Headlines News :
முகப்பு » , , , , » வெலிக்கடை படுகொலை சூத்திரதாரி கோணவல சுனில் - என்.சரவணன்

வெலிக்கடை படுகொலை சூத்திரதாரி கோணவல சுனில் - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 35

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையுடன் பல பயங்கர முற்றவாளிக் கைதிகள் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதையும் சென்ற வாரம் பார்த்தோம். அந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களில் இன்னோமொருவர் கோணவல சுனில். 70 கள் 80 களில் நாடுமுழுவதும் பேசப்பட்ட பிரசித்திபெற்ற பாதாள உலக கோஷ்டித் தலைவனாக அறியப்பட்டவன்.

அந்தப் படுகொலைகளுக்கு சிறைக்காவலர்கள், அதிகாரிகளின் பக்கபலமும் தாரளமாக இருந்தததை பலர் நிரூபித்துள்ளனர். ஜெயிலர் ரோஜர் ஜயசேகர ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தொகுதியான களனி தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர். சிறைக்கதவுகளை திறந்ததனால் தான் 400 கைதிகளுக்கும் மேற்ப்பட்ட சிங்களக் கைதிகள் தள்ளிக்கொண்டு ஆக்ரோஷமாக வெளியில் வந்தனர்.

கோணவல சுனில் என்று அறியப்பட்ட சுனில் பெரேராவும் சிறையில் இருந்த அவனது சகாக்களும் இந்தப் படுகொலைகளில் விகித்த பாத்திரம் குறித்து ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் (R.J.N.Jordan), இந்த உண்மைகளை அரசாங்கப் பத்திரிகையான டெயிலி நியுஸ் பத்திரிகையில் (16.11.1999) வெளிப்படுத்தியதை அப்பத்திரிகை "Gonawala Sunil executed plan to massacre 53 Tamil prisoners in 1983" என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தது. ஜோர்டன் அதற்கு முன்னர் 03.09.1999இல் வெளியான “தி ஐலன்ட்” பத்திரிகையில் வேறு பல தகவல்களை விரிவாக வெளியிட்டிருந்தார்.
“அந்தப் படுகொலைகளின் பிரதான சூத்திரதாரி கோணவல சுனில். திட்டமிட்டு தமிழ் கைதிகளை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொல்வதற்கான அனுமதி ஐ.தே.க விசுவாசிகளான சுனில் கும்பலுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் மீது பழி வராதபடி மிகவும் தந்திரமாக திட்டமிடப்பட்ட படுகொலை அது. அவர்களுக்கு தமிழ் கைதிகளின் பெயர்ப் பட்டியக்ளும் கொடுக்கப்பட்டிருந்தது. சுனிலுக்கு நெருக்கமான விசுவாசிகளிடம் அந்தத் தாக்குதல் ஒப்படைக்கப்படிருந்தது அங்கிருந்த உயரதிகாரிகள் அவர்கள் தமிழ்க் கைதிகள் இருந்த சிறைப்பகுதிகளுக்கு அனுப்ப வழி ஏற்படுத்தினார்கள். யூலை 25 மதியம் 2க்கும் 5க்கும் இடையில் இந்தப் படுகொலைகளை தொடங்கின. இரவிரவாக அந்த கொடுமைகள் தொடர்ந்தன.” என்கிறார்.
கோணவல சுனில் மட்டுமன்றி அவனின்  முழுக் கும்பலுமே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய ஆதரவாளர்களும் கூட. ஐ.தே.க வின் சிறிய கூட்டங்கள் பலவும், கொணவல சுனிலின் வீட்டில் நடந்திருப்பத்தை பலர் ஆதாரம் காட்டியும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட அமைச்சரொருவரின் ஓட்டலை குத்தகைக்கு எடுத்திருந்தவரை வெளியேற்றுவதற்காக அந்த அமைச்சர் கோணவல சுனிலை சிறையிலிருந்து வெளியில் சட்டவிரோதமாக எடுத்து காரியத்தை முடித்துக் கொண்ட கதைகள் கூட பிரசித்தம்.

83 கலவரக் காலத்தில் மாமனார் ஜனாதிபதி ஜே.ஆரும் மருமகன் கல்வி அமைச்சர் ரணிலும்

தேர்தல் காலங்களில் ஐ.தே.கவுக்கு பலமாக செயற்பட்ட முக்கிய பாதாள உலகத் தலைவன்.  கடான தொகுதி இடைத் தேர்தலின் போது, ஐ.தே.க ஆதரவாக செயற்பட்ட போது வாக்குப் பெட்டிகளைக் களவாடியதா கோணவல சுனில் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. வைத்தியர் ஒருவரின் 15 வயது மகளை பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்துக்காக சுனிலுக்கு, 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதை எதிர்த்து மேன்முறையீடு செய்த சுனிலுக்கு 1982 இல் மேன்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. 1982 ஜனாதிபதித் தேர்தலுக்கு கோணவல சுனிலை பயன்படுத்துவதற்காக ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்பட்டான். 15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த ஒருவனை ஜே.ஆர்.விடுவிக்க வேண்டிய தேவை எதற்கு வந்தது? அந்தளவுக்கு சுனிலின் தேவை ஐ.தே.க.வுக்கு இருந்தது. ஜே.ஆரின் மீது முன்வைக்கப்படும் குற்றப்பட்டியலில் கோணவல சுனில் பற்றிய கதைகளும் உள்ளடக்கம்.

அது மட்டுமன்றி 83 வெலிக்கடை படுகொலைகளுக்குப் பின்னர் விடுதலையான சுனிலுக்கு ஜே.ஆர் அரசாங்கம் பரிசு என்ன தெரியுமா? “அகில இலங்கைக்கான சமாதான நீதவான்” பட்டம்.

அதுமட்டுமன்றி இன்றைய பிரதமரும், அன்றைய கல்வி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின்  பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தனாக அன்றைய காலத்தில் பணிபுரிந்துமிருக்கின்றான். இந்த விபரங்கள் மிகவும் பகிரங்கமாக தெரியுமளவுக்கு சுனில் பற்றிய கதைகள் சிங்கள சமூகத்தில் பிரசித்தம். சுனில் 1987 இல் பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டான்.

1999இல் ஓய்வுபெற்ற பிரதி சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆர்.ஜே.என்.ஜோர்டன் வெளிப்படுத்திய வெலிக்கடை படுகொலை பற்றிய உண்மைகளின் மீது ஒருபோதும் இலங்கை அரசு விசாரணை நடத்த முன்வரவில்லை.

83 கலவரத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டது. அங்கிருந்த தமிழ் பெயர்களைக் கொண்ட அதிகாரிகளும், தமிழ்ப் பெயர்களை ஒத்திருந்த அதிகாரிகளும் கூட தாக்குதலுக்கு உள்ளானார்கள். தூதரகத்தின்  முதன்மைச் செயலாளர் எம்.ஜே.ஆப்ரஹாம்ஸின் வாகனம் பம்பலப்பிட்டியில் மறிக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. அவரி உதவியாளர் கே.வி.ஐயர் படுகாயமடைந்து ஆச்பத்தியியில் அனுமதிக்கபட்டார். பின்னர் போய் அரச படைகள் தூதரகத்துக்கு பாதுகாப்பளித்தது.

தமிழர்களின் வர்த்தகங்களை அழித்தால் அவர்களை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்தலாம் என்கிற அபிப்பிராயத்தை நெடுங்காலமாகவே சிங்கள சக்திகள் பிரச்சாரமாகவே முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். அந்த குரூரக் கனவை இயலுமானவரை நிறைவேற்றியது பேரினவாதம். தமிழர்கள் செறிவாக வாழ்ந்த இடங்கள் மட்டுமல்ல தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் அதிகமாக இருந்த கொழும்பு - செட்டியார்த் தெரு, மெயின் வீதி, மற்றும் அதனை அண்டிய குறுக்குத் தெருக் கடைகள் எரியூட்டப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்டன.

அன்றைய மிகப்பெரும் தமிழ் தொழில் அதிபர்களாக அறியப்பட்ட குணரத்தினம் மகாராஜா நிறுவனமும், ஞானம் முதலாளி என்று அறியப்பட்ட A.Y.S.ஞானம் போன்றாரின் நிறுவனங்கள் இலக்கு வைத்து அழிக்கப்பட்டன. பல கோடி ரூபாய் நட்டத்தை அடைந்தார்கள். அன்றைய மதிப்பின்படி 800 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்தார்கள். அவர்களின் நிறுவனங்களின் கீழ் பணிபுரிந்த ஒன்றரை லட்ச ஊழியர்கள் வேலையிழந்தார்கள். வேலை இழந்தவர்களில் பெரும்பாலானோர் சிங்களவர்கள்.

இலங்கையில் பல நூற்றுக்கணக்கான தடவைகள் தமிழர்கள் கூட்டுப் படுகொலைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட அரச பயங்கரவாதப் படுகொலைகள். அவற்றைத் தவிர பல தடவைகள் சிவில் மக்களால் முன்னெடுக்கப்பட்டு சிவில் மக்களே சக சிவிலியன்களை இனத்துவ ரீதியில் கொன்றொழித்த சம்பவங்களை இன வன்செயல்களாகக் கொள்ளப்படுகிறது. அத்தகைய சந்தர்ப்பங்களில் அரசின் ஆதரவும், அனுசரணையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிடைத்த போது அவை நாட்டின் பல பகுதிகளிலும் பரவி, தமிழ் மக்களை அநாதரவு நிலைக்கும், அகதி நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சிவிலியன்கள் சம்பந்தப்பட்ட அப்படிப்பட்ட முக்கிய வன்செயல்களை அட்டவணையில் காணலாம். 1983குப் பின்னர் ஆங்காங்கு சிறிய சிறிய சிவில் கலவரங்கள் நிகழ்ந்தபோதும் பெரிய அளவில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் அத்தனையையும் அரச படைகளே புரிந்திருக்கின்றன.

1983 கலவரத்தில் 3000க்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பல்லாயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் காயத்துக்கு உள்ளானார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களை இழந்தார்கள். 3 லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். கொழும்பில் மாத்திரம் ஏறத்தாழ 60,000 பேர் அளவில் பொது இடங்களில் அகதிகளாக இரத்மலானை விமான நிலையம், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் தங்கவைக்கபட்டிருந்தார்கள். இவற்றுக்கெல்லாம் எந்த உத்தியோகபூர்வமான கணக்கெடுப்பும் இன்று வரை இல்லை. தோராயமாக பல்வேறு சுயாதீன அமைப்புகள் வெளியிடும் அறிக்கைகளில் இருந்து தான் பலரும் அறிந்துகொள்கிறார்கள்.

இதனை கலவரம்  என்றும், வன்செயல் என்றும், கருப்பு ஜூலை என்றும் பல்வேறு பெயர்களில் அழைகின்ற போதும் “83 இனப்படுகொலை சம்பவங்கள்” என்றும் அழைக்கப்படுவதற்கான காரணம் அந்தப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட விதம் அத்தனை கொடூரமானது என்கிற காரணமும் தான். சாதாரண சிவில் வன்செயலுக்கு அரச அதிகாரத்தின் அனுசரணை கிடைக்கும்போது எப்பேர்பட்ட விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக 83 கலவர விளைவுகள் மெய்ப்பித்தன. அரச அதிகாரம் தமக்கானதல்ல என்கின்ற உண்மை தெட்டத்தெளிவாக உறுதிபடுத்தப்பட்ட சந்தர்ப்பம் அது. அந்த அரச அதிகாரம் தமிழர்களை பாதுகாக்கவில்லை என்பது அதுவே முன்னின்று இந்த அநியாயங்களை நிகழ்த்தியதை நேரடியாக அனுபவித்தார்கள் தமிழ் மக்கள். ஆகவே தமக்கான பாதுகாப்பையும், அதிகாரத்தையும், ஆதரவையும் நாடி தமிழ் மக்களின் தனிநாட்டுக்கான போராட்டம் முதலாவது ஈழப்போராட்டமாக உருவெடுத்தது. சர்வதேச அளவில் அதற்கான ஆதரவும் பெருகியது.

இந்தப் படுகொலைகள் நிகழ்வுக்கு பின்னாலிருந்த முன்கதைகளில் ஜே.ஆருக்கும் தமிழ்த் தரப்புக்குமிடையில் நிகழ்ந்து கொண்டிருந்த பேச்சுவார்த்தைப் பற்றி விரிவாக கூறிய ஆக வேண்டும். அது ஒரு வகை பனிப்போராகவே திரைமறைவில் எரிந்துகொண்டிருந்தது. பரஸ்பரம் ஆத்திரங்களையும், அதிருப்திகளையும் பெருக்கிக் கொண்டிருந்தது. இந்த தொடருக்கு மிகவும் அவசியமானதும் கூட அடுத்த இதழில் அதை விரிவாகப் பாப்போம்.

துரோகங்கள் தொடரும்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates