Headlines News :
முகப்பு » , » கொழுந்து எடை குறைஞ்சா கைகளை நீட்டச் சொல்லி கங்காணிமார் அடிப்பாங்க!! - செல்வராஜா

கொழுந்து எடை குறைஞ்சா கைகளை நீட்டச் சொல்லி கங்காணிமார் அடிப்பாங்க!! - செல்வராஜா

 103 வயது மூதாட்டியின் மலையக தோட்ட வாழ்க்கை அனுபவம்!

சோனகரிகளாகவே மலையக மக்கள் வாழ்கின்றனர்

தோட்டப் பகுதி அன்று எப்படி இருந்தது. இன்று எப்படி இருக்கிறது என்றும் அன்று கங்காணிமார், தோட்டத் தொழிலாளர்களை எப்படி கொடுமைப்படுத்தினர் என்றும் விபரிக்கிறார் 103 வயது மூதாட்டி தெய்வானையம்மா.

இந்தியாவிலிருந்து வந்த இவர், 8 வயதிலேயே தோட்ட வேலைக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

ஊவா பிரதேசத்திற்குப் பெருமைத் தேடிக்கொடுத்துக்கொண்டிருக்கும் பதுளை கோட்டகொட பெருந்தோட்ட லயக்குடியிருப்பொன்றில் வாழ்ந்துவரும் தெய்வானையம்மாவின் வாழ்க்கை சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு பதிவிடுகிறோம்.

பதுளை - கோட்டகொட பெருந்தோட்டத்தின் குடியிருப்புத் தொகுதியில் திடகாத்திரமாக வாழ்ந்துவரும் மூதாட்டி தெய்வானையம்மாவின் வயது 103.

நான்கு வயதில் தனது பெற்றோருடன் தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து பதுளைப் பகுதிக்கு வந்த தெய்வானை தற்போது ஐந்தாவது பரம்பரையைக் காணும் பாக்கியம் பெற்றுள்ளார்.

இவரை, தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கூட்டிவந்து, பெருந்தோட்டத் தொழில் துறையில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், நெருக்கடிகள், பிரச்சினைகள் குறித்து தெளிவாக பேச ஆரம்பித்தார்.

''நம்ம சமூகத்தை தமிழ்நாட்டுல இருந்து ஏமாத்தியே இங்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. அப்போ அடிமைகளாகவே நாம இருந்தோம். இந்த 100 வருசத்தில அடிமை நிலையிலிருந்து கொஞ்சம் விடுபட்டிருந்தாலும், இன்னும் எங்க சமூகம் பல வழிகளிலும் ஏமாற்றப்பட்டுக்கிட்டுத்தான் இருக்கு. எந்த முன்னேற்றத்தையும் காண முடியாமல சோனகிரிகளாகவே நாம இருக்கிறோம்.

அந்தக்காலத்தில நம்ம சமூகம் ரொம்ப நல்லா இருந்திச்சு. எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னா கூட்டுக் கூடும்பமா, சந்தோசமா இருந்தோம். தொழிலாளர்களாகத்தா இங்க வேலைக்கு வந்தோ. இன்னைக்கு தோட்டங்கலெல்லா ரொம்பவே மாறிப்போச்சி. அந்தக்காலத்தில நாட்டுன மரங்க தான் அந்தப்பக்கம் இருக்கு'' என்று வீட்டிற்கு சற்று தொலைவில் இருக்கும் மரங்களைக் காட்டினார்.

நா அஞ்சு தோட்டத்தில வேலை செஞ்சிட்டேன். இப்ப இந்த தோட்டத்தில இருக்கே. எங்க சொந்தக்காரங்க எல்லாம் இந்தியாவுல தான் இருக்காங்க. கடதாசில எங்க சொகங்கல சொல்லுவோம். எனக்கு எழுத வாசிக்க தெரியாது. அன்னைக்கும் லயத்தில தான் இருந்தோம். இன்னைக்கும் அதே லயத்திலதான் இருக்கோ. ஒன்னு மாறல. என்று கவலையுடன் லயத்து வாழ்க்கையை விபரித்தார்.

நா அன்னைக்கு ரண்டாம் கிளாசு தான், தோட்டத்து ஸ்கூல படிச்சே. நாலு வருசத்துக்கு முன்னாடி கடைசியாக ஓட்டு போட்டே. இப்போ யாருக்கும் ஓட்டு போடறதில்ல. ஓட்ட போட்டு என்ன பயனதான் கண்டோ. இப்ப, பொய்யி பித்தலாட்டக்காரன்க ரொம்பவே இருக்காங்க. என்று குரலில் சலிப்புடன் கூறினார்.

103 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பது பற்றியும் பாட்டி பேசத்தொடங்கினார்.

அன்னைக்கு நாங்க சாப்பிட்ட சாப்பாடுனால தான் இன்னைக்கு தைரியமா இருக்கே. இப்ப நம்ம பசங்க, புள்ளகல பார்க்கிரப்போ பாவமா இருக்கு. ஒழுங்கான சாப்பாடு இல்ல. படிக்கிரதுக்கு ரொம்ப கஸ்டப்படுறாங்க. தோட்டங்களும் நாசமா போச்சி. இதுகல நெனச்சா அழுகையாவும் வேதனையாவும் இருக்கு'' என்று கவலையுடன் கூறினார்.

தெய்வானையம்மா 1914ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் இராமசாமி தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்து, நான்கு வயதில் பெற்றோர் சகிதம், பெரிய கங்காணிமாரின் துணையுடன் பதுளைக்கு வந்து குடியேறியுள்ளார்.

பதுளை - வௌஸ்சை தோட்த்திலேயே தெய்வானையம்மா தமது பெற்றோருடன் வசித்து வந்தார். அவர் 8ஆவது வயதில் தேயிலைத் தளிர்களைப் பறிக்க கூடையை முதுகில் சுமக்க ஆரம்பித்துள்ளார். தேயிலைச் செடி உயரத்தில் கூட இருக்காத அந்த இளம் சிறுமி தெய்வானை, பெரும் கஸ்டங்களுடனும், வேதனைகளுடனும், போராட்டங்களுடனும் தனது முதுகெலும்பை வலைத்து, இலங்கையின் முதுகெலும்பிற்கு உரம் சேர்த்துள்ளார்.

நாளுக்கான தேயிலைத் தளிர் இறாத்தல் எடை குறைந்தால் கையை நீட்டச் சொல்லி பிரம்பினால் கங்கானிமார் அடித்த கசப்பான அனுபவங்களையும் பாட்டி பகிர்ந்துகொண்டார்.

ஒரு நாளைக்கு சராசரியாக 12 இறாத்தல் தேயிலைத் தளிர்களைப் பறிக்க வேண்டும். படிப்படியாக ஏனைய பெண் தொழிலாளர்களைவிட ஆகக்கூடுதலான தேயிலைத் தளிர்களைப் பறிக்கும் பெண்ணாக தனது உழைப்பையும் அதிகரித்துள்ளார் தெய்வானையம்மா.

இளம் வயதில் னது உறவுமுறையான முத்து என்பவரை தெய்வானையம்மாவின் விருப்பத்தைக்கூட கேட்காமல் பலாத்கார திருமாணம் செய்துவைத்ததாகக் கூறுகிறார். ஆனாலும், திருமண வாழ்க்கையின் பின்னரும் போராட்டங்கள் தொடர்ந்ததாகக் கூறுகிறார். ஏழு பிள்ளைகளுக்குத் தாயான தெய்வானையம்மாவிற்கு தற்போது 45 பேரப்பிள்ளைகளும், 15 பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர். அவரது பிள்ளைகள் இந்தியாவில் தான் வாழ்ந்து வருவதாகவும், கோட்டகொட என்ற தோட்டத்தில் பேரப்பிள்ளையொன்றின் குடும்பத்துடன் தான் தற்போது வாழ்ந்து வருவதாகவும் தெய்வானையம்மா கூறுகிறார்.

103 வயதாகியும், தெய்வானையம்மாவிற்கு இதுவரை கடின நோய்கள் எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருக்கிறார். தானியங்களும், சோறும் பிரதான உணவு என அவர் தனது உணவு முறைகளையும் விபரிக்கிறார். தேவாரம் பாடுதல், கும்மி அடித்தல், தாலாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்ககள் படித்தல் போன்ற மலையகத்திற்கே உரித்தான விசயங்களையும் தனது அனுபவங்களாகவும் வைத்துள்ளார் தெய்வானையம்மா.

103 வயதை எட்டியுள்ள தெய்வானையம்மா, 1950ஆம் ஆண்டில் பெப்ரவரி 5ஆம் திகதியும், 1984ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதியும் இரு முறை மட்டுமே பிறந்த ஊருக்குச் சென்று உறவுகளைப் பார்த்து திரும்பியுள்ளார்.

தெய்வானையம்மாவின் 103ஆவது பிறந்த தினத்தை அண்மையில் வெகு விமர்சயாக அவரது பேரப்பிள்ளைகள் கொண்டியுள்ளனர். பாட்டியைச் சந்தித்தபோது எடுத்த படங்களையும் இங்கே காணலாம்.

நன்றி - மலையகக் குருவி



Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates