Headlines News :

காணொளி

சுவடி

அவசரகால சட்டத்தின் கீழ் ஆட்சிசெய்யப்பட தமிழர்கள்! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 25 

"இந்த அவசரகாலச் சட்டத்தின் மூலம் நாம் பிரிய வேண்டிய சந்தியை வந்தடைந்திருக்கிறோமோ?"

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு இப்படி முன்னர் சொன்னவர் தாசி வித்தாச்சி. 58’ கலவரத்தைப் பற்றி அவர் எழுதிய “அவசரகாலம் 58” (Emergency 58) என்கிற நூலிலேயே அவர் அப்படி குறிப்பிட்டார். இலங்கையில் இராணுவச் சட்டம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து அவசர நிலைமைகளின் போது போடப்பட்டிருகிறது. அதுபோல அவ்வப்போது நிகழும் கலவரங்களின் போது ஊரடங்குச் சட்டம் கூட ஓரிரு நாட்கள் பிறப்பிக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. வடக்கில் பல காலம் தமிழ் மக்கள் ஊரடங்குச் சட்டம் குறிப்பிட்ட நேரத்துக்கு தினசரி நீண்டகாலமாக அனுபவித்து வந்த கொடுமையும் கூட நிகழ்ந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை நசுக்கவும், ஒடுக்குமுறையை பிரயோகிக்கவும் கூட அவசரகால சட்டத்தை ஒரு சம்பிரதாயமாகவே நிறைவேற்றி வந்திருக்கிறார்கள். இந்த அவசரகால சட்டங்கள் அப்பாவி மக்களை பாதுகாப்பதற்குப் பதிலாக பல சந்தர்ப்பங்களில் அந்த அட்டூழியங்களில் ஈடுபட்ட படையினரையும், காடையினரையுமே பாதுகாத்திருக்கிறது என்பது பல தடவைகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. அவசரகால சட்டமானது அரச பயங்கரவாதத்துக்கு கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி அவர்களின் மனித உரிமை மீறல்களுக்கு லைசன்சை வழங்கியது.

வரலாற்றில் 77 ஜே.ஆர்.அரசாங்கம் பதவியேற்ற காலத்திலிருந்து தான் 1978இல் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டமும் (PTA), அவசரகால சட்டமும் (Emergency regulation) மிகக் கொடூரமாக தமிழ் மக்களை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது. மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக எதிர்க்கட்சிகளால் “எங்களை ஆட்சியிலேற்றினால் அவசரகால சட்டத்தை நீக்குவோம்” என்கிற வாசகம் ஒரு சடங்காகவே விஞ்ஞாபனங்களில் இடம்பெற்றதையும் நாம் அறிவோம்.


குட்டிமணியின் தீர்க்கதரிசனம்
83இல் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்ட குட்டிமணியும், தங்கத்துரையும் கைது செய்யப்பட்டிருந்தபோது குட்டிமணி நீதிமன்றத்தில் இந்த சட்டம் பற்றி ஆற்றிய உரை பிரசித்தமானது.
“நாங்கள் இனவாதிகளல்லர். சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்க வந்தவர்களும் அல்லர். எங்கள் போராட்டத்திற்கு சிங்கள மக்களின் ஆதரவையும் நாடி நிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி நாளை இலங்கையிலுள்ள ஏனையோருக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிறவு வதை முகாம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும். குருநகர் வதைமுகாம் குருநாகலுக்கு மாற்றப்படும். தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக சிங்கள இளைஞர்கள் அதனை அனுபவிப்பார்கள்.”
இந்த அடக்குமுறை சட்டங்களை எதிர்த்து நிற்கும் சிங்கள ஜனநாயக சக்திகள் குட்டிமணியின் இந்த வாசகத்தை பல தடவைகள் நினைவு கூர்ந்திருக்கிறார்கள்.

வடக்கில் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்காகவே அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக பல தடவைகள் கூறப்பட்டபோதும் மாறாக அந்த சட்டம் வடக்குக்கு வெளியில் அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக ரீதியில் நீதி கோரும் சாத்வீக போராட்டங்களைக் கூட அடக்க பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தொழிற்சங்கப் போராட்டங்கள், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போராட்டங்கள், வேறு பல வேலைநிறுத்தப் போராட்டங்கள் என்பவற்றையும் கூட இந்த சட்டத்தின் மூலம் மூர்க்கத்தனமாக அடக்கப்பட்டிருக்கின்றன.

அவசரகால சட்டத்துக்கு வயது 75
இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் வெளியிட்ட முதல் வெளியீடான “அவசரகாலம் 79” (Emergency ‘79) என்கிற நூல் ஜே.ஆர்.அரசாங்கத்தின் இந்த இரு சட்டங்களையும் தோலுரிக்கும் நூல். இந்த சட்டங்களின் பெயரால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த மனித உரிமை மீறல் சம்பவங்களை தொகுத்தளித்தது அந்த நூல். அந்த இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக பலமாக குரல்கொடுத்து வந்த பிரபல இடதுசாரித் தலைவருமான உப்பாலி குரே நூலின் ஆசிரியர்களின் ஒருவர். அவருடன் பாதர் போல் கெஸ்பஸ் மற்றும் பி.ராஜநாயகம் ஆகியோர் அதனை எழுதி முடித்தனர். 

இலங்கையில் முதற் தடவையாக 1942 மார்ச் மாதம் 19அன்று அவசர காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமடைவதற்கு முன்னமே அன்றைய காலனித்துவ அரசாங்கத்தின் ஆளுனரால் பிறப்பிக்கப்பட்டது இது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பான் இலங்கையைச் சுற்றிவளைக்க முயன்று கொண்டிருந்த காரணத்தைக் காட்டி கட்டாய இராணுவச் சேவைக்காகவே இந்த அவசரகால சட்ட நிலை அன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 4ம் திகதி கொழும்பிலும் ஏப்ரல் 9ம் திகதி திருக்கோணமலையிலும் ஜப்பான் குண்டுத் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து இக்கட்டாய இராணுவச் சேவை அதிகம் வலியுறுத்தப்பட்டது.அதன் பின்னர் 1947 யூன் மாதம் நடந்த தொழிலாளர் வேலை நிறுத்தமும் அதனை தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவும் அன்றைய சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கபட்டது.

இவ் அவசரகால சட்டத்தை பயன்படுத்தி தொழிலாளர்களின் போராட்டத்தை அரசாங்கம் நசுக்கிய போது கந்தசாமி எனும் தொழிலாளி கொல்லப்பட்டார். இந்த 1947 ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 25ம் இலக்க பொது மக்கள் பாதுகாப்புச் சட்டமே பிற்காலத்தில் 1972ம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் அமைப்பிலும். 1978ம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசு அமைப்பிலும் சேர்க்கப்பட்டது. இதனை பயன்படுத்தியே 1953ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடந்த ஹர்த்தால் போராட்டமும் அடக்கப்பட்டது. இவ் ஹர்த்தாலின் போது எட்டு நாட்கள் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வைத்திருந்தது. ஹர்த்தாலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் சிறையிடப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர். இத்தனையும் டட்லி அரசாங்கத்தின் போது கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்தின் கீழேயே நடந்தன.

டட்லி சேனநாயக்க ஆட்சி செய்த 1825 நாட்களில் 1086 நாட்கள் அவசரகால சாட்டத்தின் கீழ் தான் ஆட்சி செய்யப்பட்டது. 

58 “அவசரகால” படுகொலைகள்
பண்டாரநாயக்காவின் ஆட்சியின் கீழ், 1958ம் ஆண்டு மே மாதம் இனக்கலவரம் நடந்தது. இவ் இனக்கலவரத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பத்தாயிரத்துக்கும் மேட்பட்ட தமிழர்கள் கொழும்பில் அகதிகளாக்கப்பட்டனர். பல தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இவ் இனக் கலவரத்திற்கு அரசாங்கம் தூண்டுகோலாக இருந்தது. ஆனால் இனக் கலவரத்துக்கு காரணமாக கூறி ஜாதிக விமுக்தி பெரமுனவோடு தமிழரசுக் கட்சியையும் தடை செய்தது.

இனக் கலவரம் 27ம் திகதியே தொடங்கி விட்டிருந்த போதும் தமிழர்கள் பாதிப்புக்குள்ளாகிய மூன்றாவது நாளே அதாவது 29ம் திகதியே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதாவது அவசரகால சட்டம் அவசியமான நேரத்தில் போடப்படவில்லை.

1958 மே 27ம் திகதி போடப்பட்ட அவசரகாலச் சட்டம் 1959 மார்ச் 13வரை அமுலிலிருந்தது. அதன் பின்னர் பண்டாரநாயக்க செப்டெம்பர் 25ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அன்றிலிருந்து டிசெம்பர் 2ம் திகதிவரை அவசரகால நிலை அமுலில் இருந்தது. மீண்டும் 1961 ஏப்ரல் 14ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழரசு தபால் சேவையை நடாத்தியதைத் தொடர்ந்து ஏப்ரல் 17ம் திகதி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியும் அன்றே தடை செய்யப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். வட-கிழக்குப் பகுதி இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 48 மணி நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது. இவ் அவசரகால சட்டம் 1963 மே தினத்தன்று வரை அமுலில் இருந்தது.

டல்லி-செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து நாடளாவிய ரிதியில் கொண்டு செல்லப்பட்ட பிரச்சாரங்கள், ஊர்வலங்கள் காரணமாக 1966 ஜனவரி 8ம் திகதி அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் அது டிசம்பர் 17 வரை அமுலில் இருந்தது. அது நீடிக்கப்பட்டு 11 நாட்களுக்குள் மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு அது 1969ம் ஆண்டு 17ம் திகதி வரை அமுலில் இருந்தது. இக்கால இடைவெளிக்குள் வடக்கு கிழக்குப் பகுதியிலும் மலையகத்திலும் நடந்த தமிழர்களின் போராட்டங்கள் மோசகரமாக அடக்கப்பட அவசரகாலச் சட்டமே துணை புரிந்தது.


சிறிமா ஆட்சி முழுதும்...
1971ம் ஆண்டு ஜே.வி.பி எழுச்சி அடைந்ததைத் தொடர்ந்து பீதியுற்ற அரசாங்கம், மார்ச் மாதம் 16ம் திகதி அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது. இதன் கீழ் அனுமதியின்றி பிணங்களை எரிக்கும் சட்டத்தையும் கொண்டு வந்தது. ஏப்ரல் மாதம் 5ம் திகதி அடக்கப்பட்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை 20,000க்கும் மேற்பட்டோரைக் கொன்று குவித்து அடக்கியது. அதே அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியே பல ஆயிரக்கணக்கானோரை சித்திரவதை முகாம்களுக்கும் சிறைக் கூடங்களுக்கும் அனுப்பியது அன்றைய சிறிமாவோ அரசாங்கம். 72 அரசியலமைப்பு ஆட்சிசெய்த அந்த 5 ஆண்டுகால ஆட்சியும் அவசரகால சட்டத்தின் கீழ் தான் நடந்தது. அந்த யாப்பு சிறுபான்மை இனங்களின் பாதுகாப்புக்காக என்று கண்துடைப்புக்கு சேர்த்திருந்த “அடிப்படை உரிமைகள்” பிரிவு அவசரகால சட்டத்தின் மூலம் செல்லுபடியற்றதாக ஆக்கப்பட்டிருந்ததால் அந்த காலம் முழுவதும் அடக்குமுறைக்குள்ளான தமிழர்கள் நீதி பெற முடியவில்லை. 1976 ட்ரயல் அட் பார் வழக்கின் தீர்ப்பின் இறுதியில் அவசரகாலசட்டமும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட சட்டங்களும் செல்லுபடியற்றவை என்று தீர்ப்பு வழங்கியதையும் இந்த இடத்தில் நினைவுகூர வேண்டும். 

சிறிமா அரசாங்கம் 1974ஆம் ஆண்டு “தவச” நிறுவனத்தின் “சன்”, “தினபதி’, “தவச”, உட்பட பல தினசரி, வார, மாதாந்த நாளிதழ்களை அவசரகால சட்டத்தின் கீழ் தடை செய்தது.

எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 72 அரசியலமைப்பை எதிர்த்து காங்கேசன்துறை தொகுதியில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த வேளை உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாமல் 1975ஆம் ஆண்டு வரை இழுத்தடிக்க அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தியது.

1979ம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதி வரை இவ் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது. இக் கால இடைவெளிக்குள் வடக்கில் நடத்தப்பட்ட போராட்டங்களை நசுக்குவதற்கும் இச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. 1977ம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம் ஆட்சியமைத்தது. 1994 வரையான 17 ஆண்டு கால ஆட்சிக்குள் 11 வருடங்கள் அவசரகாலச் சட்டத்தின் கீழேயே ஆட்சி நடத்தியது. வடக்கில் எழுந்த உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதக் கிளர்ச்சியாகவே பார்த்த ஜே.ஆர் அரசாங்கம் 1979 யூன் 11ம் திகதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியது. இவ் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்துக் கொண்டே யூலை 12ம் திகதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. 1979 டிசம்பர் 27ம் திகதி வரை அவ் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தது.


தமிழரை ஒடுக்க மட்டுமா?
1980ஆம் ஆண்டு யூலையில் சம்பள உயர்வு கோரி ஈடுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக யூலை 16ம் திகதி போடப்பட்ட அவசரகாலநிலை ஓகஸ்ட் 15 வரை நீடித்தது. இதற்கான பிரகடனம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் மூலமே வெளியிடப்பட்டது. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இதே அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 40,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோரை வேலையிலிருந்து நீக்கியது. இத் தொழிலாளர்களில் சிலர் பிற்காலத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தனர். (ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் வேலையை இழந்த இத் தொழிலாளர்களுக்கு வேலை பெற்றுத் தருவதாகவும் தேர்தல் காலத்தில் வாக்களித்திருந்த பொ.ஐ.மு ஆட்சிக்கமர்ந்ததன் பின்னர் ஏமாற்றியது.

இதே காலப்பகுதியில் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்ட தொழிலாளர்களை அடக்குவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி இந்த அவசர காலசட்டத்தைப் பயன்படுத்தினார். அதே லலித் அத்துலத் முதலி பிரேமதாச ஆட்சியின் போது கட்சியிலிருந்து விலகி புது கட்சி தொடங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டபோது அதே அவசர காலசட்டத்தின் மூலம் நைய புடைக்கப்பட்டார்.

அடுத்ததாக 1981ம் ஆண்டு யூன் 2ம் திகதி கொண்டு வரப்பட்ட அவசரகால நிலை ஒரு கிழமைக்கு நீடித்தது. 1981 மே 24ம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்துக்கான மாவட்ட சபைத் தேர்தல் வேட்பாளரான ஐ.தே.க.வைச் சேர்ந்த ஏ.தியாகராஜா இனந்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மீண்டும் அவசரநிலை 1981 ஓகஸ்ட் 17ல் போடப்பட்டு 1982 ஜனவரி 16ம் திகதி வரை அமுலில் இருந்தது. அதேவேளை 1982ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டம் நிரந்தர சமாக்கப்பட்டது.

83இல் இனப்படுகொலையில்
வரலாற்றில் முக்கியமான அவசரகால நிலையாக 1983 மே 18ம் திகதி போடப்பட்டதையே குறிப்பிட வேண்டும். 83 இனப்படுகொலை கூட இதன் கீழ் தான் நடத்தப்பட்டது. “சாதாரண சட்டத்தின் மூலம் அடக்க முடியாத சட்டத்தை இந்த சட்டத்தின் மூலம் தான் அடக்கமுடியும்” என்று கூறிய சிறில் மெதிவ் “அவர்களை விசர் நாய்களைப் போல கொல்லவேண்டும்” என்கிற தொணியில் கர்ஜித்தார்.

இனக் கலவரத்தை திட்டமிட்டு தாமே முன்னின்று நடாத்திய ஜே.ஆர் அரசாங்கம் கலவரத்திற்கு பொறுப்பாளிகள் என்று கூறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி ஆகியவற்றைத் தடை செய்ததுடன் அவற்றின் பத்திரிகைகளையும் கூடவே தடை செய்தது.

அந்த அநீதியான தடையினால் இளைஞர்கள் பலர் தலைமறைவு அரசியலுக்கும் தீவிர அரசியலுக்கும் விரைவாகவே தள்ளப்பட்டார்கள். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆட்சியிலிருந்த ஐ.தே.கவினரும் படையினரும் சேர்ந்து நடாத்திய இனப்படுகொலைகள் சாதாரணமானவையல்ல. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டனர். சொத்துக்கள் அழிக்கப்பட்டன. பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் எத்தனையோ நடந்தேறின. வெலிக்கடைப் படுகொலைகள் நடைபெற்றது. பலர் அகதிகளாயினர். இச்சம்பவம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை பெருமளவு ஊக்குவித்தது. 1983 மே 18ம் திகதி நிறைவேற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு அமைச்சர் தொண்டமானும் ஆதரவாக வாக்களித்திருந்தார். மலையக மக்களை ஒடுக்குவதற்கு அவரது ஆதரவு பயன்பட்டது. 77க்குப் பின் அத்தனை தடவையும் தொண்டமான் அவசரகால சட்டத்தை ஆதரித்தே வந்தார்.


அன்றைய அந்த அவசரகாலச் சட்டம் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 11 வரை அமுலில் இருந்தது. அந்த இடைக் காலத்திற்குள் எவ்வளவோ நடந்து முடிந்திருந்தன. குறிப்பாகத் தென்னிலங்கையில் பல தொழிலாளர்கள் மாணவர்கள் உட்பட பல கிராமிய இளைஞர்களுமாக 60,000க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்கள் அவசர காலச் சட்டத்தின் பேரால் டயர்களுக்கு இரையாக்கப்பட்டனர். புதை குழிகளுக்கு அனுப்பட்டனர். ஆறுகளில் பிணமாக மிதக்க விடப்பட்டனர். வதை முகாம்கள் எத்தனையோ இயங்கின. இதே அவசர காலச் சட்டத்தின் மூலம் ஆளும் கட்சியினர் தமது சொந்தப் பழிகளையும் தீர்த்துக் கொள்ள வழிவகுத்தது.

வடக்கு கிழக்கிலும் பல இளைஞர்கள் அநியாயமாக சந்தேகத்தின் பேரில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். போதாததற்கு இந்திய அமைதிகாக்கும் படையையும் இந்த அநியாயங்களை புரிவதற்கு பங்காளிகளாக்கிக் கொண்டது ஜே.ஆர். அரசாங்கம். இலங்கைப் படையே மேல் எனப் பேசும் அளவிற்கு இந்தியப் படையினரின் அட்டூழியங்கள் நடந்திருந்தது. இதே அவசரகால சட்டம் இந்தியப் படையினருக்கு உச்ச அளவில் பயன்பட்டது.

இந்த அவசரகால நிலையும் 89 ஜனவரி 11ல் நீக்கப்பட்டிருக்கையில் ஒன்பதே நாட்களில் அதாவது ஜனவரி 20ம் திகதி மீண்டும் பிரேமதாசாவால் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. அது 1994 செப்டம்பர் வரை அமுலில் இருந்தது. 94 ஓகஸ்ட் பொதுத் தேர்தலில் தோற்ற ஐ.தே.க நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தலிலாவது வெல்வதற்கான வழிகளில் ஒன்றாக ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க செப்டம்பர் மாதம் அவசரகால சட்டத்தை நீக்கினார்.

குறிப்பாக வடக்கில் இந்திய இராணுவம் தனது ”அமைதி காக்கும்” பணியில் பல அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது தென்னிலங்கை இளைஞர்களை நசுக்க இலங்கை இராணுவத்திற்கு வசதியாக வாய்ப்புக் கிடைத்தது. இந்திய இராணுவம் வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட வேளை தென்னிலங்கையிலும் தமது அழிப்புகளைச் செய்து ஓய்ந்திருந்தது இலங்கை இராணுவம். மீண்டும் அதே இராணுவம் வடக்கில் ஓயாது இன அழிப்பை நடத்துவதற்காக இறக்கிவிடப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிரான பல இராணுவ நடவடிக்கைகளையும் இனப்படுகொலைகளையும் நடாத்தியிருந்தது. கொக்கட்டிச்சோலை, மயிலந்தனை போன்ற பெரிய இனப் படுகொலைகளைச் செய்ய அவசரகாலச் சட்டமே அங்கீகாரமளித்தது. அக்குற்றங்களை புரிந்த இராணுவத்தினர் மீது இராணுவ விசாரணை எனும் போர்வையில் போலி நாடகமாடியது. 


ஆதரித்தோரும் எதிர்த்தோரும்
1994 இல் ஜே.வி.பி பாராளுமன்றத்தில் இடம்பிடித்தபோது தொடர்ச்சியாக அவசரகால சட்ட நீடிப்புக்கு எதிராக வாக்களித்தது. சந்திரிகா அரசாங்கத்தின் போது அவசரகால சட்டத்தை எதிர்த்து ஒற்றைப் பிரதிநிதியாக (நிஹால் கலப்பத்தி) வாக்களித்த ஒரே கட்சி அது தான். அதே அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி 87-89 காலப்பகுதியில் ஜே.வி.பியை கிட்டத்தட்ட முழுமையாக அழித்திருந்தது அரசாங்கம். ஆகவே அதன் வலி தெரியும். ஆனால் அதன் பின் வந்த அரசாங்கங்களின் போது ஜே.வி.பி இனவாத நிலைப்பாடு எடுத்தவேளை அவசரகால சட்டத்தை ஆதரித்து வாக்களித்ததையும் வரலாறு மறக்கவில்லை. அதே காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இ.தொ.கா, ஈ.பி.டி.பி, புளொட், முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கூட வெளியில் அவசரகால சட்டத்துக்கு எதிராக அறிக்கைவிட்டுக்கொண்டு அந்த சட்ட நீடிப்பன்று அரசாங்கத்துக்கு ஆதவளித்து வந்தன என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ் மக்களின் தலைவர்களைக் கொண்டே தமிழ் மக்களின் கண்களை பிடுங்கும் வேலை கச்சிதமாக அரசாங்கத்தால் அரங்கேறியது. 

ஐ.தே.க இந்த காலத்தில் முதலில் எதிராக வாக்களித்த போதும் பின்னர் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நழுவிவிட்டு, சில காலங்களின் பின்னர் ஆதரவளிக்கத் தொடங்கியது. எதிர்த்தால் “பயங்கரவாதத்தை” ஆதரித்ததாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டுவிடும் என்கிற பயம் அவர்களுக்கு இருந்தது. 

2009 இல் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒட்டுமொத்தமாக நசுக்கி துடைத்தெறிய இந்த சட்டமே இரும்புக் கரமாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்தது. ஜெனிவாவில் அரசாங்கம் ஒத்துகொண்டபடி 2011 ஓகஸ்ட் 26 அவசரகால சட்டத்தை நீக்கியது. ஆனால் 06.09.2011 வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அதன் பல அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. கூடவே பயங்கரவாத தடைச் சட்டம் இன்னமும் பயன்படுத்தப்படுவது பற்றி “மனித உரிமைகள் கண்காணிப்பு” சமீபத்தில் விமர்சித்திருக்கிறது.

1942 இலிருந்து 2011வரையான 69 வருட காலத்தில் அதிகமான காலம் இலங்கை மக்கள் அவசரகால சட்டத்தின் கீழ் தான் ஆட்சிசெய்யப்பட்டிருக்கிறார்கள். இன்றும் தேவையேற்படும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. டெங்கு ஒழிப்புக்காகக் கூட அது பிரகடனப்படுத்தப்படுகிறது. அத்தோடு அது நிற்கட்டும்.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்

தேயிலையின் வீழ்ச்சியும் : முள்ளுத்தேங்காயின் வருகையும் - ஜீவா சதாசிவம்''உலகின் அதிசிறந்த தேயிலை எனும் பெருமையுடன் 150ஆவது வருடத்தை கொண்டாடுகின்றோம்''   பண்டாரநாயக்க ஞாபகார்த்த  சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் வடிவமைக்கப்பட்ட பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தது.

CRT (Coconut,  Rubber, Tea) வர்த்தக கண்காட்சி 2017  கடந்த வார இறுதியில்  BMICH இல்  நடைபெற்றது. இக்கண்காட்சி பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த  அந்த வரிகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாயிலின் உள்ளே சென்றப்பின்  மனதுக்கு  பெரும் வருத்தத்தையும் தந்துவிட்டது.  

இந்நிலையிலேயே இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து, சர்வதேசத்திற்கு இலங்கையை  அடையாளப்படுத்துவதில் முன்னிலை வகித்த 'தேயிலை' யின்  நிலைமை பற்றி அலசுகிறது இவ்வார 'அலசல்'. 

 ''1995ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை இலங்கையின் தேயிலை உற்பத்தி இரு மடங்காகியுள்ளது. ஆனால், குறித்த இலக்கை அடைவதற்கான கால இடைவெளி அதிகமாகும். 2015ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி 43 சதவீதமாக அதிகரித்து 2016ஆம் ஆண்டடில்  34 வீதமாக கீழிறங்யிருக்கிறது. ஆனால், தேயிலைத் தொழில் மொத்த உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இது தேயிலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு BMICH இல் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றியபோது தெரிவித்த கருத்து. 

பிரதமரின் கூற்று இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேயிலை மாத்திரம் அல்ல அத்துறை சார் தொழிலாளர்களும் வாழ்வாதார விடயத்தில் வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருக்கின்ற நிலைமையே இருக்கின்றது.  

இவ்வருடத்தை தேயிலைக்கான வருடம் என்றும் கூட கூறலாம்.  இலங்கைத் தேயிலை தனது 150 ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.  இதன் ஓர் அடையாளமாக அண்மையில் 150வருட கொண்டாட்ட முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தினத்தை முன்னிட்டு தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் (TRI) கொண்டாடப்பட்ட சர்வதேச தேயிலைத்தின   நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியும் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். இது வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு. இவ்வருடத்திலேயே பாரதப்பிரதமரின் மலையக விஜயமும் இடம்பெற்றிருந்தது.  

தேயிலை தொழிற்துறைக்கு பதிலாக வேறு துறைகள் வந்திருந்தாலும் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை விளைவிப்பதாக அமைந்திருக்கின்றது என்பது பற்றி பேச வேண்டியதொரு கட்டாயம் உள்ளது. மலையக தோட்டப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தேயிலைத் தொழிற்துறை வீழ்ச்சி கண்டுள்ள அதேவேளை பெரும்பாலான தோட்டப்பகுதிகள் காடாக்கப்பட்டு வருகின்றது. தேயிலைத் தொழிற்துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.  

இது இவ்வாறிருக்க முள்ளுத்தேங்காய்  (Palm Oil) உற்பத்தித் துறையும் இப்போது வளர்ச்சியடைந்து வருவதும் அவதானிக்க கூடியவிடயம். இது  தேயிலைத் தொழிற்துறையை பாதிக்க கூடியதான துறையாக இருக்கின்ற அதேவேளை இது மக்களின் நலன்சார் விடயத்துக்கும் சவாலாக இருக்கும் துறையாக இருப்பதாகவும் உள்ளது. 

'முள்ளுத்தேங்காய்'பற்றி வீரகேசரியின் மலையக இதழான சூரிய காந்தி பத்திரிகையில் மல்லியப்புசந்தி திலகரின் தொடரை தொடர்ச்சியாக படித்ததன் மூலமே இத்துறைசார் விடயம் பற்றி சில விடயங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. தேயிலைத்துறைக்கு எவ்வாறு இது சவாலாக இருக்கின்றது என்பதையும் இத்தொடர் நன்றாக தெளிவுபடுத்தியிருந்தது. ஆகையால் முள்ளுத் தேங்காயையும் பற்றி பேச வேண்டியது அவசியம்.

இலங்கையின் காலி, நாஹியாவில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளுத்தேங்காய் உற்பத்தி 2004ஆம் ஆண்டுகளின் பின்னர் அதன் வளர்ச்சி பெரிதும் விரிவடைந்துள்ளது. 

இலங்கையில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆகையால் வெளிநாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாலுமே 2004ஆம் ஆண்டு உள்நாட்டில் முள்ளுத்தேங்காய் உற்பத்தி விஸ்தரிக்கப்பட்டதாக தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள்  பணிப்பாளர் .Dr. ஜெயரட்ண தெரிவித்தார்.  முள்ளுத்தேங்காய் உற்பத்தி   பற்றிய முழுமையான  ஆராய்ச்சியை செய்துள்ள அவர் மேலும் சில விடயங்களையும் இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார். 

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே முள்ளுத்தேங்காய் எனும் Palm Oil உற்பத்தி பிரசித்திபெற்றுள்ளது. இலங்கைக்கான எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே 2004ஆம் ஆண்டு 20000 ஹெக்டெயரில் இச்செய்கையை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தற்போது 9000 ஹெக்டெயரில் பண்ணப்படுகின்றது. இன்னும்  11000 ஹெக்டயர் தேவைப்படுகின்றது. 

இலங்கையில்  கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே பிரதானமாக இச்செய்கை பண்ணப்படுகின்றது.   ஒரு ஹெக்டயரில் 130 மரங்கள் உற்பத்தி செய்ய முடியும். ஐந்து வருடங்களில் இதன் மூலம் பலனை பெற முடியும். தொடர்ச்சியாக 25 வருடங்களுக்கு இதன் மூலம் இலாபத்தை பெறக்கூடியதாக இருக்கும். ஒரு ஹெக்டயரில் 6000 கிலோகிராம் அளவை பெற்றுக்கொள்ள முடியும்.

 தாய்லாந்து, மலேசியா,  இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தே இந்த முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கான ஹைபிரைட்   விதைகள் (Hybrid Seeds) கொண்டு வரப்பட்டன. இவ்வாறான விதைகள் மூலமே இதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 

இதனை இலங்கையில் உற்பத்தி செய்தால் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் எமது மக்களுக்கான தேவையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், பாம் எண்ணெயின் மூலம் நோய்கள் வரும் , அதனால் இயற்கைக்கு பாதிப்பு வரும் என்று கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளுத்தேங்காய் பற்றி தெரியாதவர்களே இவ்வாறு கூற முடியும். ஆனால், நிலைமை அதுவல்ல. இன்று உலகளாவிய ரீதியில்   1.2 வீதத்தினோர் மாத்திரமே தேங்காய் எண்ணெயை பாவிக்கின்றனர். 39 சதவீதத்தினர் Palm Oil பாவிக்கின்றனர். என்றும் தனது ஆய்வின் மூலமாக பெற்ற  கருத்தைத் தெரிவித்தார். 

இது இவ்வாறிருக்க இத்துறை ஆபத்தானது என்று பல கட்டுரைகள், கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் தெரணியகலை டெனிசெட் தோட்டத்தில் இத்துறை உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்தவாரம் இத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போது முள்ளுத்தேங்காயின் விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

முள்ளுத்தேங்காய் உற்பத்தி   செய்யப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளில் இயற்கையின் செழுமை  மங்கிவிட்டதாக குறிப்பிட்ட மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளில் சிறிது காலத்திற்கு பின்னர் வறட்சியையும் எற்படுத்தி சூழலையும் மாசுபடுத்தி விடும் நிலைமையே ஏற்படு கின்றது.

இலங்கையில் கோப்பிச் செய்கையில் தோல்வி கண்டு அதற்கு மாற்றீடாக ஜேம்ஸ்டெய்லர் 150 வருட காலத்திற்கு முன்னர் பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்ட தேயிலைச் செய்கை வெற்றியடைந்து அதன் மூலம் எண்ணற்ற வருமானத்தை பெற்று வந்த நிலையில் தேயிலைத்துறை இன்று பெரிதும் வீழ்ச்சிகண்டு வருகின்றது. அதற்கு ஓரிரு காரணங்களை மாத்திரம் சொல்லி அமைதியாக இருந்து விடமுடியாது. உலக சந்தையில் முதலாம் தரத்தில் இருந்து இலங்கை தேயிலைக்கான கேள்வி (Demand)   தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.  

முள்ளுத் தேங்காய் உற்பத்தி இடம்பெறும் இடங்களில் பசுமையான காடுகள் அழிக்கப்பட்டு இதனால் வனஜீவிகளும் தங்களது வாழ்விடங்களை இழந்துள்ள நிலைமையே இருக்கின்றது. உலக நாடுகளில் பாம் எண்ணெய்க்கு ஆதரவாகவும் எதிராகவும்  போக்குகள் காணப்படுகின்றது.

பொதுவாக சில ஐரோப்பிய  நாடுகளில்   பிரபல கடைகளில் 'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை' என்பதை தமது விழிப்புணர்வைக் வெளிக்காட்டும் விளம்பரமாகவே வைத்துள்ளார்கள்' என்று ஆய்வாளர் ஒருவர் முகநூலில் குறிப்பிட்டிருந்ததை  அவதானித்தேன். மேற்கத்தைய நாடுகளில் இவ்வாறான விளம்பரங்களை பாம் எண்ணெய்க்கு ஏன் காட்சிப்படுத்த வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.   

தேயிலையில் வீழ்ச்சி நிலை அதிகரித்துச் செல்லும் நிலையில் பாம் ஒயில் மாற்றீடாக குந்துவது  எந்தளவுக்கு சாத்தியமாகும்? . இதனால் பாதக விடயங்களுக்கு பதில் சொல்பவர்கள் யாராக இருப்பர்.

கோப்பிக்கு மாற்றீடாக தேயிலை, இறப்பர் இருந்த போது இயற்கை மேம்பட்டதுடன்  அதனால் வாழ்ந்தவர்களும் அதிகம். ஆனால், இந்த முள்ளுத் தேங்காய் வரும் போதே சூழல், சுகாதாரம் கலாசாரம் மீதான தாக்கத்தை உணர்த்தியவாறே வருகிறது. தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் இருந்து ஏற்றுமதி செய்த நமது நாடு தேங்காய் எண்ணெய்க்கு பதிலீடாக முள்ளுத்தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய தலைப்பட்டிருப்பதும்   ,முள்ளுத்தேங்காய் வருமானம் தரும் துறை என்று தேயிலைக் கைத்தொழிலில் இருந்து கம்பனிகள் விலகி வருவதும்  கவலைக்குரியது. 

எது எவ்வாறெனினும் முள்ளுத்தே ங்காய் தொழிலுக்குள் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படும் விதம்  அவர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தச் செய்யும் போக்கையே காட்டி நிற்கிறது. தேயிலைக்கு 150 வருடங்களைக் கொண்டாடவும் முடியாமல் புதிதாக வரும் முள்ளுத்தேங்காயை  கொண்டாடவும் முடியாமல் மக்கள் திண்டாடி நிற்கின்றனர்.

நன்றி - வீரகேசரி

இணையத்தில் மலையகம் - ப.விஜயகாந்தன்நாம் இன்று அறிவுப் பொருளாதார யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வணிகப் பண்டங்களாக்கப்பட்ட அறிவும், தொழில்நுட்பமுமே இன்று உலகை ஆள்கின்றன.

“நம்ம காலத்துல எல்லாத்தையும் மனப்பாடம் பன்னனும். இல்லன்ன மை தொட்டு எழுதி வைக்கனும். இந்த காலத்துல அப்புடியா? எல்லாமே கம்பியூட்டரு தான்.”  இது ஒரு வயோதிபர் நவீன தொழில்நுட்பத்திற்கு வழங்கும் நற்சான்றிதழ். அந்தளவுக்கு இன்று கணிணியும் இணையமும் உலகின் எஜமானன்களாகியுள்ளன. இல்லையென்றால் ஒருவன் இருந்த இடத்திலே அமர்ந்தபடி முன்னூறு கோடி அமெரிக்க டொலர் கப்பம் கோரி உலகை மிரட்ட முடியுமா?

உலகில் இன்று ஒவ்வொரு சமூகமும் தனது இருப்பையும், சக்தியையும், ஆளுமையையும் இணையத்தின் வழி நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு தனித்துவமான இனத்துவ அடையாளங்களைக் கொண்ட சமூகம் என்றவகையில் இலங்கையின் மலையக தமிழச் சமூகம் இணையத்தில் எவ்வாறு உலவுகின்றது? அல்லது எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகின்றது? அச்சமூகம் இணையத்தை எவ்வாறு அணுகுகின்றது? அல்லது பயன்படுத்துகின்றது? என்பதனை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகின்றது.

இக்கட்டுரை எழுதப்படுகின்ற நாள் வரையான இணையத்தகவல்களை இற்றைப்படுத்தியே (Update) இக்கட்டுரை எழுதப்படுகின்றது. மலையகம், மலையக தமிழர், Malyaham, Malyagam, Malayakam, upcountry, hill country ஆகிய முதன்மைப்பதங்களின் (Key Words) வழி, கூகுல் தேடுதளம் (Google Searching Engine)  காட்டும் பெறுபேறுகளையே இக்கட்டுரை ஆதாரமாகக் கொள்கின்றது.

இணைத்தில் ஒரு சமூகம் சார்ந்து என்ன செய்யலாம்?

மலையக சமூகத்தை பொருத்தமட்டில் சமூகத்தின் ஆளுமைகளும் அரசியல் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் ஏன் கல்வி மான்களும் கூட தனித்தனி தீவுகளாகவும் பற்பல துருவங்களாகவுமே செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.  இதற்கு அவரவர் கொள்கைகளும் கொண்ட கோட்பாடுகளும் வேறுபட்டிருத்தல் காரணமாகலாம். ஆனால் இணையத்தில் வெளிவரும் ஒரு விடயம் அம்பலத்தில் ஆடப்பட்ட கூத்தாக – உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு சமூகமாக, ஓர் இனமாக நாம் ஒன்றிணைந்து எம்மை அடையாளப்படுத்தி உலகிற்கு பறைசாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரினது கடப்பாடாகும்.

கல்வி வழிகாட்டல், கல்வி வாய்ப்பு, தொழில்வழிகாட்டல், தொழில்வாய்ப்பு, எண்ணிம ஆவணப்படுத்தல், தரமான பொழுதுபோக்கு, சமூக ஒருங்கிணைப்பு, சர்வதேசத்தைக் கற்றல், ஆய்வு முயற்சிகள், சர்வதேச வாய்ப்புக்களை விஸ்தரித்தல் என மலையக சமூகத்திற்கான தேவைகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. அதற்கான வாய்ப்புக்களும் இணையத்தில் தாராளமாக அமைந்திருக்கின்றன. நாம் செய்யவேண்டியது மலையக சமூகத்திற்கும் இத்தகைய வாய்ப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை இணையத்தின் ஊடாக ஏற்படுத்துவதாகும்.

மலையகத்தை பொறுத்தவரை இணைய வழித் தேடலின் போது மலையக சமூகம் சார்ந்து “மலையகம்” என்ற தொனிப்பொருளில் சோ.ஸ்ரீதரன், திலகர், லெனின் மதிவாணம், இரா. சடகோபன், சரவணன் (நோர்வே), தவமுதல்வன் (இந்தியா), மு.சிவலிங்கம் முதலானோரின் எழுத்தாகங்களே ஜொலிக்கின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது இணைத்தளங்களின் சுருக்கமான குறிப்புக்கள் கீழ்வரும் அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


மேலுள்ள அட்டவணையின் படி மலையகம் சார்ந்து இயங்குகின்ற தெரிவு செய்யப்பட்ட 20 இணையத்தளங்கள் இலங்கை, இந்தியா, நோர்வே, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இயங்குகின்றமையை அவதானிக்க முடிகின்றது. இவற்றுள் தமக்கான சொந்த இணையத்தள முகவரி (Domain Name) மற்றும் இணையத்தகவல்களை சேமித்து வைப்பதற்கான ஒரு இடம் - இணைய புரவல் (Web host) என்பவற்றை வெறுமனே நான்கு தளங்களே கொண்டியங்குகின்றன. ஏனைய பதினாறு தளங்களும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் Blog, Word press முதலானவற்றின் வார்ப்புருவிலேயே (Templates) இயங்குகின்றன. மேலும் இவற்றில் பத்து தளங்கள் தனிநபர்கள் சார்ந்தும் சில அமைப்புக்களைச் சார்ந்தும் மற்றயவை சமூகம் சார்ந்தும் இயங்குகின்றமையும் அறிய முடிகின்றது. கட்டுரைகள், படைப்பாக்கங்கள், புகைப்படங்கள், இணைப்புக்கள், பணம்திரட்டல், செய்திகள், அறிவிப்புக்கள், ஆவணப்படங்கள், அழைப்பிதழ்கள், காணொளிகள் என்பனவே இத்தளங்களினது உள்ளீடுகளாக அமைந்திருக்கின்றன.

வெகு சில தளங்களை தவிர பெரும்பாலான தளங்களில் தொழில்நுட்ப குறைச்சல்களை தாராளமாக அவதானிக்க முடிகின்றது. அத்தோடு மழையில் முளைத்த காலான்களாக ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு தேவைக்காக ஆரம்பிக்கப்பட்டவை ஆரம்ப நிலையிலேயே நிற்கின்றன. ஒரு சில தளங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டும் பல தளங்கள் நேர்த்தியற்ற வடிவமைப்புடனும் இற்றைப்படுத்தல்கள் இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன.

மலையக சமூகம் சார்ந்து இயங்குகின்ற தளங்களில் www.namathumalayaham.com முக்கியத்துவம் பெறுகின்றது. நாளாந்தம் இற்றைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் பலதரப்பட்டவர்களின் ஆக்கங்கள் பிரசுரிக்கப்படுவதும், நேர்த்தியான வடிவமைப்பும் இதன் சிறப்பம்சமாகும். எழுத்தாக்கங்கள், மலையக நாட்காட்டி, ஒளி, ஒலி ஆவணங்கள் என்பவற்றை தன்னகத்தே ஒன்றுதிரட்டி மலையகத்திற்கு ஒரு இணையவழி ஆவணகமாக இத்தளம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

malaiagam.com, kumurummalaikal.blogspot.com, puthiyamalaiyakam.blogspot.com முதலான தளங்கள் ஏற்புடையதான வடிவமைப்பினை கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றின் உள்ளீடுகள் அதிகரிக்கப்படுவதோடு நாளாந்தம் இற்றைப்படுத்தப்டுமாயின் பயன்படத்தக்கவையாக இவை மாறும்.

மலையகத்திற்கு தனியான இடம் (Menu) ஒதுக்கியுள்ள இணையத்தளங்கள்

01. karudannews.com
02. netrigun.com
03. theevakam.com
04. maatram.org
05. globaltamilnews.net
06. itnnews.lk
07. newsfirst.lk
08. lankasee.com
09. deepamnews.com
10. thinakaran.lk
11. tamilmirror.lk
12. noolaham.org
13. thesamnet.co.uk
14. vaaramanjari.lk
15. thaainews.com
16. tsasouthasia.org
17. ckalaikumar.blogspot.com
18. eelamulakkam.com
19. importmirror.com
20. ibctamil.com.au
21. leftoutvoices.com
22. jaffnafirst.com
23. metromirror.lk
24. jaffnazone.co.uk
25. unmaiolam.wixsite.com

மலையக செய்திகள் / தகவல்கள் இடம்பெறும் பிற இணையத்தளங்கள்


01. bbc.com/tamil
02. ta.wikipedia.org
03. tamil.thehindu.com
04. wikinews.org
05. penniyam.com
06. parwai.blogspot.com
07. opendemocracy.net
08. cpalanka.org
09. yarl.com
10. aavanaham.org
11. nishan1992.blogspot.com
12. sooddram.com
13. sigaram.co
14. athavannews.com
15. dailyceylon.com
16. thuliyam.com
17. live360.lk
18. tamil24x.blogspot.com
19. malayaham.blogspot.com
20. gossip.sooriyanfm.lk
21. hirunews.lk
22. tnnlk.com
23. timetamil.com
24. tamil.adaderana.lk
25. tamil.news.lk
26. virekesari.lk
27. ibctamil.com

குறிப்பு: bbc.com, ta.wikipedia.org, tamil.thehindu.com, aavanaham.org முதலான இணையத்தளங்கள் சர்வதேச மட்டத்தில் பிரபல்யமும் முக்கியத்துவமும் வாய்ந்தனவாகும். எனவே இவற்றை மலையக சமூகம் பயன்மிகுந்த வழியில் உபயோகித்துக்கொள்தல் உசிதமானதாகும்.

முடிவுரை

இக்கட்டுரை சில வரையறைக்குள், கூகுல் தேடுதளத்தின் முதன்மைப் பெறுபேறுகளைக் அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளது. இதனை ஒரு முழுமையாகக் கருத முடியாது. தவிர, மலையகம் என்பதை மட்டுமே முதன்மைப் பதமாகக் கொண்டு தேடுதல் இடம்பெற்றுள்ளது. எனவே மலையகம் சார்ந்து இயங்குகின்ற (மலையகம் எனும் பதத்தினை கொண்டிருக்காவிடினும்) அனைத்து இணையத்தளங்களையும் ஒருங்கிணைத்து இவ்வாய்வு மேற்கொள்ளப்படவேண்டும். எடுத்துக்காட்டாக பாடசாலைகள், அமைப்புக்கள், வியாபார நிறுவனங்கள், கல்வி சார் நிறுவனங்கள், பத்திரிகை தளங்கள், பொழுது போக்கு தளங்கள் என உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் இயங்கும் அனைத்தும் இணையத்தளங்களும் ஆய்வில் உள்ளீர்க்கப்படவேண்டும். இவற்றோடு கூடவே Facebook, Twitter,YouTube முதலான சமூக வலைத்தளங்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். ஆர்வளர்கள் இதனை தொடர்ந்து முன்னெடுக்கலாம். அல்லது தமது ஆய்வு பங்களிப்புக்களை வழங்கலாம்.

மலையகத்திலிருந்து தரமான இணையத்தளங்கள் தேவையான அளவு தொடக்கம் பெறாமலிருப்பதற்கு பல்வேறு காரணிகளை இனங்காணலாம். அவற்று உரிய தொழில்நுட்ப அறிவின்மை, கணிணி வசதியின்மை, இணைய வசதி குறைவு, ஆர்வமின்மை, நிதி பற்றாக்குறை, திட்டமிடலின்மை, புதிய திட்டங்களை வகுப்பதிலுள்ள இடர்பாடுகள், பாடசாலை கல்வியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைக்கு போதிய முக்கியத்துவமளிக்காமை, ஏனைய சமூகங்களையும் தேசங்களையும் பின்பற்றி பட்டறிவை பெற்றுக்கொள்ளாமை, உரிய துறையில் வளவாளர்கள் குறைவு, பயிற்சிகளுக்கான வாய்ப்பின்மை என்பனவற்றை குறிப்பிடலாம். தமிழ் விக்கிபீடியா, நூலகம், ஆவணகம் முதலான நிறுவங்கள் தற்போது மலையக இளைஞர்களுக்கு இத்துறையில் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளமையும் மலையக தொழிற்கலைகளை ஆவணப்படுத்துவதற்கு எடுத்துக்கொண்டுள்ள முயற்சிகளையும் ஓரு நல்ல தொடக்கமாகக் கொண்டு நாம் மலையக சமூகம் சாரந்து தொடர்ந்து இயங்கலாம்.

நம் சமூகத்தை இணையத்தில் அடையாளப்படுத்தும் போது நாம் ஒருமித்து செயற்படுவது மிகவும் இன்றியமையா தேவையுள்ளது. மலையகம் சார்ந்த அனைத்து இணையத்தளங்களும் ஏதோ ஒரு வகையில் மலையகத்தை அடையாளப்படுத்த வேண்டும். அதற்கான பொறிமுறையினை நாம் கண்டறிய வேண்டும். இலங்கையில் மட்டுமின்றி தேசம் கடந்து மலையக சமூகத்தை ஐக்கியப்படுத்தி ஒருங்கிணைக்கும் பணியினை மலையக இணையத்தளங்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக இத்துறையில் விற்பன்னர்களாக விளங்கும் மலையகம் சார் மூளைசாலிகள் முன்வரவேண்டும், பிற சமூகம் சார் தொழில்நுட்ப உதவிகளையும பெற்றுக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் உலகின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சவால்களை வெற்றிகண்டு முன்னேறும் சமூகமாக மலையகம் மிளிரவேண்டும்.

“வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து…” செல்வராஜா ராஜசேகர்


“வௌக்கெண்ணைய வெரல்ல பூசிட்டு அடுப்புல காட்டுவேன். அதுதான் மருந்து. ரெண்டு நாளைக்கு கொழுந்து எடுக்கலாம். திரும்ப வலிக்கத் தொடங்கும். அப்புறமும் வௌக்கெண்ணதான் மருந்து” என்று கூறுகிறார் தோட்டத் தொழிலாளியான 57 வயது பெருமாள் தனலெட்சுமி. இவருக்கு ஐந்து பிள்ளைகள். 3 பேர் படிக்கிறார்கள், இருவர் கொழும்பில் வேலை செய்கிறார்கள்.

16 வயதில் கொழுந்து பறிக்கச் சென்றிருக்கிறார் தனலெட்சுமி. அவரது கை விரல்கள் வருடக்கணக்காக மழை பெய்யாமல் பிளந்திருக்கும் நிலத்தைப் போல இருக்கிறது. பிளந்திருக்கும் வழியினூடாக வடிந்தோடியிருக்கும் தேயிலைச் சாய அடையாளங்கள் இரத்தம் வெளியேறிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

“இந்த காயத்தோட கொழுந்தெடுத்தா விரல் வலிக்கும். கிளவுஸ் (கையுறை) போட்டா கொழுந்து எடுக்க முடியாது. என்னதான் செய்ய, பிள்ளைகள படிக்கவைக்கனுமே, வலிச்சாலும் கொழுந்து எடுக்கத்தானே வேணும்” என்கிறார் 57 வயதான நிர்மலா. ஒரு சில தோட்டங்களில் தொழிலாளர்கள் கையுறை பயன்படுத்த நிர்வாகம் தடைவிதித்திருக்கிறது. கையுறை அணிந்து பறிப்பதால் கொழுந்து சேதமடைவதாக நிர்வாகம் கூறுகிறது. காயத்தின் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சில தொழிலாளர்கள் களவாக கையுறையை அணிகிறார்கள். இன்னும் ஒரு சிலர் விரல்களுக்கு மட்டும் உறைகளை அவர்களே தைத்து அணிகிறார்கள்.

தோட்டத் தொழிலாளி ஒருவர் சராசரியாக 30 வருடங்கள் வேலை செய்பவராக இருந்தால் அவரது விரல்களில் ஏற்படும் காயங்கள் நிரந்தரக் காயங்களாகின்றன. அவர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளைக் கூட செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.

“இந்த காயத்தோட உடுப்பு கழுவ முடியாது. அதுகூட பரவாயில்ல, சாப்பாட பெனஞ்சி சாப்பிடக்கூட ஏலாது. கையெல்லாம் எறியும்” என்று கூறுகிறார் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான எம். ஞானசோதி.

"வலிச்சா வௌக்கெண்ணதான் மருந்து..."

இந்தப் புகைப்படக்கட்டுரை கொழுந்து பறிப்பதனால் தோட்டத் தொழிலாளர்களின் கைகளில் ஏற்பட்டிருக்கும் நிரந்தர அடையாளங்களான காயங்களை Adobe Spark என்ற வலைதள தொழில்நுட்பத்தைக் கொண்டு புகைப்படங்களூடாகக் காட்டுவதற்கான முயற்சியை எடுத்துள்ளது. இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் முலமாகவும் கட்டுரையைப் பார்க்கலாம்.

இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் அழைக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது. தேநீரை சுவைப்பவர்கள், தேயிலையை விற்பனை செய்பவர்கள் கொண்டாட்டங்களை நடத்த தேயிலையை உற்பத்தி மலையக தோட்டத் தொழிலாளிகள் நாட்டின் சக பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தேயிலை மரத்துக்கு உரமாகிக்கொண்டிருக்கிறார்கள்.

நன்றி - மாற்றம்

உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன் கவனிக்கப்பட வேண்டியவை - என்.நெடுஞ்செழியன்


நாடு இரண்டு தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகிய இரண்டுமே அவையாகும். முதலில் எந்தத் தேர்தல் நடைபெறப் போகின்றது என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் தனித்தனியாக நடத்தப்பட்டன. எனினும் அந்த முறையை ஒழித்து ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்களை பழையபடி ஒரே முறையில், ஒரே தினத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது.

எனவே, அடுத்தமாதம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட வேண்டிய சப்ரகமுவ மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியவற்றுக்கான தேர்தல் குறித்த காலத்தில் நடத்தப்படமாட்டாதென்றே தெரியவருகிறது. சகல மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெறும் போதே இம்மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களும் நடைபெறக்கூடும்.

இந்த மூன்று மாகாண சபைகளும் கலைக்கப்பட்டு அங்கே மாகாண ஆளுநர்களின் பொறுப்பின் கீழ் நிர்வாகம் முன்னெடுக்கப்படும். எனவே இம்மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல்களை நடத்துவதற்கு மேலும் பல மாதங்களாகலாம்.

அதற்கிடையில், கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. நாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ஏறக்குறைய 1½ வருடகாலமாக மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் விசேட ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளரும் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இதனிடையே தேர்தல் பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும். புதிய வட்டார முறையில் நடத்தப்பட வேண்டுமென்றும் இவை இரண்டும் கலந்த கலப்பு முறையில் நடத்தப்பட வேண்டுமென்று பரவலாகக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் புதிய பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டு அதன் பின்னரே அவற்றுக்கான தேர்தல் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில் மலையக மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் எவ்வாறான வகையில் எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விகள் இயல்பாகவே எழுந்துள்ளன.

நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் மலையக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் புதிய பிரதேச செயலகங்கள் அமையப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு மலையக மக்களிடையே காணப்படுகிறது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சுமார் ஏழரை இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 51 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்களாவர்.

7½ இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட இந்த மாவட்டத்தில் அம்பகமுவ, ஹங்குராங்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை ஆகிய ஐந்து பிரதேச செயலகங்களே செயற்படுகின்றன. சராசரியாக ஒன்றரை இலட்சம் மக்களுக்கு ஒரு பிரதேச செயலகம் என்ற அடிப்படையில் இதனை அவதானிக்க முடியும்.

அதேவேளை, கிழக்கு மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்திலுள்ள லஹுகல (Lagugala) பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் சுமார் 9 ஆயிரம் (2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) மக்களே உள்ளனர். இதுபோன்று வேறுபல பிரதேச செயலகங்களும் நாட்டில் உள்ளன. வெறும் 9 ஆயிரம் மக்களுக்கு லஹுகல பிரதேச செயலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதைப்போன்று 15 மடங்கு மக்கள் தொகையைக் கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்திற்கும் ஒரேயொரு பிரதேச சபையே அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக இரு பிரதேச செயலகங்களுக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும். இதன்மூலம் அம்பகமுவ பிரதேச மக்கள் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலுள்ள மக்கள் அரச சேவைகளை பெற்றுக்கொள்வதில் எந்தளவில் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

நுவரெலியா மாவட்ட மக்களின் எண்ணிக்கை மற்றும் தேவையைக் கருத்திற்கொண்டு பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.  

கடந்த காலத்தில் உள்ளூராட்சி மன்ற எல்லை மீள்நிர்ணயக்குழு முன்னிலையில் இது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், இயக்கங்கள், தனிநபர்கள் என பல்வேறு தரப்பினரும் சாட்சியமளித்தனர். பெரியளவில் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 5 பிரதேச செயலகங்களை 12 ஆகவாயினும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.

இதுபோன்ற கோரிக்கைகளை மலையக் கட்சிகள் பலவும் முன்வைத்திருந்தன. இ.தொ.க. ஆரம்பமுதல் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென தெரிவித்து வந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியும் இவ்விடயத்தில் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றது.

குறிப்பாக அமைச்சர் மனோ கணேசன், நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பதுடன் ஹட்டன்–டிக்கோயா மற்றும் தலவாக்கலை–லிந்துலை நகர சபைகளை மாநகர சபைகளாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கும் நகர சபைகளை தரம் உயர்த்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடயத்தில் மலையகக் கட்சிகள் விழிப்புடன் செயற்பட வேண்டும். இந்த சந்தர்்பத்தை தவறவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற சட்டங்களிலும் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரதேச சபை சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

பிரதேச சபை தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று அத்தேர்தலில் போட்டியிடவும் கூட தடை இல்லை. ஆனால் பிரதேச சபையினூடாக தோட்டங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதில்லை. அரச உதவிகளும் சென்றடைவதில்லை. வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் அச்சபைகளின் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வதில் சட்டச்சிக்கல்கள் உள்ளன. இது நீக்கப்பட வேண்டும்.

மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு இதுபோன்ற குளறுபடிகளே காரணமாக இருக்கின்றன. இவை முழுமையாக நீக்கப்பட்டு மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் நவம்பர்–டிசம்பர் இறுதிப் பகுதியிலோ அல்லது அடுத்த வருட முற்பகுதியிலோ உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னர், மலையக மக்கள் நலன்சார் திருத்தங்களை அரசிடம் முன்வைத்து நிறைவேற்றுவதற்கு மலையகக் கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

நன்றி - வீரகேசரி

காணி உறுதி இல்லாததால் நிவாரண நிதி இல்லை - பானா தங்கம்


இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும்போது நாட்டில் ஏனைய மக்களுக்குக் கிடைக்கின்ற நிவாரண நிதியை மலையக தோட்டத் தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. காரணம் அவர்கள் குடியிருக்கும் வீடுகள் அவர்களுக்குச் சொந்தமானவை என்பதை நிரூபிக்கக் கூடிய காணி உறுதிகள் இல்லாமையே ஆகும். இதனால், கஷ்டப்பட்டு உழைத்தும், இயற்கை அனர்த்தத்தில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டும் உரிய நிவாரணத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியாமல் இருகின்றார்கள்.

   இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இந்த நாட்டில் குடியேறி 200 ஆண்டு கால வரலாறு நெருங்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாகத் திகழும் அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த மண்ணில் மாடாய் உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, உரிமையற்ற சமூகமாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று பழைய புராணத்தையே தொடர்ந்தும் பாடிக் கொண்டிருக்க முடியாது.

    அந்த வகையில், ஆங்கிலேயர் தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்து வந்த காலத்தில் தொழிலாளர்கள் குடியிருக்க கட்டிக் கொடுத்த லயன் காம்பரா வாழ்க்கை முறையிலிருந்து விடுபட வேண்டும், அவர்கள் சொந்தக் காணியில் சொந்தமான தனி வீடுகளில் குடியிருக்க வேண்டும், கிராம மக்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளையும் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

கொஸ்லாந்தை மீரியாபெத்தை தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தில் மனித உயிர்கள் பலியாகிய அவலத்துக்குப் பின்னர் இந்தக் கோரிக்கை அனைத்து மக்களிடமும் உண்மையான உணர்வலையைத் தூண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

 கிராம வாழ்க்கை முறை எதற்காக ?

தோட்டங்கள் கிராமமாக மாற வேண்டும் என்று பரவலாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தோட்டங்கள் ஏன் கிராமமாக மாற வேண்டும்? அதனால், யாருக்கு என்ன பயன்? இத்தனை ஆண்டு காலமாக இல்லாத இந்தச் சிந்தனை இப்போது தோன்றுவதற்குக் காரணம் என்ன? ஆமாம், காலத்துக்குக் காலம் ஏற்படும் அவலங்களும், ஓலங்களுமே மனித வாழ்வின் சிந்தனைக்கு மாற்றத்தைக் கொண்டு வருகின்றன என்று சொல்லலாம். தோட்ட மக்கள் காலங்காலமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வாக்களித்து வருகின்றார்கள். உறுப்பினர்களையும், பிரதேச, நகர சபைத் தலைவர்களையும் தெரிவு செய்து வருகின்றார்கள். ஆனால், உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் இன்னமும் தோட்ட நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றார்கள். தோட்ட நிர்வாகங்கள்தான் அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும், தலையெழுத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றன. எனினும், அரசாங்கத்தின் உதவிகளை ஏனைய கிராம, நகர்ப்புற மக்கள் பெற்றுக் கொள்வது போல, தோட்ட மக்களால் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.

உதாரணமாக வெள்ள அனர்த்தம், மண்சரிவு முதலான இயற்கை அனர்த்தங்களோடு, தீ விபத்து சம்பவங்களிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். அதில் குடியிருப்புகள் முற்றாக சேதமடையும்போது, புனரமைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் ஊடாக 25 இலட்ச ரூபா நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிதியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், பாதிக்கப்பட்ட வீட்டுச் சொந்தக்காரர்கள் அது தமக்கு உரியது தான் என்பதை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்க காணி உறுதிப் பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான், அரசாங்கத்தின் நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இவ்வாறு காணி உறுதிப் பத்திரம் இல்லாத காரணத்தால் இதுவரை காலமும் தோட்டத் தொழிலாளர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டும் அரச நிதியைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகவே இருந்து வருகின்றார்கள்.

 அரச நிவாரண உதவிகள் விபரம்

தோட்டங்களில் அனர்த்தங்கள் நிகழும்போது, கிராம உத்தியோகத்தர் உடனடியாக விபரங்களை சேகரிக்கின்றார். அவற்றை பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கின்றார். பிரதேச செயலக அதிகாரிகளும் வந்து பார்வையிடுகின்றார்கள். அதற்கு முன்னதாக மக்கள் பிரதிநிதிகள் ஸ்தலத்துக்கு விரைந்து சென்று தோட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தூண்டுகோலாக இருந்து வருகின்றார்கள்.

தோட்ட நிர்வாகங்கள் தற்காலிகமாக குடியிருக்க வசதிகளைச் செய்து கொடுக்கின்றன. அதேபோல், சமைத்த உணவுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கின்றன.

   பிரதேச செயலகத்தின் ஊடாக அரசாங்கம், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வாரத்துக்கு 700 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும், 2 பேருக்கு ஒரு வாரத்துக்கு 900 ரூபாவுக்கும், 3 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1100 ரூபாவுக்கும், 4 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1300 ரூபாவுக்கும், 5 பேருக்கு ஒரு வாரத்துக்கு 1500 ரூபாவுக்கும் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பாதிக்கப்பட்டவரின் மரணச் செலவுக்கு ஒரு இலட்ச ரூபாவும், தேவைக்கேற்ப, சமையல் பாத்திரங்கள், பயிர்ச் சேதங்களுக்கான நிவாரணம், மருத்துவ உதவி, சிறிய அளவில் சுய தொழிலுக்கான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

2017 மே மாதம் வரை வீடுகள் சேதம்

2017 மே மாதம் வரையில் இந்த ஆண்டில் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா தொகுதிகளில் 269 குடும்பங்களைச் சேர்ந்த 1089 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். 51 குடியிருப்புகள் சேதத்துக்கு உள்ளாகியிருந்தன. ஒரு வீடு மாத்திரம் முற்றாக சேதமடைந்திருந்தது.

   இவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமைத்த மற்றும் உலர் உணவுப் பொருட்கள், தற்காலிக முகாம்கள், தற்காலிகக் குடில்கள் சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டும், தோட்டப் பகுதிகளில் வீடுகள் முற்றாகச் சேதமடைந்தமைக்கான 25 இலட்ச ரூபா நிதியையும், தீ விபத்துக்கான நிதியையும் காணி உறுதிப் பத்திரம் இல்லாத காரணத்தால் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

 காணி உறுதிகள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

இந்தச் சூழ்நிலையில் தோட்ட மக்களுக்கு கிராமிய அடிப்படையில் தனித்தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை உண்மையிலேயே வரவேற்கத்தக்க விடயமாகும். அதற்காக முன்னர் இருந்த “தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு” நீக்கப்பட்டு, “மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு” உருவாக்கப்பட்டுள்ளமை மலையக மக்கள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டப்படும் வீடுகள் தேசிய கட்டட ஆய்வு மையத்தின் அறிக்கை கிடைத்த பின்னரே பொருத்தமான இடங்களில் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும், வீட்டு “வயரிங்” உரிய மு‍றையில் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்துக்கும் மேலாக புதிதாக கட்டப்படும் அனைத்து வீடுகளுக்கும் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கவும் அமைச்சர் பி. திகாம்பரம் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். சுமார் 3000 குடும்பங்கள் விரைவில் காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. இதன் மூலம் எதிர்காலத்தில் அனர்த்தங்களில் பாதிக்கப்படும் போது அரசாங்கத்தின் நிதியைப் பெற்றுக் கொள்ளவும் வழி பிறந்துள்ளது.

உள்ளூராட்சி நிர்வாகத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

எத்தனையோ அரசாங்கங்கள் பதவிக்கு வந்தும், எமது மக்கள் வாக்களித்தும் தோட்ட மக்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தின் பயன்பாடுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இதை உணர்ந்து நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஏனைய கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது தோட்ட மக்கள் உள்ளூராட்சி நிர்வாகத்தில் பங்கு பெறும் நிலை உருவாக வேண்டும். அதற்கான அழுத்தங்களும் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கம் சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வந்துள்ளது. இன்றைய சாதகமான அரசியல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளத் தவறினால், அது மலையக அரசியல்வாதிகளின் வரலாற்றுத் தவறாக அமைந்துவிடும் என்பதையும் மறந்து விடக்கூடாது.

நன்றி - வீரகேசரி

இன அழிப்புக்கு “1978 யாப்பு” என்று பெயர் வை! - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 23 

1978 செப்டம்பர் 7 அன்று இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சி தலைமையை ஏற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் எதிர்ப்பின் மத்தியில், தமிழ் மக்களின் பங்குபற்றலையோ, சம்மதத்தையோ பெறாமலேயே அது நிறைவேற்றப்பட்டது. குறுகிய காலத்திற்குள் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட இந்த அரசியல் யாப்பு அவசர சட்டமாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அரசியல் யாப்பு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அறிமுகம் செய்து தனிமனித சர்வாதிகாரத்துக்கு வழிவகுத்ததுடன், பாராளுமன்ற ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைத்தது. மிகக் கடுமையான ஒற்றையாட்சி முறையைக் கொண்ட இந்த அரசியல் அமைப்பால்தான் இனப் பிரச்சினை யுத்தமாக வடிவமெடுத்தது. இந்த நிமிடம் வரை நாம் அனுபவிப்பது அந்த அரசியலமைப்பைத் தான்.

இந்த அரசியலமைப்பு உருவாக்கத்திலோ, அதனை நிறைவேற்றுவதிலோ தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எவரும் சம்பந்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு முன்னரான அரசியலமைப்பு நிறைவேற்றங்களின் போதும் தமிழ் தரப்பு ஆதரவில்லாமல் தான் நிகழ்ந்தது. 

ஒரு அரசியலமைப்பு மாற்றமென்பது அடிப்படையில் அரச கட்டுமானத்தை எப்படி பிரதிபலிக்கப் போகிறது என்பது முக்கியமானது. எந்த அடிப்படை சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொள்ளப் போகிறது என்பதும் முக்கியமானது.

இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மையை இறுக்கமாக கட்டிக்காக்கின்ற; சிங்கள மொழியை இலங்கையின் உத்தியோக பூர்வ மொழியாகவும், பௌத்த மதத்தை அரச மதமாகவும் பிரகடனப்படுத்திய ஒரு யாப்பாகும்.

புதிய மொந்தையில் பழைய 'கள்'
1972 யாப்பு எப்படி சோல்பரி யாப்பை மாற்றி இலங்கையின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகக் கூறி அந்த யாப்பின் மூலம் இனப்பிரச்சினையை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியதோ அந்த இனப் பிரச்சினையை அடுத்த நிலைக்கு தள்ளியது இந்த 78 குடியரசு அரசியல் அமைப்பு. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கிடைத்த இன்னுமொரு அரிய சந்தர்ப்பத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் தவறவிட்டது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினையைத் தீர்க்க சர்வ கட்சி மாநாடு நடத்தப்படும் என்று கூறிய ஜே.ஆர் அரசாங்கம். எந்த மக்களின் கருத்தையோ, தமிழ் அரசியல் தரப்பின் கருத்துக்களையோ கூட ஆராயாமல் தன்னிச்சையாக அரசியலமைப்பை உருவாக்கி திணித்தது.

இந்த அரசியலமைப்பு ஒரு அவசர சட்டமாகவே கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதிலிருந்து அதன் எதேச்சதிகாரப் போக்கை இனங்காணலாம்.

“இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு” என்பதே இலங்கையின் அதிகார பூர்வமான பெயர் ஆனால் 78ஆம் ஆண்டு அரசியலமைப்பைப்போல சோஷலிச விரோத முதலாளித்துவ சார்பு அரசியலமைப்பும் ஆட்சியதிகாரமும் இலங்கையில் வரலாற்றில் அதற்கு முன்னர் அமைந்ததில்லை.

நீதிக்கு பூட்டு
1926இல்  எஸ்.டபிள்யூ. ஆர்.டீ.பண்டாரநாயக்கா, இலங்கைக்கு சமஷ்டி முறை அவசியம் என்று அறிவித்த போது தமிழ்த் தலைவர்கள் மாறாக ஒற்றையாட்சி போதும் என்று கருதினார்கள் என்பது உண்மை தான். ஆனால் அதே தலைவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 1948 “சமஸ்டிக் கட்சி”யை (Federal Party – தமிழரசுக் கட்சி) ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த 30வது ஆண்டில் 78 யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வேளை இனப்பிரச்சினை உக்கிரமமான வடிவம் பெற்று சமஸ்டிக் கோரிக்கை முக்கிய கோஷமாக ஆகிவிட்டிருந்தது.

ஆனால் அவையெல்லாம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமன்றி அதற்கு நேரெதிராக ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் யாப்பாக ஆக்கப்பட்டது. அதிகாரப் பகிர்வை நிராகரித்து; 78 யாப்பின் இரண்டாவது சரத்து அழுத்தமாக “இலங்கைக் குடியரசு, ஓர் ஒற்றையாட்சி அரசாகும்” என்று பிரகடனப்படுத்தியது. 9வது சரத்து “இலங்கைக் குடியரசானது பௌத்தத்துக்கு முதன்மையிடத்தை வழங்குவதோடு, புத்தசாசனத்தைக் காப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாகும்” என்றது.

இந்த  யாப்பின் 83 ஆவது சரத்தின்படி, மேற்குறிப்பிட்ட 2வது சரத்தையும், 9வது சரத்தையும்  திருத்தவோ மாற்றவோ, நீக்கவோ வேண்டுமாயின், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு (சமூகமளிக்காதவர்கள்) பெரும்பான்மைக்கு குறையாதவர்களின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அதன் பின்னர் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்களின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அதையும் தாண்டியதன் பின்னர் ஜனாதிபதியின் அங்கீகாரம் பெறப்பட்டு கையெழுத்திட்டு மாற்றத்துக்கு உள்ளாகும் என்கிறது.


அதுபோல இந்த யாப்பை மாற்ற முடியாத அளவுக்கு அதன் பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் எவருமே பெற முடியாத அளவுக்கு அதே யாப்பில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தினார் “ஆசியாவின் குள்ளநரி” என்று பலராலும் அழைக்கப்படும் ஜே.ஆர். 1956, 1960, 1970 ஆகிய தேர்தல்களில் ஐ.தே.க தோல்வியுற்று இருக்கிறது. தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறை ஐ.தே.க வின் வெற்றிக்கு சாதகமானதாக இல்லை என்று கணித்து வைத்திருந்த ஐ.தே.க தமது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய ஒரு தேர்தல் முறையை ஆராய்ந்தது. அதன் விளைவே விகிதாசார தேர்தல் முறை. அதேவேளை இந்தத் தேர்தல் முறையின் மூலம் ஒரு போதும் எவரும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாத வகையில் இயற்றப்பட்டது. தமிழ் மக்களின் நீதியான தீர்வுக்கான வாய்ப்புகள் இந்த யாப்பின் மூலம் பூட்டு போட்டு மூடப்பட்டது.

ஜே.ஆர் கணித்தது போல இந்த 40 ஆண்டு காலத்துக்குள் இந்த அரசியல் யாப்பின் அந்த முக்கிய சரத்துக்களை மாற்றவோ அல்லது புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவோ எந்த அரசாங்கத்தாலும் முடியவில்லை. இறுதியில் இன்று பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான் அரசியலமைப்பு மாற்றம் சாத்தியமாகும் என்ற நிலை உருவாகிய போது இந்த 4 தசாப்தத்துக்குள் “சிங்கள – பௌத்தம்” நிறுவனமயப்பட்டு ஒற்றயாட்சியையோ, பௌத்த மத முன்னுரிமையையோ மாற்ற விடப்போவதில்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தான் இந்த அரசியலமைப்பின் தலையாய இலக்கு என்று அறிவித்து புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் “நல்லாட்சி” அரசாங்கமும் கூட  மேற்படி சரத்துகளை மாற்றப் போவதில்லை என்று சிங்கள பௌத்தர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்பதும் தமிழ் மக்களுக்கும் பகிரங்கமாக அதனை அறிவித்திருக்கிறது என்பதும் இந்த இடத்தில் குறித்தாக வேண்டும். அது மட்டுமன்றி வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் மக்களின் அபிலாஷகளுக்கு எதிரான யாப்பு மாற்றம் நிகழ்த்தப்படுகிற வரலாறும் பதியப்படப் போகிறது.

இந்தப் புறக்கணிப்புகளே தமிழர்களை தனி நாட்டுக் கோரிக்கைக்கு நகர்த்தியதும், அதை அடையும் வழிமுறையாக ஆயுத வழிமுறையை தெரிவு செய்ததும் நிகழ்ந்தது. 

பௌத்த மதம் “மதமானது”
இவற்றின் அடிப்படையில் பௌத்த மதம் அரச மதமாக ஆனது. ஏனைய மதங்களைப் தமது மதங்களைப் பின்பற்றும் உரிமை வழங்கப்பட்டதாகவும் ஏனைய மதங்களின் உரிமைகள், அடிப்படை உரிமைகளின் கீழ் பாதுகாக்கப்படுவதாக அந்த அரசியல் அமைப்பில் கூறப்பட்ட போதும் அரசியல் அமைப்பின் படி அவை தொடர்பில் அரசாங்கத்துக்கு ஏதும் கடப்பாடோ கடமையோ நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால்,
பௌத்தமதத்தைப் (புத்த சாசனத்தைப்) பாதுகாப்பதும் வளர்ப்பதும், அரசின் கடமையாக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே சிலர் ஏனைய மதங்கள் புறக்கணிக்கப்பட்டன, பாரபட்சம் காட்டப்பட்டது எனச் சொல்ல முடியாது என வாதிடுவர். மேலோட்டமாக இது சரியான கருத்தாகப்படினும், இரண்டாவது குடியரசு யாப்பின் ஏனைய சில சரத்துக்களோடு, சேர்த்துப் பார்க்கும் போது, எமக்கு வேறுபட்டதொரு சித்திரமே தென்படுகிறது.

அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தின் 10வது மற்றும் 14வது சரத்தின் ஒன்று (உ) உபபிரிவு ஆகியவற்றின் மூலமே மற்ற மதச் சுதந்திரத்தை அங்கிகரிக்கிறது. அதேவேளை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், பதினைந்தாவது சரத்தின்   ஏழாவது உபபிரிவானது தேசிய பாதுகாப்பு, பொது  ஒழுங்கு மற்றும் பொதுச் சுகாதாரம் மற்றும்  விழுமியங்கள் தொடர்பில்   பதின்நான்காம்   சரத்திலுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் சட்டரீதியாக கட்டுப்படுத்தலாம் என்று மட்டுப்பாடு விதிக்கிறது. ஆக ஏனைய மதங்கள் தாம் பின்பற்றும், போதிக்கும், நடைமுறைப்படுத்தும் உரிமையை கட்டுப்படுத்த முடியும்.

சிங்களம் மட்டும்
மொழி விடயத்தில் மூன்று விதமாக அரசியலமைப்பு வரைவிலக்கனப்படுத்தியது. உத்தியோகபூர்வ மொழி அரச கரும மொழி, தேசிய மொழிகள் என்கிற வரையறைகள் 4 வது அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது.

உத்தியோகபூர்வ மொழியாக சிங்களத்தை ஆக்க வேண்டும் என்கிற பிரயத்தனம் ஜே.ஆருக்கு பல்லாண்டுகளாக இருந்து வந்த கனவு என்று தான் கூற வேண்டும். சுதந்திரத்துக்கு முன்னர் 22.06.1943 இல் அவர் அரச சபையில் சிங்கள மொழியை உத்தியோகபூர்வ மொழியாக ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தார் என்பதையும் இங்கு நினைவுறுத்த வேண்டும். சரியாக 35 வருடங்களின் பின்னர் தான் இயற்றிய யாப்பில் அவரது கனவை நனவாக்கி உறுதிசெய்து கொண்டார்.

எப்படி 1972 ஆம் ஆண்டின் முதலாவது அரசியலமைப்பு அறிமுகப்படுத்திய பௌத்தமத முன்னுரிமையை 1978 அரசியல் யாப்பால் மாற்ற முடியாமல் அதை தக்க வைத்துக் கொண்டதோ அது போல 72 யாப்பு அறிமுகப்படுத்திய சிங்கள மொழி உத்தியோகபூர்வமான மொழி என்கிற பிரிவையும் அப்படியே 18 வது சரத்தின் மூலம் தக்கவைத்து உறுதி செய்தது 1978 யாப்பு.

1972ஆம் ஆண்டு யாப்பைப் போலவே 1978 யாப்பும் சிங்கள மொழியை மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக அறிவித்ததனூடாக தனிச்சிங்களச் சட்டத்துக்கு அரசியல்யாப்பு அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியது.

அது மட்டுமன்றி 22 ஆம் சரத்தின் முதலாவது உபபிரிவானது இலங்கையின் நிர்வாக மொழியாக உத்தியோகபூர்வ மொழியே இருக்கும் (அதாவது சிங்களம் மட்டும்) என்று குறிப்பிட்டதுடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுப் பதிவுகளைச் செய்வதிலும், பொது நிறுவனங்களின் அன்றாட கொடுக்கல்வாங்கல்களிலும் நிர்வாக மொழியாக தமிழ் பயன்படுத்தப்படலாம் என்று கூறியது. இந்த சரத்து நீண்ட போராட்டத்தின் பின்னர் 10 வருடங்கள் கழித்து 1988 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களமும் தமிழும் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டும் என்று மாற்றப்பட்டது.


அது கூட ஏற்கெனவே பண்டாரநாயக்கவால் 1958ஆம் ஆண்டு தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டத்தாலும், அதன் பின்னர் டட்லி சேனநாயக்க ஆட்சியில் தமிழ் மொழி விசேட ஏற்பாடுகள் சட்டவொழுங்குகளாலும் சற்று சீர் செய்யப்பட்டவை தான்.

அதே வேளை இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று பிரகடனப்படுத்தியது. ஆனால் 9 ஆண்டுகளின் பின்னர் 1987இல் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் “தமிழும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும்” என்று (18(2)) சேர்க்கப்பட்டது.

தேசிய மொழிகளாக சிங்களமும் தமிழும் என்று 19வது சரத்து கூறிய போதும் இன்று வரை அதன் பெறுபேறுகளை தமிழ் மக்கள் அனுபவிக்க முடியாமல் தான் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

மேலும் 22 ஆம் சரத்தின் ஐந்தாவது உபபிரிவானது பொதுச் சேவை, நீதிச் சேவை, உள்ளூராட்சிச் சேவை, பொது நிறுவனம் அல்லது அரசாங்க அமைப்பொன்றிற்குள் இணைக்கப்பட்டு நியாயமான காலத்தினுள் உத்தியோகபூர்வமொழியில் (சிங்களமொழி) தேர்ச்சி பெறுதல் அவசியம் என்று கட்டாயப்படுத்தியது. ஆனால் சிங்களவர்களுக்கு தமிழ் மொழி கற்பது கட்டாயமில்லை என்கிற பாரபட்சத்தையும் விளங்கிக்கொள்ள வேண்டும். (இது பின்னர் மாற்றப்பட்டது).

இந்த யாப்பு ஒருபுறம் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை கதவடைப்பு செய்திருந்த அதே வேளை அதன் பின்னர்  இதுவரையான 19 யாப்பு சீர்திருத்தங்களில் பெரும்பாலானவை எஞ்சிய உரிமைகளையும் பறித்தெடுத்தன. தமிழர்களை மோசமாக நசுக்க பிரயோகிக்கப்பட்டன.

திருத்தங்களின் திருப்பம்

08.08.1983இல் 6வது திருத்தத்தின் மூலம் தனி நாட்டுக் கோரிக்கை சட்டவிரோதமாக்கப்பட்டது. தனி நாட்டுக்கான இயக்கங்களில் அங்கம் வகித்தல், பிரச்சாரம் செய்தல், ஆதரவு கொடுத்தால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு குடியியல் உரிமை பறிக்கப்படும் என்றது. ஆக இதன் மூலம் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தமிழ் அரசியல் சக்திகளினதும் தனி நாட்டுக்கான அரசியல் செயற்பாடுகள் முடக்கப்பட்டன. கூட்டணியினர் பாராளுமன்றத்தில் இருந்து விலகி தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்தனர். தமிழ் இயக்கங்கள் தலைமறைவு செயற்பாட்டுக்கு தள்ளப்பட்டன.
14.11,1987இல் இந்தியாவின் நிர்பந்தத்துடன் 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட மாகாண சபை வழங்கிய குறைந்த பட்ச அதிகாரங்களைக் கூட நடைமுறைப்படுத்த விடவில்லை. குறுகிய காலத்தில் அதுவும் கலைக்கப்பட்டு வடக்கு கிழக்குக்கு வெளியில் மாத்திரம் அது பல்லாண்டுகளாக இயங்கியது. எந்த மக்களுக்காக கொண்டு வரப்பட்டதோ அந்த வட-கிழக்கு பிரதேசங்களில் மாகாணசபை சபை ஆட்சி வழக்கொழிந்தது. 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் பின் வந்த பேரினவாத அரசியல் நிர்ப்பந்தங்களால் நீதிமன்றத்தின் மூலம் நிரந்தரமாக பிரிக்கப்பட்டது.
17.12.1988 இல் 16வது திருத்தச் சட்டத்தின் மூலம் சிங்களத்துடன் தமிழும் நிர்வாக மொழி, நீதிமன்ற மொழி என்று மாற்றப்பட்டது. ஆனால் இதில் இந்த சட்டத்திற்கு எந்தவித நடைமுறைப் பெறுமதியும் இதுவரை கிடைக்கவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு என்கிற ஒன்று உருவாக்கப்பட்டபோதும் அதனால் எந்த பயன்பாடும் இதுவரை கிடையாது. வெறும் கண்துடைப்பு ஆணைக்குழு வரிசையில் அதுவும் கிடப்பில் இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலமைப்பு கொண்டுவரப்பட்ட வேகத்துடன் 1978இல் தடைசெய்யப்பட்டது. ஆனால் அடுத்த ஆண்டே பயங்கரவாத தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழர் பிரதேசங்களின் மீதான வேட்டை தொடங்கப்பட்டது. அந்த சட்டம் நினைத்தபடி சந்தேகத்தின் பேரில் கைது செய்வதற்கும், விசாரணயின்றி நீண்ட காலம் தடுத்து வைப்பதற்கும், சித்திரவதை செய்வதற்குமான அனுமதியையும் வாய்ப்பையும் அரச படைகளுக்கு வழங்கியது. சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் வழிசமைத்தது. இந்த இரு சட்டங்களாலும் மேற்கொள்ள முடியாத அரச பயங்கரவாதத்தை மேற்கொள்ள அவசர காலச் சட்டத்தின் மூலம் மேற்கொண்டது.

1978 அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் யாப்பு நிறைவேற்றப்பட்ட அதே நாள் தமிழர்கள் தரப்பில் தமது எதிர்ப்பை வெளியிடும் வண்ணம் இரத்மலானை விமான நிலையத்தில் தரித்திருந்த யாழ்-பலாலி விமான சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அவ்ரோ விமானம் (Avro 748 4R-ACJ) குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. எந்த அரசியலமைப்பும் தமிழர்களுக்கு நீதியான தீர்வைத் தரப்போவதில்லை என்பதையும் தமக்கான தலைவிதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளப்பவதாக புதிய ஆட்சியாளர்களுக்கு கொடுத்த செய்தி அது. அரசியல் யாப்புக்கு மட்டுமல்ல, அது துரோகங்களுக்கு பதிலடியாகவும், இனி வருங்காலத்துக்கான எச்சரிக்கையாகவும் கொள்ளப்பட்டது.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்


ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 ஆண்டுகள் - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 23

ஜேம்ஸ் டெய்லர் என்கிற பெயரை இலங்கை மறக்க முடியாது. ஜேம்ஸ் டெய்லர் தேயிலையை அறிமுகப்படுத்தி 150 வருடங்கள் இந்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஒன்றரை நூற்றாண்டும் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேயிலையின் மூலம் கிடைக்கும் வருவாய் இருந்துள்ளது. இலங்கையை வளப்படுத்த, பலப்படுத்த இந்த தேயிலையே அடிப்படை ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது. உலகின் முதற் தர தேயிலையை உருவாக்கிய பெருமை அவருக்கு உரியது. அந்தத் தேயிலைக்கு 150 வயது. அதற்கு மூல காரணமாக இருந்த ஜேம்ஸ் டெய்லர் யார் என்பதை அறிவோம்.

ஆங்கிலேயர்கள் கண்டியைக் கைப்பற்றிய 10 ஆண்டுகளுக்குள் முதன் முறையாக ஜோர்ஜ் பேர்ட் (George Bird) என்பவரால் 1824 இல் கோப்பிச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜேம்ஸ் டெய்லரால்  (James Taylor) 1867 இல் தேயிலையும் ஹென்றி விக்ஹம் (Henry Wickham) என்பவரால் 1875 இல் இறப்பரும் அறிமுகமானது.

ஜேம்ஸ் டெய்லர் 29.03.1835 ஸ்கொட்லாந்தில் பிறந்தவர்.  தனது 17வது வயதில் 1852 இல் கோப்பித் தோட்டத்தில் பணிபுரிவதற்காக சிட்னி என்கிற கப்பலில் இலங்கை வந்தடைந்தார். மூன்று வருடத்துக்கு வருடாந்தம் 100 ஸ்டேர்லிங் பவுன்கள் சம்பள ஒப்பந்தத்தின் பேரில் உதவி முகாமையாளர் பதவிக்காக அவர் வந்தார். இலங்கைக்கு வருவதற்கான போக்குவரத்துச் செலவும் அவரே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

கடல் மட்டத்திலிருந்து 4100 அடி உயரத்தில் அமைந்துள்ள லூலகொந்தர தோட்டத்தில் அவர் தனது சொந்த உடல் உழைப்பையும் பிரயோகித்துத் தான் அந்த நிலத்தை சுத்தம் செய்து கோப்பிப் பயிற்செய்கைக்காக தயார் படுத்தினார். 1857 ஆம் ஆண்டு அந்த தோட்ட உரிமையாளர் ஜோர்ஜ் இறந்துபோனார். லூலகொந்தவிலுள்ள 1100 ஏக்கர் பரப்பைக் கொண்ட அந்தத் தோட்டம் கீர் டுண்டஸ் (Keir Dundas & Co) கம்பனியின் உரிமையாளர்களான ஹரிஸ்ஸன், லீக் (Harrison and Leake) ஆகியோருக்கு விற்பனை செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் ஜேம்ஸ் டெய்லருக்கு மிகவும் நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள். 1857இல்அவர் அந்த தோட்டத்தின் முகாமையாளராக ஆக்கப்பட்டார்.

லூலகொந்தர (Loolecondera) எஸ்டேட்டில் உள்ள ஜேம்ஸ் டெய்லரின் உருவச் சிலை

இலங்கையில் 1824 ஆம் ஆண்டே சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேயிலை விதைகள் பேராதனையில் பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்டது. அதன் பின்னர் 1839இலும் சீனாவிலிருந்தும் அஸ்ஸாமிலிருந்தும் கொண்டு வரப்பட்ட விதைகளை நடச் செய்து பரீட்சித்து பார்க்கப்பட்டது. இலங்கையில் கோப்பி பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்ட போது அதற்கு மாற்றீடான வழிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஜேம்ஸ் டெய்லர் தேயிலை பற்றிய கற்கைகளை மேற்கொண்டு வரும்படி வட இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். ஒரு வருடத்தில் நல்ல செய்தியோடு வந்த அவர் ஏற்கெனவே பேராதனையில் (இன்றைய பேராதனை பூந்தோட்டத்தில்) பாரிய அளவிளான பயிற்செய்கைக்குத் தயார் நிலையில் இருந்த தேயிலையை ஏற்கெனவே கோப்பிச் செய்கைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஜேம்ஸ் டெய்லர்  பணியாற்றிய கண்டி - லூலகொந்தர (Loolecondera) எஸ்டேட்டில் முதற் தடவையாக தன்னுடைய புதிய பாணியில் தேயிலையை பயிரிட்டார் ஜேம்ஸ் டெய்லர்.
ஜேம்ஸ் டெய்லர் நட்டதாக கருதப்படும் முதலாவது  தேயிலைச் செடி மரமாக
பிற்காலத்தில் அவர் எழுதிய குறிப்புகளில் தேயிலைப் பயிரிடுவதற்காக அவர் செய்த இடைவிடாத பரிசோதனை முயற்சிகள், சவால்கள், தோல்விகள், சரி பார்ப்பதற்காகவும் தரத்தை உறுதி செய்வதற்காகவும் அவர் மேற்கொண்ட பணிகள், பயணங்கள் அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இறுதியில் தனது முயற்சியில் பயிரிடப்பட்டு, பராமரிக்கப்பட்டு பரீட்சித்த தேயிலை மற்றவற்றை விட தரமானது என்பதை உறுதி செய்துகொண்டபின்னர் அதே வழியில் பெருப்பித்தார். ஜேம்ஸ் டெய்லர் தேயிலை பயிரிடும் கலையில் நிபுணரானார். 19 ஏக்கரில் தொடங்கிய பணி 1875இல் 100 ஏக்கராக ஆனது பின்னர் அதே லூலகொந்தர தோட்டத்தில் 136 ஏக்கருக்கு விஸ்தரிக்கப்பட்டது.

அதன் வளர்ச்சியைக் கண்ட பல பணக்காரர்கள் தேயிலைப் பயிற்செய்கை பற்றிய ஆலோசனை கேட்டு டெய்லரை அணுகினார்கள். அதன் பின்னர் வேகமாக  மலையகக் காடுகள் தேயிலை விளையும் பூமியாக மாறியது.

அஸ்ஸாமிலிருந்து கொண்டுவரும் தேயிலை விதைகளே தரமானது என்றே அதுவரை நம்பப்பட்டது. அஸ்ஸாம் தேயிலைக்கு நிகரான தேயிலையைத் தான் ஜேம்ஸ் டெய்லரும் செய்து பார்த்தார். ஆனால் உள்நாட்டில் தனது முறையில் வளர்க்கப்பட்ட செடி அதை விட தரமானது என்பதை உறுதிசெய்துகொண்டார். அஸ்ஸாமிலிருந்து இறக்குமதி செய்து முயற்சித்த ஏனைய தோட்டக்காரர்களும் ஜேம்ஸ் டெய்லரை பின்னர் ஏற்றுக் கொண்டார்கள்.

கண்டியில் முதன் முதலாக அவரது தேயிலை 1872 இல் விற்பனையானது. முதலாவது தேயிலை ஏற்றுமதியானது லண்டன் தேயிலை ஏலச் சந்தையில் 1875 ஆம் ஆண்டு விற்பனையானது. 1870 – 80 க்குள் பெருமளவு பிரித்தானிய கொம்பனிகள் தேயிலை உற்பத்திக்காக படையெடுத்தன. அவற்றில் பெரிய அளவில் முதலிட்டவர் தான் தோமஸ் லிப்டன். ஒரு பெரு முதலாளியான அவர் இலங்கை வந்து ஜேம்ஸ் டெய்லரை சந்தித்தார். அவர் ஆரம்பத்தில் தேயிலையை மொத்தமாக கொள்வனது செய்து  ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தைத் தான் மேற்கொண்டார். இன்றும் உலகெங்கும் லிப்டன் தேயிலை பிரசித்தம்.

1873 ஆம் ஆண்டு தேயிலையை உருட்டுவதற்கான ஒரு இயந்திரத்தை (rolling machine) செய்தெடுத்தார். அது தேயிலை உருவாக்கத்தின் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. அந்த வெற்றியின் விளைவாக பன்மடங்கு உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

ஜேம்ஸ் டெய்லர் முதலாவது தேயிலையை பயிரிடப்பட்ட லூலகொந்தர எஸ்டேட்

தேயிலைச் செய்கையின் வெற்றியைத் தொடர்ந்து 1875 இல் 10,000 ஏக்கர் நிலத்துக்கு விஸ்தரிக்கப்பட்ட செய்கை 1885 இல் அது 48,000 எக்கர்களானது. இந்தப் பணிகளுக்காகத் தான் தென்னிந்தியாவில் இருந்து பெருமளவு இந்திய வம்சாவளியினர் இறக்குமதி செய்யப்பட்டார்கள். ஏற்கெனவே கோப்பிச் செய்கைக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்திய வம்சாவளியினரும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். 1840 களில் வருடாந்தம் 30,000 பேர் இறக்குமதி செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை, 1880களில் 100,000மாக வளர்ச்சியுற்றது. கம்பளையில் 1824இல் முதற் தடவை கோப்பித் தோட்டம் உருவாக்கப்பட்ட போது 14 இந்தியத் தமிழர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.

ஜேம்ஸ் டெய்லரின் கடிதங்களிலும், குறிப்புகளிலும் தோட்டத் தொழிலாளர்களை “தொழிலாளர்கள்” என்று குறிப்பிட்டதில்லை “எனது கூலிகள்” என்றே அழைக்கிறார். அன்று பலரும் கூலிகள் என்று தால் அழைத்தார்கள். ஏன் சட்டங்கள் கூட “இந்தியன் கூலிகள்”  சட்டம் என்கிற தலைப்பில் இருப்பதையும் கண்டிருக்கிறோம். இது பற்றிய விபரங்கள் “தேயிலை அறிமுகமாகி 100 ஆண்டுகள்” (A Hundred Years of Ceylon Tea: 1867-1967 - Denys Mostyn Forrest - Chatto & Windus, 1967) என்கிற நூலில் அறியலாம்.

மலையகப் பகுதிகளில் போக்குவரத்துக்காக வீதிகளையும், ரயில் பாதைகளையும் சுரங்கப் பாதைகளையும், உட்கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கியது மக்கள் நலனுக்காக அல்ல இந்தத் தேயிலைப் பயிர்செய்கையின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காகவும், அதனை ஏற்றுமதிக்காக கொண்டு சேர்ப்பதற்காகவும் தான். உள்நாட்டு அபிவிருத்தி நோக்கம் எல்லாமே அதற்கடுத்தபட்சம் தான்.

இலங்கை வந்ததிலிருந்து இலங்கையில் வாழ்ந்த 40 ஆண்டுகளில் அவர் தனது விடுமுறைக்காக கூட தாய் நாடு செல்லவில்லை. ஒரே ஒரு முறை எடுத்த விடுமுறையைக் கூட டார்ஜீலிங்குக்கு சென்று தேயிலை விளைச்சல் பற்றிய விபரங்களை அறிந்து வந்தார்.

1891ஆம் ஆண்டு அவரது தோட்டத்துறையில் அவரது சாதனைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது. விருதுடன் கிடைத்த பணத்தை அப்படியே தோட்டத்துறை சம்மேளனத்துக்கு வழங்கினார். 

அதற்கடுத்த வருடம் வயிற்றுக்கடுப்பினால் துன்புற்று அவர் உருவாக்கிய அதே தோட்டத்தில் மரணமெய்தினார். தேயிலை அறிமுகமாகி 25 வது வருடம் இலங்கையில் தேயிலையின் தந்தை ஜேம்ஸ் டெய்லர் 02.05.1892 மரணமாகும் போது அவருக்கு வயது 57. அவர் வாழ்ந்த தோட்டத்திலிருந்து மகியாவைக்கு 24 தொழிலாளர்கள் அவரது பிரேதத்தை 18 மைல்கள் மாறி மாறி தோளில் வைத்து சுமந்துகொண்டு ஊர்வலமாக “சாமி தொரை” என்று அழுதபடி தூக்கிச் சென்றார்கள். காலை தொடங்கிய பயணம் மாலை 4 மணிக்குத் தான் மயானத்தை அடைந்தார்கள். அவர் கண்டி மகியாவை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இந்த ஆண்டு அவர் இறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன.உசாத்துணைக்காக
  • The pioneers, 1825-1900 : the early British tea and coffee planters and their way of life - John Weatherstone.- London : Quiller Press, 1986.
  • A Hundred Years of Ceylon Tea: 1867-1967 - Denys Mostyn Forrest - Chatto & Windus, 1967 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates