Headlines News :

காணொளி

சுவடி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: கலப்பு முறையா? குழப்ப முறையா? - ஜீவா சதாசிவம்


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுபறி நிலையில் கிடந்த இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வருட இறுதியில் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் பற்றி இந்த வார செய்திகள் அரசியல் களத்தில் வெளியாகியுள்ளன. இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இதுபற்றி கருத்துத் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனும் தன் பங்குக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கலப்பு முறையில் நடக்கவுள்ளதாகவும் அது சிறுகட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் அறிக்கை விட்டுள்ளார்.

இந்த கலப்பு முறை என்றால் என்ன என்ற 'குழப்பம்' இவ்வளவு நாளும் அரசியல்வாதிகளுக்கு இருந்தமையே தேர்தல்களின் தாமதத்திற்கு ஒரு காரணம் என்று கொள்ளலாம். அரசியல்வாதிகளுக்கு இருந்த ‘குழப்பம்’ இனி வாக்காளர்களுக்கு வரப்போகின்றது. காரணம் விகிதாசார தேர்தல் முறை கலப்பு முறையாக மாறுவது மட்டுமல்ல வேட்பாளர்களின் எல்லைப்பிரதேசங்களும் மாற்றம் அடையப்போகின்றது. வாக்காளர்களுக்கு இருந்த விருப்பு வாக்கு முறை இல்லாமல் ஆகப்போகின்றது. மறுபுறம் பெண்களின் பங்களிப்பு உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதமாக அமைய வேண்டும் எனும் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

இங்கு மேற்சொன்ன முறைமைகளை எல்லாம் உள்ளூராட்சி சபை சட்டத்தில் உள்வாங்கும் திருத்தம் எதிர்வரும் வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் இதுவரை எவ்வாறு நடந்தேறின. இனி எவ்வாறு நடைபெறப்போகின்றன. பெண்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு சாத்தியமா? என இந்த வார 'அலசல்' ஆராய்கிறது.

 விகிதாசார முறையும் விருப்பத்தெரிவு முறையுமாக இருந்த  தேர்தலே பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றில் நடைமுறையில் இருக்கின்றது. விகிதாசார முறையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட  ஆசனங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். பின்னர் அந்த கட்சிகளுக்குள் யாரை வாக்காளர்கள். விரும்பினார்கள் என்பதை விருப்பத்தெரிவாக யாருடைய இலக்கத்தை மக்கள் தெரிவு செய்தார்களோ அதன் வாக்குகளின் எண்ணிக்கை ஒழுங்கில் தெரிவு செய்யப்படுவார்கள்.

கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக உள்ளூராட்சி மன்றங்களான மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஆகிய மூன்றிலும் இந்த முறைமையே பின்பற்றப்பட்டு வந்தது. ஒரு பிரதேச சபையின் கீழ் 100 கிராம சேவகர் பிரிவுகள் அமைந்துள்ளதெனில் குறித்த பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 100 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் தமக்கான விருப்பு வாக்குகளைப் பெறலாம். கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடும் ஒருவர் வெள்ளவத்தையிலும், மட்டக்குளியிலும், பொரளையிலும் என எல்லாத்திசைகளிலும் வாக்குகளை சேகரிக்க முடியும்.

இப்போது முன்மொழியப்பட்டுள்ள கலப்பு முறை என்பது வேறு வகையானது. பிரதேச சபையோ அல்லது நகரசபையோ அல்லது மாநகர சபையோ அதற்குள் உருவாக்கப்பட்டிருக்கும் 'வட்டாரத்திற்குள்'  மாத்திரமே ஒரு வேட்பாளர் தமக்கான வாக்குகளைக் கோர முடியும். ஒரு வட்டாரம் என்பது இரண்டு அல்லது மூன்று கிராம சேவகர்கள் பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த வட்டாரங்களை தீர்மானிக்கும் செயற்பாடே 'எல்லை மீள்நிர்ணயம்' என கடந்த சில வருடங்களாக பரவலாக பேசப்பட்டது. 

கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 'எல்லை மீள் நிர்ணயம்'  உரிய முறையில்  மேற்கொள்ளப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக் ஷ சூட்சுமமான முறையிலே தங்களது ஆட்சியை உள்ளூராட்சி மட்டத்தில் அதிகாரத்தில் தக்கவைத்துக்கொள்ளக்கூடியதாக எல்லை மீள்நிர்ணயத்தை செய்துள்ளார் என்பது பரவலான குற்றச்சாட்டாக எழுந்தது.

குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியும் சிறுகட்சிகள், சிறுபான்மை கட்சிகளும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தன. அதேநேரம் வட்டார முறையிலமைந்த கலப்பு முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் 2012 ஆம் ஆண்டு திருத்தப்பட்டும் இருந்தது. எனவே எற்கனவே இருந்த 'விகிதாசார விருப்புமுறை' அடிப்படையில் தேர்தலை நடத்த முடியாமலும் உத்தேச வட்டார முறையில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு விடை காணாமலும் அரசாங்கத்தினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டு வந்தது.

எனவே தற்போதைய சட்டதிருத்தத்திற்கு ஏற்றதாக வட்டார முறையில் தேர்தலை நடாத்த கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட  எல்லை மீள் நிர்ணயத்தை 'சரிபார்க்கும்' தேவை அரசாங்கத்துக்கு எழுந்தது. ஓய்வுபெற்ற காணி அமைச்சின் செயலாளரான அசோக்க பீரிஸ் தலைமையில் எல்லை மீள்நிர்ணயத்தை சரிபார்க்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எல்லை மீள்நிர்ணயத்தின் மீது அதிருப்தியுடையோர் தமக்கு முறைப்பாடு செய்யலாம் என குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைய கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தமது முன்மொழிவுகளை குழுவுக்கு சமர்ப்பித்தனர்.

எப்படியோ இப்போது அந்த எல்லை மீள்நிர்ணயம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டாரங்கள் நாட்டில் உருவாக்கப்பட்டுவிட்டன.

அதேநேரம் தேர்தல் முறைமையிலும் மாற்றத்தைக்கொண்டு வந்த முன்னைய அரசாங்கம்  ஒரு சபைக்கு தேவையான 72 சதவீதமான உறுப்பினர்களை வட்டார முறையில் இருந்தும் எஞ்சிய 28 சதவீதமான உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் உள்வாங்கும் வகையில் தீர்மானித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுகட்சிகள் 60 சதவீதமான உறுப்பினர்களை வட்டாரத்திற்கான ஆசன முறையிலும் 40 சதவீதமான உறுப்பினர்களை விகிதாசார முறையிலும் தெரிவு செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தன. இப்போது இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவே அமைச்சர் மனோகணேசன் தனது அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தேர்தல்கள் நடைபெறும் விதம் பின்வருமாறு அமையலாம். குறித்த வட்டாரத்திற்கான வேட்பாளராக ஒரு கட்சியினால் ஒருவரே நியமிக்கப்படுவார். (அது பல் அங்கத்தவர் வட்டாரம் எனில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர் ஒரு கட்சியினால் நிறுத்தப்படுவார்.) அவ்வாறு ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒவ்வொரு வேட்பாளர் ஒரு வேட்பாளர் நியமிக்கப்படும்போது அந்த கட்சிக்கு வழங்கப்படும் வாக்கும் அந்த வேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்கும் ஒரே வாக்காகவே அமையும். குறித்த வட்டாரத்தில் எந்த கட்சியின் வேட்பாளர் வெற்றிபெறுகிறாரோ அந்த வட்டாரத்தில் அவர் சார்ந்த கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உதாரணமாக 100 கிராம சேவகர்களைக்கொண்ட ஒரு பிரதேச சபையில் ஏறக்குறைய 30 முதல் 35 உறுப்பினர்கள் வட்டாரத்தில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

 இவ்வாறு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த பிரதேச சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 60 மாகக் கொள்ளப்படும் எஞ்சிய 40  இந்த வட்டார தெரிவுக்கு மேலதிகமாக விகிதாசார முறையில் தெரிவுசெய்யப்படுவர். எனவே வட்டார முறையில் 30 உறுப்பினர்கள் தெரிவாகும் ஒரு பிரதேச சபைக்கு விகிதாசார முறையில் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இந்த இருபது உறுப்பினர்களை தெரிவு செய்ய வட்டார முறையில் முழு பிரதேச சபைக்குமாக கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் அடிப்படையாகக் கொள்ளப்படும். அவ்வாறு கிடைக்கும் ஆசனங்களுக்கு யாரை நியமிப்பது என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும். இந்த வேட்பாளர்களின் பட்டியல் முன்கூட்டியே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த விளக்கம் இதுவரை உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் வெளிவாரியாக கிடைக்கக் கூடிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. உள்வாரியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற சட்ட திருத்தம் எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது அறியக்கூடியதாக இருக்கும். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இதுவரை காலமும் உறுப்பினராகப்போகும் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு வாக்காளருக்கு இருந்துவந்த உரிமை இனி இல்லாமல் செய்யப்படப்போகின்றமை தெளிவாகிறது.

கட்சி தெரிவு செய்யும் வேட்பாளர் ஒருவருக்கே வாக்காளர் வாக்களிக்க வேண்டும். இதனால் வாக்காளர் வசமிருந்த ஒரு உரிமை கட்சித் தலைமைக்கு போகிறது எனக் கொள்ளலாம். கட்சிப்பணியில் இல்லாத ஒருவர் வேட்பாளராக களமிறங்கி தனது செல்வாக்கினால் உறுப்பினராவது இதன் மூலம் தடுக்கப்படலாம். அதேநேரம் கட்சித் தலைமைக்கு விசுவாசம் காட்டும் எவரும் வேட்பாளராகும் சாத்தியமும் இங்கு உண்டு. விகிதாசார முறையில் இருந்து தெரிவு செய்யப்படுவர் யார் என்பதையும் கட்சித் தலைமையே தீர்மானிக்கும். 

ஆக மக்கள் வசம் இருந்த ஒரு தேர்தல் முறை கட்சிகளின் வசத்திற்கு மாற்றப்படுகின்றமையே இங்கு பெரும்பாலும் நிலவுகின்றது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டும் பிரதேச எல்லை பெரிதாக இருப்பதன் காரணமாக தான் அளித்த வாக்குக்கு ஏற்ப சேவையை பெற முடியாதிருந்த மக்களுக்கு தனது கிராமசேவகர் பிரிவு எல்லைக்கு உள்ளாகவே ஒரு உறுப்பினர் கிடைக்கப் போகிறார் என்பது புதிய முறையின் பலமான அம்சமாகிறது.

வட்டார முறையிலும் விகிதாசார முறையிலும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படப் போகின்றமையால் பிரதேச சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அமையப்போகின்றது. இதனால் பிரதேச சபை கட்டடங்கள் விரிவாக்கப்பட்டு சபை மண்டபங்கள் பெரிதாக்கும் தேவை எழக்கூடும். இதற்கெல்லாம் மேலாக பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் இருக்க வேண்டும் எனும் சட்டத் திருத்ததத்தையும் அரசாங்கம் ஏற்கனவே கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே இளம்வயதினருக்கு வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது.

ஆக, ஒரே மூச்சில் தேர்தல் முறை, வட்டார முறை, பெண்களின் பங்களிப்பு, இளம் வயதினர் பங்களிப்பு, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளூராட்சி மன்றதேர்தல் அமையப்போகிறது. இந்த  'கலப்பு' தேர்தல் குழப்பமான முறையாகி வாக்காளர்களை கலக்கம் கொள்ள வைக்கப்போவதாகவே தெரிகிறது. அரசாங்கத்தையும் தான்.

நன்றி வீரகேசரி


தேயிலை - செடியல்ல மரம்- மல்லியப்புசந்தி திலகர்

(தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 27) 

இலங்கை தேயிலைக்கு 150 ஆண்டுகள் என பெருமையோடு இந்த ஆண்டு ஆரம்பித்தது. இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம் தலவாக்கலையில் விழா ஒன்றினை ஏற்பாடு செய்து ஜனாதிபதியை பிரதம அதிதியாகக் அழைத்து கொண்டாடியது. அதன் தொடர்ச்சியாக தென்மாகாணத்திலும் தேசிய ரீதியாக அந்த விழா கொண்டாடப்பட்டது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தபால் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை தேயிலையின் 150 ஆண்டுகால நிறைவைக் குறிக்கும் தபால் முத்திரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் ஆங்காங்கே சில தோட்டங்களில் இந்த 150 வருட நிறைவை நினைவுபடுத்தும் நிகழ்வுகளை நடாத்தியுள்ளன. இதன்போது தொழிலாளர்கள் சிலரையும் கௌரவித்துள்ளனர். 

ஆனாலும் இந்த 150 ஆண்டுகால வரலாற்றுக்குள் தமது வரலாற்றையும் கொண்டிருக்கும் மலையக மக்கள் தரப்பில் இருந்து எவ்வித கொண்டாட்ட ஏற்பாடுகளும் இடம்பெற்றதாக தெரியவில்லை. அதற்கான காரணம் தேயிலைத் தொழில் துறை மீது அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையீனமா எனும் கேள்வியும் எழுகின்றது. 

தோட்டத் தொழிலாளர்களின் 150 வருடகால வரலாற்றைப் பின்னோக்கி பார்க்கின்றபோது இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையான பிணைப்பு தோட்ட நிர்வாகத்துடனேயே பிணைக்கபட்டிருக்கிறது. தற்போது நேரடியாக பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கின்ற போதும் கூட தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பிறந்தவுடன் அவர்களுக்கான பிறப்பு உறுதிப்படுத்தலை கூட தோட்ட நிர்வாகம் வழங்கும் 'பிறப்பு அட்டை' (birth card) மூலமே உறுதிப்படுத்திய காலம் இருந்தது. இன்றும் கூட அத்தகைய பிறப்பு அட்டைகளுடன் தமது அடையாளத்தை கொண்டிருப்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தினை தொண்டு நிறுவனங்கள் செயது வருகின்றன.

அவர்களது குடியிருப்பு முறை நாட்டின் ஏனைய பிரதேச மக்களுடன் ஒப்பிடுகின்றபோது திட்டமிட்ட அடிப்படையில் 'லயன்' முறை குடியிருப்பாக ஒரு குடும்பம் வாழ்வதற்கு பொருத்தமற்ற ஒன்றாகவே அமைந்து காணப்படுகிறது. தனிவீட்டுத் திட்டத்திற்கான கோரிக்கையும் திட்டங்களும் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளபோதும் இந்த 150 வருடகால வரலாற்றில் அவ்வாறு குடியமர்த்தப்ட்டிருக்கும் மக்கள் அனைவரையும் தனிவீட்டுத் திட்டத்திற்குள் கொண்டுவருதற்கு இன்னும் எத்தனைக் காலம் எடுக்கும் எனும் கேள்வி எழாமல் இல்லை. 

இன்று முன்வைக்கப்பட்டிருக்கும் தனிவீட்டுக்கான ஏழு பேர்ச் காணி திட்டத்தினை பெற்றுக்கொள்வதற்கும் அரசியல் தளத்தில் பல்வேறு போராட்டங்களை நடாத்த வேண்டியுள்ளது.  தேசிய கொள்கை ஒன்று முன்வைக்கப்பட்டபோதும் அமைச்சரவை அனுமதிக்கின்றபோதும் பெருந்தோட்ட நிர்வாக மட்டத்தில் முழு மனதுடன் ஒத்துழைப்பு கிடைப்பதாக இல்லை. ஒவ்வொரு வீடமைப்புத் திட்டத்திற்காகவும் மிகுந்த இழுபறிகளுடனேயே காணிகள் பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளது.

கல்வித்துறையில் மிக தாமதமாகவே இந்த மக்கள் தேசிய கல்வி வலையமைப்புடன் இணைக்கப்பட்டார்கள். சுதந்திரமடைந்த காலப் பகுதியில் இருந்தே இலவச கல்வி நாட்டின் தேசிய கல்விக்கொள்கையாக இருந்துவந்தபோதும் பெருந்தோட்டப்பகுதிகளில் அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்றல் 70களின் பிற்கூறுகளிலேயே இடம்பெறத் தொடங்கியது. அதுவரை கல்வி நிர்வாகத்தையும் பாட விதானங்களையும் கூட தோட்ட நிர்வாகமே தீர்மானித்து வந்துள்ளது. 

இன்று தேசிய கல்வி நிர்வாகத்திற்குள் பெருந்தோட்டப் பாடசாலைகள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் அதன் பௌதீகத்தன்மை முழுமையாக ஏனைய பிரதேச பாடசாலைகளின் தரத்திற்கு  வரவில்லை. அவற்றை விஸ்தரிப்பதற்கு, மைதானம் அமைப்பதற்கு என இரண்டு ஏக்கர் காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டபோதும் அவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் தோட்ட நிர்வாகங்கள் தாமதமும் இழுபறியும் காட்டி வருகின்றன. 

தோட்டப் பகுதி சுகாதார முறைமையும் இன்று வரை தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அவை குறைந்த தரத்தையும் வசதியையும் கொண்டதாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான உடன்பாடுகள் 2006இல் எட்டப்பட்டபோதும்  இன்றுவரை அது முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. அப்போது சுமார் 50 வைத்தியசாலைகள் இன்று வெறும் 31 வைத்தியசாலைகளே அரச பொறுப்பில் உள்ளது. 

திட்டம் கைவிடப்பட்டு இன்றும் 300 க்கு மேற்பட்ட வைத்திய நிலையங்கள் தோட்ட நிர்வாகத்தினாலேயே குறைந்த சுகாதார வசதிகளுடன் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை மாற்றுவதற்கான யோசனைகள், வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றபோதும் இழுத்தடிப்பகளும் காலதாமதங்களும் இடம்பெறுவதை மறுக்க முடியாதுள்ளது. 

தோட்டப்பகுதி பாதை வலையமைப்பு முற்று முழுதாக அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபைகளுக்கு உட்பட்ட கிராமிய பாதைகள் ஆகிய மூன்று வகுதிகளுக்குள்ளும் அடங்காது அவை தோட்ட வீதிகள் என தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் பொறுப்பு தோட்ட நிர்வாகத்திற்கு உரியது எனும் மனநிலையே அரச இயந்திரத்திடம் இருந்து வந்துள்ளது. ஆனால், பெருந்தோட்ட நிறுவனங்களோ முற்றுமுழுதாக இந்த வீதிகளைப் பராமரிக்கும் பணியில் இருந்து விலகிக் கொண்டுள்ளன. 

இவ்வாறு பெருந்தோட்டங்கள் சார்ந்ந்து வாழும் மக்களின் தொழிலும் அடிப்படைத் தேவைப்பாடுகளும் முழுமையாக பொது நிர்வாகப்படுத்தப்படாத நிலையில் தோட்டப்பகுதிகளில் தங்கி வாழும் தொழிலாளர்கள் தமது நாளாந்த ஊதியத்தைப் பெறுவதற்கு நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்த முறையும் தற்போது கேள்விக்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத்துக்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்த முறைமை குறித்த விடயங்கள் அடுத்துவரும் மாதங்களில் பல்வேறு விடயங்களை அம்பலப்படுத்தக்கூடும்.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பதான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் தேயிலை மலைகளை மக்கள் நேசமுடன் அணுகிய நிலையிலிருந்தார்கள். வருடத்தின் முதல் நாள் ஆலய முன்றலில் ஒன்று கூடி புது கூடை வாங்கி பொலி போட்டு தமது பணிகளை ஆரம்பித்த அந்த நாட்கள் இப்போது பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்துவிட்ட நிலையில் தேயிலை பயிரிடும் பரப்பளவும் தோட்டங்களில் குறைவடைந்து வருகின்றது. தேயிலை மலைகள் காடுகளாக மாறிவருகின்ற நிலையில் தேயிலை சார் தொழிலில் இருந்து மக்கள் விலகிச்செல்லும் மனப்பாங்கு அதிகரித்துள்ளது.

தேயிலை உற்பத்தி ஆரம்பமான காலம் முதல் இற்றை வரையான காலப்பகுதியில் முற்று முழுதாக தேயிலையே வாழ்க்கையாக கொண்டிருந்த மக்கள் மலையகத் தமிழ் மக்களே. ஆனால், அந்த தொழில் துறை அவர்களை அப்படியே வைத்திருந்தமை ஒரு சாபமே. ஒரு தொழில் துறை 150 ஆண்டுகாலம் இந்த நாட்டில் முக்கிய துறையாக விளங்கும் பட்சத்தில் அந்த தொழில் துறையுடன் இணைந்த தொழிலாளர்களும் அவர்களது வாழ்க்கை முன்னேற்றத்தை அடைந்திருத்தல் வேண்டும். 

ஆனால் அதற்கு மாறாக பெருந்தோட்டத் தொழில்துறைசார் நிறுவனங்கள் தொடர்ந்தும் அவர்களை அவ்வாறே பராமரித்து இன்றும் கூட கட்டுண்ட வேலையாட்களாக (Captive Labourers) பராமரித்து வருகின்ற நிலைமையிலேயே இருந்து வருகின்றது. இதனால் தேயிலை தொழில் துறை சார்ந்து தொழில் செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக குறைந்து வருகின்ற நிலையில் தேயிலையின் 150 ஆண்டுகால நிறைவைக் கொண்டாடும் மனநிலையில் லட்சக்கணக்கான தொழிலாளர் மக்கள் இல்லை என்றே கொள்ளலாம். 

தேயிலை செடிபோல தோன்றினாலும் உண்மையில் அது செடியல்ல. அது மர வகையைச் சார்ந்தது. தேயிலை மரங்களைக் கவ்வாத்துச் செய்யாது வளர விடுகின்றபோது அவை கொய்யா மரங்களைப்போன்று வளர்ந்து செல்லக்கூடியது. தேயிலை மரங்களில் இருந்து தளிர்களை பராமரிப்பதற்காக அவை பறிக்கும் மட்டத்தில் கவ்வாத்து செய்து மட்டம் வெட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதேபோலத்தான் இந்த மக்களின் வாழ்வும் அது சுதந்திரமாக வளரவிடப்படாது. 

தொழிலாளர் சமூகத்தில் இவர்கள்  குறிப்பிட்ட மட்டத்திற்குள்ளேயே வைக்கப்பட்டுவிட்டார்கள். இன்று பரவலாக அந்த தேயிலை சார்ந்த சமூகத்தில் இருந்து தொழிலாளர்கள் மாத்திரமின்றி தோட்ட சேவையாளர்கள், அரச ஊழியர்கள், தனியார் தறை ஊழியர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், பால் பண்ணை செய்கையாளர்கள் என பல வகுதியினர் தொழில் ரீதியாக கவ்வாத்துக்கு தப்பிய மரங்களாக வந்துகொண்டிருக்கின்றனர். எனினும் அவர்களின் வாழ்விடம் இந்த தேயிலை மலைகளின் இடையே அமைந்த அந்த குடியிருப்பு தொகுதியாகிவிட்ட நிலையில் தொழிலாளர்கள் மாத்திரமின்றி இதர பிரிவினரும் இந்த பெருந்தோட்ட நிர்வாகக் கட்டமைப்புக்குள் சிக்குண்டவர்களாகவே உள்ளனர்.

தொடர்ந்தும் இந்த இறுக்கமான நிர்வாக கட்டமைப்புக்குள் தொழிலாளர் சமூகம் வைக்கப்படும்போது இலங்கைத் தேயிலையின் 200 வது நிறைவின்போதும் அதனைக் கொண்டாடுவதில் அவர்களுக்கு ஆர்வம் ஏற்படாது. தொடர்ந்தும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக அல்லாது அவர்கள் சிறு தேயிலைத் தோட்டங்களின் உடமையாளரக மாறும்போதே தேயிலையின் மீதான நேசமும் நம்பிக்கையும்  மக்களுக்கு ஏற்படும்

நன்றி சூரிய காந்தி 

47வது இலக்கியசந்திப்பு மலையகத்தில்


கடந்த 27 வருடங்களாக இடம்பெற்றுவரும்  இலக்கியசந்திப்பு நிகழ்வின்  47 ஆவது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 29, 30 ஆம் திகதிகளில் அட்டன் கொட்டகலை மேபீல்ட் சந்தி கிறீன் ஹில் ரிட்ரீட் சென்டரில் நடைபெறவுள்ளது.

29 ஆம் திகதி முதலாம் நாள் காலை 9.30 மணிக்கு புகலிட இலக்கிய சந்திப்பின் வரலாற்றுக் குறிப்புகள் பற்றிய சந்தூஸ் வழங்கும் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகும்.

முதலாம் அரங்காக மீனாட்சி அம்மை அரங்கு மு.ப.10.00 மணிமுதல் 12.30 மணி வரை  'நாட்டாரியல்' என்ற தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் நடைபெறவுள்ளது. மலையக நாட்டார் பாடல்கள் மரபும் மாற்றமும் (லெனின் மதிவானம்),  கிழக்கிலங்கை நாட்டாரியல் மரபு– கருத்துரிமை – பெண்ணியம் (ஏ.பி.எம்.இத்ரிஸ்) மலையக நாட்டுபுற கலைகளின் இயங்குதன்மையும் சமகால நிலைமைகளும் (வே.ராமர்) அருகிவரும் கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமிய வாழ்வியலும் பாரம்பரியமும் (எம்.ஐ.உமர் அலி) தன்னிறைவான பொருளாதார உருவாக்கமும் நாட்டார் பாடல்களும் (இ.குகநாதன்) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

பி.ப 1.15 முதல் 2.45 வரை இடம்பெறும் பெண்ணிய அரங்கு 'கிருஸ்ணம்மாள்' நினைவாக யோகேஸ்வரி கிருஸ்ணன் தலைமையில் நடைபெறும். இவ் அரங்கில் இன்றைய பொருளாதாரச் சூழமைவில் மலையகத் தொழிலாளப் பெண்களின் வாழ்வியல் பங்கு (குழந்தைவேல் ஞானவள்ளி), முன்னாள் போராளிப் பெண்களின் புனைவெழுத்துக்களின் ஊடே மேலெழும் பெண்ணியக்குரல் (ஷாமிலா முஸ்டீன்) மலையகப் பெண்களின் கல்வி உரிமைக்கான தடைகள் (அ.சண்முக வடிவு) மரபுசார் கூத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சவால்களும் (ஜே.நிலுஜா) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

இலக்கியம் சார் உரையாடல் சி.வி.வேலுப்பிள்ளை அரங்காக பி.ப 3.00 முதல் 5.30 மணி வரை தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெறும். இவ்வரங்கில் மலையகப் படைப்பிலக்கியங்களில் வெளிப்படும் வீர உணர்ச்சி  (ஆ.கலையரசன்), போருக்குப் பின்னான காண்பிய கலைகளில் திரைப்படங்கள் (அனோஜன் பாலகிருஸ்ணன்),  மலையகப் பெண் கவிதைகளில் மேலெழும் போர்க்குணம் (லுணுகலை ஸ்ரீ),  தமிழிலக்கியத்தின் சமகாலப் போக்கு- ஓர் அறிமுகம் (றியாஸ் குரானா) போரிலக்கியம் : இரு நாவல்களை முன்வைத்து ஒரு கதையாடல் (எஸ்.எம்.மிஹாத்),  நவீன இலக்கிய கண்ணோட்டத்தில் ஒளவையாரும் மூதுரைகளும் (ஏ.எம்.ஜாபீர்) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

முதலாம் நாளின் இறுதி நிகழ்வாக மாலை 6 மணி முதல் 8 மணிவரை மலையக கலைஞர்கள் பங்குகொள்ளும் காமன் கூத்து நிகழ்த்துகையும் அரங்க நிகழ்வாக இடம்பெறும்.

இரண்டாம் நாளான 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை 'அரங்கியல்' எனும் தலைப்பில் திருச்செந்தூரன் அரங்கு சி.ஜெய்சங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்வரங்கில் மலையக நவீன நாடகங்கள் பேசும் பன்முக நோக்கு (சு.சந்திரகுமார்), சமகாலச் சவால்களை எதிர்கொண்டு மீண்டெழுதலுக்கான அரங்கச் செயற்பாடுகள் (து.கௌரீஸன்), மலையக அரங்கியல்  தளம் (அ.லெட்சுமணன்), சமூக மதிப்பீட்டுக் களங்களாகக் கதைப்பாடல்கள் (பா.கிருஷ்ணவேனி) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

மொழிபெயர்ப்பு மற்றும் இதழியல் தொடர்பான உரைகள் மு.ப.11.15 மணி முதல் 12.45 மணி வரை கே.கணேஸ் அரங்காக இரா.சடகோபன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்வரங்கில் மலையக இலக்கிய வளர்ச்சிப் போக்கில் அச்சு ஊடகங்கள் (சுப்பையா கமலதாசன்), சமகால இணைய இதழ்கள் (கிரிசாந்த்), மலையக சிறு சஞ்சிகைகள் (பபியான்) தமிழ், சிங்கள மொழிப்பெயர்ப்பு சில அனுபவக்குறிப்புகள் (ஹேமச்சந்திர பத்திரன) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

இறுதயரங்காக நடேசய்யா அரங்கு பி.ப 1.30 மணி முதல் 5.00 'அரசியல்' என்ற தலைப்பில் க.ரவீந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இவ்வரங்கில் இலங்கையின் அரச அரசியல் நிறுவனங்களும்  அதன் மீதான மலையக மக்களின் நம்பிக்கையும் (இரா.ரமேஸ்) மலையக மக்கள் சிதறி வாழும் மாவட்டங்களும், அந்நியப்படுத்தப்படும். அவர்களின் சமூக அரசியல் இருப்பும் (ஏ.ஆர்.நந்தகுமார்),  மலையக மக்களின் தேசிய இருப்புக்கு தடையாக உள்ள சட்ட ஏற்பாடுகளும் அவற்றை நிவர்த்திக்கும் தேவைப்பாடுகளும் (மு.சிவலிங்கம்), வடக்கு வாழ் மலையகத் தமிழர்கள் வாழ்வியல் நெருக்கடிகள் (தமிழ்ச்செல்வன்), மலைகளை வரைதல் மலையகத் தமிழர்களைப்புரிந்து கொள்வதற்கான வழித்திட்டம் (சிராஜ் மஷ்ஷுர்), வடக்கின் புதிய அடையாளங்களைக் கட்டியெழுப்புவதும் நிலம் கொண்டிருக்கும் எதிர்கேள்விகளும் (யதார்த்தன்), சிறுபான்மை இனங்களுக்கு இடையிலான ஐக்கியமும் இன உறவும் விரிசல்களும் - கிழக்கு மாகாண சபையை முன்வைத்து (திலிப்குமார்), தமிழ் அரசியலின் ஜனநாயகச் சூழல் (கருணாகரன்), புலம் பெயர் தமிழர்களின் இலங்கை அரசியல் பற்றிய புரிதல் (தேவதாசன்), மலையக அரசியல் சமகால போக்கு குறித்து ஓர் அவதானம் (காமினி ஜெயவீர) ஆகிய தலைப்புகளில் உரைகள் இடம்பெறவுள்ளன.

இலக்கிய சந்திப்பு அரங்க இடைவெளிகளில் நூல்களின் அறிமுகமும் உரைகளும் இடமடபெறவுள்ளன. உசுல பி விஜயசூரிய எழுதிய (தமிழில் தேவா) அம்பரய எனும் நூலினை திலிப்குமாரும், மு.சிவலிங்கம் எழுதிய பஞ்சம் பிழைக்க வந்த சீமை. இரா.சடகோபன் எழுதிய கண்டிச்சீமையிலே ஆகிய இரு நூல்கள் பற்றிய ஒப்பீட்டு உரையை மல்லியப்புசந்தி திலகரும்,  யதார்த்தன் எழுதிய மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் எனும் நூலைஅனோஜனும், ஜமீல் எழுதிய அவன் பையில் ஒழுகும் நதி  எனும் நூலை அம்ரிதாவும், அம்ரிதா ஏஎம் எழுதிய விலங்குகள் தொகுதி 1 அல்லது விலங்கு நடத்தைகள் எனும் நூலை  சிராஜூம் அறிமுகம் செய்து உரையாற்றவுள்ளதுடன் தில்லைநடேசனின் வட்டுக்கோட்டை அரங்க மரபு எனும் நூலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் உரைகள் மாத்திரம் அன்றி  தோட்டப்புற பாடல்கள் (விமலநாதன்) நவீன நாட்டார் கவி அளிக்கை (எழுகவி ஜெலீல்)  மலையக விடுகதைகள் (காளிதாசன்), இசைப்பா (இசைவாணி)  நாட்டார் பாடல்கள் (க.வேலாயுதம்), மெல்லிசை (பெரியநாயகம்)   என்பனவும் இடம்பெறவுள்ளது.

ஏற்பாட்டுக் குழுவினர்

அரசியலமைப்பு குழப்பத்தில் மலையகத்தின் நிலை? - அருள்கார்க்கி


தேசிய அரசாங்கத்தின் பிரதான தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையாக அமைந்தது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் மீள்கட்டமைப்பு ஆகியவையாகும். இவ்விடயம் சிறுபான்மை மக்கள் மட்டுமன்றி கற்ற சிங்களச் சமூகமும் வரவேற்கக்கூடிய நிலைப்பாட்டை அடைந்ததற்கு காரணம் மோசடி மிகுதியாலும், வரம்பு மீறிச் சென்ற ஊழல், இனத்துவேஷம், பாகுபாடு போன்ற காரணங்களாலும் நாடு சின்னாபின்னமாகி இருந்தமையாகும்.

ராஜபக் ஷக்களின் அதிகார மையம் தேசிய அரசின் கைக்கு வந்தவுடன் தமிழ் மக்களும் சற்றே நிம்மதி அடைந்தனர். வடகிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளும் தேசிய அரசின் பக்கம் நின்று ஒத்துழைக்கவும் தயாராகின. ஆனால் விளைவு வேறுவிதமான பெறுபேற்றை தந்துவிட்டது.

மைத்திரி அரசு அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் போது சில சிக்கல்கள் இருப்பதை காண முடிந்தது. காரணம் எவ்வாறு வாக்குறுதிகள் அளித்தாலும் இந்நாட்டில் சில வரையறைகளுக்குட்பட்டே செயற்பட முடியும் என்பதை மைத்திரி ரணில் அரசு அனுபவ ரீதியாக உணர்ந்தது. சில சமயம் உணர்த்தப்பட்டது. இவ்விடயத்தில் சிறுபான்மை மக்கள் சார்ந்து எடுக்கப்படும் தீர்மானங்கள் எப்போதும் பல்வேறு இனவாத தூற்றல்கள், சர்ச்சைகள் என்பவற்றைக் கடந்தே ஓய்வுப் பெருகின்றமை நாம் அறிந்ததே.
அந்த வகையில் இந்நாட்டிற்கான புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் அதிகார பரவலாக்கத்திற்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டலாம் என்று மைத்திரி அரசு நினைத்தது. இச்சிந்தனைக்குச் சாதகமாக வடக்கில் தமிழ் கூட்டமைப்பும் மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளும் தம்முடன் இருப்பதாகவும், இச்சூழலைப் பயன்படுத்தி தமிழர்களின் வரலாற்றுப் பிரச்சினைக்கு முடிவு காணலாம் எனவும் எண்ணினர். இவ்விடயத்தில் தலை தூக்கிய பௌத்த தேசியவாதம் சர்ச்சையை உண்டுபண்ணி இன்று பூதாகரமாக இப்பிரச்சினையை மாற்றியமைத்துள்ளது.

அடிப்படைவாதிகள் கூறுவதுபோல் என்றுமே ஒற்றையாட்சி தன்மை மாறாது என்றும், சமஷ்டியின் மூலம் நாடு பிளவுபடும் என்றும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் அபிப்பிராய உருவாக்கம் நூதனமாக செய்யப்படுகிறது. அதேபோல் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் பௌத்த மதமே முதன்மை அந்தஸ்துக்கு உட்பட்டது என்றும், மாகாண அதிகாரங்கள் ஆளுநர் மூலம் ஜனாதிபதியின் கீழ் வரவேண்டும் என்றும் , ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக்கூடாது என்றும் இன்று மகாசங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றும் அளவிற்கு சிங்கள அடிப்படைவாதம் இப்பிரச்சினையை பரவலாக்கியுள்ளது.

அரசியலமைப்பில் 19 ஆவது திருத்தம் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களின் சேவையை உறுதிப்படுத்துமாறு அமைந்தவிடத்தும் நடைமுறையில் மக்கள் முழுயைமாக அச்சுதந்திரத்தினை அனுபவிக்க முடியாத நிலை அரசாங்கத்தின் இயலாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டப்படுகிறது. அதேபோல் சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட யாப்புத் திருத்தங்களும் வெறும் வாய் வார்த்தைகளுக்குள் முடிந்துவிடும் அபாயம் இருக்கின்றது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் மைத்திரி அரசு மக்களின் விருப்பத்தினை அளவிடுமாறு நாடளாவிய ரீதியில் மக்கள் கருத்தறியும் அமர்வுகளை ஏற்பாடு செய்து சிவில் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்து பதிவு செய்துகொண்டு அதன் பின் அரசியலமைப்பு குழுவுக்கு பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டது. இவ்விடத்தில் மலையகத்தை முன்னிறுத்தியும், சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமது முன்மொழிவுகளை வழங்கியிருந்தன. எனினும் வட, கிழக்குக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் மலையக தேசியம் குறித்த சிந்தனைக்கு அளிக்கப்படவில்லை.

இவ்விடயம் குறித்த தெளிவு மலையக மக்கள் மத்தியில் ஏற்படாமலிருக்கச் செய்யும் செயற்பாடுகளும் அரசிடம் தாராளமாகவே இருந்தன. காரணம் வடகிழக்கு தமிழர்கள் தொடர்பாக பேசும்போது அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபைகளின் அதிகாரம், சமஷ்டி தீர்வு போன்ற கருத்தாடல்களே முக்கியத்துவம் பெறப்பட்டன. எனினும் வடகிழக்கிற்கு வெளியே வாழும் சிறுபான்மையினரின் இருப்பு குறித்தும் காணி உரிமைகள், தொழில், கல்வி, போன்ற விடயங்கள் குறித்தும் பெரிதாக பேசப்பட வில்லை. வடகிழக்கிற்கு அடுத்தபடியாக மலையக மக்களே இந்நாட்டில் குறிப்பிடத்தக்களவு சனத்தொகையைக் கொண்ட இனக்குழு என்ற அடிப்படையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

  அதுவும் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு, இருப்பு என்பன இனக் கலவரங்களாலும் ஒடுக்குமுறையாலும், சுரண்டலாலும் பாதிக்கப்பட்ட எம்மை போன்ற ஒரு இனக்குழுவுக்கு அவசியமான தேவையாகும். இன்றைய சூழலில் இவ்விடயங்களுக்கு இரண்டாம் அந்தஸ்தை வழங்கி, ஜனாதிபதியின் அதிகாரங்கள், தேர்தல் முறை மாற்றம், ஒற்றையாட்சி போன்ற பெரும்பான்மை மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறத்தக்க விடயங்களை மகாசங்கத்தினரும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரும் பேசிக்கோண்டிருப்பதால், மலையக் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் எங்கே கிடைக்கப்போகின்றது என்ற ஐயப்பாடு மலையக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது நியாயாமானதாகும். அது மட்டுமன்றி இந்நாட்டில் தமிழர் பிரச்சினை என்றால் அது வட கிழக்கில் மட்டும்தான் என்ற அபத்தமான விளக்கமும் நாட்டினுள்ளும், சர்வதேசத்திலும் ஏன் இந்தியாவிலும் கூட ஏற்படுத்தப்பட்டு மலையகம் மறக்கப்பட்டுள்ளது.  
மலையக தேசியம் குறித்து பரந்துபட்ட விளக்கமின்மையும் அரசியல் பேதங்களால் ஒன்றாக குரல் கொடுக்கும் நிலையில் நாம் அனைவரும் இல்லாததையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாப்புத் திருத்தத்தில் எம் மக்களின் இருப்பை உறுதிப்படுத்தும் சரத்துகள் உள்வாங்கப்பட வேண்டும் என்றும், காணி உரிமைகள் குறித்த தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குத்தகைகள் கூலிகள் என்ற நிலைமையில் இருந்து நாம் விடுபடும் வரை குரல் கொடுக்க வேண்டும். அதாவது பெருந்தோட்ட மக்களின் தொழில், இருப்பிடம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு எனும் நிலை யாப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். எனினும் நாம் இது குறித்து இன்னும் சிந்திக்கத்தலைப்படவில்லை. ஒரு சில அரசியல் கட்சிகள் யாப்பில் உள்ளடக்க முடியாத அற்ப விடயங்களை அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் பேசி தங்கள் சமூக அறிவை அப்பட்டமாக வெளிப்படுத்தியதுதான் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

அதேபோல் தேர்தல் முறை மாற்றத்திற்கு மகாசங்கத்தினர் ஒப்புதல் அளித்திருக்கின்றனர். அதாவது பிரதேசவாரி பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்படும் என்று சில கருத்துகள் முன் வைக்கப்பட்டுள்ளன அல்லது கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவும் மலையகத்தைப் பொறுத்தவரையில் பாதகமான விடயமே ஆகும். இப்போது எமக்கிருக்கும் பாராளுமன்ற ஆசனங்கள் கூட எட்டாக்கனியாகி விடும் அபாயம் இங்கு இருக்கின்றது. இன்று நாம் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை நாம் இழந்துவிடுவோம் என்ற கவலையாவது எமது பிரதிநிதிகளுக்கு ஏற்பட வேண்டும். மலையக தேசியம் குறித்து கற்ற சமூகம் தனது சமூகக் கடமையை நிறைவேற்றத் தயாராக வேண்டும். அரசியல் யாப்பில் மலையக மக்கள் தனியான அலகாக கருதப்பட்டு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனும் குரல் உரத்து ஒலிக்க வேண்டிய தருணம் இது. எதிர்க்கட்சித் தலைமை தமிழராக இருக்கும் வேளையில்கூட நாம் தனித்து உரத்து குரல் கொடுக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி

வேலையில்லா பட்டதாரி –குமார் சுகுணா


வேலையின்மை என்பது தொழில்  இன்மை என்பது மட்டும் அல்ல...  மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை  போன்றதே.. இத்தனை வருடங்கள் லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும் இனி சமூக மாற்றத்தை உருவாக்க சிறந்த தொழில் வாய்ப்பை பெற உதவுங்கள் மலையகத்தில் மாற்றம்  தானாகவே உருவாகும்....

வேலையில்லா பட்டதாரி இது தனுஷோட படம் கிடையாது. எங்களோட வாழ்க்கை. தேயிலைக்கு இரத்தத்தை பாய்ச்சி தேநீருக்கு நிறத்தை கொடுத்த ஒரு சமூகத்தின் இன்றைய படித்த தலைமுறையின் ஒரு குரல் என் பேனாவின் வழியாக இங்கு ஒலிக்கிறது..

இயற்கையோட இயைந்த வாழ்வு சங்க காலம் என்பார்கள். உண்மையில் மலையகத்தை விட இயற்கை சார்ந்த ஒரு அழகான வாழ்க்கை இந்த பூமியில் இல்லை என்பது அதனை தவறவிட்டவர்களினால் மட்டுமே உணரமுடியும்... மலைகளுக்கு நடுவிலான பசுமை நிறைந்த அந்த வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத ஆறுவயசுல அப்பா கைபிடித்து தாத்தா கைபிடித்து ஆரம்பமான கல்விப்பயணம்... கனவுகள் காணத்தெரியாத வயசுல நிலா நிலா ஓடி வா பாட்டு படிச்சிட்டு... கொலை கொலையா முந்திரிக்கா விளையாடிய காலத்துல யாராச்சும் உன் இலட்சியம் என்னன்னு கேட்டா நான் டொக்டராகனும் லோயராகனும் என்று கூறியவர்களில் எத்தனை பேர் அந்த மலைகளை தாண்டி வந்து நம் இலட்சியத்தை தொட்டிருக்கிறோம் என்று தெரியாது.

ஆனால் மலையகத்திலிருந்து ஒருவன் படித்து பட்டதாரியாவது என்பது இலகுவான செயல் கிடையாது... அதுவும் ஒரு தோட்டத்தொழிலாளியின் பிள்ளை பட்டதாரியாவது என்பது மிகப்பெரிய விடயம் தான்.. தோட்டப்புற பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்கும் போது எமக்கு வைத்தியருக்கு என்ன துறையை தேர்வுசெய்ய வேண்டும். கணக்கியலாளனாக என்ன துறையை தேர்வு செய்ய வேண்டும் என்ற அறிவு கூட இருக்க வாய்ப்பில்லை.. அதற்கு பின்னரான சிறு பராயத்தில் எப்போ ஸ்கூல் முடியும் வீட்டுக்கு போகனும்.. நண்பர்களோட இணைந்து விளையாடனும்.. விறகு காட்டுக்கு போகனும்.. அம்மா எப்போ மலையிலிருந்து வேலை முடிந்து வீட்டு வருவாங்க.. இப்படிதான் மனசு இருக்கும்.. பதினென் பருவம் ஆரம்பிக்கும் போது இது வாழ்க்கை... இப்போ நாம போடுகிற அடித்தளம்தான் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கும் என்று சொல்லித்தர எத்தனை பேருக்கு குருமார் கிடைத்திருப்பர் என்று தெரியாது... அதனால்தான் 9 ஆம் ஆண்டு படிக்கும் போது வரும் பருவ காதலிலேயே பலர் தமது வாழ்க்கையை தொலைத்து கல்வியை இடைவிட்டு இன்று நகர்ப்புற ஆடைதொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்..

இன்னும் சிலருக்கு வறுமையே கல்வியை இடைநிறுத்த வைக்கிறது... அதெல்லாம் மீறி படிக்கும் போது, பாடசாலை கட்டணங்களை விட மேலதிக வகுப்புகளுக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது... இன்னும் மலையகத்தின் பல இடங்களில் ஒரு ரயிலை விட்டாலோ பஸ்ஸை விட்டாலோ அதற்காக பலமணிநேரம் காத்துக்கிடக்க வேண்டும்... போக்குவரத்து வசதிகள் இன்றி ஆறுகளை தாண்டியும் தேயிலை காடுகளை கால் கடுக்க நடந்தும் பயணிக்கின்ற நிலை இன்றும் உள்ளது... இப்படி ஆயிரமாயிரம் பிரச்சினைகள்.. இதெல்லாம் தாண்டி ஒருவர் படிச்சு மேலே வருகின்றமை என்பது ரொம்ப பெரிய விஷயம்..

எப்படியோ கஷ்டப்பட்டு சாதாரண தரம் பாஸ் பண்ணிட்டா அடுத்து உயர்தரம்.... இங்குதான் நம்ம வாழ்க்கையின் வெற்றிதோல்வி மாறுகிறது... மருத்துவராகனும் பொறியியலாளராகனும் என்ற கனவோட படிக்கிற மாணவர்களுக்கு அந்த கல்வியை போதிக்க தகுதியான ஆசிரியர்கள் மலையகத்தை பொறுத்தவரை மிக குறைவு.

1983 களுக்கு முன்னர் மலையகத்தை பொறுத்தவரை வடக்கு, கிழக்கு பகுதியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களே அதிகளவில் உள்வாங்கப்பட்டு கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வளமான கல்வி சமூகம் ஒன்று உருவாக வித்திட்டப்பட்டிருந்தது. எனினும் துரதிர்ஷ்டவசமாக இடம்பெற்ற 1983 ஜூலை கலவரத்துக்கு பின்னர் மலையக கல்வி நாசம் செய்யப்பட்டு விட்டது என்று கூறினாலும் மிகையில்லை. பாடசாலைகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். வளங்கள் சூறையாடப்பட்டன. பின்னர் இனப்பிரச்சினை தீவிரம் அடைந்ததும் வடக்கு, கிழக்கிலிருந்து மலையகத்துக்கு வந்து கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் விரும்பவில்லை. இதனால் மலையகத்தில் பாரிய அளவில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது... இதற்கு தீர்வு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் கிடைத்தது. அவர் மலையக பகுதியில் படித்த திறமையான இளைஞர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கினார். இதற்கு பின்னர் ஆசிரியர் நியமனம் என்பது தகுதி அடிப்படை என்பதை விட வேலையில்லா பிரச்சினைக்கான ஒரு தீர்வாகவே மலையகத்தில் மாறியது. 

சில பாடங்களில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் என்பது இன்று வரை மலையகத்தில் ஒரு சில விரல் விட்டு எண்ணக் கூடிய பாடசாலைகளிலேயே உள்ளனர்... அது போன்ற பாடசாலைகளில் எல்லா மாணவர்களையும் இணைப்பது என்பது எளிதல்ல.. ஏனெனில் குறிப்பிட்ட தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் அப்பகுதியில் உயர்தர பாடசாலை ஒன்று இருக்கும் பட்சத்தில் வேறு பாடசாலையில் இணையமுடியாது... எனவே மேலதிக வகுப்பு என்பது தவிர்க்க முடியாததாகின்றது.. ஆனால் பலர் வெறும் பணத்திற்காக மட்டுமே மேலதிக வகுப்புகளை நடத்துகின்றனர் என்பது துரதிர்ஷ்டம்... இருப்பினும் தேர்ச்சி பெற்றவர் இல்லாமல் இல்லை..எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் இவையனைத்தையும் தாண்டி கல்வி கற்று இரவு பகலாக தூக்கத்தை தொலைத்து பல்கலைக்கழகம் எனும் இடத்திற்கு ஒருவன் வரும் போது எத்தனை எத்தனை கனவுகள் இருக்கும்....

தேயிலை காடுகளில் உள்ள அட்டைகளுக்கு தனது உதிரத்தை உணவாக்கியும்.. தேனீக்கடிகளுக்கு தன் தேகத்தை இலக்காகியும் துயர வாழ்வு வாழும் ஒரு தாயின் கைப்பிடித்து வளர்ந்தவனுக்கு பல்கலைக்கழகத்துக்கு நுழையும் போது அந்த பல்கலைக்கழக கட்டடமே பிரமிப்பு ஊட்டுவதாகத்தான் இருக்கும். அதுவும் கிராமப் புறத்தை தாண்டி நகர்ப்புறத்துக்கு நுழையும் அந்த வாழ்க்கையில் எத்தனை கனவுகள் சிறகடிக்கும்... நானும் கார் வாங்கனும்... நானும் நகரத்துல வீடு வாங்கனும் இப்படி ஆயிரம் கனவு இருக்கும்.. இதெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது.. பல்கலைக்கழகம் கல்வியை தொடரும் போது வறுமை பலரை வாட்டுவது இயல்பே.. புலமைப்பரிசில்கள் கிடைத்தாலும் அம்மா வீட்டுல இருந்து அனுப்புற காசுக்காக காத்திருக்கனும்... பல்கலைக்கழக கல்வியிலும் பிரதேச வாதம்...இனவாதம்.. செல்வாக்கு இப்படி பல விடயங்கள் தலைகாட்டும் இதெல்லாம் தாண்டி.. கஷ்டப்பட்டு அங்கேயும் இரவு பகலாக படிச்சு ஒரு பட்டத்த வாங்கிற கஷ்டம்.. அதன் பின் வருகின்ற ஆனந்தம்... அம்மா அப்பா நம்ப உறவுகள் இதனால் அடைகின்ற மகிழ்ச்சி இதெல்லாம் வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது..

ஆனால் பட்டதாரியான பிறகும் தகுதிக்கு ஏற்ப பிடித்தமான வேலையில்லாமல் கஷ்டப்படுற நிலைமை...இது நம்ம எதிரிக்கு கூட வரக்கூடாது... மலையகத்துல பிரச்சினைனு 100 வருஷத்துக்கு மேல் எதை எதையோ பேசிட்டாங்க.... ஆனால்.. இப்போ... படிச்சுட்டு நமக்கு பிடிச்சமாதிரியான வேலை வாய்ப்புகள் இல்லாமல் நாம் படுகின்ற மன உளைச்சல் யாருக்கும் புரியாது... இத பற்றி பேசவோ யோசிக்கவோ யாரும் இல்லை... மலையகத்தில் குறிப்பாக கலை பட்டதாரி இளைஞர்களுக்கு கிடைக்கின்ற ஒரே வாய்ப்பு ஆசிரியர் நியமனம் மட்டுமே... எப்போதாவது உள்ளூராட்சி மன்றங்களில் வேலைவாய்ப்பு அதுவும் ஆளணி தட்டுப்பாட்டு ஏற்படும் போது கிடைக்கும்.. ஆனால் எல்லா பட்டதாரிகளையும் அதற்குள் உள்வாங்க முடியாது... பொதுவாக பட்டதாரிகளுக்கு கிடைக்கின்ற வேலைவாய்ப்பு என்பது ஆசிரியர் நியமனம் மட்டுமே.. ஆசிரியர் நியமனம் என்பது தவறில்லை... அந்த தொழிலை விரும்பி ஏற்றால் மட்டுமே அது பூரண பலனை வழங்கும்... ஆனால்.. இங்கு வேலையில்லை.. என்பதற்காக அந்த தொழிலை தேர்ந்தெடுத்தவர்களே அதிகம்... ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒரு மருத்துவனை ஒரு சட்டத்தரணியை ஏன் இந்த நாட்டின் நல்ல தலைவனை உருவாக்க முடியும்... ஆனால், அந்த தொழிலை தகுதியுள்ள ஒருவன் அர்ப்பணிப்புடன் செய்யும் பட்சத்திலேயே அது பூரண பலனை வழங்கும்... 

அண்மையில் மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது... அதுவும் 10 வருடங்களுக்கு ஒரு ஆசிரியர் குறித்த கஷ்ட பிரதேசத்திலேயே பணியாற்ற வேண்டும்... இடமாற்றம் கோரமுடியாது... ஆரம்பப்பிரிவு பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள்.. உண்மையில் அதனை எத்தனை பேர் மன மகிழ்சியுடன் ஏற்றனர் என்பது கேள்விக் குறியே.. பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்ப பிரிவுக்கு கல்வி கற்பிப்பது தவறல்ல.. ஆனால் அவர்களது கல்வி வளம் வீணடிக்கப்படுகின்றது. என்பது புரிந்து கொள்ளப்படாமல் உள்ளது... சில வருடங்களுக்கு முன்னர் மலையகத்தில் பெரியளவில் தகுதி எதுவும் பார்க்காமல் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. அப்போது அதற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதிலும்... அதனை யாரும் கண்டுகொள்ளவில்லை.. இன்று அந்த நியமனம் பெற்றவர்களில் பலர் உயர்தர ஆசிரியர்களாக உள்ள நிலையில் ஒரு புவியியல் பட்டதாரியையும் விஞ்ஞான பட்டதாரியையும் ஆரம்ப பாடசாலை ஆசிரியராக்குவது எந்தளவு கல்வி வளம் வீணடிக்கப்படுகின்றது என்பதை உணரவைக்கிறது...

மலையக பட்டதாரிகளில் பலர் ஒரு அரச நிறுவனம் அல்லது குறிப்பிட்டளவு சம்பளத்துடன் ஒரு மகிழ்ச்சியான தொழில் என்பதனை மட்டுமே எதிர்பார்க்கின்றனர்.. ஆனால் இயல்பில் இதனை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது... தொழில் வளம் என்பது அங்கு மிக குறைவாக உள்ளது.. சாதாரணமாக படித்தவர்களும் ஆசிரியர் நியமனம் பெற்றுவிடுகின்றனர். ஆசிரியராக வேண்டும் என்று ஆசிரியர் கல்வி கல்லூரிகளில் படித்து வருகின்ற ஒருவர் மகிழ்ச்சியுடன் கற்பிக்கும் அளவுக்கு மனம் விரும்பாமல் ஆசிரியர் தொழிலை வெறும் தொழிலுக்கு பெறுகின்ற ஒருவரால் மகிழ்ச்சியாக செய்ய முடியாது. நான்கு, ஐந்து வருடங்கள் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வெளியேறும் போது அதற்கான தொழில் வாய்ப்பு இங்கு இல்லை. வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அவர்களுக்கும் ஆசிரியர் நியமனத்தை வழங்குகின்றனர். 

ஏன் படிச்சோம் ஏன் பல்கலைக்கழகம் சென்றோம் என்று பலருக்கு இதனால் தோன்றுகிறது. என்ன படித்தாலும் ஆசிரியர் தானே. இதற்கு எதற்கு பல்கலைக்கழகம் என்று எண்ணாதவர்கள் குறைவு.. வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் கூட இறுதியில் தனுஷ் தனக்கு பிடித்த தொழிலை வெற்றிகரமாக பணியாற்றுவார்..ஆனால்... நாம்... பொருளாதாரம்.. இறுதிக்கால நன்மை என்பதற்காக விரும்பியோ விருப்பம் இல்லாமலோ தொழிலை தேர்வு செய்கிறோம்.

உண்மையிலேயே இன்றைய அரசாங்கத்துக்கு மலையக கல்வியின் மீது உண்மைத்தன்மையான அக்கறையும் அனுதாபமும் இருக்குமாக இருந்தால் முதலில் அரசாங்கமும் அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அவரவரின் நிகழ்ச்சி நிரல்களில் இருந்து வெளிவந்து பொதுவான செயற்றிட்டம் அல்லது பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது மிக மிக அவசியமாகின்றது. அதுமாத்திரமன்றி மலையக பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலுக்குள் மட்டும் என்று ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விடாது வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம். .. வெளிநாட்டு முதலீடுகளை பெற்றாவது வேறு தொழில் வாய்ப்புகளை மலையகத்தில் ஏற்படுத்த முடியும். அது மலையகம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று அர்த்தப்பட தேவையில்லை. மாறாக மலையகத்துக்கு வெளியிலும் இதனை நடைமுறைப்படுத்த முடியும். 

தொழில் பேட்டைகளையும் தொழில் நிறுவனங்களையும் உருவாக்குவதற்கு எமது நாட்டில் வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ... இவற்றை முறையாக பாவித்து அல்லது வரையறை செய்து தரமான தொழில் வாய்ப்புகளை அமைத்துக்கொடுக்க முடியும் . இல்லையெனில் வெளிநாட்டிலேனும் தொழில் வாய்ப்புகளை பெறக்கூடிய வகையில் எமது கல்வி முறையில் மாற்றத்தை செய்து பாடசாலை முடித்து பல்கலைக்கழகம் நுழையும் போது தொழில் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்...

வேலையின்மை என்பது தொழில் இன்மை என்பது மட்டும்.. அல்ல... மன விருப்பம் இன்றி பிடிக்காத தொழிலை சிலுவை போல சுமப்பதும் மனதளவில் வேலையின்மை போன்றதே.. எனவே மாற்றத்தை உருவாக்குங்கள்.. லயத்து பிரச்சினை பற்றி பேசியது போதும்.. இந்தியாவில இருந்து இந்த மண்ணில் குடியேறி 150 வருடங்களாகிவிட்டன.. இன்னும் இதை பேசியே அங்கு கட்சிகள் வாழ்கின்றன.... அடுத்த தலைமுறை வந்துவிட்டது.. மலையகம் முன்னேற்றம் அடைய பிரச்சினைகளில் இருந்து வெளியேற ஒரே வழி கல்வி கல்வி...கல்வி.. என்று சொன்னார்கள்... ஆனால்.. இன்று ஏன் படித்தோம் என்ற எண்ணம் வந்துவிட்டது.. பல்கலைக்கழக தேர்வு என்பது ஒரு காலத்தில் பகல் கனவே.... ஆனால் இன்று சாத்தியமானது... ஆனால் வேலையின்மை பின் தொடர்வது வேதனையானதொன்று.. மலையகத்தின் ஒவ்வொரு பட்டதாரி மாணவரையும் குறிப்பாக கலை பட்டதாரிகளை இப்பிரச்சினை களையிழக்க வைத்துக்கொண்டிருக்கிறது... பச்சை போர்வைகளை போர்திக்கொண்ட மலையகத்தின் பசுமை அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ள மறுப்பது பரம்பரை நோயாகி கொண்டிருக்கிறது..

இனி பிரச்சினை பற்றி பேசாமல்.. தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்.. தொழில் வாய்ப்புகளை மலையகத்தில் உருவாக்குங்கள்... நல்ல தொழில் கிடைத்தாலேயே வீடு, வாசல், வாகனம் என்று அனைத்தும் கிடைத்து விடும்... நாம் எதிர்பார்க்கின்ற வாழ்க்கை முறைமை மாற்றம் சாத்தியப்பட்டு விடும்.. ஒருவன் படித்து முன்னேறுவது அவனது சொந்த முயற்சியினால் மட்டுமே... அரசியல் உதவியோடு அல்ல. அப்படி முன்னேறுபவனுக்கு உதவி செய்யுங்கள்.. தொழில் ரீதியான உதவியை பெற்றுக்கொடுங்கள்.... உங்கள் கல்வி தகைமைகளை பாராது உங்களுக்கு வாக்களித்த பெற்றோர்களின் வாழ்வு வளமாக நீங்கள் வேறொன்றும்.. செய்யாதீர்கள்.. தொழில் பேட்டைகளை மலையகத்தில் உருவாக்கி தொழில் வாய்ப்புகளை அவர்களின் பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுங்கள்... அதுவே மலையகத்தை மாற்றிவிடும்.. மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டும் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். என்பதே இக்கட்டுரையின் நோக்கம்..

நன்றி - வீரகேசரி

வரலாற்றை விசாரிக்கும் கூட்டு ஒப்பந்தம் - கபில்நாத்


இலங்கையின் தேயிலைக்கு 150 வயதாகிறது. அதனை அடையாளப்படுத்தும் முகமாக 'முத்திரை' யும் வெளியிடப்பட்டுவிட்டது.  இந்த 150 வருட கால வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் இலங்கையில் தேயிலைக் கைத்தொழிலை நிர்வகித்த பெரும்பாலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே இருந்திருப்பதனை அவதானிக்கலாம். 1867 ஆம் ஆண்டு வர்த்தக பயிராக தேயிலைப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து 1972ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்படும் வரையான 100 ஆண்டுகளுக்கு மேலான காலப்பகுதி பிரித்தானியர் வசமே தேயிலைப் பெருந்தோட்ட நிர்வாகம் இருந்து வந்துள்ளது. 

1972 ஆம் ஆண்டு காணி உச்சவரம்பு சட்டத்துடன் 50 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவை தனியார் கொண்டிருக்க முடியாது எனும் நிலைமையில் பிரித்தானியர் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறினர். அதாவது இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் பெருந்தோட்டப் பகுதிகளில் பிரித்தானியர் ராஜ்ஜியமே இருந்தது. அதுவரை காலமும் பெருந்தோட்ட தொழில் நிர்வாகம் மாத்திரம் அல்ல அதனையொட்டி வாழும் சமூகத்தினை நிர்வகிப்பதையும்  பிரித்தானியரே தம்வசம் கொண்டிருந்தனர். ஒருபுறம் இலங்கை பிரஜாவுரிமை இல்லாதிருந்த மலையக மக்களை அந்த நாட்களில் கேள்வி கேட்க யாருமற்ற நிலையில் பிரித்தானியர்களின் அடிமை போலவே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகம் வைக்கப்பட்டார்கள். 

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானபோதுதான் பெருந்தோட்டங்களையும் அதுசார்ந்து வாழ்ந்த மக்களின் நிர்வாகப் பொறுப்புக்கள் சிலதையும் கூட அரசாங்கம்  பொறுப்பேற்றது. 1964 ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் அந்த ஒப்பந்தப்படி இந்தியா செல்ல விண்ணப்பித்தவர்கள் தவிர ஏனையோர் இலங்கையிலேயே வசிப்பர் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அவர்களை இலங்கை அரச நிர்வாகத்துக்குள் உள்வாங்க வேண்டிய கடப்பாடு அப்போதைய ஸ்ரீமாவோ அரசுக்கு ஏற்பட்டது. பெருந்தோட்டங்களை பிரித்தானியரிடம் இருந்து பொறுப்பெற்ற அரசு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை (ஜனவசம), இலங்கை அரச பெருந்தோட்ட யாக்கம் (எஸ்.பி.சி) போன்ற அரச நிறுவனங்களின் ஊடாக அதன் நிர்வாகத்தை மேற்கொள்ள நேரிட்டது. 

150 வருட தேயிலை வரலாற்றை முன்னிட்டு
  வெளியிடப்பட்ட முத்திரை
அதன்படி, உள்நாட்டு நியதிச்சட்டங்கள் பெருந்தோட்டக் கைத்தொழில் துறைக்குள் அதிக செல்வாக்கு செலுத்தத்தொடங்கின. தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், சேவைக்காலப்பணம், குறைந்தபட்ச சம்பளம், சம்பள சபையின் ஊடாக சம்பள நிர்ணயம் என சட்டங்களுக்கு உட்பட்ட வகையில் பெருந்தோ ட்டக்கைத்தொழில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த காலப்பகுதியில் அநேக தொழிற்சங்கப் போராட்டங்கள் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல வாரலாற்று சான்றுகள் உண்டு. அதேநேரம் வாக்குரிமை இல்லாத காரணத்தினால் தொழிற்சங்க கட்டமைப்பையே தங்களது அரசியல் இயக்கமாகவும் கொண்டிருந்த மக்கள் தமது தொழிற்சங்க பலத்தையே நம்பியிருந்தனர். 

மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றபோது அது அரசாங்கத்தின் நேரடியான ஏற்றுமதி வருமானத்தை பாதிப்பதாக அமைந்தது. எனவே அரசு அத்தகைய தொழிற்சங்க போராட்டங்களுக்கு முகம் கொடுத்து தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. எனினும் 1992 ஆம் ஆண்டு ஆகும் போது பொது நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் கொள்கையின் அடிப்படையில் பெருந்தோட்டங்களை   தனியார் மயப்படுத்த அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்தது. அன்றைய நாட்களில் அரசாங்கத்திற்கு இருந்த பெரும் சுமையாக அவர்கள் கருதியது, தோட்டங்களை நிர்வகிப்பது மாத்திரம் அன்றி அங்குள்ள சமூக நிர்வாகத்தை கொண்டிழுப்பதாகும். தொழிலாளர் குடியிருப்புகளை பராமரித்தல், தோட்டங்களுக்குள் பாதை வலையமைப்பை பராமரித்தல்.

1987 ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டமே தோட்டப்பகுதி குடியிருப்பு பகுதிக்கு சேவையாற்றுவதில் இருந்து தம்மை விலக்கிக்கொண்டிருந்தது. அதனை தோட்ட நிர்வாகமே முன்னெடுக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (இன்றும் கூட அந்த சட்டமே நடைமுறையில் உள்ளது. அண்மைய காலத்தில் அதனை திருத்துவதற்கான பிரேரணைகள் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டன, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் சட்டத்திருத்தம் இன்னும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.) எனவே தோட்டங்களையும் அத சார்ந்த சமூகத்தையும் பராமரிப்பதை சுமையாக எண்ணிய அரசாங்கம் அதனை தனியாருக்கு ஒப்படைக்கத் தீர்மானித்தது. அதுநாள் வரை இருபது வருடங்களாக ஜனவசம, எஸ்பிசி, தோட்டங்களாக இருந்தவற்றுள் பெரும்பகுதி 23 பிராந்திய கம்பனிகளாக வகைப்படுத்தப்பட்டது. தேயிலைக்காணிகள் அரசின் உடமையாகக் கருதப்பட்டு அதன் நிர்வாகம் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. எனவே அரசாங்கம் பொன்பங்குதாரர் (Golden share holder) என நிலம் தொடர்பான உரிமையை மாத்திரம் கையில் வைத்துக்கொண்டது. 

நிர்வாக விடயங்களில் இருந்து இயலுமானவரை விலகிக்கொண்டது. பெருமளவு பங்குகளும் முழுமையான நிர்வாகமும் தனியார் வசமாகின. தொழிலாளர்களுக்கு சிறுஅளவில் பங்குகள் வழங்கப்பட்டன.  ஆனால், அது தனியார் மயமாதல் ஊடாக தொழிலாளர்கள் தோட்டத்தின் பங்குதாரர்கள் ஆகிறார்கள் என பெருமெடுப்பில் பேசப்பட்டது. காலப்போக்கில் அந்த பங்குகளின் எண்ணிக்கை மிகசொற்பமானது என வெளிப்பட்டது. தொழிலாளர்கள் ஆரம்பத்தில் அந்த பங்கு பத்திரங்களை விற்பனை செய்யும் ஒரு நிலைமையும் காணப்பட்டது. பின்னர் அது மறுக்கபட்ட ஒரு விடயமாக மாறிப்போனது. அதேநேரம் தொழிலாளர் நலன் பேண் விடயங்களை கவனிப்பதற்கு என பிராந்திய கம்பனிகள் ஒரு நிதியத்தை உருவாக்கி செய்ற்படுவது என்றும் மாதாந்தம் சமூக நலன் பேண் விடயங்களுக்காக தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை இந்த நிதியத்துக்கு தோட்டக்கம்பனிகள் வழங்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அத்தகைய தீர்மானத்தின்படி உருவானதே 'பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம்' எனும் ட்ரஸ்ட். இந்த ட்ரஸ்ட் நிறுவனத்தின் இயக்குனர் சபையில் தொழிற்சங்க தரப்பில் இருவரும் திறைசேரி தரப்பில் ஒருவரும் அங்கம் வகித்தபோதும் பெரும்பாலான இயக்குனர்கள் கம்பனிகளின் பிரதிநிதிகாளகவே காணப்பட்டனர். எனவே அவர்கள் பலமே அங்கு ஓங்கியிருந்தது. தலைவர் பதவிக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஒருவரை நியமிக்கலாம். அது ஒரு நாமநிர்வாகிப் பதவி மாத்திரமே. திறைசேரி அங்கத்தவர் கணக்கீட்டு ஒழுங்ககளை சரிபார்க்கும் பொறுப்பையே வகிப்பார். எனவே அரசாங்கத்தின் பிடி என்பது ட்ரஸ்ட் நிறுவனத்தின் மிகவும் பலவீனமானது. இதனை அரசாங்கம் திட்டமிட்டே மேற்கொண்டுள்ளது. காரணம் தோட்ட சமூகத்தைப் பராமரிக்கும் சுமையை அரசு தவிர்த்துக்கொள்ள எண்ணியது. 

தனியார் மயப்படுத்தப்பட்டு ஆறு வருடங்களின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்த முறைப்படி சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையை தனியார் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகள் அறிமுகம் செய்தன. கூட்டு ஒப்பந்த முறை சர்வதேச ரீதியாக எற்றுக்கொள்ளப்பட்ட முறையாயினும் மலையகப் பெருந்தோட்டத்தில் அது நடைமுறைப்படுத்தப்பட்டவிதம் ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானது. காரணம் அரச பொறுப்பில் தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டபோது இருந்த பல்வேறு சட்டப்பாதுகாப்பை இந்த கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் செய்தது. கூட்டு ஒப்பந்தத்தினால் உள்வாங்கப்படும் தொழிலாளர்கள் குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் இருந்து விலக்களிக்கப்படுவார்கள் எனும் சரத்து சட்டத்தில் காணப்பட்டமை இதற்கு பிரதான காரணமாகியது. 

தவிரவும் இரண்டாண்டுக்கு ஒரு முறை இந்த கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுவதும் அந்த ஒவ்வொரு காலத்தின்போதும் கூட்டு ஒப்பந்த விதிமுறைகள் மாற்றத்திற்கு உள்ளாவதும் பெரும் சர்சசைக்கும் போராட்டங்களுக்கும் உட்பட்டிருக்கின்ற ஒரு விடயமானது. குறிப்பாக மலையக சம்பளப்பிரச்சினை என்பதுபோன்ற தோற்றப்பாடே என்பதை வெளியுலகுக்கு காட்டுவதாக 'கூட்டு ஒப்பந்த' சலசலப்பு அமைந்தது. 

கூட்டு ஒப்பந்தத்ததுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நடாத்தப்பட்டிருக்கின்றது. அந்தப் பேராட்டங்கள் எல்லாமே தனியார் கம்பனிகளுக்கு எதிராக இருந்ததே அன்றி அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையவில்லை. இது 1992 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு மாறானதாகும். எனவே தோட்டத் தொழிற்சங்க போராட்டங்கள் அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்கவில்லை. அரசாங்கம் மத்தியஸ்தம் வகிக்கும் ஒரு நிலைப்பாட்டில் மாத்திரம் இருந்துகொண்டு தொழிற்சங்கங்களினதும் முதலாளிமார் சம்மேளனத்தினதும் கைகளுக்கு பிரச்சினையை விட்டிருக்கிறது.
தொழிற்சங்கள் பல இருக்கின்றபோதும் அதிகளவான உறுப்பின ர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களே கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் பங்கேற்க முடியும் என்ற நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுடன் சிறு தொழிற்சங்கங்களின் கூட்டான தோட்டத் தொழிற்சங்கங்களின் கூட்டு கமிட்டி ஆகியன தொடர்ச்சியாக கூட்டு ஒப்பந்த பேரம் பேசுதலில் ஈடுபட்டு கையொப்பம் இட்டு வந்தன.
இந்த மூன்று தொழிற்சங்கங்கள் தவிரந்த ஏனையவை இரண்டு விதமான போராட்டங்களை முன்னெடுத்தன. ஒன்று கம்பனிக்கு எதிரானது. இன்னொன்னு கூட்டு ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களுக்கு எதிரானது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களை எதிர்த்ததன் பிரதான காரணம் கூட்டு ஒப்பந்த முறை அல்லது கூட்டு ஒப்பந்த சரத்துகள் முறையற்றது என்றும் அதில் இருந்து விலகக்கோரியமாக அமைந்தது. 

ஒவ்வொருமுறை போராட்டங்களின்போதும் இந்த எதிர்ப்புகள் வெளிப்படும். அதேநேரம் சில தொழிற்சங்கங்கள் தாங்கள் கூட்டு ஒப்பந்த முறைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதாக அறிவிக்கும். எனினும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்ட பின்னர் எல்லாம் மறந்த கதையாகிவிடும். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பதாக எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஒரு தொழிலாளியைக் கொண்டு வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தது. அந்த காலப்பகுதியில் கூட்டு ஒப்பந்தம் மீளப்புதிப்பக்கப்படடது. அந்த மீளப்புதுப்பித்தலை காரணம் காட்டி குறிப்பிட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. 

எனினும் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தை ரத்துச்செய்யுமாறு கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் இ.தம்பையா தாக்கல் செய்த மனு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கபட்டு வருகின்றது. 

மக்கள் தொழிலாளர் சங்கம் முன்வைத்துள்ள மனுவில் நிலுவைச்சம்பளம் என்பது தொழிலாளர்கள் தொடர்ந்துபெற்றுவந்துள்ளமையால் அது தொழிலாளர்கள் எற்கனவே பெற்றுவந்த உரிமை என்றும் , அத்தோடு சம்பள கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்க ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் எற்கனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாததென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு கொடுப்பனவுகள் உள்ளிட்ட மொத்த சம்பாத்தியத்துக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான பங்களிப்பு வழங்கப்படாமை அந்த நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் முன்வைக்கப்படும் யோசனைகள் 300 நாள் வேலை வழங்கும் ஆரம்ப ஒப்பந்தத்தினை மீறுகின்றமையையும் காரணம் காட்டி 2016 ஆம் அண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் ரத்துச்செய்யப்படவேண்டும் என கோரியிருக்கிறது. 

இதற்கு பதிலாக ஆட்சேபனை மனுவை கையளித்திருக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கும் அம்சங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இதுவரைகாலம் முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை ஆமோதிப்பதுபோல உள்ளது. எனெனில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூட்டு ஒப்பந்தம் செய்யப்படல் வேண்டும் என்றோ, நிலுவைச் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை. அத்துடன் இதுவரை செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி சட்டத்திற்கு உட்பட்ட சம்பாத்தியத்தில் இணைக்கப்படவில்லை என்பதால் 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக அவை செலுத்தப்பட வேண்டியதில்லை. எனவே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ரிட் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என இ.தொ.கா.கோரியிருக்கிறது. 

ஆக 20 வருடங்களுக்க மேலாக நடைமுறையில் இருக்கின்றபோதும் காலம் தாழ்த்தியேனும் நீதிமன்றத்திற்கு முன்கொண்டு செல்லப்பட்டுள்ள 'கூட்டு ஒப்பந்த' விடயம் இப்போது பல்வேறு உட்கிடைக்கைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ள, எதிர்வரும் மாதங்களில் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எனைய தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் தமது ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்யும் போது இன்னும் பல கோணங்களில் விடயங்களில் வெளிவரக்கூடும். தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் குறித்த புதிய முறையொன்றுக்கான தேவையை இது வலியுறுத்துவதோடு மட்டுமல்லாது புதிய  மாற்று சிந்தனைகளுடனான தொழிற்சங்க கட்டமைப்பின் தேவையையும் உணர்த்துவதாக உள்ளது. இப்போது கூட்டு ஒப்பந்தமும் வரலாற்றை விசாரிக்கும் நிலைக்கும் உட்பட்டுவிட்டது.

நன்றி தினக்குரல்

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கமான இ.தொ.க வின் ஒப்பந்த அறிக்கை...
CWC's Objection by jeeva on Scribd

ஆயிஷா றவுப் எனும் விதேச பெண் ஆளுமை - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 19

இந்த பத்தியில் இலங்கைக்காக பணியாற்றிய அந்நியர்கள் பற்றியே அதிகம் பேசிக்கொண்டு வருகிறோம் அந்த வகையில் இந்தியாவை பிறந்த இடமாகவும், இலங்கையை புகுந்த இடமாகவும் ஆக்கிக்கொண்டு இலங்கையின் வளர்ச்சியில் பங்குகொண்ட ஆயிஷா பற்றியது இன்றைய பத்தி. இந்த ஆண்டு அவரின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.

1917இல் கேரளாவில் தெல்லிச்சேரி எனும் பகுதியில் பிறந்த ஆயிஷா பீபியின் (Ayesha Beebi Mayen) தந்தை ஒரு முற்போக்காளராவார். மதப் பழமைவாதத்திற்கு அப்பாற்பட்டவராக இருந்துவந்தவர். இந்திய தேசிய காங்கிரசிலும், முஸ்லிம் லீக்கிலும் தலைமைத்துவத்தில் இருந்தவர். 6 வயதிலேயே தாயை இழந்த ஆயிஷா தந்தையின் சுதந்திர வளர்ப்பில் உயர்ந்தவர். தாயில்லாத ஆயிஷா தகப்பனின் அரசியல் செயற்பாடுகளுடன் தான் வளர்ந்து வந்தார்.  மிக அரிதாக பெண்களே பயின்று வந்த அக்காலத்தில்; மலபார் பகுதியிலேயே முதலாவதாக பட்டம் பெற்ற (சென்னைப் பல்கலைக்கழகத்தில்)  முஸ்லிம் பெண் என அறியப்படுபவர். அதன்பின்னர் அங்கேயே சிறப்பு கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றார்.

கோயம்புத்தூரில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் வர்த்தகம் செய்து வந்த வர்த்தகர்  எம்.எஸ். எம். றவூப் என்பவரைத் 1943 இல் திருமணம் செய்து 1944 இல் கொழும்பில் குடியேறினார். அன்றைய அரசாங்க சபை உறுப்பினராக இருந்த முஸ்லிம் தலைவர்களில் ஒருவரான சேர் ராசிக் பரீத் முஸ்லிம் சமூகத்துக்கு அயேஷாவின் கல்விப் புலமையைப் பயன்படுத்தச் செய்ய வேண்டும் என்று; இலவசக் கல்வியின் தந்தை என்று நாம் கொண்டாடும் கல்வி அமைச்சர் அன்றைய கல்வி அமைச்சர் சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரவுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அவர்களின் மூலம் மருதானை மகளிர் பாடசாலைக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

1945ஆம் ஆண்டு உலக யுத்தம் முடியும் வரை பம்பலப்பிட்டியில் இருந்த ராசிக் பரீதுக்கு சொந்தமாக இயங்கிவந்த அரை ஏக்கர் நிலத்தில் இருந்த பாடசாலை மூடப்பட்டு இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. போர் முடிந்ததும் 1946ஆம் நவம்பர் 1ஆம் திகதி ராசிக் பரீத் அந்தக் காணியில் மீண்டும் ஆயிஷாவை அதிபராகக் கொண்டு (ஆங்கில மூல) முஸ்லிம் பெண்கள் கல்லூரியை ஆரம்பித்தார்.

மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வெகு இரு ஆசிரியைகளும், இருபது மாணவிகளுடனும் சிரமத்தின் மத்தியில் அவர் கட்டியெழுப்பிய அந்தக் கல்லூரியில் இருந்து 25 வருட சேவைக்குப் பின் அவர் 1970 ஆம் ஆண்டு ஓய்வு பெறும்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரபல பாடசாலையாக ஆக்கப்பட்டிருந்தது. இன்று அது 3500க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கொண்ட பிரமாண்ட பாடசாலை. பெருமளவு முஸ்லிம் பெண்கள் அப்போது கல்வி கற்று உயர்கல்வியையும் முடித்துக் கொண்டு பல உயர் பணிகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தார்கள். 1960ஆம் ஆண்டு பதியுதீன் முகமத் கல்வி அமைச்சரான வேளை பல தனியார் பாடசாலைகள் அரசாங்க பாடசாலைகளாக ஆக்கப்பட்டபோது இந்தக் கல்லூரியும் அரசின் கீழ் வந்தது.

முஸ்லிம் பெண்கள் கல்லூரி
கல்வி நடவடிக்கைகளை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே ஆயிஷா அதிக நேரம் செலவிடுகிறார் என பெற்றோரர்கள் மத்தியில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக அவரது பதவிக் காலம் முடியுமுன்பே அவர் மாநகர சபையிலிருந்து 1961இல் விலகினார். 12 வருடகால அரசியல் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர கல்விப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் அரசியலில் தோல்வியுற்று விலகியவரல்ல, மாறாக கல்விச் சேவைக்காக அரசியல் பணியை பதவியில் இருக்கும்போதே விட்டுக்கொடுத்துவிட்டு வந்தவர்.
ஆயிஷா றவுப்
அரசியல்
பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தைச் சேர்ந்த மேரி ரத்னம் (இலங்கை உள்ளூராட்சி சபையின் முதலாவது பெண்) அயேஷாவின் அரசியல் பிரவேசத்துக்கு போதிய ஊக்குவிப்பைச் செய்தார். அதுபோல ஆயிஷாவின் கணவர் றவுப் உற்சாகம் கொடுத்து ஊக்குவித்து வந்தார்.

கொழும்பில் இயங்கி வந்த மலையாள வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த பெண்களின் சமூக செயற்பாடுகளை ஊக்குவித்து வழிகாட்டி வந்திருக்கிறார். மலையாளிகள் சங்கத்தில் ஆயிஷா வந்த காலத்திலிருந்தே ஈடுபாடு காட்டி வந்தார். 30களில் மலையாளிகளுக்கு எதிரான போக்கு தலைதூக்கியிருந்தபோது இந்த சங்கம் தொழிற்சங்கங்களாலும், இடது சாரிக் கட்சிகளாலும் ஆதரவளிக்கப்பட்டன.

1947ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆயிஷா போட்டியிட்டார். ஏ.ஈ.குணசிங்க, பீட்டர் கெனமன், டீ.பீ.ஜாயா ஆகியோருடன் போட்டியிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. அந்தத் தேர்தலில் தனது கணவரின் உறவினரான எம்.எச்.எம்.முனாஸ் (M.H.M.Munas) அவர்களும் போட்டியிட்டிருந்தார். முனாஸ் நான்காவது இடமும் (8600 வாக்குகள்) ஆயிஷா  8486 வாகுகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கும் வந்தார்கள். முஸ்லிம் வாக்குகள் அவ்வாறு சிதைக்கப்படாமலிருந்தால் ஆயிஷா பாராளுமன்றத்துக்கு அன்று தெரிவாகியிருப்பார்.

அது போல இலங்கை இந்தியர் காங்கிரஸ் (Ceylon India Congress) இல் அப்துல் அசிஸ் அவர்களோடும் பணி புரிந்த ஆரம்ப காலத்தில் இந்திய வம்சாவளியினரின் குடியியல் உரிமைக்காக குரல் கொடுத்தார் ஆயிஷா. ஆனால் அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை. ஆரம்பத்திலிருந்தே சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட்டார். அவரை பிரதி மேயராக ஆக்குவதற்கு முழு ஆதரவையும் அன்றைய இடதுசாரிக் கட்சிகள் வழங்கின. 1954இல் அவர் இடதுசாரிக் கட்சிகளுடனான உறவிலிருந்து துண்டித்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.

1949இல் கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே மாநகர சபையில் ஏக காலத்தில் விவியன் குணவர்த்தன, மேரி ரத்னம் ஆகியோருடன் சேர்ந்து மூன்று பெண்கள் அங்கம் வகித்தார்கள். ஆயிஷா; உள்ளூராட்சி மன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் மட்டுமல்ல அவர். இலங்கையின் முஸ்லிம் அரசியலில் பிரவேசித்த முதல் பெண்ணும் அவர் தான். 1952ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று கொழும்பு மாநகரசபையின் துணை மேயரானார். 

1961 வரை மாநகர சபை அரசியலில் தீவிரமாக கடமையாற்றினார். கொழும்பு மாநகரத்துக்குள் இருந்த சேரிவாழ் மக்களுக்காக பல நலன்களை மேற்கொண்ட அவர் குறிப்பாக சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்களை அமைப்பது, அங்கு சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, கழிப்பறை வசதிகளை பெருக்குவது போன்ற விடயங்களில் அதிக கவனத்தை செய்து வந்தார்.

1956 -1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் கல்வி அமைச்சின் மத்திய ஆலோசனைக் கொமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார். முஸ்லிம் பெண் கல்வியை ஊக்குவித்த முஸ்லிம் பெண் கல்விமானாக முஸ்லிம் மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறார். அவரின் 12 வருட அரசியல் காலத்தில் அவர் பெண் கல்விக்காகவும், முஸ்லிம்கள் மத்தியில் உள்ள வரதட்சணை முறையை நீக்குவதற்கான சட்டத்தைக் கொணர்வதற்காகவும் பாடுபட்டார்.

ஓய்வு பெற்றதன் பின்னர் 1971ஆம் ஆண்டு அவர் சாம்பியா நாட்டு உயர் கல்வி நிறுவனத்தில் அரசியல் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றச் சென்றுவிட்டார்.

1977ஆம் ஆண்டு தேர்தலில் அவருக்கு மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் ஆர்வம் இருந்தபோதும் அவரை வேட்பாளர் பட்டியலில் உள்ளிட ஐ,தே.க. தவறியிருந்தது. ஆனாலும் அவர் ஜாபிர் ஏ. காதர், ஆர்.பிரேமதாச, வின்சன்ட் பெரேரா போன்றோரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார்.

இலங்கையின் அரசியலில் பங்குபற்றிய முதல் முஸ்லிம் பெண்; இலங்கையர் அல்லாதவர் என்பதுடன் முஸ்லிம் பெண்களின் அரசியலுக்கு வழிகாட்டிய முன்னோடி; ஒரு அந்நியர் என்பதும் கவனிக்கத்தக்கது.

அயேஷவுக்குப் பின்னர் 2000இல் பேரியல் அஷ்ரப் (கணவர் M.H.M.அஷ்ரப் ஹெலிகொப்டர் விபத்தில் பலியானதைத் தொடர்ந்து) அரசியலுக்கு வரும் வரை முஸ்லிம் சமூகத்திலிருந்து பெண்கள் அரசியலில் பரதிநிதித்துவம் வகிக்கவில்லை.

ஆயிஷாவின் கணவர் எம்.எஸ்.எம்.றவுப் 1964ஆம் ஆண்டு தனது 49வது வயதில் மாரடைப்பால் காலமானார். அதன் பின்னர் அவர் தனது இரண்டு பிள்ளைகளுடனும் ஆறு பேரக்குழந்தைகளுடனும் கொள்ளுபிட்டியில் வாழ்ந்தார். 1990ஆம் ஆண்டு தேசபந்து என்கிற உயரிய அரச விருது அரசியலிலும், கல்வியிலும் அவர் ஆற்றிய சேவைக்காக கிடைத்தது.

08.01.1992 அன்று ஆயிஷா தனது 75வது வயதில் மாரடைப்பால் கொழும்பில் காலமானார். ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தபோதும் அவர் மதத்தோடு தன்னை பிணைத்து வைத்திருக்கவில்லை. அதன் காரணமாகவோ என்னவோ இத்தனை மாண்புக்குப் பிறகும் அவருக்கு முஸ்லிம் சமூகத்தில் உரிய இடம் கிடைக்கவில்லையோ என்று அவர் பற்றி எழுதிய பர்சானா ஹனீபா குறிப்பிடுகிறார்.மலையகத் தலித்துகள், சில புரிதல்கள் - என்.சரவணன்

மலையகத் தலித்துகள், சில புரிதல்கள், விடுதலை நேசிகளின் கடமைகள்.
(ஒட்டுமொத்த சமூக அக்கறையிலிருந்தும் தூக்கியெறியப்பட்டுள்ள மலையக தலித்துகள்.)
(2000 செப். தமிழகத்தில் நடந்த “தமிழ் இனி” மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

இன்றைய முதலாளித்துவ சமூக உருவாக்கத்தின் நவவடிவங்கள் (உலகக் கிராமங்கள் அல்லது Information Highway போன்ற சொற்றடர்களைப் பயன்படுத்தலாம்) எத்தனைதான் அரசியல், பொருளியல், பண்பாட்டு ரீதியான மாற்றங்களைக் ஏற்படுத்திக் கொண்டுவருகின்ற போதும் உலகின் இனக்குழுமங்களுக்கு இடையிலான உறவுகள், நெருக்கங்கள் (அல்லது நலன்கள்) என்பன மேலும் துருவமயமாகிக்கொண்டுபோகும் நிலைமையும், அதிகாரத்துவம், அசமத்துவம் என்பன மேலும் இறுகும் நிலைமையும் அதிகரித்து வரும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இன்று "தமிழ் இனி 2000" மாநாட்டில் குறித்து கூடியிருக்கின்றோம். இலங்கை மலையகத் தமிழர்களின் உள்ளடக்காத ஒரு தமிழ் இனியை நாம் கற்பனை செய்ய முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்வோம்.. அந்தளவுக்கு நாம் இந்த நிகழ்வுப் போக்கில் தாக்கம் செலுத்தும் வீரியமிக்க சக்தியாக வளர்ந்து விட்டோம். மலையகத் தமிழர்களில் அடக்கப்படும் சாதிய சமூகத்தின் எண்ணிக்கை ரீதியாக அதிகளவில் கொண்டிருக்கின்ற அதேநேரம் அவர் தம்மை ஒரு தேசமாக, மலையகத் தமிழ்த் தேசமாக தம்மை உருவாக்கிக் கொண்டுமுள்ளார்கள்.


வல்லாதிக்க சக்திகள் இந்த யுகத்தை தகவல் தொழில்நுட்ப யுகமாக பிரகடனப்படுத்துகின்றன. இதன் அடிப்படை நோக்கமே உலகை தனது நலனுக்காக, ஆதிக்க சித்தாந்தமயப்படுத்துவதுதான். புதிய உலக ஒழுங்குக்கு ஏனைய குறைவிருத்தி தேசங்களையும் தகவமைக்குமாறு நிர்ப்பந்திக்கின்றன. ஆதிக்க சித்தாந்த கருத்தேற்றம் செய்து உலகை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கின்றன. இதற்காக, அவை திட்டமிட்டே பல்வேறு திட்டங்களை நிகழ்ச்சிநிரல்களையும் பன்முக தளங்களில் மிகவும் நுட்பத்துடன் செயற்பட்டு வருவதை, அதன் விளைவுகளை நாம் உணர்ந்துள்ளோம் என்றால் அது மிகையில்லை.

எனினும், இந்த நிலையிலிருந்து தான் ஆதிக்க உலக ஒழுங்குமயப்படுவதிலிருந்து அடக்கப்படும் தேசங்களாக உள்ள நாம் அவர்களின் நிகழ்ச்சி நிரலிலிருந்து தொடங்காது அவை குறித்த தேடல், புரிதல் நிலைகளிலிருந்து எமக்கேயுரிய நிகழ்ச்சிநிரலை நாமே நமக்கேயுரிய நமது தேவைகளின் அடிப்படையிலிருந்து தயாரித்தாக வேண்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப யுகம் என அவர்கள் முன்வைத்துள்ள அவர்களது திட்டத்தில் நமக்கு ஏதும் உரிமைகள் உண்டா இல்லையா என ஆராய்வதில் நமது காலத்தையும், வளங்களையும் செலவிடுவது கூட அவர்களது பொறிக்குள் நாம் காலைக் கொண்டுபோய் வைப்பதாகவே இருக்கும். எனவே தான் இந்த கருத்தாக்கங்களை நிராகரிப்போம். எமது சொந்தத் தேவைகளிலிருந்தும், நலன்களிலிருந்தும் இந்நிகழ்ச்சி நிரல்கள் அமையப்பெறுவதும் எமது பன்முகத் தன்மைகளையும் மேலும் வளப்படுத்துவதாக பலப்படுத்துவதாக அவை அமைவதும் மிகவும் இன்றியமையததாகும்.

ஏலவே எமது நிகழ்ச்சி நிரலையும், திசைவழியையும் தீர்மானிக்கின்ற பாத்திரத்தை எமது தேசத்தினதும் சமூகங்களினதும் ஆளுங்குழுமங்கள் உலக வல்லாதிக்க சக்திகளுக்கு தாரைவார்த்து கொடுத்தாகிவிட்டன. எனவே இன்று நமக்கு எமது இறைமை, என்று கூறுவதற்கு ஒன்றும் இல்லாகிவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ எமது இறைமை எமது கைகளில் இல்லை என்ற யதார்த்தம் எம்மனைவரையுமே அழுத்துகின்றது. எமது இறைமை வெளி வல்லாதிக்க சக்திகளிடம் இருக்கின்றது என்பதை பல்வேறு நேரங்களில் உணர்ந்தாலும் அது அநேகமாக ஒரு சூட்சுமத் தன்மையையும் கொண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, எமது இறைமை எமக்கு வெளியில் இருந்து கட்டுப்படுத்தப்படுவதாக அமைகின்றது. எமது இறைமை வெளியாரால் தீர்மானிக்கப்படுகிறது.

இந்நிலையை மாற்றியமைக்க, பல்வேறு தேசங்களில் பல்வேறு தளங்களில் அடக்கப்பட்ட மக்கள் தமது விடுதலைக்காகவும், சுய இருப்புக்காகவும் இறைமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆதிக்க உலகிற்கெதிரான அடக்கப்பட்ட உலகின் பொது நிகழ்வுப் போக்காயுள்ள தேசங்களின் விடுதலை, சுய அடையாளம், இறைமை என்பன இந்த நூற்றாண்டின் பிரதான போக்காகவும் உலகை மாற்றியமைக்கப் போகும் காரணிகளாகவும் எழுச்சி பெற்றுவருகின்றது. எமக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்க வேண்டியிருப்பதன் முன்நிபந்தனையாக இந்த அடிப்படைகளைப் புரிந்துகொள்வோம். அந்த அடிப்படையில், பரஸ்பர உரையடால்கள் மற்றும் மாற்றங்கள் ஊடாக, எமக்கான நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம்.

இந்த நிலைமைகளிலிருந்து மலையகத் தேசத்தின் பிரச்சினையை அணுகுவோம். அனேகமான தேசங்களில் அத்தேசத்தின் இயக்கப்போக்கை அடையாளப்படுத்துபவர்களாக இருப்பவர்கள் அத்தேசிய சமூகத்தின் அதிகாரம் படைத்த கல்விகற்ற தரப்பினராவர்.

எனினும் மலையகத் தமிழ்த் தேசத்தின் சமூகப் பண்பைப் பார்ப்போமாக இருந்தால், இங்கு அடிப்படையானது உடலுழைப்பில் ஈடுபடும் உழைக்கும் மக்கள் பிரிவினராலானதாக உள்ளது. இத்தேசத்தின் அதிக பெரும்பான்மை மக்கள் பிரிவினர் பெருந்தோட்டத்துறை எனும் குறிப்பிட்ட உற்பத்தி நடவடிக்கையுடன் தம்மை பிணைத்துக்கொண்ட கூலித்தொழிலாளர்களாக உள்ளனர்.

ஆக, இந்த விதத்தில், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தின் பிரதான பண்பைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் இத்தொழிலாளர்கள் அமைகின்றனர் என்பதோடு அதுவே, பிரதானமான அடையாளமாகவும் அமைந்து விடுகின்றது.

அதே போல் சாதிய அடிப்படையில் மலையகத் தமிழ்த்தேசத்தை அணுகுவோமாயின் தேசத்தின் 81 சதவீதத்தினர் தலித்துகளாவர். இது மலையகத் தேசத்தை தலித் தேசமாக அடையாளப்படுத்துகிறது.

அவ்வாறே உழைக்கும் மக்களால் அடையாளப்படுத்தப்படும் மலையகத் தேசத்தின் அரைவாசிக்கும் அதிகமானோர் பெண்களாவர்.

அவ்வகையில் மலையகத் தேசத்தின் அடையாளமானது உழைக்கும், வர்க்க, தலித்திய மற்றும் பெண்களின் நேரடி பங்கேற்பின் உருவாக்கத்திலானதாகவுள்ளது. மலையகத் தேசத்தின் இப்பண்பானது, தேச உருவாக்கங்களில், மிகவும் அபூர்வமான நிகழ்வுகளில் ஒன்றே எனக் கூறலாம்.

இவ்வாறான பண்பைக் கொண்ட மலையகத் தேசம் அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட பெரும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்த அதே நேரம், கடந்த நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்தே பேரினவாதத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறது. இலங்கையின் பேரினவாத வரலாற்றில் குறிப்பாக காலனித்துவ காலப்பகுதியில் மலையக மக்களுக்கு எதிராகத் தான் பேரினவாதம் முதலில் கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஒப்பீட்டளவில், பலவீனமாக இருந்த ஒரு சமூகத்தின் மீது தனது பேரினவாத அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு பல “பரிசோதனை”களை மேற்கொண்டது என்றால் அது மிகையாகாது. அது நடைமுறையாயினும் சரி, சித்தாந்தமாக இருந்தாலும் சரி. இதனுடைய பலாபலன்களை எமது தேசம் இன்றும் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றது. 

பிரஜாவுரிமைப் பறிப்பு, கட்டாயமாக நாடுகடத்தப்படல், அடிப்படை உரிமை பறிப்பு என ஒரு தேசம் எந்தளவுக்கெல்லாம் அடக்குமுறைக்குள்ளாக முடியுமோ அந்தளவு அடக்குமுறைகளை மலையகத் தேசம் எதிர்கொண்டு வருகிறது.

இதன் மறுபுறம் வெளியுலகிற்கு ஏதோ ஒரு அடிமைக் கூட்டம் போல தென்படும் இம்மக்கள் சமூகம் தனது ஒவ்வொரு காலகட்ட உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாக போராடி வருகிறது. போராட்டம் என்பது மலையக தேசத்தின் வாழ்வுடன் பிணைந்த ஒன்றாக உள்ளது. போர்க்குணமும் ஆளுமையும் கொண்ட ஒரு பிரிவினரே மலையகத் தமிழர்கள். இவர்களது வாக்குரிமைகளையும் பிராஜாவுரிமைகளையும் பறிக்க வேண்டியளவுக்கு சிங்களப் பேரினவாதம் இருந்தது என்றால் அவர்களின் போர்க்குணாம்சத்தை அவர்களின் பலத்தையும் நீங்கள் இங்கு கற்பனை பண்ணிப் பாருங்கள்.

எனினும் தம்மை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் தம்மைப் பற்றி வெளியுலகுக்கு அறிவிக்க தகவல்களை பரிமாறிக்கொள்ளக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இன்றைய உலகின், அதுவும் நவீன தொழில்நுட்பத் தகவல் பரிமாற்ற உலகில், தம்மை இணைத்துக் கொள்வதற்கு முன்னான பல்வேறு கட்டங்களைத் தாண்டுவதற்கே அவர்கள் போராடியாக வேண்டியுள்ளது.

தோழமையுடன் தோட்டப்புற சிறுவர் பாடசாலைகளிலிருந்தே அவர்களுக்கு இன்று சிங்களம் மட்டும் ஊட்டப்படுகிறது. இந்த வருட (2000ஆம் ஆண்டு) போர்ச்செலவுக்கு மாத்திரம் பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படும் அதே நேரம் அங்கு வருடக்கணக்காக ஒரு ரூபா கூலி உயர்வுக்காக பல நாள் பட்டினி கிடந்து போராட வேண்டியநிலை. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த அதே சிறிய காம்பராக்களில் தான் இன்னமும் வாழ்கின்றனர்.

மலையக மக்கள் தமக்காக தாமே போராடிக்கொள்வார்கள். ஆனால் தமிழ் பேசும் ஒட்டுமொத்த மக்கள் சமூகத்தின் தார்மீகமான ஆதரவுகள் ஒத்துழைப்புகள் என்னவாக இருக்கவேண்டும் என்பதையே இங்கு கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.
தமக்கு அயலில் சகதேசமொன்று சிங்கள அரசுக்கெதிராக போராடி வரும் வேளை பரஸ்பரம் இந்த இரு சமூகங்களுக்கிடையிலான உறவுகள், மற்றும் எதிர்கொள்ளும் அடக்குமுறை காரணமாக ஒன்றை ஒன்று ஊடறுக்கின்ற பாதிக்கின்ற போக்குகளையும் நாம் இங்கு குறித்துக் கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் போராட்டங்கள் அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து பதிவாவது என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. இன்று இலங்கையில் வெளிவரும் ஒரு சில பத்திரிகையின் வாயிலாகக் கிடைக்கின்ற செய்திகளைத் தவிர வேறு வழியில் மலையகத் தேசத்தின் பிரச்சினைகள் வெளிவருவதில்லை. இலங்கைக்கு வெளியில் சொல்லவே வேண்டாம். இந்த மாநாட்டுக்கு இலங்கைக்கு வெளியிலிருந்து வந்திருக்கும் உங்களில் எத்தனை பேருக்கு ஈழப்பிரச்சினை குறித்து தெரிந்திருக்க அளவுக்கு மலையகப் பிரச்சினை பற்றித் தெரிந்திருக்கிறது?

அரசு, நவபாசிச வடிவமெடுத்திருக்கிற சிங்களப் பேரினவாதம், அவர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் வர்த்தக சமூகத்தினர் அவர்களின் பிரச்சினைகளை வெறும் தமது பிழைப்பு அரசியலாக்கி வரும் அரசியல் சக்திகள், சாதியக் கட்டமைப்பை நிலைநிறுத்துவதில் போட்டியிட்டு வரும் ஆதிக்க சாதிக் குழுமங்கள் மற்றும் பேரினவாதமயப்பட்டுள்ள சிங்கள சிவில் சமூகத்தவர்களால் எதிர்கொண்டுவரும் வன்முறைகள் என எத்தனை எத்தனையோ கொடுமைகள் தினந்தோறும் நடக்குகையில் அவர்களுக்காக போராடுவதையோ அல்லது தார்மீக ஆதரவைத்தான் தரவேண்டாம். அவர்களின் பிரச்சினைகளை வெளியுலகுக்கு கொணர்வதில் எமது பங்களிப்பு என்ன?

இந்த சைபர் ஸ்பேஸ் என்று நாம் கூறுகின்ற வெட்டவெளிக்குள் சகல கொடுக்கள் வாங்கல்களையும் செய்து இன்று ஒரு பெரும் மாநாட்டையே நடத்துகிறோம். பெரும்பாலும் இதற்கான நிர்வாக ஏற்பாடுகள், பேச்சாளர்களுடனான உறவுகள் மற்றும் நிதி ஒழுங்குகள் என சகலதுமே தகவல்தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறோம். நாளை இவ்வாறான மாநாடொன்றை கஸ்டப்பட்டு ஒன்றுகூடி நடத்தவும் வேண்டியேற்படாத அந்தளவுக்கு தகவல் தொழில்நுட்பம் எங்களை இறுக இணைத்துவிடும்.


ஆனால் இன்று மின்சாரம் வசதிகளைக் கூட அடையாமல், கல்வி ரீதியில் வளர்ச்சியடைய விடாமல், வெறும் ஒரு ரூபா சம்பள உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் மலையக மக்கள் குறித்து எந்தவித விபரங்களையும் உலகம் அறியாத வண்ணமுள்ளன. இன்று ஈழப்பிரச்சினை காரணமாக வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழ்வது உங்களுக்குத் தெரியும். நண்பர் சேரன் கூறுகின்ற ஆறாம்திணையான புலம்பெயர்ந்தவர்களுக்கூடாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பெருமளவு செய்திகள், விபரங்கள் வெளிவருகின்ற போதும், மலையக மக்கள் பற்றி வெளித்தெரியாத வண்ணம் இன்றைய சூழல் இருக்கிறது. இது தற்செயலானததல்ல.

ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள வளங்கள், ஆற்றல்கள், வாய்ப்புகள் கூட மலையக மக்களுக்கு இல்லை. சக தேசத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்கின்ற போக்கை ஈழப்போராட்ட சார்பு தகவல் தொடர்பூடகங்களில் கூட காணமுடிவதில்லை. அப்படியும் வெளிவந்துவிட்டால் அவை எதிரியை அம்பலப்படுத்துவதற்கான வழிமுறையாகத்தான் இருக்கிறதே ஒழிய, மலையகத் தேசத்தின் பிரச்சினையில் கொண்டுள்ள பிரக்ஞையால் அல்லவென்றே கூறலாம். தமிழகத்தை மையமாகக்கொண்டும், சிங்கப்பூர், மலேசியா மற்றும் வேறு புகலிட நாடுகளிலிருந்துமாக பல இணையத்தளங்கள் கூட அதிகரித்தவண்ணமுள்ளன. ஆனால் இதில் எத்தனைதூரம் மலையகத்தவர் பற்றிய குறைந்தபட்ச போராட்டங்கள், கோரிக்கைகள் கூட பதிவாகின்றன.

நிச்சயமாக மலையகத்தவர் பற்றிய எமது அக்கறையின்மையும், அசட்டையையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் ஏறத்தாழ 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். காலனித்துவ சக்திகளால் இவர்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போது பெரும்பாலும் அடக்கப்பட்ட சாதியப்பிரிவினரே அதிகளவு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தனர்.

மலையகத் தேசத்தை ஒரு தலித் தேசமாகவும் நோக்கும் போது இலங்கையில் நிலவுகின்ற மூன்றுவித சாதியக் கட்டமைப்புகளான வடக்கு கிழக்கு, மலையக, சிங்கள சாதியமைப்புகளின் தன்மையை இங்கு நோக்குவது அவசியம். பொதுவாக சாதிய அதிகாரத்துவ படிநிலை நிரலொழுங்கு தலைகீழ் கூம்புவடிவத்தில் ஆதிக்க சாதி மேலும், அடக்கப்படும் சாதிகள் கீழுமாக கட்டமைக்கப்பட்டுள்ளதை நாமறிவோம். இந்திய சாதிய கட்டமைப்பை அப்படியே கொண்டுள்ள ஆனால் பிராமணரை ஆதிக்க சாதியாக கொள்ளாத சாதியமைப்பைக் கொண்டதுமான மலையக சாதியமைப்பில் அளவு ரீதியாக தலித்துகள் பெரும்பான்மையினராகவும் ஆதிக்க சாதிகள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். அதாவது தலைகீழ் கூம்பு வடிவமாக மேலே தலித்துகளும் கீழே உயர்த்தப்பட்ட சாதியினரும் அளவு ரீதியில் இருப்பதைக் காணலாம். ஆனால் இலங்கையில் சிங்கள சாதியமைப்பும், வடக்கு கிழக்கு சாதியமைப்பும் அளவு ரீதியில் உயர்த்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கையை அதிகமாகவும் அடக்கப்படும் சாதிகளின் எண்ணிக்கை அளவில் குறைந்ததாகவும் இருக்கிறது.

வடக்கு கிழக்கில் ஆதிக்க சாதியான வெள்ளாளர் சனத்தொகையில் 50 வீத்துக்கும், அதிகமாக இருப்பதைப் போல, சிங்கள சாதியமைப்பிலும் 50 வீதத்துக்கும் அதிகமாக வெள்ளாளருக்கு ஒப்பான சிங்கள ஆதிக்க சாதியான கொவிகமசாதியினர் 50 வீதத்துக்கும் அதிகமுள்ளனர். பொதுவாகவே இந்தியாவிலிருந்து காலனித்துவ சக்திகளால் வேறுநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மக்கள் பெரும்பாலும் அடக்கப்படும் சாதிகளைச் சேர்ந்தவர்களாதலால், அவர்கள் இன்றளவிலும் வாழும் நாடுகளில் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட அடக்கப்படும் சாதிகளைக் கொண்டுள்ளவர்களாகவே உள்ளனர். எனவே தான் மலையக மக்களை நாங்கள் தலித்திய சமூகப் பார்வையிலிருந்து தவிர்த்துவிட்டுப் போக முடியாத கட்டாயத்தில் இருக்கிறோம்.


மலையக சமூக அமைப்பில் இருக்கின்ற குறைந்தளவு எண்ணிக்கையையே உடைய உயர்த்தப்பட்ட (ஆதிக்கச்) சாதியினர்,- மேலாதிக்கம் செலுத்துகின்ற அரசியல், பொருளாதார மற்றும் ஏனைய ஆதிக்க பண்புகளையும், வளங்களையும் வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறனர். இவர்கள் நாளுக்குநாள் நிறுவனமயப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தியாவைப் போல நேரடியான தீண்டாமைக் கொடுமை இல்லாவிட்டாலும் ஏனைய அனைத்து சாதிக் கொடுமைகளுக்கும் உள்ளாவதும், ஆதிக்க சாதிகள் மேலும் தமது அதிகாரத்துவ நலன்களுக்காக நிறுவனமயப்படுவதுமான போக்கு அதிகரித்துவருகிறது. மேலும் பறையர் மற்றும் அருந்ததியர் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள் நூறாண்டுகளாக அதே நிலைமையில் இருத்தப்பட்டுள்ளமை போன்ற நிலைமையை நாங்கள் கருத்திற்கொள்ள வேண்டும். இன்றைய சாதிய கட்டமைப்பை பழைய அதன் வடிவத்தைப் போலப் பார்க்க முடியாது. அது இன்று நவீன சமூக உருவாக்கங்களின் பண்புகளை உள்நுழைத்த புதிய அதற்கேற்ற சாதிய வடிவங்கள் புதுப்பித்துக்கொண்ட வேறுவடிவங்களைத் தாங்கிய ஒன்றையே நாம் காணலாம்.

எப்படி சிங்களத் தேச அரச கட்டமைப்பு தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்ளவில்லையோ, சிங்களத் தேச அரச கட்டமைப்பு மற்றும் தமிழீழ போராட்ட சக்திகள் இரண்டுமே மலையகத் தமிழர்களின் பிரச்சினையை சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. இந்த மூன்று அரசியல் சக்திகளும் வடக்கு கிழக்குக்கும், மலையகத்திற்கும் வெளியில் தமிழர்களின் பிரச்சினையை விளங்கிக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் ஒருவகையில் புவியியல் ரீதியிலான அடையாளங்களையும் அதற்கான கோரிக்கைகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டிற்கும் வெளியில் வாழும் தமிழர்களுக்கு எந்த வித அரசியற் தலைமையோ அல்லது பொதுவான கோரிக்கையையோ கொண்டிராத நிலைமை நீடித்துவருகிறது. எந்த அரசியற் சக்திகளின் பின்னாலும் போகக் கூடிய தன்மையையும், சில பகுதிகளில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதையும் காணமுடியும். பொதுவாக வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் இந்திய வம்சாவழியினரையும் சேர்த்து மொத்தமாக மலையகத் தேசத்தவர்கள் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள வரையறைகளில் சில சிக்கல்கள் இருக்கின்ற போதும் இங்கு ஒட்டுமொத்த பிரச்சினையின் கவனக் குவிப்புக்காக இப்பதத்தையே நானும் இங்கு கையாள்கிறேன்.

இவர்களில் அருந்ததியர்கள் நாடளாவிய ரீதியில் நகர சுத்தித் தொழிலாளர்களாக நகர சுத்தி குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் வட மத்திய, வட மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் சிங்களவர்களாகவே மாறிவிட்ட போக்கையும் மாறிவரும் போக்கையும் காணமுடியும்.

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், கூலியுயர்வுக்காகப் போராடும் உழைக்கும் வர்க்கத்தினரைக் கொண்ட பெரும் தொழிற்படையாகவும், நாட்டின் மொத்த வருமானத்தில் பெருமளவை பெற்றுத்தரும் வர்க்கமாகவும், நவ பாசிச வடிமெடுத்துவரும் சிங்களப் பேரினவாதத்துக்கும், பேரினவாதமயப்படுத்தப்பட்டு வரும் சிங்கள சிவில் சமூகத்தின் வன்முறைகளை நேரடியாக அனுபவித்துவரும் கூட்டமாகவும் இவர்கள் உள்ளனர். 150 வருடங்களுக்கு மேலாகியும் இன்னமும் குடியுரிமை அற்றவர்களாகவும், அரசியல் அனாதைகளாக ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் அது மலையகத் தேசத்தவர்கள் தான்.

இதில் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளிகளில் ஒன்று என்னவென்றால், இவர்கள் பற்றிய எதுவும் வெளித்தெரியாத புறநிலைமைகள் இயங்குகின்றன என்பதே!

இன்று தமிழர்களுக்கான பல ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் குவிந்துகொண்டே இருக்கின்றன. இன்று ஆங்கிலம் மூலமாக இணையத்தினூடாகப் பரப்பப்படும் புனையப்பட்ட கருத்துகள், தகவல்கள், கதையாடல்களுக்கு தமிழர்கள் முழுவதுமாக ஆட்படுவதற்கு முன்னம் தமிழர்கள் இந்த தகவல் தொழில்நுட்பத்தை இலகுவாக அடைந்துவிட்டார்கள் தான். ஆனால் இந்த தகவல் என்ற விடயத்தில் தகவல் தொழில்நுட்பம் மீளவும் யாருக்கு எந்த சக்திகளுக்கு, எந்த கருத்தாக்கங்களுக்கு சேவை செய்கின்றன என்பது குறித்து நாம் அக்கறையற்று இருக்க முடியாது. தகவல் தொழில்நுட்ப நூற்றாண்டு இது என்று கூறப்படும் நிலையில் தகவல்களுக்கு வறுமை பெருமளவு இருக்காது என்கிற நம்பிக்கை ஆரம்பத்தில் எனக்கு இருந்தது. ஆனால் அது தவறென நான் உணர்ந்தேன். தகவல்கள் குவிந்து கொண்டிருக்கும். ஆனால் அவை ஆதிக்க கருத்தேற்றம் செய்யப்பட்டதாக இருக்கும் என்று நம்பினேன். ஆனால்  தகவல்களுக்கே எந்தளவு பஞ்சமிருப்பதை இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்றைய பெரும்போக்கு எது என்பதை தீர்மானிக்கின்ற முக்கியமான கருவியாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆதிக்க சக்திகள், தமது பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெரும்போக்காக நிலைநிறுத்துவதில் இந்த தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டுதான் துரிதமாக வெற்றி கண்டு வருகின்றன.

இன்று தமிழில் கணிய மற்றும் இணையத் தொழில்நுட்பங்கள் குறித்த உட்கட்டமைப்பு மற்றும் மென்பொருள் பற்றிய அக்கறையும், ஆய்வுகளும் தான் மெற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் அதன் புறநிலைச் செயற்பாடுகள், அதிலும் குறிப்பாக அதன் அரசியல் விளைவுகள், புரட்சிகர சமூக மாற்றத்துக்கான அரசியல் அடைவுகள் குறித்து வெறும் தனிநபர்கள் மற்றும் சிறு குழு அளவில் தான் அக்கறை கொள்ளப்படுகிறதே ஒழிய அதனை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தோடு இணைத்து ஆராயப்படுவதை காண முடிவதில்லை.


இத்தகைய பின்னணியிலிருந்து மலையக மக்களின் இன்றைய நிலைமைகள் பதிவாகாததையும், நோக்க வேண்டும். இன்று தமிழ்த்தேசப் பிரச்சினை சர்வதேச அளவில் கரிசனைக்குரியதாக ஆக்கியதில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கை நோக்க வேண்டும். இன்று தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனஅழிப்பு குறித்த செய்திகள் வேகமாக உலகெங்கும் சென்றடைகின்றன. உலகின் பலமான நாடுகளின் உதவியுடனும், ஒரு அரசையும் கொண்டிருக்கிற சிங்களப் பேரினவாதம் தகவல் தொழில்நுட்ப ஆற்றல் வளங்கள் என்பனவற்றை எதிர்கொள்ள முடியாத அளவுக்கு தடுமாறி நிலைகுலைந்து போகுமளவுக்கு தமிழர்கள் தகவல் தொழில்நுட்பத்தை அடைந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசப் போராட்டத்தின் இன்றைய வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு முக்கியமானது. ஆனால் இன்றளவிலும் தமிழ்த்தேசப் போராட்ட சக்திகளால் அல்லது அவர்களது ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற ஆயிரக்கணக்கான இணையத்தளங்களிலும் மலையக மக்கள் குறித்த எந்தவித பதிவுகளும் இடம்பெறாதது மிகவும் கவலையைத் தரும் விடயம். சக தேசமொன்று தமது எதிரிகளாலேயே ஒடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதையிட்டு கரிசனை கொள்ளாததை நாம் குறித்துக்கொள்வது அவசியம்.

மலையகத் தேசத்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஏலவே எதிர்கொள்ளும் அடிமை வாழ்க்கையை விட தமிழ்த்தேசப் போராட்டத்தின் விளைவான ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதத்திற்கும் பலியாகிவரும் தேசமாக மலையகத் தேசம் உள்ளதை கவனித்தாக வேண்டும். இந்தியாவின் மீது நம்பிக்கையிழந்து பல வருடங்களாகிவிட்டது. ஏலவே இலங்கையில் யாழ் மைய வாதத்துக்கு வடக்குகிழக்கின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரமல்ல வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் தமிழர்களும் அந்த சிக்கல்களை அனுபவித்து வந்தவர்கள். இலங்கையில் செயற்படும் தமிழ் தொடர்பு ஊடகங்கள் அனைத்திலும் மலையக மக்களுக்கெதிரான பாரபட்சங்கள் நிலவுவதை காணமுடியும். மலையக மக்களின் பிரச்சினை குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டால் கூட அது அப்பிரச்சினை குறித்த பிரக்ஞை என்பதை விட மலையக சந்தையை இலக்காகக் கொண்டு தான் இருக்கும்.

எப்படியோ மலையகத் தேசத்தின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் பொறுப்பாக்கிவிடுவது அல்ல இதன் அர்த்தம். மலையகத் தேசம் தனக்கான போராட்ட வடிவங்களையும் எதிர்காலத்தையும் தானே வடிவமைத்துக்கொள்ளும். ஆனால் கவனிப்பாரற்று கிடக்கும் போக்கை மாற்றியமைப்பதில் எம்மெல்லோரது பங்கையும், தார்மீக ஆதரவையுமே இங்கு நாம் கோரவேண்டியுள்ளது. மலையகத் தேசத்தின் அரசியல், பொருளாதார, கலாசார, பண்பாட்டு அம்சங்களைக் கணக்கிற்கெடுக்கின்ற தமிழ் சூழலயே வேண்டிநிற்கிறோம்.

கலாநிதி வீ.ரி.தமிழ்மாறன், ரவிக்குமார், என்.சரவணன்

கலாநிதி வீ.ரி.தமிழ்மாறன், ரவிக்குமார், என்.சரவணன்

 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates