Headlines News :
முகப்பு » » தொழிற்பிரிப்பும் - தொழிலாளர் பிரிப்பும் - மல்லியப்பு சந்தி திலகர்

தொழிற்பிரிப்பும் - தொழிலாளர் பிரிப்பும் - மல்லியப்பு சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 17)
இலங்கைப் பெருந்தோட்டத்துறைக் கட்டமைப்பில் குறிப்பாக தேயிலைக் கைத்தொழில் துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டமைப்பு மாற்றம் பற்றி கடந்த இரு அத்தியாயங்களில் பார்த்து வருகிறோம். 2011ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்படும்பொழுதே 'வெளியக உற்பத்தி முறை தொடர்பில்' தொழிற்சங்க தரப்புகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும் அமைச்சு பலத்துடனான தொழிற்சங்க தலைமைகள் அதனை பிறகு பாரக்கலாம் என விடுத்த அதிகாரத் தொணியுடன் அவை பிற்போடப்பட்டு வந்த நிலையில் இறுதியாக 2016இல் செய்யப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் அடுத்த முறை வெளியகப்பயிரிடலுக்கு ஒத்துக்கொண்டால் மாத்திரமே இந்த முறைக் கைச்சாத்திடுவோம் என கம்பனி தரப்பில் இறுக்கமான நிபந்தனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

இந்த வெளியகப்பபயிரிடல் சம்பந்தமாக கம்பனி – தொழிற்சங்க தரப்புகள் பேசிக்கொண்டாலும்  புலமை சார் மட்டத்தினர் அறிந்திருந்தாலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் சில இதனை ஆய்வுப் பொருளாக்கிக்கொண்டு ஆராய்ந்து வருகின்ற போதும்  சாதாரண தொழிலாளர்கள் மத்தியில் இந்த 'வெளியகப்பியரிடல்' என்றால் என்ன என்பது பற்றிய தெளிவு இல்லை. இந்த முறையின் சரியான தவறான பக்கங்கள் பற்றி ஆராய்வதற்கு அப்பால் அதனை சரளமாகத் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

 கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டது போல மாத்தளைப் பகுதி எல்கடுவ தோட்டங்களில் இந்த முறை எற்கனவே நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள நிலையில் இந்த முறையில் தான் அதிக வருமானம் ஈட்டுவதாக ஒரு தொழிலாளி  தெரிவிக்கிறார். எனினும் ஒதுக்கப்பட்ட காணி பற்றிய உறுதிப்பாடு  தனக்கு இல்லை என ஆதங்கப்படுகிறார். அதேநேரம் நாவலப்பிட்டி,  நாகஸ்தன்னை பகுதி தொழிலாளர்கள் தங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தேயிலைக்காணி பகுதிகள் குறைந்த விளைச்சலைத் தரும் பகுதிகளாக இருக்கின்றன என்றும் அதிக விளைச்சல் தரும் காணிப்பகுதிகளை தோட்ட நிர்வாகம் தங்கள் வசம் வைத்துக்கொள்கின்றன என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரம் ராகலை - மகாஊவா தோட்டத் தொழிலாளர்கள் வெளியகப்பியிரிடல் முறை மூலம் தாங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு (தொழிலாளர்களுக்கு) பகிர்ந்தளிக்கும் போர்வையில் வேறு சிறு கம்பனிகளுக்கும் தேயிலைக்காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சிறந்த அறுவடை கிடைக்கும் பகுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த வெளியகப்பயிரிடல் முறை பற்றி பேசும்போது ஒரு புரிதலுக்காக வேண்டி உலக கைத்தொழில் செல்நெறி பற்றி நாம் சிறு பார்வையை செலுத்த வேண்டியுள்ளது. மனித நாகரிக வளர்ச்சியில் ஆரம்பத்தில் கற்குகை வாழ்க்கை, வேட்டையாடல், பண்டமாற்று என ஆரம்பித்து விவசாயத்தை மானுடம் கண்டடைந்தபோதுதான் அதனை பசுமை புரட்சி என்றோம். அதேபோல் கடற்றொழில் வளங்களை உபயோகத்திற்கு எடுக்கும் வழிமுறைகளைக் கண்டடைந்ததும் அதனை நீலப்புரட்சி என்றோம். அதேபோல இயந்திர உபகரணங்களினூடாக பல்வேறு பாவனை பொருட்களை தயாரிக்க விளைந்தபோது அதனையே கைத்தொழில் புரட்சி என்றோம். 

இந்தக் கைத்தொழில் புரட்சியுடன் உற்பத்தித் தேவைகளுக்காக நிறுவனமயப்பட்டு இயங்கத்தொடங்கிய கைத்தொழில்களானது தொழிலாளர்களை இயந்திரம் போன்று மணித்தியாலக்கணக்கில் பயன்படுத்தத் தொடங்கிய போது  மனித உணர்வுகளும் உரிமைகளும் மீறப்படும் சூழ்நிலைகள் தோன்றவே அது குறித்த வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடித்து அதுவே சிவப்பு புரட்சியானது. அத்தகைய சிவப்பு புரட்சிகளின் விளைவே மேதினம் போன்ற தொழிலாளர் தினங்கள் தோன்ற காரணமாயின. இத்தகைய தொழிலாளர் புரட்சிகளோடு வேலை மணித்தியாலயங்கள் மட்டுப்படுத்தப்பட்டு தொழிற்சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபோது தொழிலாளர் பிரச்சினைகள் ஒரளவு தீர்க்கப்பட்டதாக எண்ணிக்கொண்டபோதும் முதலாளித்துவ கட்டமைப்புடன் இயங்கி வந்த நிறுவனங்கள் இந்த தொழிலாளர் புரட்சிகள் எற்படாத வகையிலும் அதேநேரம் அவர்களின் உழைப்பைப்பெற்றுக்கொள்ளும் வகையிலும் வெவ்வேறு நுட்பங்களை திட்டமிட்ட அடிப்படையில் உலகளாவிய ரீதியில் கண்டடைய தொடங்கின. 

அதில் பிதரானமான ஒன்றுதான் 'தொழிற்பிரிப்பு' (Division of Labour).  ஒரு தொழிலை முழுமையாக ஒரு தொழிலாளியிடமோ அல்லது ஒரு குழுவினரிடமோ விடாது அதனை பகுதி பகுதியாக பிரித்தளித்து குறித்த தொழிலுக்காகத் தொழிலாளர்களிடத்தில் தங்கியிராது தங்களது உற்பத்திகளை நிறைவு செய்துகொள்ளும் முதலாளித்துவத்தின் நுண்ணியமான ஒரு ஒடுக்குமுறை இது. உண்மையில் தொழிற்பிரிப்பு என்ற சொல்லின் ஊடாக தொழிலைப் பிரிக்கும் போர்வையில் தொழிலாளர்களைப் பிரித்தார்கள் என்பதுதான் உண்மை. 

தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டால் அது நிறுவனத்தின் ஒட்டுமொத்த தொழிலின் ஒரு பகுதிக்கான வேலை நிறுத்தமாக மாத்திரமே அமைந்தது. வேறோரு இடத்தில் அதே உற்பத்தி பொருளின் அடுத்த பகுதியை வேறாரு இடத்தில் வேறொரு தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தார்கள். எனவே வேலைநிறுத்தப் போராட்டம் எதும் ஏற்பட்டால் நிறுவனத்தின் ஒரு பகுதி தொழிலில் மாத்திரமே அது  சிக்கலை எதிர்கொண்டது. 

இத்தகைய தருணங்களில் அவற்றை சமாளிக்க அந்த குறித்த பகுதியை மாத்திரம் செய்ய இன்னுமொரு நிறுவனத்தை தயார் நிலையில் வைத்திருந்தது. எனவே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டங்களை கையாளும் தந்திரமாக இவை அமைந்தன. இந்த தொழிற்பிரிப்பின் ஊடாக ஒரு முழுமையான தொழிலைத் தெரிந்திராத தொழிலாளி உற்பத்திப்பொருளின் ஒரு பகுதியை மாத்திரமே தெரிந்து வைத்திருக்கும்படி முதலாளித்துவம் திட்டமிட்டது. இதற்கு முதலாளிய நிறுவனம் வைத்துக்கொண்ட பெயர் 'சிறப்புத் தேர்ச்சி' ’(Specialization).

  உண்மையில் தொழிலாளி ஒரு பொருளின் முழுமையை அல்ல ஒரு பகுதியைச் செய்வதற்கு மாத்திரமே சிறப்புத் தேர்ச்சி உடையவனாக்கப்பட்டிருந்தான். எனவே அவனால் முழுமையான ஒரு தொழிலைத் தெரிந்து வைத்துக்கொள்ளும் நிலைமை மட்டுப்படுத்தப்பட நிறுவனத்திற்கு கட்டுப்பட்டவனாக மாற்றப்பட்டான். ஓவ்வொரு தொழிலாளிக்கும் உற்பத்திப்பொருளின்  ஒரு பகுதியை மாத்திரமே செய்யத் தெரிந்தது. எனவே அவன் தொழிலாளர் நிலையில் இருந்து மாற்றம் பெறுவது, தான் கற்றுக்கொண்ட தொழிலின் ஊடாக ஒரு சிறு கைத்தொழிலை தொடங்குவது என்பது கூட சிக்கலானதாக மாறியது. இது காலப்போக்கில் எல்லாத் தொழில் துறைக்கும் மாறியது. இவை உலகத்தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பு என்பதனை தொழிலாளர் சார்பான இயக்கங்கள் தாமதமாகவே கண்டறிந்தன. 

இந்த தொழிற்பிரிப்பின் அடுத்த கட்டமே 'வெளியக வியாபார செயன்முறை '(BPO - Business Process Outsourcing). இந்த முறை தொழிற்பிரிப்பின்  கட்டமைப்பைவிட இன்னும் மோசமாக தொழிலாளர்களை சுரண்டலுக்கு உள்ளாக்கியது. தனது முதலாளி யார் என தெரியாமலேயே தொழிலாளி தனது உழைப்பை விற்க வேண்டிய நிலைமை உருவானது. இந்த முறைமை கைத்தொழில் புரட்சியின் அடுத்த கட்டமான தொழில்நுட்ப புரட்சியோடு தோற்றம் பெறுகிறது. மற்றைய புரட்சிகளின் கால எல்லைகளை விட தொழில்நுட்ப புரட்சியானது மிக துரிதமாக தகவல்புரட்சி யுகத்துக்குள் உலகத்தை இட்டுச்சென்றது.

  நாம் இப்போது தகவல் புரட்சி யுகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் தகவல்கலைப் பகிர்ந்து கொள்வதே நமது தலையாய கடமை என்ற அளவுக்கு உலக ஒழுங்கு எம்மை மாற்றிப்போட்டிருக்கின்றது. பேஸ்புக், ட்வீட்டர், வட்ஸ்அப், வைபர் என ஏகப்பட்ட வடிவங்களில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை முழுநேரத் தொழிலாக செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம். அதிலும் அவசரமாக யார் முகநூலில் பதிவிடுவது எனும் போட்டி நமக்குள்ளேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. பேஸ்புக் ஊடாகவே நமது சந்தோஷம் முதல் சண்டை வரை, நட்பு முதல் புரட்சி  வரை வைத்துக்கொள்ளும் அளவுக்கு தகவல் யுகம் நம்மை ஆட்கொண்டு விட்டது. இதனால் நமக்கு என்ன வருமானம் ? செலவுதான். ஆனால், நமது செலவு யாருக்கோ வருமானத்தைத் தருகிறது. இல்லாவிட்டால் எப்படி இத்தனை கருவிகளும் நுட்பங்களும் இயங்க முடியும். ஆக கண்ணுக்கு தெரியாமல் நாம் யாருக்கோ உழைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறோமே அதனால்தான் தொழிலாளர்களை ஒன்றுபடுங்கள் என கோஷமிட்டாலும் அவனால் முகநூலில் மாத்திரமே ஒன்று பட முடிகிறது.  
IT (தகவல் தொழில்நுட்ப) நிறுவனங்களில் இந்த தொழிற்பிரிப்பு வெற்றிகரமாக இடம்பெற்று இந்தியா போன்ற நாடுகளில் இரவு பகலாக யாரிடம் வேலை செய்கிறோம் என தெரியாமலேயே இளைஞர் சமுதாயம் தொழிலாளர்களாக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்தவாறே முதலாளிகள் வெற்றிபெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இளைய தலைமுறை இந்த மோகத்தில் திளைத்திருக்க விவசாயம் செய்ய வழியில்லை என விவாசாயி தற்கொலை செய்துகொண்டிருக்கிறான். 

இந்த BPO முறையின் Outsource இல்  இருந்து பிறந்தததுதான் 'வெளியகப்பயிரிடல்' (Out grower).

இது எப்படி நமது தேயிலைக்குள் நுழைகிறது?  இந்த அத்தியாயத்தின் தலைப்பின்படிப் பார்த்தால் 'பிரிக்கப்போகிறார்கள்'. இதன் பின்விளைவுகள் எவ்வாறானதாக இருக்கப்  போகிறது என ஆய்ந்தறிந்து  நாம் எப்படி அதனை எதிர்கொள்ளப்பொகிறோம் என்பதே நம்முன் உள்ள சவால். இல்லாவிட்டால் 1992 இல் தனியார் மயம் செய்து  கூட்டு ஒப்பந்த முறை கொண்டுவந்த  நேரத்தில் வாளாவிருந்துவிட்டு 25 வருடம் கழித்து நீதி மன்றம் சென்று நீதி கேட்ட நிலையே ஏற்படும்... 
(உருகும்)

நன்றி - சூரியகாந்தி

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates