Headlines News :
முகப்பு » » எங்கள் இனத்துக்குள்ளும் பல ஒடுக்குமுறைகள் இருப்பது கவலையளிக்கிறது - மல்லியப்பு சந்தி திலகர்

எங்கள் இனத்துக்குள்ளும் பல ஒடுக்குமுறைகள் இருப்பது கவலையளிக்கிறது - மல்லியப்பு சந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 11)

முள்ளுத் தேங்காய் பத்தாம் அத்தியாயத்தில் வன்னிவாழ் மலைகய மக்கள் தொடர்பில் அதற்கு முன்னர் எழுதப்பட்டவையும் அதற்கான பதிற்குறிகளுமாக தொகுக்கப்பட்டிருந்தது. கடந்த  வாரத்தில் முகநூலில் இடம்பெற்ற பதிற்குறிகள்  பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியிருந்தமையை அவதானிக்க முடிந்தது.  விடைகளை காண்பதற்கு விவாதங்கள் அவசியமானவை என்கிற அளவில் அந்த விவாதங்களை அவ்வாறே  விட்டுவிட்டு விடைதேடும் செயற்பாடுகள் தொடர்பில் இந்த அத்தியாயத்தில் கவனம் செலுத்தவும்.

கடந்த வாரம் வடமாகாண  மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து தமது  பிரச்சினைகள் தொடர்பான மனுவினை  சந்தித்து கையளித்துள்ளார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அரசியல்வாதி என்கிற அடிப்படையில் மலையகத்தோடு தொடர்பு படுத்திப் பார்த்தால் அவரை அரசியலுக்குள் அழைத்து வந்தவர்கள் பட்டியலில் ஜனநாயக மக்கள்  முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் முக்கியமானவர். இதனால் விக்னேஸ்வரன் அரசியலில்  தனக்கு மாணவர் என்கிற தொணியில் அமைச்சர் மனோ கணேசன் ஒரு முறை கருத்து கூறியிருந்தமை நினைவுக்கு வருகிறது.


அதே போல மீரியபெத்தை மண்சரிவு அனர்த்த்தின்போது  முதலமைச்சர் மலையத்திற்கு பயணித்து நிவாரண  உதவிகளை வழங்கியிருந்ததோடு  அதன்போது  பிரதேச அரசியல்வாதியொருவர் 'அவர் வேலையை அவர் பார்க்கட்டும் எங்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம்' என்கிற அடிப்படையில் பத்திரிகை அறிக்கை விட்டிருந்தமை பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மறுபுறத்தில் 'மலையக மக்கள் இயற்கை பாதிப்புக்குள்ளாகி  வாழ இடமின்றி தவித்ததால் வடக்கில் குடியேறலாம். நாங்கள் அவர்களை வரவேற்கிறோம்' என்ற முதலமைச்சரின் கருத்தும் கூட  வாதப் பிரதி வாதங்களுக்கு உள்ளானது  காரணம்  காந்திய இயக்கச் செயற்பாடுகளின் ஊடாக வன்னியில் குடியேறிய மக்கள்  முறையான வாழ்க்கைக்குள்  கொண்டுவரப்படாத நிலையில் முதலமைச்சரின் அழைப்பினை எவ்வாறு  நேரடியாக ஏற்பது என்பதே அந்த விவாதமாக இருந்தது.

இந்த விவாதத்தின் பின்னர்தான்  அது பற்றிய கவனத்தை முதலமைச்சம் பெற்றாரோ என்னவோ இடையில் வன்னியில் வாழும் மலையக மக்கள் வடமாகாண அதிகாரிகளினால் ஓரம் கட்டப்படுகிறார்கள் எனும் கவலையுடன் ஒரு முறை பேசியிருந்தார்.  அதன் பிறகாவது அவருடைய கவனம் வன்னி வாழ் மலையக மக்கள் மீது இன்னும் ஆழமான பார்வையாக விழுந்திருக்க வேண்டும்.  அதற்கிடையில் 'எழுக தமிழ்' போன்ற மரபு சார்ந்த எழுச்சிகளில் அதிகம் ஈடுபட்டதனால் என்னவோ வன்னிவாழ் மலையகத் தமிழ் மக்கள் குறித்த குரல் அவரிடத்தில் எழும்பவில்லை. ஆனால் வன்னிவாழ் மலையகத் தமிழ் எழுந்து சென்று அவரது  பிரச்சினைகள் அடங்கிய மனுவை கோரிக்கையாக முன்வைத்து தீர்வு கேட்டு நிற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.  அது பற்றிய செய்திகள் புகைப்படங்களுடன் பிரதான நாளிதழ்களில் வெளிவந்துள்ளன.

மாகாண சபைகளின் அதிகாரங்கள் குறித்த வாதப்பிரதிவாதங்கள் ஒரு புறம் இருக்க குறிப்பாக அந்த மாகாண சபை முறைமைகளின் அதிகாரங்கள் குறித்த வட மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபை சார்ந்து அதிகார அதிகரிப்பு குறித்து எழுகின்ற குரல்களுக்கு மத்தியில் வடமாகாண சபையானது வட மாகாணத்தின் முக்கிய அரசியல் தரப்பால் ஆளப்படுகிறது என்பது  அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகிறது.  அதே போல கிழக்கு ஆட்சியில் பங்காளிகளாகவும் உள்ளனர்.  இந்த ஆட்சி அதிகாரங்களைக் கொண்டு வன்னிவாழ் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட கூடியதா?  அல்லது இப்போதைக்கு இருக்கின்ற அதிகாரங்களைக் கொண்டு வன்னி வாழ் மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட கூடியதா என்பது விவாதத்திற்கான இன்னுமொரு புள்ளி.  அது 'வடமாகாண மலையக மக்கள்  ஒன்றியம் முன்வைத்திருக்கும் கோரிக்கையின் உள்ளடக்கத்தின்  அடிப்படையில் தங்கியிருக்கிறது.

இந்தக் கட்டத்தில் வன்னியில் வாழும் எழுத்தாளர் கருணாகரன் நாளிதழ் ஒன்றுக்காக எழுதியுள்ள ஒரு பத்தியில் வடக்கில் அவயவங்களை இழந்ததனால மலம் கழிப்பதற்கு சிரமப்படும் ஒரு மாற்றுத்திறனாளி  தனக்கான தேவை குறித்து கருத்து  தெரிவிக்கையில்   'அரசியல் தீர்வு கிடைக்காததால் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்  எண்டு சொல்லிணம்.  அரசியல் தீர்வு  வாறவரைக்கும் கக்கூசுக்கு போகாமல் இருக்க முடியுமோ? எனும் கேள்வியை  முன்வைத்தார் எனபதை  நினைவுப்படத்திச்   சொல்ல வேண்டியிருக்கிறது.

அதேநேரம் வடமாகாண மலையக மக்கள் ஒன்றியப்பிரதிநிதிகளை சந்தித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  'கூறியிருக்கும்  கருத்து அவதானத்துக்கு உரியது எங்கள் கூற்று இதனை ஒரு பத்திரிக்கை தலைப்பு செய்தியாகவே இட்டிருந்தது, நாமும்  அத்தியாயம்  பதினொன்றுக்கான தலைப்பாக அதனையே கொள்வோம்.

ஏனெனில் மேற்படி சந்திப்பு பற்றிய பதிவுகளை முகநூலில் இடுவதற்கு  முன்னர் சமூக ஆய்வாரள் ஏ.ஆர்.நந்தகுமார் முள்ளுத் தேங்காய் பத்தாம் அத்தியாயத்தை தனது முகநூலில் பதிவேற்றியிருந்தார். அதில் பதிற்குறியிட்டிருந்த யோகேஸ் ஜோ எனும் பதிவரின் வாதம் இவ்வாறு இருந்தது.

அவ்வாறான எந்த வேறுபாடுகளும் அற்றவகையிலேயே இங்கு மக்கள் வாழ்கின்றனர். விடுதலைப் புலிகள் காலத்தில் இவ்வாறான சொற்பதம் பயன்படுத்தப்பட்டதே கிடையாது.  இன்று  தமது அரசியல் லாபத்திற்காக மக்களை சமூக அடுக்கமைவு ரீதியாக பிளவுபடுத்த முயற்சிப்பது உங்களைப் போன்ற கல்வியியளார்களுக்கு பொருத்தமற்றது. வடகிழக்கில் உள்ள  தமிழ் மக்கள் தொடர்பாக பிரதச நீதியிலான கட்டமைப்பினை உடைக்காமல்  உங்கள  வதிவிடம்சார் அபிவிருத்தி நோக்கிய வளர்ச்சிக்கு  உதவுங்கள்' என அந்த முகநூலில்  பதிவர் குறிப்பிடுகிக்றார். இது அவருடைய கருத்து மாத்திரமல்ல. பெரும்போக்கில் தமிழ்  ஒற்றுமை தமிழ்தேசியம் பேசும் மனநிலை கொண்டடோரது வெளிப்பாடு என்றும் கொள்ளலாம்.  அவருடனான விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த கட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்த சி.வி. விக்னேஸ்வரன் கூறிய கருத்து இந்த பெரும்போக்கு தமிழர் ஒற்றுமை அல்லது தமிழ்த் தேசிய மனநிலை கொண்டோருக்கு ஒரு பதிலினை வழங்கியிருக்கக்கூடும்   அதுதான் வடமாகாண  முதலமைச்சரே 'எங்கள் இனத்திற்குள்ளும் பல ஓடக்குமுறைகள் இருப்பது கவலையளிக்கின்றது' என்று கூறுவதாகும்.  இவ்வாறு அவர் கருத்து கூறுவது முதற்தடவையுமன்று என மேலே கூறியிருந்தோம். ஆனால் இப்போது இந்த கருத்து எழுந்திருக்கும் தருணம் வித்தியாசமானது.  முதலமைச்சர் தாமாகவே ஒரு கருத்தினை முன்வைக்காமல் 'வட மாகாண மலையக மக்கள் ஒன்றியத்திடம்;'  இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.  எனவே அவரது கூற்றின் பின்னணியில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பும் அவருக்குண்டு.

வடமாகாண மலையக மக்கள் ஒன்றியம் பற்றி அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கூறுகின்ற கருத்துகள் இங்கு பதிவு செய்யப்பட வேண்டியதே. முருகையா தமிழ்ச்செல்வன் எனும் முகநூல் பதிவர் அமைப்பைச் சேர்ந்த தங்கராசா என்பவர் சொன்னதாக எழுதும் பதிவில் 'யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிளிநொச்சியில் குடியேறிய மக்களிடம் கேட்டால் தான் நெடுந்தீவு, புங்குடுதீவு, வடமராட்சி, தென்மராட்சி என்று தங்கள் பூர்வீகத்தை கூறுவார்கள்.  அவ்வாறுதான் நாங்கள் மலையகம் என எங்கள் பூர்வீகத்தை கூறுகின்றோம். இதில் என்ன பிரதேசவாதம் இருக்கிறது? இது எந்தவகையில் ஒற்றுமையைப் பாதிக்கப் போகிறது. ஆசிரிய சங்கம், கடற்றொழிலாளர் சங்கம், ஆட்டோச் சங்கம் போன்று இது எங்களுடைய  அமைப்பு. நெடுந்தீவு மக்கள் அமைப்பு என்று ஒரு அமைப்பு இருக்கிறது.  அவ்வாறே இதுவும் பிரிந்து செல்லுதல், பிரதேசவாதம் பேசுதல் போன்ற எந்த நோக்கமும் இல்லை. தமிழ் மக்களின்  தேசிய பிரச்சினைக்கு ஒற்றுமையாக சேர்ந்து உழைக்கும்  அதேவேளை எங்கள் மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பதே  பிரதான  நோக்கம். ஆசிரிய  சங்கம் எப்படி ஆசிரியர்களுக்காக குரல் கொடுக்கிறதோ அவ்வாறுதான்  எங்கள்  அமைப்பும்'  என்பதாக அந்த  பதிவு  அமைகிறது.  தங்கராசாவின் கூற்றில்  உள்ள  நியாயம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது.


பழ.நாகேந்திரன் எனும் முகநூல் பதிவர ;இவ்வாறு  எழுதுகிறார். இனக்கலவரங்களினால் பிரிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக  மக்களின் நிலையை பன்னங்கண்டி காணி பிரச்சினை வெளிக்காட்டும் இவ்வாறான நிலையில்தான் கிளிநொச்சிப் பகுதியில், பல்வேறு இடங்களில் பெரும் நிலவுடமையாளர்களின் காணியில் கூலி வேலை செய்ய 'ஏதுவாக' குடியேறப்பட்டு மூன்று ;தசாப்பதங்களுக்கு மேலாகவும் அக்காணிகளில் வாழ்ந்தாலும்  இன்னும் நிலவுரிமையில்லை. அரச உதவிகள் பெறுவதில் சிக்கல் என பல்வேறு  பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறான  பிரச்சினைகளை இம்மக்கள் வடக்கு கிழக்கில்  எதிர்கொண்டுள்ளனர்.  தீர்வினைப் பெற்றுத்தர  அவர்களுக்கு துணை நிற்க  யாருமற்ற நிலையில்  இருப்பதை அவதானித்து அதற்கான தீர்வினை நோக்கியதே.  உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழ் சமூகத்தின் விடுதலைப் போராட்டம் அழிவுகள் பாதிப்புக்கள்  என அனைத்திற்கும் பங்குகொண்ட இந்த  மக்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படும்  நிலையினை  ஆட்சியாளர்களுக்கும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கும் எடுத்துக் கூற அமைக்கப்பட்டதே இந்த அமைப்பு என விளக்குகிறார்.

இந்த முகநூல் பதிவுகளை  முகநூல் அல்லாத வாசகர்களுக்காக பத்திரிகையிலே கொண்டுவருவதே இந்த பத்தியின் பிரதான இலக்கு.  ஏனெனில் தமது கோரிக்கையின் நியாயத்தை கோரும் தங்கராசா, பழ.நாகேந்திரன் போன்றவர்களின்  எழுத்துக்களை  பதிவுசெய்யும் ஊடக கலாசாரம் இன்னும் எழவில்லை என கொள்ளலாம். பிரமுகர்களின் மயிர்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் இன்னும் சாமான்யர்களின் உயிர்களுக்கு இன்னும் வழங்கப்படுவதில்லை மட்டுமல்லாது பிரமுகர்கள் கூறிவிடும் எல்லாத் தகவல்களும் கூட பிரசுரமாகியிடுவதில்லை.

வடமாகாண மலையக மக்கள் ஒன்றியத்தை சந்தித்த முதலமைச்சர்; 'தொழிலாளர்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு அமைப்புகள் இருப்பது போன்று வடக்குவாழ் மலையக மக்களின் பிரச்சினைகளுக்காக ஒரு ஒன்றியம் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது.  ஆனால் இந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவும், அதே வேளை தங்கள் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்காகவும் இருக்க வேண்டும். என கேட்டுக்கொண்டதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் போன்று ' தனி அலகு' கேட்கிற அளவுக்கு போய்விடக் கூடாது என அவர் தரப்பில்  கோரிக்கை வைத்ததாகவும் அறிய முடிகின்றது.  அது பற்றி ஊடகங்கள் ஏதும் பேசியதாக தெரியவில்லை. ஆனால் அப்படி அவர் கருத்து கூறியிருந்தால்  மலையக மக்களின் கோரிக்கைகள் ஒரு எல்லைக்கு உட்பட்டதாகததான் இருக்க வேண்டுமா எனும் கேள்வியை தோற்றுவிக்கின்றது.  உத்தேச அரசியலமைப்புக்கு யோசனைகளை முன்வைத்த தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். அதில் மலையக மக்களுக்கான  அதிகார பகிர்வு பேசப்பட்டுள்ளது. அது வடக்கு கிழக்;குக்கு வெளியே  வாழும் மலையக மக்களுக்கானது.  ஆனால் வடக்கு கிழக்குக்கு  உள்ளே  வாழ்பவர்கள் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றதா எனும் கேள்வி  எழுகின்றது.

ஆனாலும் முதலமைச்சரின் கூற்றில் வெளியாகியிருக்கும் பின்வரும் பகுதி முக்கியமானது 'பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற போது எங்கள் இனத்திற்குள்ளுயும் பல ஒடுக்குமுறைகள்  இருப்பது  ஏற்கவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றதா  எனும் கேள்வி  எழுகின்றது.

ஆனாலும் முதலமைச்சரின் கூற்றில் வெளியாகியிருக்கும் பின்வரும் பகுதி முக்கியமானது. பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற போது எங்கள் இனத்திற்குள்ளுயும் பல ஒடுக்குமுறைகள்  இருப்பது  
கவலையளிக்கின்றது.

என்கின்ற ஒப்புதல் வாக்குமூலம் முதலமைச்சர் என்கின்ற  பொறுப்பில் இருந்து கொண்டு சொல்கிறார் என்பது வன்னியில் வாழும் மலையக மக்கள் தனித்துவமான  பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சான்று மாத்திரமல்ல முள்ளுத்தேங்காய் தொடர் வெளிப்படுத்திவரும் விடயங்கள் யதார்த்தபூர்வமானவை என்பதை உறுதிப்படுத்துவனவாக உள்ளன.

அந்த வகையில் பெரியம்மா பற்றிய தென்னிந்திய வாழ்க்கை குறித்த பதிவுகள் இன்னும் கொஞ்சம் தாமதித்தே  வரும்போல தெரிகிறது.  அதுவரை வன்னியில் உள்ள கிராமங்களின்  பெயர்களே அங்கு வாழ்பவர்கள் மலையக மக்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக இருப்பதையும் அவர்களின் வீதாசார பரம்பலையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். அதுவரை தலைப்பினை மீண்டும் வாகிக்க
தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத் தேங்காய் எண்ணைக்கு..

உருகும்.

நன்றி - சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates