Headlines News :
முகப்பு » , » பிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன்

பிரதேச செயலகங்களும் தமிழ் மொழியும் - த.மனோகரன்


இலங்கையின் அரசியல் யாப்பின்படி தேசிய மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் கொள்ளப்பட்டுள்ளதுடன், அவை இரண்டும் முழு நாட்டினதும் ஆட்சி மொழியாகவும் ஏற்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் இணைப்பு மொழியாகவுமுள்ளது. இலங்கையில் மொழிகள் தொடர்பான அடிப்படைச் சட்டம் அரசியலமைப்பின் 4ஆம் அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது. அதில் உள்ளடக்கப்பட் டுள்ள ஏற்பாடுகள் 1987ஆம் ஆண்டின் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 16ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினாலும் குறித்த 4ஆவது அத்தியாயத்தில் மொழியுரிமைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மொழியுரிமை என்பது ஒரு அடிப்படை உரிமையென்பது அரசியலமைப்பின் 3ஆம் அத்தியாயத்தின் 12 (2) உறுப்புரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் இனம், மொழி, மதம், சாதி, பால், அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் போன்ற ஏதேனும் ஒரு காரணத்திற்காக எந்தவொரு குடிமகனுக்கும் பார பட்சம் காட்டுதல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அனுபவிக்கக்கூடிய அரசியலமைப்பில் வழங் கப்பட்டுள்ள உரிமையை ஒருவர் தெரிந்து வைத்திருப் பது அவசியமாகும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அல்லது மாகாண சபையின் அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினரொருவர் எந்தவொரு தேசிய மொழியிலும் தனது கடமைகளைப் புரியவும் பணிகளை நிறை வேற்றவும் உரிமையுள்ளவர் என்று அரசியலமைப்பின் 16ஆவது திருத்தத்தின் 20ஆம் உறுப்புரையில் கூறப் பட்டுள்ளது. அதன்படி நாட்டின் எப் பகுதியிலும் ஒரு மக்கள் பிரதிநிதி தமிழிலோ அல்லது சிங்களத்திலோ உரையாற்றவோ தனது கடமைகளை நிறைவேற்றவோ முடியும். இதுவும் கவனத்தில் உரியபடி புரிந்துகொள் ளப்படாததாயுள்ள புரிந்து கொள்ளப்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகளுக்குள்ள உரிமையாகும்.

சிங்களமும், தமிழும் நாடு முழுவதற்குமான ஆட்சி மொழியாக இருக்கும் அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி யாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களினது முதன்மை நிர்வாக மொழியாக சிங்களமும் இருப்பதுடன், நாற்பத்தொரு (4) பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக இதுவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை பற்றிய விபரங்களை ஏற்கனவே வீரகேசரியின் இதே பந்தியில் குறிப்பிட்டிருந்தேன். இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகள் என்பது தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளுக்கும் சம பயன்பாட்டுரிமை கொண்டவையாகும்.

தமிழ் மொழியை முதன்மை நிர்வாக உரிமை கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகள் எவை என்ப தையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதன்படி வட மாகாணத்திலுள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளும், கிழக்கு மாகாணத்தில் முப்பது பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்டவையாகவுள்ளன. அதனடிப் படையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் ஊர்காவற் றுறை, காரைநகர், வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென் மேற்கு வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு (உடுவில்) வலிகாமம் கிழக்கு (கோப்பாய்), வடம ராட்சி தென்மேற்கு (கரவெட்டி), வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி), வடமராட்சி வடக்கு (பருத்தித்துறை), தென்மராட்சி (சாவகச்சேரி), நல்லூர், யாழ்ப்பாணம், வேலணை, நெடுந்தீவு ஆகிய பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் மன்னார் மாவட்டத்தின் மன்னார் பட்டினம், மாந்தை மேற்கு, மடு, நானாட்டான், முசலி ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக உரிமை கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும்.

அதேபோல், வவுனியா, மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெங்கலச் செட்டிக்குளம் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று. ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு மாந்தை கிழக்கு துணுக்காய் ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டா வளை, கராச்சி ஆகிய நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட் டத்தின் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளான கோறளைப்பற்று (வாகரை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு (ஒட்டமாவடி), கோறளைப் பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்பற்று, ஏறாவூர் நகரம், மண்முனை வடக்கு, மண்முனை மேற்கு, மண்முனைப்பற்று (ஆரையம்பதி), மண்முனை தென்மேற்கு போரதீவு பற்று. மண்முனை தெற்கு, எருவில்பற்று ஆகிய பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளும் திருகோ ணமலை மாவட்டத்தின் வெருகல் (ஈச்சிலம் பற்று). மூதூர் குச்சவெளி, கிண்ணியா ஆகிய நான்கும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலக பிரிவுகளாகும்.

அவற்றுடன் அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளி, சம்மாந்துறை, கல்முனை வடக்கு (தமிழ்), கல்முனை, சாய்ந்த மருது, காரைதீவு, நிந்தவூர், அட் டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில், பொத்துவில் ஆகிய பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழ் மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட பிரதேச செயலகப் பிரிவுகளாகும். அதேவேளை, வட மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு மற்றும் முல்லைத் தீவு மாவட்டத்தின் வெலிஓயா (மணலாறு) ஆகிய வற்றுடன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல, பதவிஸ்ரீபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுடன் அம்பாறை மாவட் டத்தின் லகுகல, தமண, அம்பாறை, உகண மகாஒயா, பதியதலாவ, தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச செய லகப் பிரிவுகள் சிங்கள மக்களைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சிங்கள மொழியை முதன்மை நிர்வாக மொழியாகக் கொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, அரசகரும மொழிகள் ஆணைக்குழுவால் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, தமண லகுகல. மகாஒயா, பதியத்தலாவை ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தின் திருகோண மலை பட்டினமும் சூழலும், கோமரங்கட வல, கந்தளாய், மொறவெவ, பதவிஸ்ரீபுர, சேருவில, தம்பலகாமம் ஆகிய ஏழு பிரதேச செயலகப் பிரிவுகளும் தமிழும் சிங்களமும் சமவுரிமையுள்ள இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக சிபாரிசு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏற்கனவே இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட நாற்பத்தொரு பிரதேச செய லகப் பிரிவுகளுடன் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்த இனங்காணப்பட்டுள்ள பதின்மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளுடன் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ, கம்பஹா மாவட் டத்தின் வத்தளை, நீர் கொழும்பு, கண்டி மாவட்டத்தின் தொழுவை, மெததும்பற, பாத்ததும் பற, உடுநுவரை, மாவட்டத்தின் அம்பன் கங்கை கோறளை, உக்குவளை, இறத்தோட்டை ஆகியனவும் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்த இனங்காணப்பட்டுள்ளன. அவற்றுடன் மாத்தறை மாவட் டத்தின் கொடபொல, குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி கிழக்கு, இரத்தின புரி, மாவட்டத்தின் கஹவத்த, கொடக்காவெல, கேகாலை மாவட்டத்தின் தெரணிய கலை, எட்டியந்தோட்டை ஆகியவற்றுடன் அநுராதபுர மாவட்டத்தின் ஹொரவப் பொத்தானை, கஹட்டகஸ்திகிலிய ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுமாக மொத்தம் பதினெட்டு பிரதேச செயலகப் பிரிவுகள் தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் சம நிர்வாக உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட இனங்காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில், நாட்டில் எழுபத்தி யிரண்டு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக செயற்பட இனங்காணப்பட்டு, அவற்றில் இதுவரை நாற்பத்தொன்று அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும், முப்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட வேண்டியவையாயுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளதுடன், அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொது நிர்வாக அமைச்சை சார்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates