Headlines News :
முகப்பு » » தேயிலை ‍‍‍‍தோட்டங்களில் கிளைபோசெட் பயன்பாடும், எழுந்துள்ள பிரச்சினைகளும் - செழியன் நல்லதம்பி

தேயிலை ‍‍‍‍தோட்டங்களில் கிளைபோசெட் பயன்பாடும், எழுந்துள்ள பிரச்சினைகளும் - செழியன் நல்லதம்பி


இலங்கையில் பாரம்பரிய விவசாயச் செய்கை ஒருபுறமும், மறுபுறத்தில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்படுகிறது. எவ்வாறெனினும் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையே இலங்கைப் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் முறைமையாகக் காணப்படுகின்றது.

ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைகளான தேயிலை மற்றும் ரப்பர் என்பன இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இரு பெருந்துறைகளாக கடந்த காலத்தில் இருந்து வந்துள்ளன. தற்போதும் கூட அது தொடர்கிறது.

ஆனால் தற்போது தேயிலைத் தொழில் துறையில் எழுந்துள்ள நிலைமை, அத்துறையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றே கூற வேண்டும். தேயிலைத்துறை பாதகமான நிலையை எதிர்கொண்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் ஒன்றுதான் தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயனங்கள். தேயிலைச் செடிகளுக்கு இடையில் வளரும் புற்களை (களைகள்) அகற்றுவதற்கு அல்லது அழிப்பதற்கு பயன்படுத்தப்படும் களைநாசினிகளும் தேயிலையின் பாதிப்புக்கு முக்கிய இடத்தினை வகிக்கின்றது.

தேயிலைத் தோட்டங்களில் வளரும் புற்களை ஒழிப்பதற்கு பயன்படுத்தப்படும் ‘கிளைபோசெட் (Glyfocide) பிரதான இடத்தைப் பெறுகின்றது.

கிளைபோசெட் பயன்படுத்தப்படுவதால் தேயிலையுடன் அதன் செய்கையும் பாதிப்படைகின்றனவா,? அதன் காரணமாக மனிதர்கள் அல்லது உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நோய்கள் ஏற்படுகின்றனவா ? குறிப்பாக சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், மற்றும் புற்றுநோய் ஏற்படுகின்றனவா? இது போன்ற பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் மூலோபாய தொழில் முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தினூடாக அமுல்படுத்தப்படும் ‘நச்சுத் தன்மையற்ற நாடு’ தேசிய திட்டத்திற்கமைய மேற்கொள்ளப்பட்ட கிளைபோசெட் தடையால் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகளை முன்மொழிவதற்கான புத்திஜீவிகள் பங்குபற்றிய கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடல் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஓர்க்கிட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான வண. அத்து ரலிய ரத்தன தேரர் எம்.பி., சுகாதாரம் போஷாக்குத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் புத்திஜீவிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதில் பலரும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தந்திரோபாய முயற்சியாண்மை முகாமைத்துவ நிறுவனத் தலைவர் அசோக அபேகுணவர்தன அங்கு உரையாற்றியபோது, தேயிலைத் தோட்டங்களில் மீள் நடுகை கட்டாயமானது. அதிலும் விசேடமாக கிளை மூலம் (தண்டு மூலம்) உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைச் செடிகளின் மீள் நடுகை முக்கியமானது. அவ்வாறு மீள் நடுகை செய்யும்போது அங்கு கிளைபோசெட் பயன்படுத்துதல் அவசியமில்லை. கிளைகள் மூலம் தேயிலை பயிரிடப்பட்டுள்ள தோட்டங்களில் மீள் நடுகை செய்யப்படாவிட்டால் அது தவறானதாகும்.

அவ்வாறு முறையின்றி செயற்படும் தோட்டங்களை அரசு பொறுப்பேற்று பொருத்தமான நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் தேயிலைப் பயிர்ச்செய்கை அழிவடைந்து பெரும் சுற்றாடல் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

தேயிலைக் கொழுந்தை கைகளால் பறிப்பதுபோன்று களைகளையும் கைகளால் பிடுங்குவதற்கு குறைந்தளவிலான மனித உழைப்பே தேவையாகும். களைநாசினிகளை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பயன்களைப் பெற முடியும். இதற்கு எடுத்துக் காட்டாக நச்சுத் தன்மையற்ற நெற்பயிர்ச் செய்கையைக் கூறமுடியும்.

கிளைபோசெட் தடையினால் ஏனைய பயிர்களை விடவும் தேயிலைப் பயிருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் அதிகமென்று காட்டுவதற்கு ஆதாரமற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனைய பயிர்களுக்கு பொறிமுறை பயன்பாட்டின் மூலம் கிளைபோசெட் தடையின் தாக்கத்தை இல்லாமல் செய்வதாகக் கூறப்பட்டாலும் அது சரியானதல்ல. ஏனைய பயிர்ச் செய்கையின் போது களை கட்டுப்பாட்டுக்கான பொறிகள் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.

அதன் காரணமாக தேயிலைப் பயிருக்கு தீர்க்க முடியாத பிரச்சினை இருப்பதாகக் காட்டுவதற்கு குழு எடுத்துள்ள முயற்சி தோல்வியடைந்துள்ளது.

தேயிலைப் பயிர் பல்லாண்டுப் பயிர் என்பதால் ஏனைய பயிர்களை விடவும் களைகளுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது என்பதனால் அந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

              இதில் கலந்து கொண்டு பேசிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, கிளைபோசெட் பாவனைக்கும் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோய்க்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதாக இதுவரை விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதனால் கிளைபோசெட்டை தடை செய்வது பொருத்தமற்றது என்பது எனது கருத்தாகும் என்றார். 

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்;

கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. எனினும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞான முறைமைகளுக்குப் புறம்பானதாகும். இந்த அறிக்கையின் மூலம் கிளைபோசெட் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய 2 A பகுதிக்குரியது என சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகவரகத்தினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சிறுநீரக நோய்க்கு காரணமாக இக்கக்கூடியது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான விளக்கம் திருப்திகரமாக உள்ளதா? அவ்வாறு கிளைபோசெட் பாவனை உகந்தது இல்லையென்றால் அதற்கு ஏதாவது மாற்று வழிமுறைகள் இருக்கின்றனவா?

நாம் உண்ணும் உணவுகளில் கிளைபோசெட் நிறையவே இருக்கிறது. அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தேயிலைப் பயிர்ச்செய்கையில் மிகக் குறைந்த அளவிலேயே இது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்று வழி ஒன்றைக் காண்பது வரையிலாவது கிளைபோசெட் பயன்பாட்டில் இருப்பது சிறந்தது என்று நினைக்கிறேன்.

மனித உழைப்பின் மூலம் அதாவது கைகளினால் களை பறிக்க வேண்டுமானால் அதற்கு பெருமளவில் செலவு செய்ய வேண்டியுள்ளதாக குழு குறிப்பிட்டுள்ளது.

இப்போது யார் கைகளினால் களை பிடுங்குகின்றனர்?. எதிர்காலத்தில் தேயிலை பயிர்ச் செய்கைக்கு ஆட்கள் இல்லை. எல்லோரும் கொழும்பில் சுகபோக வாழ்க்கைக்குத் தயாராகி வருவதால் தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் இல்லை. இந்த நிலையில் தேயிலைச் செய்கைக்கு குறைந்தளவிலேயே கிளைபோசெட் பயன்படுத்தப்படுகிறது.

வியாபாரம் என்பது இலாப நோக்கைக்கொண்டதாகும். இலாபம் இல்லையெனில் கம்பனிகள் நட்டமடையும். ஒவ்வொரு கம்பனியின் கீழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இருப்பதால் அவர்களின் நிலை என்னவாகும்? ஆகையால் நடைமுறைக்குச் சாத்தியமானதா? என்பதை கவனத்திற் கொள்ளுங்கள். இதனை 24 மணித்தியாலங்களில் நிறுத்திவிட முடியாது. அதேவேளை, அத்துரலிய தேரரின் கருத்துக்கும் ஜனாதிபதியின் நச்சுத்தன்மையற்ற வேலைத் திட்டத்துக்கும் தலை வணங்குகின்றேன் என்றார்.

அங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன,

கிளைபோசெட் மிகக் கொடுமையான களைநாசினியாகும். அது நஞ்சு என்று தெரிந்து கொண்டும் அதனை ஏன் பயன்படுத்த வேண்டும்? இது சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது என்றால் எதற்காக கொண்டு வர வேண்டும். ஏன் தடை செய்ய வேண்டும்? மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு களை நாசினிக்கும் தடை விதிப்பது அவசியமாகும்.

நஞ்சு என்றும் மனித உடலுக்கு தீங்கானது என்றும் ஆரய்ச்சியாளர், புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனை ஏன் ஊக்குவிக்க வேண்டும்? கிளைபோசெட் சிறந்தது என்றால் வியாபாரம் செய்ய அனுமதியுங்கள். கள்ள வழிகளில் ஏன் கொண்டு வருகின்றீர்கள், அல்லது பயன்படுத்துகின்றீர்கள்?

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோய்க்குக் காரணமாக இருக்கக்கூடிய பல காரணிகள் பற்றி விஞ்ஞானிகளால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் கிளைபோசெட்டும் அடங்குகிறது. அந்தக்காரணிகளால சிறுநீரக நோய் ஏற்படுமானால் அந்தக் காரணி உறுதிப்படுத்தப்படும்வரை அந்த அனைத்து காரணிகளையும் தவிர்க்குமாறு உலக சுகாதார அமைப்பு விதந்துரை செய்துள்ளது. அதற்கமைய விஞ்ஞான ஒழுக்க நெறிக்கமைய இலங்கையில் வேகமாகப் பரவிவரும் சிறுநீரக நோயைத் தடுப்பதற்கு கிளைபோசெட் பயன்பாட்டை நிறுத்துவது கட்டாயமாகும். இது என் கருத்தாகும் என்றார்.

வண. அத்துரலிய ரத்ன தேரர் கருத்துத் தெரிவிக்கையில்;

எல்லோரும் இங்கு கருத்து தெரிவிக்கின்றனர். அது அவரரவரின் சுதந்திரமாகும். கிளைபோசெட் பாவனை பற்றி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. நீங்களும்கூட ஆராய்ந்து பார்க்கலாம். இது ஆளைக் கொல்லும் பெரிய விஷமாகும். களை நாசினியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசெட் கழுவிக் கொண்டு வந்து எமது மண்ணையும் நீரையும் அசுத்தப்படுத்துகிறது. உங்கள் வீட்டில் எவருக்கும் சிறுநீரக நோய் வந்தால் அல்லது புற்றுநோய் வந்தால் இதனை நீங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வீர்கள்? அது போன்று சிந்தியுங்கள்.

கிளைபோசெட் பாவனை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதல்ல வாதம். இதனால் ஏற்படும் பாதகமான நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். களை ஒழிப்புக்கு நிறைய வழிமுறைகள் இருக்கின்றன. நாம் ஆராய்ச்சி செய்வோம். நம்மிடம் எல்லா வளங்களும் இருக்கின்றன. ஆகையால் நல்ல முடிவினை தேடுவோம் என்றார்.

ஒரு இரசாயனம் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுத்துமா? ஏற்படுத்தாதா? என்று உறுதிப்படுத்தப்படும்வரை அதனை பயன்படுத்தாதிருப்பதே சிறந்தது. கிளைபோசெட் மனிதனுக்குதீங்கு விளைவிக்கும் என்று உலக முழுதும் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாதிப்புகளை ஏற்படுத்தும் களை நாசினிகளைக் கண்டுபிடித்து காலத்துக்குக் காலம் தடை செய்து வந்ததன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைவடைந்துள்ளன.

தேயிலைத் தோட்டங்களில் களைக் கட்டுப்பாட்டுக்காக முன்னர் கிரமக்ஸோன் களைநாசினி பயன்படுத்தப்பட்டு வந்தபோதும் பின்னர் அரசாங்கத்தினால் அது தடை செய்யப்பட்டது. அதன் பின்னரே கிளைபோசெட் பயன்படுத்தல் ஆரம்பமானது. எனினும் உலக நாடுகள் பலவற்றில் இந்த கிளைபோசெட் களை நாசினி தடை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலைத் தோட்டங்களில் தேயிலைச் செடிகள் அழிவடைந்து போயுள்ள இடங்களில் பியுலோரியா சித்ரநெல்லா புல், சூரியகாந்தி, வல்லாரை, இலாமிச்சை, உந்து பியலிய போன்ற கொடித்தாவரங்களை வளர்க்க முடியும். அதன் மூலம் களைகளை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும். மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் வளமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

அந்த வகையில் தேயிலைச் செய்கையைப் பாதுகாப்பதுடன் அதேவேளை, தீங்குகள் ஏற்டாத வகையில் பாதுகாப்பதும் எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates