Headlines News :
முகப்பு » , » களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும்! (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும்! (சத்தியக் கடுதாசி) - என்.சரவணன்


நிதமும் நம்மை வழிநடத்திச் செல்லும் சிந்தனாமுறை பற்றியது இந்த ஆரம்பக் குறிப்பு. நம்மை நிதமும் ஆட்கொண்டு வழிநடத்திச் செல்லும் “கருத்துநிலை” நமது எண்ண ஓட்டத்துக்கும், செயலோட்டத்துக்கும் பெரும்பாலும் ஒத்திசைந்து போகிறது. நாம் அவற்றை வழிநடத்துவதற்குப் பதிலாக ஏற்கெனவே சமூக அளவில் செல்வாக்குச் செலுத்திவரும் அந்த கருத்துநிலை நம்மையும் விட்டுவைப்பதில்லை. நம்மை அது இழுத்துச் சென்று விடுகிறது. சில வேளைகளில் சடுதியாக நின்று நிதானித்து திரும்பிப் பார்த்தால் ஏன் நாம் அதனைக் கட்டுப்படுத்தவில்லை என்று சினந்து கொள்வோம்.

மனித சமூகம் பிழையான சித்தாந்தங்களின் பிடியில் வீழ்ந்திருப்பதும், அதை அறியாமலேயே அதன் வழியில் ஓடிக்கொண்டிருப்பதும் புதுமையானதல்ல. அதுவும் இதுவுமான முரண்பாடுகள் தான் ஒரு சமுதாயத்தின் இயங்கியல் விதி.

அதுவே தான் வளர்ச்சியின் விதியும் கூட. முரண்பாடுகள் இல்லாத இல்லாத சமூக இயக்கம் கற்பனையானது. எதிரும் - புதிரும், இணைவும் – முரணும், நட்பும் – பகையும் என இத்தகைய முரண்பட்ட குழப்பங்களும் சேர்ந்து தான் சமுதாய வளர்ச்சி தன திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

ஆக நம்மை வழிநடத்தும் சிந்தனாமுறை என்பது முற்போக்காகவும், சரியானதாகவும், நியாயமானதாகவும், நீதியானதாகவும், உண்மையாகவும் முற்றிலும் இருப்பதில்லை. அவற்றை ஏற்று ஒழுகி பின்தொடர்தல் நமக்கு வசதியாக இருப்பதே அதன் மீது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பின்வாங்குவதற்கான காரணம். அடிப்படைக் காரணம்.

அன்றாடம் நமது நிகழ்ச்சிநிரலைத் தீர்மானிப்பது நாமா அல்லது நம்மை ஏற்கெனவே கொலோச்சுக்கொண்டிருக்கும் சிந்தனா வடிவங்களா என்கிற கேள்வியை சற்று அமைதியாக சுயவிமர்சனம் செய்தால் இதற்கான விடை கிடைத்துவிடும். நமது நிகழ்ச்சிநிரல் பெரும்பாலும் நமது கட்டுப்பாட்டில் இல்லை. நம்மை சூழ இயங்கும்/இயக்கும் சமூக அமைப்பு முறையிலும், ஆட்சி அமைப்பு முறையிலும், இவற்றை வழிநடத்தும் ஆதிக்க சிந்தனாமுறையிலுமே நமது நிகழ்ச்சி நிரல் தங்கியிருக்கின்றன. ஆக அதன் அங்கமாக இருக்கும் நமது வெளிப்பாடுகளிலும் அவற்றின் பாத்திரம் இன்றிமையாதது. நமது பகுத்தறிவுக்கு எட்டாதவை நம்மை வழிநடத்தும் போக்கை மாற்றியமைக்க வேண்டாமா. நமது நிகழ்ச்சிநிரலை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டாமா? அதற்குத் தான் சில பகுத்தறிவுப் பயிற்சி தேவைப்படுகிறது. அதற்குத் தான் கொஞ்சம் கசப்பும், திகட்டலும் உள்ள மருந்து தேவைப்படுகிறது. ஆனால் அது தரப்போகும் ஆரோக்கியமும், சுகமும் நமது வெற்றிக்கு வழிகோலப் போகிறது.

பல சந்தர்ப்பங்களில் நியாயமான, விஞ்ஞானபூர்வமான கருத்துக்கள் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். ஆனால் நம்மை வழிநடத்தும் ஆதிக்க சிந்தனைக்கு அது ஏற்புடையதாக இருக்காது. இவற்றில் மதவாதம், சாதித்துவம், ஆணாதிக்கம், நிறவாதம், இனவாதம், பால்வாதம் என பலவற்றை உள்ளடக்க முடியும்.

எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாக இருக்கும் அதேவேளை சரியானதாக இருக்க முடியும்.

பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், கூடவே மூட நம்பிக்கைகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் போன்ற கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் வெற்றியும், விடுதலையும், ஆரோக்கியமும், அவற்றின் நீட்சியாக புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றியும் தங்கியிருக்கிறது.

தேசிய விடுதலைப் போராட்டத்தின் மோசமான பின்னடைவுக்கு இவற்றின் பாத்திரம் முக்கியமானது. இன்றைய நிலையை ஆராயும் பற்பல மேதாவிகள் புறக்காரணிகளின் மீது மாத்திரம் பழியை சுமத்திவிட்டு அகக் காரணிகளை வசதியாக புறந்தள்ளி வைப்பதன் அரசியல் விளங்காமலில்லை. ஆனால் அந்த அகக் காரணிகள் மீது சுயமர்சனம் செய்யாமல், அதனை சரிசெய்யாமல் விடுதலையை சற்றும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல முடியாது என்பதே நமக்கு வரலாறு கற்பித்திருக்கும் பாடம்.

இந்த கசப்பை விரும்பாவிட்டாலும் விழுங்கத்தான் வேண்டும். நோய் தீர்ந்து நிமிர விழுங்கத்தான் வேண்டும். உண்மைகள் என்றும் இனிப்பானவயாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை தான் நமது முதல் நோய்.

நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்ததை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.

நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை; நம்மால் ஜீரணிக்க முடியாதவை; நம்மை மகிழ்வூட்டடாதவை; நமக்குச்ந சோர்வூட்ட வல்லவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.

நாம் நம்பும் உண்மைக்குப் புறம்பானவை பல நமக்கு வசதியானது, வாய்ப்பானது, களிப்பூட்டுவது, இன்பத்தைத் தருவது.

கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் பெரும்பாலானோர் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத்தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் ஒட்டுமொத்த வெற்றியில் இறுதியில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

கசப்பைக் கடந்து தான் களிப்பை அடைய முடியும் என்பதை நம்புபவர்கள் மாத்திரமே எந்த ஒன்றிலும் தமக்கான தீர்வையும், விடையையும் கண்டறிய முடியும். களிப்பை ஏற்படுத்தும் வழிகளின் மூலம் தான் தீர்வை கண்டடையலாம் என்பவர்கள் வாழ்நாள் முழுவதும் தீர்வைத் தேடிக்கொண்டே இருப்பதைத் தவிர அதனைக் கண்டடையப் போவதில்லை. அந்த “களிப்பும்” காலப்போக்கில் அர்த்தமிழந்து போய்விடும் என்பது நிதர்சனம்.

எனது எழுத்து எவரையும் களிப்பூட்டும் என்கிற எந்த உத்தரவாதமும் தராது. ஆனால் நிச்சயம் உண்மைக்கு உத்தரவாதமளிக்கும். மெய்யை உணர விளைபவர்களுக்கு ஒத்தாசையாக இருக்கும்.

இது நான் தரும் "சத்தியக் கடுதாசி"

நன்றி - IBC தமிழ் பத்திரிகை

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates