Headlines News :

பதூதா கண்ட இலங்கை! - என்.சரவணன்

(அறிந்தவர்களும் அறியாதவையும் - 11)


“பயணம் – உங்களை அமைதியிலிருந்து விடுவிக்கும். பின்னர் உங்களை ஒரு “கதை சொல்லி”யாக்கிவிடும்”
என்பார் இப்னு பதூதா. ராகுல சாங்கிருத்தியாயனின் எழுத்துக்கள் கூட நமக்கு அதனை மெய்ப்பித்துள்ளன. அவரது “ஊர் சுற்றிப் புராணத்தில்” சொக்காதவர்கள் எத்தனை பேர் உளர்.

இப்னு பதூதா (Ibn Battuta-1304-1369) என்றழைக்கப்படும் அபு அப்துல்லா முகமது இபின் பதூதா மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கல்வியாளர். ஒரு நாடுகாண் பயணியும் கூட. இவரது பயணங்களும் அவை குறித்த துல்லியமான குறிப்புகளும் இன்றளவும் உலகளவு பிரசித்தமானவை. பல வரலாற்று ஆசிரியர்கள் அந்த குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு மேலதிக வரலாற்றை ஆராய பயன்படுத்தி வருகிறார்கள். இலங்கை பற்றி அவர் எழுதிய குறிப்புகள் கூட இன்று வரை இலங்கை குறித்த பல விடயங்களை ஆராய உதவி வருகின்றன. இவரது பயணங்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் நீடித்தது. 44 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்.

தனது 20வது வயதில் மெக்காவுக்கு பயணித்து புனிதக் கடமைகளை நிறைவேற்றிவிட்டு அங்கேயே இரு வருடங்கலைக் கழித்தார். மெக்காவைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் கலாசாரம், வாழ்க்கை முறை பற்றிய ஆராய்தலில் அவர் மேலும் உலக நாடுகள் பலவற்றை ஆராய ஆர்வம் கொண்டார். மெக்காவிலிருந்து வணிகர்கள், கடலோடிகளோடு சேர்ந்து பயணத்தைத் தொடங்கினார். 

முகமது பின் துக்ளக்
அந்த பயணத்தில் 1334இல் அவர் டில்லியை அடைந்தபோது இந்தியாவில் முகமது பின் துக்ளக் ஆண்டுகொண்டிருந்தார். பேர்சி மொழியை அறிந்திருந்த மன்னர் துக்ளக்கை சந்தித்த பதூதா துக்ளக்குக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து பலமுறை வாழ்த்தியதில் துக்ளக் மகிழ்ந்து போனார். பதூதாவுக்கு ஐயாயிரம் தினார் வருட ஊதியம் கொடுத்து நீதிபதி பதவி வழங்கினார். விசித்திரமும் கொடூரமுமான தண்டனைகளை வழங்கி வந்த முன்கோபியான துக்ளக்குக்கு பதூதாவும் ஒரு ஆலோசகரானார். துக்ளக் கொடுத்த தண்டனையைப் பற்றி பதூதா குறிப்பிடுகையில் விசாரிக்குமுன்னமே தண்டனையை வழங்கி வந்த துக்ளக் கைகளை வெட்டி கால்களிலும் கால்களை வெட்டி கையிலும் தைத்து விடுங்கள் என்று தீர்ப்பு வழங்கி விடுவாராம். நாளாந்தம் அரசவையில் நூற்றுக்கணக்கான மக்கள் விலங்கிடப்பட்டும், கட்டப்பட்டும் காணப்படுவார்கள். அவர்களுக்கு மரணதண்டனைகளும், சித்திரவதைகளும், அடிகளும் கொடுக்கப்படும் என்கிறார். 

துக்ளக்கின் ஆட்சியை கிண்டல் செய்யும் வகையில் சோ ராமசாமி “முகமது பின் துக்ளக்” 1971 என்கிற ஒரு திரைப்படத்தையும் வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கும். “சோ”வின்  சஞ்சிகைக்கும் கூட துக்ளக் என்றே பெயரிட்டிருந்தார்.

பதூதாவுக்கு சில கிராமங்களில் பெரும் வரி வசூலை எடுத்துக் கொள்ளும் உரிமையையும் கொடுத்தார் துக்ளக். பதூதா இந்தியாவில் வாழ்ந்த அந்த  7 ஆண்டுகளில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல இடங்களுக்கு பயணம் செய்து வந்தார். துக்ளக்கின் முட்டாள்தனமான செய்கைக்களுக்கு பதூதாவின் பங்கு முக்கியமானது என்று மறுபுறம் இன்றைய பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

துக்ளக்குக்கு எதிரான இந்துக்களின் எதிர்ப்புரட்சி தோற்கடிக்கப்பட்டது. எதிர்ப்புரட்சியாளன் ஒருவனுடன் பதூதாவுக்கும் தொடர்பிருந்ததால் தன்னையும் துக்ளக் கொன்றுவிடக்கூடும் என்று பதூதா அஞ்சி தலைமறைவான போதும் பின்னர் பதூதாவை சந்தித்த துக்ளக் அவரை சீனாவுக்கு தூதராக நியமித்தார். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பதூதா அங்கிருந்து தப்பினார். சீனாவுக்கு செல்வதற்காக சென்ற கப்பல் விபத்துக்கு உள்ளாகி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு மாலைதீவுக்கும், பின்னர் இலங்கைக்கும் வந்தார். அங்கிருந்து பின்னர் சீனா சென்றார். மார்க்கோ போலோவுக்குப் பின்னர் கடல் வழியாக சீனா சென்ற வெளிநாட்டு பயணியாக பதூதா கருதப்படுகிறார்.

பதூதாவின் பயணக் குறிப்புகளை அவரது இறுதிக் காலத்தில் மொராக்கோவின் சுல்தான் ஆணையின்படி, பதூதா சொல்லச் சொல்ல இபின் சஜாயி என்ற கவிஞரால் எழுதப்பட்டது. சஜாயி அதனை தொகுத்து நீண்ட பயண நூலாக்கி அதற்கு புத்தக வடிவம் கொடுத்துள்ளார். மூன்று தொகுதிகளாக அது வெளியிடப்பட்டு உலகெங்கிலும் பல மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (IBN BATTUTA TRAVELS IN ASIA AND AFRICA 1325-1354 Translated and selected by H. dl R GIBB) இந்தியா, இலங்கை, மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகள்; 14 ஆம் நூற்றாண்டில் தமது நாட்டு நடப்பு, கலாசாரம், ஆட்சிமுறை, பண்பாட்டு முறை உள்ளிட்ட பல விபரங்களை அறிய இப்னு பதூதாவின் குறிப்புகளை கையாளுகின்றனர். (அந்த அரிய நூலை உங்களின் பார்வைக்காக கீழே நான் இணைத்திருக்கிறேன்)


இலங்கை விஜயம்
அவர் இலங்கையில் 1341ஆம் ஆண்டு கரையிறங்கிய போது யாழ்ப்பாண மன்னன் (ஆரியச்சக்கரவர்த்தி) மார்த்தாண்ட சிங்கை பரராசசேகரன் (1325-1348 ஆட்சிகாலம்) அவர்களின் விருந்தினராக ஆனது எப்படி என்பது பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. மூன்றாண்டுகள் அவர் இலங்கையில் கழித்துள்ளார். 

“ஆரியச்சக்கரவர்த்தி என்னை வரும்படி ஆளனுப்பினான். நான் அவனது தலைநகரான பத்தளத்தில் அவனிடம் சென்றேன். அந்த இடம் துப்பரவாகவும் சுற்றுமதிலையும் கொண்டிருந்தது. அண்மையான கரைப்பகுதியில் கறுவா அடிமரங்கள் நிறைந்திருந்தன. பட்டை உரிக்கப்பட்ட கறுவாக்கள். ஏற்றுமதிக்காக, கரையில் குவிக்கப்பட்டிருந்தன. கறுவா மரங்கள் நிறைந்திருந்ததால், வத்தளைப்பகுதியாக இருந்திருக்கலாம். உருவவழிபாட்டு மன்னனின் சமூகத்தில், நான் சென்றபோது. அவன் தன்னருகில் என்னை அமரச் செய்து, கனிவுடன் உரையாடினான். உமது நண்பர்களும் பாதுகாப்பாக கரையிறங்கட்டும். திரும்பிச்செல்லும்வரை அவர்கள் எனது விருந்தாளிகளாவர் என்றான்.

அதன்பின். எனக்குத் தங்குமிடவசதிசெய்து கொடுக்கும்படி மன்னன் கட்டளை இட்டான். அங்கு மூன்று நாட்கள் நான் தங்கியிருந்தேன். எனக்குப் பெரும் முக்கியத்துவம் தரப்பட்டது. நாளுக்கு நாள் அது அதிகரித்தது. மன்னன் பாரசீகமொழியை அறிந்திருந்தான். நான் பிறநாடுகள், மன்னர்கள் பற்றிசொன்ன கதைகளை அதிக விருப்புடன் செவிமடுத்தான். ஒருநாள். மன்னன் கரங்களில் முத்துக்களை வைத்திருந்த சமயத்தில். அவன் முன்னிலையில் சென்றேன். அம்முத்துக்கள். அவனது ஆளுகைக்குட்பட்ட கடற் பிராந்தியத்தில். முத்துக் குளிப்பால் பெறப்பட்டவை. மன்னனின் பணியாட்கள் அங்கு முத்துக்களைத்தரம் பிரித்துக் கொண்டிருந்தனர்.

நீர் சென்று வந்த நாடுகளில், எங்கேனும் முத்துக்குளிப்பைப் பார்த்திருக்கிறீரா? என்று மன்னன் கேட்டான். ஆம். இபின் அஸ்லாமலிக்குச் சொந்தமான கொயிட்தீவில். முத்துக்குளிப்பு நடைபெறுவதைக் கண்டிருக்கிறேன் என்றேன் நான். மன்னன் தன் கையிலிருந்த முத்துக்களைக் காண்பித்து.

அத்தீவில் இத்தகைய முத்துக்களுக்கு ஈடிணையாக யாதாயினும் முத்துக்கள் கண்டிருக்கிறீரா? என்று கேட்டான். இப்படியான சிறந்த முத்துக்கள் ஒன்றைத் தானும் நான் பார்க்கவில்லை என்றேன். எனது பதிலால் மகிழ்ச்சியடைந்த மன்னன். இவை உம்முடையதே என்றான். அத்துடன் நீ விரும்பும் எதனையும் என்னிடம் கேட்கலாம். நாணமுற வேண்டாம் என்றும் மன்னன் கூறினான்.

அதற்கு நான் ஆதாமின் பாதத்தினை தரிசிப்பதை ஆவலாகக் கொண்டுள்ளேன் என்றேன். “அல்லாவின் மலை” என்றே அன்றைய இஸ்லாமிய யாத்திரிகர்கள் அழைத்தார்கள்.

அது சுலபமானது என்று சொன்ன மன்னன். வழிகாட்டுவதற்கு ஆட்கள் அனுப்பி வைப்பதாக சொன்னான். மன்னன் ஒரு பல்லக்கையும், பல்லக்கு காவுவோர் நால்வரையும். பத்து பிரமுகர்களையும், அடிமைகள் சிலரையும் வழித்துணைக்கு பதினைந்து பேரையும் (வீரரையும்) கூடவே அனுப்பி வைத்தான். .” 

இந்த குறிப்புகளில் இலங்கையில் தமிழ் பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்ததை பதூதா குறிப்பிடுகிறார். மாத்தறையில் தெவிநுவரவில் பெரும் சைவக் கோவில் இருந்ததையும், அங்கிருந்த தெய்வச்சிலை ஒரு ஆள் அளவு தங்கச் சிலை என்றும் குறிப்பிடுகிறார். மாத்தறை வரை சிங்கை சிங்கை மன்னனின் ஆட்சி பரவியிருந்ததால் தான் அம்மன்னனின் உதவியுடன் தண்டேசுவரர் சிவாலயத்தையும் கண்டு வந்திருக்கிறார் பதூதா. “சிறிபாத” (சிவனொளி பாதமலை) பற்றிய வரலாற்றாதாரத்துக்கு பதூதாவின் குறிப்புகளை பயன்படுத்தும் சிங்களத் தரப்பு; அன்றைய ஆட்சியாளர்களைப் பற்றிய தகவல்களை வசதியாக மறைத்து விடுவதை எங்கெங்கும் காண முடிகிறது. 

அதுமட்டுமல்ல இப்னு பதூதா சந்தித்தது புவனேகபாகு அரசரைத்தான் என்று பல சிங்கள கட்டுரைகளிலும் நூல்களிலும் எழுதித்தள்ளியுள்ளத்தை காண முடிகிறது.  பதூதாவின் குறிப்புகளிலோ தெளிவாக இலங்கையை (Serendib) ஆக்கிரமித்து ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னனான ஆர்ய சக்கரவர்த்தியைத் தான் சந்தித்தாக குறிப்பிடுகிறார். பல பக்கங்களில் அந்த அனுபவங்களை விரித்துச் செல்கிறார்.

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாற்றை ஆராய்பவர்களும் கூட இலங்கையில் இப்னு பதூதாவின் பிரயாணங்களின் போது அவர் சந்தித்த முஸ்லிம்கள் பற்றியும் அவர்களின் வாழ்விடங்கள் பற்றியும் எழுதியுள்ள குறிப்புகளை பயன்படுத்துவது வழக்கம்.

இப்னு பதூதா இலங்கையின் வரலாற்றில் ஒன்று கலந்தவர். அதனால் தான் இலங்கையின் பாடப்புத்தகங்களிலும் பரீட்சை வினாத்தாள்களிலும் அவரை தவிர்க்கமுடிவதில்லை. ஆனால் இலங்கையின் இனத்துவ வழிமுறையின் திரிபு அவரையும் விட்டுவைக்கவில்லை.

1369இல் மொரோக்கோவில் மரணமான போது அவரது வயது 64. உலகளவில் இப்னு பதூதா என்கிற பெயர் பிரசித்தம் பெற்றிருக்கிறது. அவரின் பெயரில் நாவல்கள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவரின் பெயரில் அரபு நாடுகளில் பல மாளிகைகளுக்கும், கட்டடங்களுக்கும் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. வரலாற்றாசிரியர்கள் பதூதாவை தவிர்த்து விட்டு கடக்க முடிவதில்லை.



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates