Headlines News :
முகப்பு » , » இரட்டிப்பாகும் மலையக பெண்களின் சுமை - மல்லியப்பு சந்தி திலகர்

இரட்டிப்பாகும் மலையக பெண்களின் சுமை - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 25) 

நாளுக்கு நாள் 'அவுட்குரோவர்' சம்பந்தமான அறிவிப்புகளும், ஏற்கனவே அமுல்ப்படுத்தப்படும் தோட்டங்களில் நிலவும் நிறைகுறைகளும் அவுட்குரோவர் முறைபற்றி ஆழமாக சிந்திக்க வைக்கின்றன. கிடைக்கப்பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் அவுட்குரோவர் முறைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்க, மத்துரட்ட பிளாண்டேஷன்  மகாஊவ தோட்டத்தில் கொண்டு வந்திருக்கக்கூடிய அவுட்குரோவர் நடைமுறை அங்கு பல்வேறு சிக்கல் நிலைமைகளை தோற்று வித்திருக்கின்றது. மொத்தமாக இதுவரை முன்னூறு தொழிலாளர்கள் அவட்குரோவர் முறைக்குள் உள்வாங்கப்பட்டுவிட்ட நிலையில் எஞ்சிய முப்பது தொழிலாளர் குடும்பங்கள் தொடர்ந்தும் தோட்ட நிர்வாகத்துக்கு கீழாக நாளாந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களாகவே இருந்து வருகின்றனர். 

இந்த நிலையில் எஞ்சிய தோட்டத் தொழிலாளர்களையும் அவுட்குரோவர் முறையில் உள்வாங்குவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு தோட்டத் தொழிலாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொழிற்சங்க மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்தற்போது நடைமுறையில் உள்ள 'அவுட்குரோவர்' முறைமை தொடர்பில் தெரிந்துகொள்வதன் மூலமே அதன் குறைபாடுகளைக் கண்டறிந்து எதிர்வரும் காலங்களில் இதனை நியமமான முறையில் நடைமுறைப்படுத்தும் பொருட்டான திட்டங்களை வகுக்க முடியும். 

தற்போதைய அவுட்குரோவர் முறையின் கீழ் இதுவரை நாட் சம்பளமாயினும் கூட அதனை முறையாக பதிந்து நடைமுறைப்படுத்திவந்த 'செக்ரோல்'  முறை நீக்கப்படும். 'செக்ரோல்' முறையில் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படும்போது அவர்கள் நிரந்தர வேலையாட்கள் என்று பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அவர்கள் பதிவுசெய்யப்பட்ட வேலையாட்கள்; (Registered Workers) என்றே அழைக்கப்பட்டனர்.

செக்ரோலில் பெயர் பதிவதோடு சரி அவர்களுக்கு நியமனக்கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருக்க மாட்டாது. எனவே தொழிலாளி தமது பதிவுகள் தொடர்பான சகல விடயத்திற்காகவும் 'செக்ரோலில்' தங்கியிருக்க நேரிட்டது. குறிப்பாக குறித்த தொழிலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் வதிவிட உறுதிப்பத்திரமாகக் கூட இந்த செக்ரோல் காணப்பட்டது.

அதேநேரம்  பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஊழியர் சேமலாப நிதியம் (EPF),  ஊழியர் நம்பிக்கை நிதியம் (நுவுகு) போன்ற தொழிற்பாதுகாப்பு முறைமைக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர். இந்த பதிவு செய்யப்பட்ட தொழிலாளிகள் தவிர்ந்த ஏனைய தொழிலாளர்கள் இருப்பின் அவர்கள் சமயாசமய ஊழியர்களாக (Casual Workers) பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு சம்பளம் தவிர்ந்த இதர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. 

தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைப் பெற்றுக்கொண்டிருந்ததுடன் வேலை நிறுத்தப் போராட்டங்களையும் செய்யக்கூடியதாக இருந்தது. அவுட்குரோவர் முறை அறிமுகமாகும்போது தொழிலாளர்களுக்காக பாரம்பரியமாக பின்பற்றி வந்த 'செக்ரோல்' முறை நீக்கப்படும். அவர்கள் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் என்ற நிலைமை மாற்றப்படும். இந்த நிலைமை மாறியவுடன் இதுவரை காலமும் இருந்து வந்த ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) போன்ற தொழிற் பாதுகாப்பு முறைமைக்குள் இருந்து தொழிலாளர்கள் விலக்கப்படுவர். தொழிலாளியாக தொழிற்சங்க உறுப்புரிமை பெறாமல் வேறு வடிவங்களிலேயே தமது தொழில் உரிமையை பாதுகாக்கும் ஏற்பாடுகளை செய்துகொள்ள நேரிடும்.


ஆக இதுவரை காலமும் இருந்து வந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படும். மாற்றீடாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் குறித்த எண்ணிக்கையிலான தேயிலை மரங்கள் ஒப்பந்த அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும். அந்த மரம் ஒதுக்கப்பட்ட பிரதேசம் 'புளொக்' (Block)   என அழைக்கப்படுகின்றது. 

தொழிலாளர்கள் சுயாதீனமாக  அவற்றைப் பராமரித்து தேயிலைக் கொழுந்து பறித்து தோட்ட முகாமைத்துவத்திற்கு விற்கவேண்டும். அந்த வருமானத்தைக் கொண்டே தமக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை மரங்களைப் (புளொக்குகளை)  பராமரிப்பதுடன் தமது வருமானத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இத்தகைய அவுட்குரோவர் நடைமுறைகளினால் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற 'புளொக்' களுக்கு ஏற்ப தொழிலாளர்களின் வருமானம் வேறுபடுகின்றது. நல்ல தேயிலை மரங்களைக் கொண்ட 'புளொக்குகள்' கிடைக்கப்பெற்ற தொழிலாளர்கள் போதுமான வருமானத்தை ஈட்டுகின்றனர். அதேநேரம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற புளொக்குகளில் தேயிலை மரங்கள் தரமற்றது எனின் அதிலிருந்து கிடைக்கப்பெறும் அறுவடையும் குறையும். எனவே தொடர்ந்தும் அந்த 'புளொக்குகளை' பராமரிப்பதிலும் தமக்கு உரிய வருமானத்தைப் பெற்றுக்கொள்வதிலும் தொழிலாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதுவே நடைமுறையில் உள்ள அவட்குரோவர் முறையின் பாரிய சிக்கலாக மாறியுள்ளது. தொழிலாளர்களிடையே வருமான ஏற்றத் தாழ்வை உருவாக்குவதாக அமைந்துள்ளது. 

மறுபுறத்தில் சுமார் ஐந்து தலைமுறைகளாக தொழிலாளிகளாகவே வாழ்ந்துவந்த மக்கள் திடீரென சுயாதீன தொழிலாளர்களாக மாற்றப்பட்டு அதனை நிர்வகிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வேலைநாள் முடிந்தவுடன் சம்பளம் என வாழ்ந்தவர்கள்  தாங்கள் தங்களது புளொக்குகளில் கிடைக்கும் வருமான அளவினை கணக்கிட்டு அந்த புளொக்குகளை பராமரித்து தங்களது வருமானத்தையும் உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு நிர்வாக முறைமையை பின்பற்ற வேண்டியிருக்கிறது. எனவே நிர்வாக திறமை கொண்ட தொழிலாளி அதிக வருமானத்தைப் பெறக்கூடிய சாத்தியமும் உண்டு. 

தேயிலைக் கொழுந்துக்கான விலை என்பது காலத்துக்கு காலம் தோட்ட நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும். இது சர்வதேச சந்தையில் தேயிலைக்கு கிடைக்கும் விலைக்கு ஏற்ப மாற்றமடையலாம். அதேநேரம் சர்வதேச சந்தையில் தேயிலைக்கு அதிக கேள்வி எற்படுகின்றபோது தேயிலைக்கொழுந்துக்கான கேள்வி அதிகரித்து விலை அதிகம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவுட்குரோவர் முறையில் இத்தகைய மிதக்கும் முறையிலான விலை நிர்ணயம் செய்யப்படுவதாக தெரியவில்லை. மாறாக தேயிலை மரங்களை ஒதுக்கும்பொது (புளொக்குகளை) செய்யப்படும் ஒப்பந்தத்தில் தேயிலைக்கான விலையும் குறிக்கப்பட்டு அதனடிப்படையில் தேயிலைக்கொள்வனவு இடம்பெறுகின்றது. எனவே, சந்தையில் ஏற்படும் கேள்வி மாற்றம் தொழிலாளிக்கு உரிய பயனைப் பெற்றுக்கொடுப்பதாக அமைவதில்லை. 

தற்போது தோட்டங்களில் நடைமுறையில் உள்ள 'போட்லீப் முறை' யில் இந்த வாய்ப்பு உண்டு. பாரிய தோட்டம் ஒன்றை நிர்வகிக்கும் அதேவேளை தங்களுக்கு அதிக அளவு கொழுந்து தேவைப்படுகின்றபோது அருகில் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உடமையாளர்களிடம் இருந்து தேயிலைக் கொழுந்துகளை கொள்வனவு செய்துகொள்ளும் நடைமுறையே 'போட் லீப்'  (Bought leaf)  எனப்படுகின்றது. 

சிறுதேயிலைத் தோட்ட உடமையாளர்கள் தோட்டக் கம்பனிகளுக்கு எவ்விதத்திலும் கடப்பாடுடையவர்கள் அல்ல. எனவே அவர்களிடம் வாங்கப்படும் தேயிலைக்கொழுந்துக்கான விலையை அவர்களே நிர்ணயிக்கின்றார்கள். அண்மைய ஆய்வுகளில் 'அவுட்குராவர்' முறையில் கொழுந்து ஒரு கிலோ 40/=  என தீர்மானிக்கப்பட்டபோது 'போட்லீப் முறையில்' வெளியாரிடம் கிலோவொன்று  90/= கொள்வனவு செய்தமையை அறியக்கிடைத்தது. இது அவுட்குரோவர் முறையிலான தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் முறைகேடான முறைமையாகும். 

இதுவரைகாலமும் நாளுக்கான சம்பளத்துக்காக வீதியில் இறங்கிப்போராடிய தொழிலாளி தனது ஒரு கிலோ கொழுந்துக்கான விலைக்காகப் போராடும் நிலைமை எதிர்காலத்தில் ஏற்படலாம். அந்த நிலைமை தற்பேதைய விவாசாயிகளின் போராட்டத்துக்கு சமாந்தரமானதாக அமையும். தனது அறுவடைக்கு அதிக விலை கோரும் விவசாயியை ஒத்ததாக தொழிலாளர் நிலைமை மாற்றமடையும். ஆனால், விவாசாயிக்கு இருக்கும் அல்லது சிறுதேயிலை தோட்ட உடமையாளருக்கு இருக்கும் நிலவுடமை அவுட்குரோவர் முறையில் தொழிலாளருக்கு கிடைப்பதில்லை. தனக்கு ஒதுக்கப்பட்ட தேயிலை மரங்கள் காலநிலை மாற்றத்தாலோ நோய் காரணங்களால் பாதிப்புற்றாலோ தொழிலாளர்களது வருமானம் மாற்றம் அடையும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஜீவனோபாயத்தையும் பாதிப்பதாக அமையும்.

தவிரவும் தேயிலைக்கொழுந்து பறிக்கின்ற வேலையை செய்வது பொதுவாக பெண்களாக காணப்படுகின்றபோது தேயிலைக் கைத்தொழிலின் ஒட்டுமொத்த இயக்கமே பெண்கள் மீது சுமத்தப்படும் நிலைமை தோன்றலாம். ஆண்கள் கொழுந்தெடுக்கும் நடைமுறை சில இடங்களில் பின்பற்றப்பட்டாலும் சுத்தம் செய்தல்இ மருந்து தெளித்தல், உரம்போடுதல் போன்ற வேலைகளை ஆண்கள் செய்யவேண்டியிருக்கும். ஆனால் இதற்காக அவர்களுக்கு நேரடியான கொடுப்பனவு ஒன்று கிடைக்காது. தமது புளொக்குகளின் மூலம் கிடைக்கின்ற வருமானத்திலேயே மறைமுகமாக ஆண்களின் உழைப்புக்கான வருமானம் கிடைக்கும் அவர்களை தேயிலைக் கைத்தொழில் ஊக்குவிப்பதாக அமையாது. இதனால் நேரடி வருமானம் தரும் வேறு தொழில்களை ஆண்கள் நாடிச்சென்றால் அவுட்குரோவர் முறையானது மலையகப் பெண்கள் இதுவரை காலம் சுமந்து வரும் தேயிலைக் கூடையின் சுமையை இரட்டிப்பாக்கும் நிலையே உருவாக்கும். இது குடும்ப அலகையும் பாதிப்பதாக அமையும்.   

(உருகும்)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates