Headlines News :
முகப்பு » » 'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர்

'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர்

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 19)


தேயிலைத் தொழில் துறைக்குள் 'அவுட்குரோவர்' முறையின் உள்வருகை  தொடர்பில் அவதானம் செலுத்தும் தேவையும் காலமும் எழுந்திருப்பதன் காரணமே, தற்போதைய தோட்ட பிராந்திய கம்பனிகளின் ஒரே மாற்றுத்தெரிவாக இந்த 'அவுட்குரோவர்' முறை இருப்பதனாலாகும். பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட மிக ஆரம்ப காலத்தில் 'பெரியாங்கங்காணிகள்' முறையினூடாக தோட்டங்களை நடாத்தி வந்தது ஒரு வகை நிர்வாக முறை. குறித்த ஒரு பெரியாங்கங்காணியின் கீழ் ஒரு 'தொகுதி' தொழிலாளர்கள் இருப்பார்கள். அது அவர்களடைய 'கேங்' என சொல்லப்படும். தேயிலைத் தோட்டத்தின் குறித்த வேலை ஒவ்வொரு பெரியாங்கங்காணிகளுக்கும் பிரிக்கப்படும். ஓவ்வொரு தொழிலாளி பற்றிய தொழில் விபரங்களையும் தோட்ட நிர்வாகம் பராமரிக்காது அவர்களுக்கான கூலியை மொத்தமாக பெரியாங்கங்காணிகளிடத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கிவிடும். தொழிலாளிகளின் வருகை வேலைக்கு ஏற்ப அதனை பகிர்ந்தளிப்பது பெரியாங்கங்காணியின் பொறுப்பு. அந்த ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பில் இருந்தும் பெரியாங்கங்காணிக்கு கமிஷன். அதனால் அவர்தான் தொழிலாளிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். 

இந்த பெரியாங்காணிகளின் மூலமான தோட்ட நிர்வாகத்தை இங்கு நினைவுபடுத்திச் செல்வதற்கான காரணமே அதுவும் ஒரு வகையான 'அவுட்சோர்சிங்' முறைதான் என்பதை விளக்குவதற்காகவே. அதாவது தோட்ட முதலாளி தனது வேலையின் பகுதிகளை ஒவ்வொரு ஏஜண்டுகளுக்கு (பெரியாங்கங்காணிகளுக்கு) பிரித்துக்கொடுத்துவிடுவார். தொழில் உரிமைகள் பற்றிய விடயங்களுக்கெல்லாம் முதலாளி பொறுப்பு கிடையாது. குறித்த ஏஜண்ட் அந்த தொழிலாளிகளை வைத்து வேலை வாங்கி முதலாளியின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக முதலாளியினால் ஒரு தொகை வழங்கப்படும். குறித்த வேலைக்கான ஒப்பந்தத் தொகையில் தனது கமிஷனில் கழித்துக்கொண்டு தொழிலாளிகளுக்கு ஏஜண்ட் (பெரியாங்கங்காணி)  பகிர்ந்தளிப்பார். இந்த முறைமையின் காரணமாகவே பெரியாங்கங்காணிகள் தனவந்தவர்களாகவும், பின்னாளில் சிறு தோட்ட உடமையாளர்களாகவும், மலையக நகரங்களில் வட்டிக்கடைகாரர்களாகவும் வரலாயினர். அதேநேரம் தொழிலாளர்களை அடக்கி ஆளுபவர்களாகவும் பெரியாங்கங்காணிகள் திகழ்ந்தார்கள். ஒரு தோட்டத்தில் அவர்களது வீடு மாத்திரம் தனியானதாக சற்று வசதியானதாக அமைந்து காணப்படும். இன்றும் தோட்டங்களில் பெரியாங்காணிகள் வாழ்ந்த வீடுகள் அமைந்திருப்பதனை அவவதானிக்கலாம். 

இந்த பெரிய கங்காணிகள் பற்றி கவிஞர் ஸி.வி. வேலுப்பிள்ளை 'நாடற்றவர் கதை' எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

'தோட்டத் துரைக்கும் தோட்டத் தொழிலாளிக்கும் எவ்விதத்தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து. தோட்டங்களில் ஜமீன் போல் அல்லது ர (ட்)ட மாத்தியா போல் சுகபோக வாழ்க்கை நடாத்தினார்கள். பட்டிணங்களில் வட்டிக்கடை, தாய் நாட்டில் (இந்தியாவில் ) நிலம், வீடு சிறுதோட்டங்களை வாங்கினார்கள். 2000 பெரிய கங்காணிகள்  இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார்கள் போல தோட்டப் பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டார்கள். அதாவது, 'தெமோதர' ராமநாதன், 'மஸ்கெலியா' செட்டியப்பன், 'பூச்சிக்கொடை' கருப்பையா, 'பாமஸ்டன்' சண்முகம், 'திஸ்பனை' சுப்பையாப்பிள்ளை, 'தலவாக்கலை' பாண்டியன், 'ஊவாக்கலை' தைலாம்பிள்ளை, 'டன்பார்' ரெங்கசாமி, 'மடகொம்பரை' குமரன், 'தெல்தொட்டை' சங்கரன், 'மொய்காகொலை' முனியாண்டி, 'நாப்பனை' பொக்குச்செல்லன் ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் சேர்த்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக் கொண்டபின்  தங்கள்  தகப்பன்களுக்கு உதவியாய் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலை செய்தனர். (நாடற்றவர் கதை - பக்கம் 43)

இந்த பெரியாங்கங்காணிகளின் ராச்சியத்தை 'குடைநிழல்' எனும் நாவலின் ஒரு அங்கமாக தெளிவத்தை ஜோசப் அழகாக விளக்கியிருப்பார். இந்த அத்தியாயத்தின் முக்கியத்துவம் கருதி 'நந்தலாலா' கலை இலக்கிய இதழ் 'பன்னிரண்டு பக்கட் கோட்டு' எனும் தலைப்பில் ஒரு சிறுகதையாக அதனைப் பிரசுரித்திருந்தது. 

இன்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பில் இந்த முறை கையாளப்படுகின்றது. எழுத்தோட்டத்தின்போது 'துணை நடிகர்கள் ஏஜண்ட்' என்று ஒருவரின் பெயரினைப் போடுவார்கள். திரைப்படத்தில் பொதுமக்களாக, ஒரு காட்சியில் அங்கும் இங்கும் நடந்து திரிபவர்களாக, சந்தையில் கூட்டமாக வருபவர்கள் எல்லாம் கூட நடிகர்கள்தான். நாம் அவர்களை நடிகர்களாக கவனத்தில் கொள்வதில்லை. அந்த நடிகர்களுக்கும் தயாரிப் பாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அந்த துணை நடிகர்களுக்கு ஒரு ஏஜண்ட். அவர்தான் இவர்களுக்கு பொறுப்பு. அந்த ஏஜண்டுக்கு தயாரிப்பாளர் ஒரு தொகையை கொடுத்துவிடுவார். துணை இயக்குனர்கள் இந்த துணை நடிகர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுப்பார்கள். பிரதான காட்சியில் பிரதான நடிகர்கள் வசனம் எல்லாம் பேசி நடித்துக்கொண்டிருக்கும்போது இடையிலே நடந்துசெல்ல வேண்டும். இந்த நடிப்புக்கான சம்பளத்தை துணை நடிகர்களின் ஏஜண்ட்தான் அவருக்கு கொடுப்பார். இப்படி நூறுரூபா, இருநூறு ரூபாவுக்கு வேலை செய்யும் ஏகப்பட்ட துணை நடிகர்கள் இன்றும் தமிழ் திரைப்பட உலகில் இருக்கிறார்கள். தயாரிப்பாளரை பொறுத்தவரையில் இவர்களைப் பயன்படுத்தும் இந்த முறை 'அவுட்சோர்ஸிங்'. 

இதுவே இந்தியாவில் பெருமளவில்; (இலங்கையில்; சிறு அளவில்) IT கம்பனிகளில் இடம்பெறுகின்றது.  பல்தேசிய கம்பனிகள் தங்களது வேலையின் பகுதிகளை வெவ்வேறு நாடுகளில் தங்களது ஏஜண்ட்கள் மூலமாக செய்விக்கின்றார்கள். அந்த வெவ்வேறு நாடுகளில் உள்ள ஏஜண்டுகளின் பெயர் 'அவுட்சோர்ஸ்'. (BPO- Business Process Outsourcing)அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பல்தேசிய கம்பனி அங்கே பகலாக இருக்கும் தருணத்தில் இந்தியாவில் இரவாக இருக்கும் போதுகூட ஊழயர்களிடம் வேலை வாங்க முடிகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிணி ஊடாக அந்த வேலைகளை முடித்து அவர்களுக்கு இணைய வழியாக அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும். 

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு உரிய நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து அனுப்பாவிடின் உரிய பணத்தினை பல்தேசிய கம்பனி செலுத்தாது. எனவே 'அவுட்சோர்ஸ' கம்பனிகளாக இருக்கும் ஏஜண்டுகள்  தொழில்நுட்ப துறையில்  ஊழியர்களை பிழிந்தெடுப்பார்கள். இதனால், இந்தத் துறையில் வேலை செய்வோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களாக உள்ளார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. வார இறுதியில் இந்த மன உளைச்சலுக்கு நிவாரணமாக விருந்துகள் ஆட்டம்பாட்டங்கள் என ஒரு ஏற்பாடு. இது இந்திய சூழலில் ஒரு கலாசார மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு டொலர் முறையில் கணக்கிட்டு பெறும் சம்பளத்தொகை இந்திய மதிப்பில் அதிகம் என்பதால் அதிகம் கவர்ச்சி நிறைந்த ஒரு தொழிலாகவும் இத்தகைய தொழிலுக்காக அந்த IT தொழில்நுட்பதுறைக் கல்விக்கான கேள்வியும் இந்தியாவில் அதிகம் நிலவுகின்றது. அதேநேரம் ஒரே இரவில் இழுத்து மூடப்படும் அவுட்சோர்ஸிங் கம்பனிகளின் செயற்பாடுகளால் திடீரென வேலை இழந்து தவிக்கும் நிலையும் உழியர்களுக்கு எற்படுகின்றது.

கொழும்பு போன்ற பெருநகரங்களில் குப்பைசேகரிப்பதை கூட இப்போது அவுட்சோர்ஸிங் முறைக்கு மாற்றிவிட்டார்கள். உதாரணமாக கொழும்பு மாநகர சபை முன்புபோல் நேரடியாக தொழிலாளர்களை பராமரித்து நேரடியாக வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியினைச் செய்வதில்லை. 

தனியார் கம்பனிகளுக்கு இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றன. 'அபான்ஸ்' போன்ற கம்பனிகள் 'அவுட்சோர்ஸிங்' கம்பனிகளாக இந்த குப்பை சேகரிக்கும் தொழிலை தமதாக்கிக்கொண்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் கீழ் இருந்த தொழில் உரிமைகளை குறித்த குப்பைசேகரிக்கும் ஊழியர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது.   

இத்தகைய தொழில் முறை பின்னணிகளுடன் கூடிய முறைதான் தற்போது தேயிலை, றப்பர் பெருந்தோட்டங்களை நோக்கி முன்வைக்கப்படும் 'அவுட்குரோவர்' முறை. பெருந்தோட்ட நிர்வாகம் உள்நாட்டு தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையினால் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட 1974-1992 காலப்பகுதிகளில் கூட 'கொத்தராப்பு' என மக்கள் மொழியில் அழைக்கப்பட்ட ஒப்பந்தமுறை (அவுட்சோர்ஸிங்) முறை பெருந்தோட்டங்களில் இருந்து வந்துள்ளது. அவை பொதுவான அல்லது வழமையான தொழிலுக்கு அப்பாற்பட்;டதான காடழித்தல், மரம்வெட்டுதல், தேயிலை மரங்களைப்பிடுங்குதல் (புதிய நடுகைகளுக்காக) போன்ற விஷேட தேவைகளுக்காக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை அப்போது சேவையில் இருக்கும் கங்காணிகளின் ஊடாக (இவர்கள் பெரியாங்கங்காணிகள் இல்லை) 'அவுட்சோர்ஸ்' முறையில் அதாவது 'கொந்தராப்பு' முறையில் செய்து வந்தார்கள்.

இவ்வாறு இந்த அவுட்சோர்ஸிங் முறை காலத்திற்கு காலம் அவ்வப்போது பெருந்தோட்;டங்களில் பகுதியளவில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அன்று 'கொந்தராப்பு'போல் இன்று அதற்கு பல்வேறு பெயர்கள் கொண்டு அறிமுகங்கள் இடம் பெற்று வருகின்றன. அவுட்சோர்ஸ் (Outsource)  முறை, அவுட்குரோவர் (Out Grower) முறை, வருமானப் பங்கீட்டு முறை Kiw (Revenue Share Model) என வெவ்வேறு பெயர்களில் இந்த புதிய முறை பற்றிய கதையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும், மாத்தளை எல்கடுவை தோட்டத் தொழிலாளி ஒருவர் வெகுலாவகமாக 'அவுட்குராவர்' முறை எனும் சொல்லை உச்சரிப்பதை அவதானிக்க முடிந்தது. இதில் இருந்து 2005 முதல் வெளித்தெரியாத வகையில் 'அவுட்குராவர்' முறை நடைமறையில் இருக்கும் நாவலப்பிட்டி – நாகஸ்தன்னை, மாத்தளை எல்கடுவை, இரத்தினபுரி- ஹந்தான போன்ற தோட்டங்களில் 'அவுட்குராவர்' எனும் சொல்லாடலுக்கு மக்கள் பழக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அடுத்துவரும் அத்தியாயங்களில் 'அவுட்குரோவர்' எனும் பெயரிலேயே அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பார்க்கலாம். 

(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates