிரதேச சபைகளின் சட்ட திருத்தம் என்பது மலையகப் பெருந்தோட்டப்  பகுதிகளில் மக்கள் வாழும் 'தோட்டம்' என சொல்லப்படுகின்ற பகுதிகளுக்கு பிரதேச சபைகள் சேவையாற்றுவதில் உள்ள சட்ட சிக்கல்களை நீக்குவதற்கான ஏற்பாடுகளாகும்.

இது நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. எங்கெல்லாம் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் தோட்டங்கள் நிர்வகிக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் பிரதேச சபைகளின் சட்ட திருத்தம் ஏற்புடையதாகும். இது ஒரு உரிமை சார்ந்த  பிரச்சினையாகும்.  அதாவது குறித்த ஒரு மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வாக்களிக்கின்ற மக்கள் அந்த மக்கள் பிரதிநிதிகள் சபையில் இருந்து சேவையைப் பெற்றுக் கொள்வதை குறித்த மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான சட்டமே தடை செய்கின்றது என்பது ஜனநாயகத்தின் மீது விடுக்கப்படுகின்ற கேள்விக்குறியாகின்றது. மலையக மக்களின் நிலைமையில் இது பிரஜாவுரிமை விடயத்துடன் தொடர்புடையது.

மலையகப் பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களாகவும் தொழிலாளர் அல்லாதவர்களாகவும் வாழும் மக்கள் இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிட்டு நோக்கும் போது அபிவிருத்தி குன்றியவர்களாக காட்டப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் நாட்கூலி சம்பளத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களாக இருப்பதனால் அவர்கள் வாழும் வீடமைப்பு முறை ஏனைய சமூகங்களின் வீடமைப்பு முறைமைகளில் இருந்து மாறுபட்ட அடையாளத்துடன் பெயருடனும் (லயன்)  அழைக்கப்படுவதனால் அவர்கள் அபிவிருத்தியில் பின்னிற்பதாக காட்டப்படுகின்றது. அதே நேரம் கல்வியில் பின்தங்கியவர்களாகவும் காட்டுவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.

ஆனாலும், இந்த பின்னடைவு நிலைக்கு,  இவர்கள் வாழும் பிரதேசம் முழுமையாக அரச நிர்வாக விதிமுறைகளுக்கு அமைவானதாக இல்லை. அரச நிர்வாக பொறிமுறைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்டுள்ளனர் என்பது அபிவிருத்தியில் பின்தங்கி நிற்பதற்கு பிரதான காரணம் என்பது உணர்த்தப்பட வேண்டிய உண்மையாக உள்ளது. இதற்கு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்ட முறை மற்றும் அதில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பின்புலம் ஒன்றையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பின்னணி
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழக்கூடிய  99 சதவீதமான மக்கள்  இந்தியாவில் இருந்து தேயிலை, இறப்பர் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்காக பிரித்தானியரால் அழைத்து வரப்பட்டவர்கள். அவர்களை அழைத்து வந்த பிரித்தானியர் அவர்களின் தொழில் நிர்வாக முறைமைக்கு கீழாகவே அந்த சமூகத்தின் நிர்வாகத்தையும் பேணி வந்தனர். 1817 முதல் 1972 வரை வரையான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு கீழேயே இவர்கள் நிர்வகிக்கப்பட்டனர்.

1931இல் வாக்குரிமை கிடைக்கப் பெற்ற போதும் 1947 ஆம் ஆண்டு அதே வாக்குரிமை பறிக்கப்பட்ட பின்னரும் தோட்ட நிர்வாகங்களே சமூக நிர்வாகத்தையும் கவனித்து வந்தது. ஒரு கிராமத்தில் அல்லது நகரப் பகுதிகளில் குழந்தை ஒன்று பிறக்குமிடத்து அந்த குழந்தையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை உறுதிப்படுத்தி வழங்குபவர் பிறப்பத்தாட்சி பதிவாளராக இருப்பார். ஆனால், தோட்டப் பகுதிகளில் தோட்ட முகாமையாளரே அதனை பதிவு செய்து பிறப்புச்சான்றிதழுக்கு (Birth Certificate) பதிலாக பிறப்பு அட்டை (Birth Card) என்ற ஒன்றை வழங்கியிருப்பார். இதனையே அத்தாட்சியாக வைத்திருப்போர் இன்னும் கூட உள்ளனர்.   

இந்த உதாரணம் மூலமாக புரிந்து கொள்ளப்பட வேண்டியது யாதெனில் பிறப்பை பதிவு செய்வதனை கூட அரச நிர்வாகம் பொறுப்பேற்றிருக்கவில்லை என்பது தான். இதற்கு இன்னுமொரு காரணமாக அமைந்தது வைத்திய முறைமை. அரச வைத்திய முறைமையாக அல்லாமல் தோட்ட வைத்தியசாலைகள் எனப்படும்  (Estate Hospitals) எனும் முறைமையே தோட்டப்பகுதிகளில் காணப்படுகின்றமை.

 இந்த தோட்ட வைத்தியசாலைகளின் அல்லது மருந்தகங்களின் முழு நிர்வாகமும் இன்று வரை தோட்ட நிர்வாகத்துக்கு கீழேயே உள்ளது. இலங்கையின் ஒட்டுமொத்த தோட்டப் பகுதியில் 10 வீதத்துக்கு  குறைவான அரசாங்க வைத்தியசாலைகளே உள்ளன. தோட்ட வைத்தியசாலையின் வைத்தியர் அல்லது மருந்தகர் தோட்ட முகாமைத்துவத்திடம் சம்பளம் பெறும் உத்தியோகத்தராகவே இன்னும் உள்ளார். 

எனவே தோட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் இந்த தோட்ட வைத்தியசாலைகளின் ஊடாக தோட்ட முகாமையாளரால் உறுதிப்படுத்தி செக்ரோல்  எனப்படும் தொழிலாளர் பதிவு புத்தகத்தில் தரவுகள் பேணப்பட்டு வரும். இதன் ஊடாக ஒரு கிராமத்தில் கிராமசேவகர் ஆற்றும் பணியையும் தோட்ட முகாமையாளரே மேற்கொள்வார்.

இதே குழந்தை மூன்று  வயதை அடையும் போது முன்பள்ளி செல்ல வேண்டுமெனில் அத்தகைய முன்பள்ளியானது நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதேச சபைகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் முன்பள்ளிகளாக அமைகின்ற போது பெருந்தோட்டப் பகுதிகளில் தோட்ட நிர்வாகத்தினால் நடத்தப்படும் Creche  எனப்படும் பிள்ளை மடுவங்களிலேயே சேர்க்கப்பட்டனர். இப்போது அவை சிறுவர் அபிவிருத்தி நிறுவனங்கள் (CDC) என அழைக்கப்பட்டாலும் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதித்துவத்தைக்கொண்டு கூட்டிணைக்கப்பட்ட ட்ரஸ்ட் நிறுவனமே பராமரிக்கின்றது.

விதிவிலக்காக இப்போது ஆங்காங்கே தனியார் முன்பள்ளிகள் காணப்படுகின்ற போதும் பிள்ளை மடுவங்களின் நீட்சியாக வந்த பராமரிப்பு நிலையங்களின் வகிபாகமே அதிகமாக காணப்படுகின்றது. இதற்கு தொழிலாளிகளாக இருக்கும் தாய்மார் தங்களது குழந்தைகளை பராமரிக்கும் தேவை கருதி இந்த சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை நாடும் நிலைக்கு தள்ளப்படுகின்றமை பிரதான காரணமாகும்.

இதே சிறுவர்கள் பாடசாலைக்கு போகும் வயதினை அடையும் போது தோட்டங்களினாலேயே நிர்வகிக்கப்படுகின்ற பாடசாலைகளே அவர்களுக்கு வாய்த்தது. அதன் ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் பாடத்திட்டத்தையும் கூட தோட்ட நிர்வாகமே தீர்மானித்தது. எனவே பிறப்புச் சான்றிதழ் இல்லாது பிறப்பு அட்டைகள் அங்கு அனுமதிக்க போதுமானதாக இருந்தது. மக்கள் அரச பதிவாளரின் பிறப்புச் சான்றிதழ் அவசியப்படாமலே வாழ்ந்து விட்டனர். தொழிலும் தோட்டத் தொழிலாளியாக தொடர்ந்துவிடுகின்ற பட்சத்தில் பிறப்புச் சான்றிதழுக்கான தேவை இல்லாமலேயே போய்விடுவதுமுண்டு.

மறுபுறத்தில் தோட்டப்பகுதி குடியிருப்புகளை அண்டிய பகுதிகளில் மலசலகூடம் சுத்தம் செய்வது, சுற்றுப்புறச் சூழலை கூட்டி சுத்தம் செய்வது, குப்பைகளை அகற்றுவது, குடிநீர் (குழாய் வழி )வழங்குவது, வீட்டிற்கு ஆண்டுக்கொரு முறை வெள்ளையடிக்க சுண்ணாம்பு வழங்குவது என இதர பகுதிகளும் தோட்ட நிர்வாகத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 தோட்டப்பகுதி பாதைகளை பெருந்தோட்டக் கம்பனிகள் தங்களது தொழில் தேவைக்காக அதிகம் பயன்படுத்தியமை காரணமாக அவையனைத்தும் தோட்ட வீதிகள் என்ற கட்டமைப்புக்கு கீழாக அவர்களாலேயே  பராமரிக்கப்பட்டது. எனவே அவை வீதி அபிவிருத்தி அதிகார சபை போன்ற அரச நிறுவனங்களினால் உள்வாங்கப்படாது தோட்ட வீதிகளாகவே இன்று வரை உள்ளது.

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதுடன் கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த கொள்கைகள் தனியார் (பிரித்தானியர்) வசம் இருந்த காணிகளை அரசுக்கு பொறுப்பேற்றதுடன் பிரித்தானியர் வசம் இருந்த நிர்வாகம் இலங்கை அரசாங்கத்தின் கைகளுக்கு மாறியது. 

எனினும் பெருந்தோட்டங்களை பொறுப்பேற்ற அரசாங்கம் சமூக நிர்வாகத்தை முன்பிருந்தவாறே தொடர்ந்தது. தோட்டங்களை நிர்வகிப்பதற்கு என உருவாக்கப்பட்ட மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை, அரச பெருந்தோட்ட யாக்கம் போன்ற கூட்டுத்தாபனங்கள் நிர்வாகத்தை தொடர்ந்தன. இதன்போது இடம்பெற்றதாகக் கொள்ளக் கூடிய முக்கியமான ஒரே மாற்றம் தோட்டப் பாடசாலைகள் என இயங்கிய பாடசாலைகள் அனைத்தும் அரசாங்க பாடசாலைகள் ஆயின.

இது ஒரேடியாக இடம்பெறவில்லையாயினும் எண்பதுகளின் முற்பகுதி ஆகும் போது அத்தகைய நிலைமைகளை எட்டின. இன்னுமொரு வகையில் கூறுவதாயின் இலங்கை அரசாங்க கல்வி முறையும் பாடத்திட்டங்களும் தோட்டப் பாடசாலைகளுக்கு எண்பதுகளுக்கு பின்னரே கிடைத்தது.

'அரசாங்கத்தினால் இலவசக்கல்வி' எனும் புகழ்பெற்ற திட்டம் இலங்கை வாழ் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சுமார் ஐம்பது வருடங்கள் பின்னரே கிடைக்கப் பெற்றது. இப்போது கூட கல்வி அமைச்சில் பெருந்தோட்டப் பாடசாலைகள் அலகு (Plantation School Unit) எனும் ஒரு தனி அலகு இயங்குகின்றமை பெருந்தோட்டப்பாடசாலைகள் எனும் ஒரு வகைப்படுத்தல் இருக்கின்றமை கண்கூடு.  இந்த பின்னணியில் பார்க்கும் போது பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சி என்பது பெரும் சாதனை தான்.

மேலே காட்டப்பட்ட எல்லா உதாரணங்களிலும் 'தோட்ட நிர்வாகமே' பொறுப்புக்களை ஏற்றிருந்தமையினால் 'அரச நிர்வாகம்' உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டது. ஏறக்குறைய இலங்கை நாட்டுக்குள்ளேயே இன்னுமொரு தேசத்தில் வாழ்பவர்களாக வைக்கப்பட்டனர்என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

உள்நாட்டு நிர்வாகம்
இலங்கை நாட்டின் உள்நாட்டு அரச நிர்வாகம் என்பது அமைச்சு, மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம், கிராம சேவகர் பிரிவுகள் என்பதாக மேலிருந்து கீழ் நோக்கி செல்லக் கூடியது. இதற்கு பொறுப்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு (Home Affairs) செயற்படும். அடிமட்ட அரச நிர்வாக கட்டமைப்பான கிராமசேவகர் முறைமை மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு மிக அரிதாகவே கிடைத்தது.

1972ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் அருகில் உள்ள கிராமத்தின் கிராமசேவகர் பிரிவின் கீழாக கொண்டுவரப்பட்டபோதும் ஏனைய கிராம சேவகர் பிரிவுகள் கொண்டிருக்கும் உரிமைகள் இவர்களுக்கு இல்லை. தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்தின் அத்தாட்சிப்படுத்தல்கள் அரச சேவைகளை பெற்று கொள்வதில் இவர்களுக்கு அவசியம் எனும் நிலைமை காணப்படுகின்றது.

பெருந்தோட்டப் பகுதிகளை உள்வாங்கும் தோட்டப்பகுதிகளில் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதோடு அதில் உள்வாங்கப்பட்டுள்ள சனத்தொகை எண்ணிக்கை மிக உயர்வாக காணப்படுகிறது. நாட்டின் ஏனைய பகுதிகளில் சுமார் ஆயிரம் சனத்தொகைக்கு ஒரு பிரதேச செயலகம் கூட காணப்படுகின்ற நிலையில் மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் 13 ஆயிரம் சனத்தொகையுடன் ஒரு கிராமவேசகர் பிரிவே காணப்படுகின்றமை இந்த பிரச்சினையின் உச்சத்தை காட்டுகின்றது.  இதற்கு காரணம் மிகவும் காலம் தாழ்த்தியே இவர்கள் வாழிடம் , கிராம சேவகர் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்றைய நிலையில் மலையக பெருந்தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களான கிராம சேவகர்களின் எண்ணிக்கை இருநூறுக்கும் குறைவாகவே உள்ளது. இந்த நியமனங்களும் 90 களின் இறுதிப்பகுதியிலேயே கிடைக்கப் பெற்றது. கிராம சேவகர்கள் பொறுப்பு கூறக் கூடிய பிரதேச செயலகங்களும் அவ்வாறே. அவை பெருந்தோட்டப் பகுதிக்கு சேவையாற்றுவதில் தோட்ட நிர்வாகத்தின் ஒப்புதலை பெறுவதில் இன்னும அக்கறை காட்டி கொண்டிருக்கின்றன.

 பெருந்தோட்டப் பகுதிகளை உள்வாங்கியிருக்கக் கூடிய பிரதேச செயலகங்களில் சனத்தொகையின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றமையும் பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு இடம்பெறுகின்ற பட்சத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பும் இடம்பெறும் வாய்ப்புகள் இயல்பாகவே அமைந்து விடும். கடந்த அரசாங்கத்தின் போது பதுளை மாவட்டத்தின் பசறை, லுணுகலை ஆகிய பிரதேச செயலகங்கள் இவ்வாறு இரண்டாக பிரிக்கப்பட்டது உதாரணமாக கொள்ளலாம்.

இந்தப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக நிலவிய நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது. இப்போதைக்கு  ஏழு இலட்சத்து முப்பதாயிரம் சனத்தொகைக்கு ஐந்து பிரதேச செயலகங்களே காணப்படுகின்றன.

இதனை பதினைந்தாக உயர்த்துவதற்கு கோரிக்கை முன்வைக்கப் பட்டு பன்னிரண்டாக உயர்த்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. முதற் கட்டமாக பத்தாக அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அண்மையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

 பிரதேச செயலகங்கள் அதிகரிப்பின் ஊடாக பிரதேச சபைகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முறைமை மாற்றம், காலம் தாழ்த்திய நிலைமைகள்  என்பன காரணமாக தற்போது நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகையை கொண்ட  நுவரெலியா, அம்பகமுவ பிரதேச சபைகள் மாத்திரம் இரண்டு சபைகள் ஆறு சபைகளாக மாற்றம் பெற்றுள்ளன.

இப்போது இடம்பெற்றிருப்பது அரசியல் அதிகாரப் பகிர்வு மாத்திரமே. இதன் கீழ் நிர்வாகம் மேற்கொள்ள நிர்வாக அதிகாரப் பகிர்வு மேற்கொள்ள வேண்டும். அதற்கு பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும். இது நுவரெலியா மாவட்ட மட்டத்திலான நிலைமை. மலையகப் பெருந்தோட்ட மக்கள் வாழக்கூடிய ஏனைய மாவட்டங்களிலும் இந்த பிரச்சினை ஆழமாக ஆராயப்பட்டு இந்த நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

பிரதேச சபைகளின் அதிகாரம்

பிரதேச சபைகள் என்பது மக்களால்  தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சபை. இந்தப் பிரதேச சபைகளின் அதிகரிப்பு விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு பிரதேச சபைகளின் நிர்வாகத்துக்கு கீழாக பெருந்தோட்டப் பகுதிகளை கொண்டு வருவது தொடர்பாக சிந்திக்கும் போது,  1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் சம்பந்தமாக உரையாட வேண்டியுள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்களின் அறிமுகத்துக்கு முன்னர் கம்சபா எனப்படுகின்ற கிராமிய சபை நிர்வாகத்தின்போது தோட்டங்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதே நேரம் அவை உருவாக்கப்பட்ட போது தோட்டங்களை அந்த தோட்ட நிர்வாகமே பராமரிக்க வேண்டும் அவற்றை பிரதேச சபைகள் பொறுப்பேற்காது என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 33 ஆவது பிரிவு இதனைத் தெளிவாக குறித்து நிற்கின்றது. 1948 ஆம் ஆண்டு வாக்குரிமை பறிக்கப்பட்ட மக்கள் மீளவும் வாக்குரிமை பெறும் காலம் எண்பதுகளின் பிற்கூறுகளிலேயே உருவானது. எனவே பிரதேச சபைகள் சட்டம் உருவான போது கூட அவர்களை உள்வாங்கியதாக அது உருவாக்கப்படவில்லை.

எனினும் 1990 களின் பின்னர் மலையகப் பெருந்தோட்ட மக்கள்  பிரதேச சபைத் தேர்தல்களில் பங்குபற்றி வாக்களித்து உறுப்பினர்களான போதும் மேற்படி சட்டத்தில் தோட்டப் பகுதிகளுக்கு  சேவையாற்றும் அதிகாரம் பிரதேச சபைகளுக்கு இல்லை. ஆங்காங்கே அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை பிரதேச சபை ஊடாக இடம்பெறுகின்றதே அன்றி பிரதேச சபைகளினால் மேற்கொள்ளப்படுவது இல்லை. பிரதேச சபையினால் அதன் நிதியைக் கொண்டு சேவையாற்றியதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் உடபலாத்த பிரதேச சபை சட்டத்தின் காரணங்களைக் காட்டி கலைக்கப் பட்ட வரலாறும் உண்டு.

இந்தப் பின்னணிகளைகொண்டு தான் பிரதேச சபைகள் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதனுள் அடங்குகின்ற குறிப்பிட்ட சரத்துகள் நீக்கப்பட வேண்டும் முதலான கோரிக்கைகள் பல காலமாக மலையக அரசியல், சிவில் சமூக மட்டத்தில் பேசப்பட்டு வந்தது. எனினும் முதன் முறையாக 2015 ஆண்டு டிசம்பரில் அது பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைக்கப்பட்டது.

இப்போது இந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சரவைக்கு இந்த திருத்தங்களை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று சட்டமா அதிபர் திணைக்களம்,  சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றார்.

பாராளுமன்றத்தில் திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு குறிப்பிட்ட சரத்துக்கள் மாற்றப்படும் போதுதான் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு  பிரதேச சபைகளினால் முழுமையாக சேவையாற்ற முடியும். ஏற்கனவே இயங்குகின்ற பிரதேச சபைகளாயினும் சரி புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற பிரதேச சபைகளாயினும் சரி இதுதான் நிலைமை.விரைவில் இந்த சட்ட திருத்தம் பாராளுமன்றில் இடம்பெறும் என்கிற எதிர்பார்ப்பு எல்லோரிடத்திலும் இருக்கின்றது.

மலையகப் பெருந்தோட்ட மக்களை அரச பொது நிர்வாகமும் அடிமட்ட அரசியல் அதிகாரப்பகிர்வான பிரதேச சபைகளும் சென்றடையாமை அந்த மக்களின் அபிவிருத்தி பின்னடைவுக்கு பிரதான காரணம் என்பதையே மேற்படி விளக்கங்கள் காட்டி நிற்கின்றன.


தேசிய நீரோட்டத்திற்குள் உள்வாங்கப்படாது பல தசாப்த காலமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் பிரதேச சபைகளின் அதிகரிப்பும் பிரதேச சபை சட்ட திருத்தத்திற்கான முயற்சிகளும் நம்பிக்கை ஒளிக்கீற்றை தருகின்றன. இந்த ஒளிக்கீற்றின் வழி பயணிக்க வேண்டிய அடைய வேண்டிய இலக்குகள் இன்னும் ஏராளமாக உள்ளன.

நன்றி வீரகேசரி 16.12.2017
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates