Headlines News :
முகப்பு » , , , , » சுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன்

சுயம்புலிங்கத்தை கண்டெடுத்த மைக் வில்சன் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 26

மைக் வில்சன்: இலங்கையின் முதலாவது வர்ணத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கியவர். ஆழ்கடல் ஆய்வுகள் செய்து பல உண்மைகளையும் புதையல்களையும் கொண்டுவந்தவர். திருக்கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து போர்த்துகேயரால் தூக்கி எறியப்பட்ட சுயம்பு லிங்கத்தை மீட்டுக் கொண்டுவந்து அங்கு சேர்த்தவர்.

அவர் 18.02.1934ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். ஆர்தர் சீ கிளார்க்கின் ஊரைச் சேர்ந்தவர். ஆழ்கடல் நீச்சலில் அலாதியான ஆர்வமிக்கவர் வில்சன். சிறுவயதிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆழ்கடல் நீச்சலில் இருவரும் சேர்ந்து ஈடுபடுபவர்கள். இலங்கைக்கு இருவரும் கப்பல் ஏறி வந்ததே இந்த ஆழ்கடல் நீச்சலுக்காகத் தான். பின்னர் இருவருமே இலங்கையை தமது நிரந்தர வாழ்விடமாக ஆக்கிக்கொண்டனர்.

சிறந்த புகைப்படப்பிடிப்பாளரான வில்சன் Time, Playboy போன்ற சர்வதேச ஊடகங்களுக்கு புகைப்படக் கலைஞராக இலங்கையிலிருந்து பணியாற்றினார்.
மைக் வில்சன் ஆதர் சீ கிளார்க்குடன் ஆழ்கடல் ஆய்வுக்கு தயார் நிலையில்

லீஸ் பெரேரா எனும் பெண்ணை திருமணம் முடித்து; அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும் தத்தெடுத்த இரு ஆண் பிள்ளைகளுமாக நான்கு பிள்ளைகள். 

1956 இல் மைக் வில்சன் திருகோணமலை கோவிலுக்கு அருகாமையில் தனது நண்பர்களுடன் ஆழ்கடல் நீச்சல் செய்துகொண்டிருந்த போது அங்கு பல ஆண்டுகளுக்கு முன் மூழ்கியிருந்த கப்பலின் சிதைவுண்ட பாகங்களைக் கண்டிருக்கிறார். அங்கு தங்கியிருந்த போது ஒரு முதிய இந்துமத சுவாமி ஒருவர் வில்சனிடம்; இங்கு முன்னர் பெரிய இந்துக் கோவில் இருந்ததாகவும் போர்த்துகேயர் ஆக்கிரமித்தபோது முழுமையாக அழித்து கடலுக்கு இறையாக்கிவிட்டதாகவும் குறைந்த பட்சம் அமிழ்ந்து போன சிவலிங்கத்தை தேடித்தர தங்களால் தான் முடியும் எனக்காக செய்வீர்களா என்று வேண்டியிருக்கிறார்.
கடலில் கண்டெடுத்த சுயம்புலிங்கம்

இப்போது இருப்பதைப் போல ஆழ்கடல் நீச்சலுக்கு அத்தனை பெரிய வசதி இராத அந்த காலத்தில் இந்தக் கோரிக்கையை பயமின்றி  தெம்புடன் ஏற்றுக்கொண்டார் வில்சன். நண்பர் ஆதர் சீ கிளார்க்கும் சேர்ந்து கடலின் ஆழத்துக்கே சென்ற அவர் பல அதிசயங்களைக் கண்டு வியந்தார். சுயம்புலிங்கத்தையும் அவர் கண்டெடுத்தார். அது இன்று திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வணங்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் 69 சுயம்புலிங்கங்கள் இருப்பதாகவும் இமயமலையிலிருந்து இராவணன் கொண்டுவந்த சுயம்புலிங்கமே இது என்கிற ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இந்த விபரங்களை பற்றி ஆதர் சீ கிளார்க் 1957இல் எழுதிய “The Reefs of Taprobane” (இலங்கையின் ஆழ்கடல்) என்கிற நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது. இந்த ஆய்வுகளை மேலும் விஸ்தரிக்கும் போது புதையல்கள் கிடைக்கும்பட்சத்தில் சூழ மீன் பிடிப்பவர்கள் கண்டுகொண்டால் அது ஆய்வுக்கும், ஆய்வுக் குழுவுக்கும் பெரும் அச்சுறுத்தல் எற்படலாம். எனவே அதற்கென்று தனியான படகு வாங்குவதற்கு திட்டமிட்டபோதும், அவர்களிடம் போதிய பணம் இருக்கவில்லை.

எனவே ஒரு திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இந்த ஆய்வை மேற்கொள்ளலாம் என்று ஆர்தர் சீ கிளார்க் ஒரு யோசனையை முன்வைத்தார். அதன் விளைவு தான் “ரன் முது துவ” என்கிற பெயரில் 1960 இல் ஒரு சிங்கள மொழி திரைப்படத்தை உருவாக்கினர். ஆதர் சீ கிளார்க்கும்  மற்றும் சேஷா பலியக்கார என்கிற சிங்கள தயாரிப்பாளரும் அதனை தயாரிக்க அவரின் நண்பர் மைக் வில்சன் இயக்கினார். காமினி பொன்சேகா, ஜோ அபேவிக்கிரம போன்ற பிரபல நடிகர்கள் நடித்த மிகவும் பிரபலமான ஒரு திரைப்படம். அதுமட்டுமன்றி சிங்கள சினிமாவின் முக்கிய திருப்பம் அது. இலங்கையின் முதலாவது வர்ண திரைப்படமும் அது தான். படத்தில் வரும் காமினி பொன்சேகாவும் ரொபினும் செய்த சண்டைக் காட்சியை வில்சன் ஒளிப்பதிவு செய்துகொண்டிருக்கும் போது Tripod இலிருந்து கமராவை கையில் வைத்துக் கொண்டு அவர்களை விடாமல் சண்டையிடும் படி கூறிவிட்டு கைகளில் வைத்துக் கொண்டே இங்கும் அங்குமாக நகர்ந்து படமாக்கியதாகக் கூறுவார்கள்.


திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வருமானமும் அவர்களுக்கு கிடைத்தது. ஒரு நல்ல படகை வாங்கி அந்த படகுக்கு “ரன்முதுதுவ” என்கிற பெயரையும் சூட்டினார்கள். திட்டமிட்டபடி அவர்கள் இம்முறை தமது ஆழ்கடல்ஆய்வை தெற்கு கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மகா இராவணன் கோட்டை என்று அழைக்கப்படும் ஆழ் கடலில் தமது ஆய்வை 1961இல் தொடர்ந்தனர். “மகா இராவணன் கலங்கரை விளக்கம்” 1867 இல் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. அங்கேயே அவர்கள் 1961ஆம் ஆண்டு 12-21தங்கியிருந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். மேலும் பல உண்மைகளை அறிந்தனர். 17.03.1961 அன்று ஆயிரக்கணக்கான வெள்ளிக் காசுகள், பழங்காலத்து பீரங்கி உள்ளிட்ட பல பொருட்களை கண்டெடுத்தனர். 1703 இல் மொகலாய சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தமான ஒரு தொகை வெள்ளி நாணயங்கள் கிடைத்தன. அது குறித்த விபரங்களை ஏற்கெனவே ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்பில் (historical relation of the Island Ceylon) இருப்பதாகவும் கிளார்க் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.


தாம் சேகரித்த அத்தனையையும் கொழும்பு கடல்வள மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்கு உட்படுத்தினார்கள்.

மைக் வில்சன் ஏற்கெனவே 1958இல்  “Beneath the Seas of Ceylon” (இலங்கைக் கடலடியில்) என்கிற ஒரு 25 நிமிட விவரணத் திரைப்படத்தை உருவாக்கியிருந்தார். பல வருடங்களாக இலங்கை தேயிலைச் சபை இந்த ஆவணப்படத்தை தமது விளம்பரத்துக்காகப் பயன்படுத்திவந்தது.


இந்த ஆய்வைத் தொடர்ந்து அடுத்ததடுத்த நாட்களில் ஆதர் சீ கிளார்க் போலியோ நோய்க்கு இலக்காகி சக்கர நாற்காலியின் துணையிலேயே வாழ் நாள் முழுதும்  கழித்தார். தமது ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவற்றைப் பற்றி “The Treasure of the Great Reef” (மாபெரும் ஆழ்கடல் புதையல்) என்கிற பெயரில் இன்னொரு நூலையும் 1964 இல் எழுதி அதை ஒரு விவரணத் திரைப்படமாகவும் கிளார்க் உருவாக்கினார். அந்த நூலில் பல புகைப்படங்களுடன் பல தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.

ரன்முதுதுவ திரைப்படத்தை தயாரிக்க நான்கு லட்ச ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் வர்த்தக ரீதியிலான வெற்றியை 1979ஆம் ஆண்டுவரை எந்தத் திரைப்படமும் முறியடிக்கவில்லை.

இந்தத் திரைப்படத்தின் மூலம் தான் இலங்கை போற்றும் விஷாரத பண்டித் அமரதேவ முதற் தடவையாக இசை அமைப்பாளராக அறிமுகமானார். நந்தா மாலினி பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இருவரும் முதல் படத்திலேயே விருதுகளையும் பெற்றனர். திரைப்படத்தை எடிட் செய்தவர் பலரும் அறிந்த டைட்டஸ் தொட்டவத்த. மெய்க் வில்சனின் நெருங்கிய நண்பரான அவர் வில்சனின் வீட்டிலேயே எடிட் செய்யும் கருவிகளைக் கொண்ட அறையில் தான் அதிக காலம் அந்த நாட்களில் செலவிட்டவர்.

1964ஆம் ஆண்டு தான் இலங்கையில் சரசவி விருதுவிழா அரச பத்திரிகை நிறுவனமான லேக்ஹவுஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அந்த முதலாவது வருடம் அதிக விருதுகளை வென்றெடுத்தது ரன்முதுதுவ திரைப்படம் தான்.

பிற்காலத்தில் பணத் தட்டுப்பாட்டின் காரணமாக மைக் வில்சன் “ரன்முதுதுவ” திரைப்படத்தின் உரிமையை பிரபல திரைப்படத்துறை வர்த்தகரான விஜய ராமனாயக்கவுக்கு 1988ஆம் ஆண்டு 5 லட்சம் ரூபாவுக்கு விற்றார். அது முறைகேடான வழியில் ஏமாற்றி கொள்ளையடிக்கப்பட்டது என்று இரு வருடங்களுக்கு முன்னர் மைக் வில்சனின் புதல்வி “சரசவிய” பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார் என்பது இன்னொரு கதை.

மைக் வில்சன் மனைவி லீஸ் பெரேராவுடன்
ரன்முதுதுவ தந்த வெற்றியினால் மைக் வில்சன் திரைப்படத்துறையில் மேலும் தொடர்ந்து சாதிக்க விரும்பினார். 1963 இல் “கெட்டவறயோ” (இளையோர்) என்கிற திரைப்படத்தை இயக்கி சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றார் வில்சன், 1967இல் “ஹொருன்கேத் ஹொரு” (கள்வரில் கள்வர்) என்கிற திரைப்படத்தையும் இயக்கினார். இந்தத் திரைப்படங்களில் தனது மனைவி லீஸ் பெரேராவையும் நடிக்கச் செய்தார். 1954 இல் வெளியான “Elephant Walk” எனும் ஹொலிவூட் திரைப்படம் இலங்கையில் படப்பிடிப்பு நடந்தவேளை அதில் நடித்த எலிசபத் டெய்லருக்கு டூப்பாக பல இடங்களில் நடித்தவர் லீஸ் பெரேரா.

“ஹொருன்கேத் ஹொரு” திரைப்படம் “ஜேம்ஸ் பாண்ட்” பாணியிலான கதை. ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் “ஜேம்ஸ் பண்டா” என்கிற பெயரில் நடித்தவர் காமினி பொன்சேகா. 68ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான சரசவிய விருதும் காமினி பொன்சேகாவுக்கு கிடைத்தது. லீஸ் வில்சனும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சத்யஜித்ரேயிடம் இருந்து மைக் வில்சன் களவெடுத்து ஸ்டீவன் ஸ்பீல்பேர்க்கிடம் கொடுத்த கதை தான் உலகப் புகழ்பெற்ற “ET” திரைப்படமாக ஆனது என்று என்கிற ஒரு பிரபல கதை உண்டு. சத்யஜித்ரே பிற்காலத்தில் ஆர்தர் சீ கிளார்க்கிடம் நொந்துகொண்டதாகவும் கதைகள் உள்ளன. இணையத்தளத்தில் தேடினால் இது பற்றிய பல கட்டுரைகள் கிடைக்கின்றன.

1974இல் 40 வயதில் அனைத்தையும் வெறுத்து தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு முழுமையாக இந்துமதத்தைத் தழுவிய வில்சன் தன்னை சுவாமி சிவா கல்கி என அழைத்துக் கொண்டார். தான் இங்கு இதற்காகத்தான் வரழைக்கப்பட்டிருகிறேன் என்பதை காலம் கடந்தே உணர்ந்தேன் என்றார். செல்ல கதிர்காமத்தில் ஒரு கற்குகை ஒன்றினுள் தியானம் செய்தபடி ஒரு துறவியாக இறுதிவரை  வாழ்ந்து அங்கேயே மரணமானார்.

இலங்கையின் ஆழ்கடல் ஆய்வுகளிலும் இலங்கையின் சினிமாத் துறைக்கும் பெரும் பணியாற்றிய வில்சன்  27.02.1995இல் சிவராத்திரியன்று தனது 61வது வயதில் புற்று நோயால் பீடித்து கொழும்பு ஆஸ்பத்திரியில் மரணமானார். 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates