Headlines News :
முகப்பு » » மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்

மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டு தீர்மானம்

வருடாந்த சம்பள உயர்வுடனான மாத சம்பளத் திட்டமே தீர்வு 
மக்கள் தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்

பெருந்தோட்டங்கள் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு அக்காணிகளில் பெருந்தோட்ட மற்றும் ஏனைய விவசாய தொழிற்துறைகள் கைத்தொழில் என்பன கூட்டுறவு வடிவ முறையில் வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட வேண்டும். இதுவே நீண்;ட காலத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் மலையக தேசிய இனத்திற்கும் பொருளாதார விடிவை தேடித்தரும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் சம்பள உயர் தொடர்பாக தற்போது இருக்கும் பிரச்சினைகளையும் குளறுபடிகளையும் தீர்ப்பதற்கான ஒரே வழி பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத சம்பளத்தை உறுதிசெய்வதாகும். அதனை உறுதி செய்து கொள்ளும் வரை கூட்டு ஒப்பந்தத்தில் நியாயமான சம்பளத்தையும் வருடாந்த சம்பள உயர்வையும் உறுதி செய்யும் ஏற்பாடுகள் உள்ளடக்கப்படல் வேண்டும். அத்துடன் இதுவரை வென்றெடுக்கப்பட்டுள்ள உரிமைகளை பறிப்பதாகவும் உள்நாட்டு, சர்வதேச தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும் எந்த ஏற்பாடுகளும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படக் கூடாது. இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் இருப்பை பாதிக்கும் எந்தவொரு நேரடியான, மறைமுகமான நிகழ்ச்சிநிரல்களை எக்காரணத்திற்காகவும் அங்கீகரிக்க முடியாது என்றும், அவ்வாறான முயற்சிகளை தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் மாநாட்டில் அறைகூவல் விடுக்கப்பட்டது.  

உரிமை போராட்டங்களில் உழைப்போரின் பங்களிப்பை உயர்த்துவோம் எனும் தொனிபொருளில் காவத்தை கூட்டுறவு சங்க மண்டபத்தில் 02.04.2017ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பொருளாளர் என். தியாகராஜா, உப தலைவர் எம். புண்ணியசீலன் தலைமையில் இடம்பெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் மாநாட்டிலும் வருடாந்த பொதுக் கூட்டத்திலும் பெருந்தோட்டத் பொருளாதாரமும் தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் ஆராயப்பட்டன.

அக்கூட்டத்தில் பிரதான உரையை நிகழ்த்திய இ. தம்பையா பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிலாளர் வர்க்கம் என்ற அடிப்படையிலும், மலையகத் தமிழர் என்ற தேசிய இனம் என்ற அடிப்படையில் இனரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை அடைய நேர்மையான பலமான புதிய சிந்தனைகளையும் அணுகுமுறைகளையும் கொண்ட தொழிற்சங்க இயக்கமும், தேர்தல் அரசியலுக்கு அப்பாலான வெகுஜன அரசியல் இயக்கமும் பலமாக கட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் நேர்மையான மலையக அமைப்புகள் அனைத்தும் பொது இணக்கப்பாட்டுடன் இயங்க முன்வரை வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களினதும் மலையக தமிழ் மக்களினதும் நீண்டகால உரிமை கோரிக்கைகளையும் நாளாந்த உரிமை கோரிக்கைகளையும் வென்றெடுக்கவும், நாட்டின் ஏனைய துறைசார் தொழிலாளர்களினதும், விவசாயிகளினதும் ஒத்துழைப்பையும் சர்வதேச ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை வலியுறுத்தினார்.

மலையக தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமான அங்கீகரிக்கப்பட்டு, அவர்களின் அரசியல் தன்னாட்சியதிகாரம், சுயநிர்ணயம், சுயாட்சி, சமத்துவம் என்ற அடிப்படையில் உறுதி செய்யப்படல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந் மாநாட்டிற்கு விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், கொம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம், மலையக சமூக நடவடிக்கைக்குழு என்பன வாழ்த்துச் செய்திகளுடன் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு தமது ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொண்டன. அத்துடன் இந் நிகழ்வில் சர்வதேச தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகளும் இடம்பெற்றன.   

  


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates