Headlines News :
முகப்பு » » மலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல் அநாதைகளா? - பூனாகலை அருள்காக்கி

மலையக நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்கள் அரசியல் அநாதைகளா? - பூனாகலை அருள்காக்கி


மலையகத்தைப் பொறுத்தவரை முற்று முழுதாக தேயிலையை நம்பி ஜீவனம் நடாத்திய காலம் மலையேறி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக மலையக இளைஞர், யுவதிகள் சுயதொழில் முயற்சிகளை முன்னெடுப்பதையும், நகர்ப்புறங்களை நோக்கி படையெடுப்பதனையும் இன்று பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது.

தேயிலைத் தொழில்துறை நவீனமடைய தோட்டங்களில் வேலைநாட்கள் குறைவாக வழங்கப்படுகின்றமை, தோட்டங்களில் வழங்கப்படும் கொடுப்பனவு அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு போதாமை போன்ற முக்கிய காரணங்களால் தோட்டப்புற இளைஞர், யுவதிகள் தோட்டங்களை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்காக தஞ்சமடைகின்றனர். ஆரம்ப காலங்களில் கொழும்பு, கண்டி போன்ற பெருநகரங்களில் தொழில் தேடித் திரிந்த இவர்கள் அத்தொழில்களின் அசாத் திய தன்மை காரணமாக இன்று அண்மை யில் உள்ள நகரங்களில் வேலை செய்கின் றனர்.

சிறியளவிலான மூலதனத்தை தயார் செய்து கொள்ளக்கூடிய வசதியுள்ளவர்கள் கோழி வளர்ப்பு, சில்லறைக் கடை வணிகம், பசும்பால் உற்பத்தி, வேளாண்மை போன்ற உபதொழில்களை தோட்டங்களில் மேற் கொள்கின்றனர். இதன் மூலம் இவர்களின் பொருளாதாரம் வலுவூட்டப்படுகின்றது. இதுபோன்ற வசதி வாய்ப்புகள் இல்லாத குழுவினரே நகர்ப்புறங்களை நம்பி வருகின் றனர். இங்கு இவர்கள் படும் துயர்கள் எண்ணிலடங்காதவை.

பொதுவாக கிராமப்புறங்களில் சில்லறை கடைகள் செய்வதற்கும் நகர்ப்புறங்களில் முயற்சி செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. பொருத்தமான தொழில்கள் கிடை க்காத சிலர் நகர்ப்புறங்களில் சிறியளவி லான நடைபாதை வியாபாரம், பெட்டிக்கடை மற்றும் பண்டங்கள் விநியோகம் செய்தல் போன்ற பல்வேறு முயற்சியாண்மைகளை நகர்ப்புறங்களில் முன்னெடுக்கின்றனர்.

எனினும் இத்தொழில்துறைகளுக்கு இவர்களுக்கு போதுமான அரச உதவிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் என எதுவும் கிடைக்காமல் தடுமாற்றத்தை எதிர்நோக்குகின்றனர். கடனுக்கு பண்டங் களைப் பெற்று வாடகைக் கடையில் அடு க்கி வைத்து காத்திருப்பதால் என்ன இலாபம் கிடைத்துவிடப் போகின்றது.

இன்றளவில் சாதாரணமாக ஒரு சிறிய கடையை நகர்ப்புறங்களில் வாடகைக்கு வாங்குவதானால் 10,000-–25,000 ரூபா வரை மாதாந்த வாடகை செலுத்த வேண்டும்.

இவ்வளவு பெரிய வாடகை செலுத்தி தாக்குப்பிடிக்க முடியுமா இவர்களால்? அதுமட்டுமன்றி சுற்றுலாத் தலங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள நுவரெலியா, அட்டன், பண்டாரவளை, அப்புத்தளை போன்ற நகரங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளிலேயே வியாபாரம் சற்று அதிகமாகக் களைகட்டுவதுண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் இவர்கள் செலுத்த வேண்டியேற்படும். இவை அனைத்தையும் நகர்ப்புற கட்டட உரிமையாளர்களுக்கு வழங்கி விட்டுத்தான் இவர்களுக்கு லாபம் காண முடியும். இதன்காரணமாக பலர் வங்கிகளுக்கு கடனாளியான சம்பவங்களும் அன்றாடம் அரங்கேறுகின்றன.
பலரிடம் கடன்பட்டு, பெற்றோரின் ஓய்வூதியத்தை பாவித்து, வங்கிகளிடம் கடன் பெற்று இவ்வாறான தொழில் முயற்சியாண் மைகளை மேற்கொள்ளும் இவர்களை மேலும் கடனாளியாக ஆக்குவதற்கு இன்று எண்ணிலடங்காத நடமாடும் விநியோக நிறுவனங்கள் காத்திருக்கின்றன. தினமும் இவர்களின் வாகனங்கள் ஏட்டிக்குப் போட் டியாக வந்து பண்டங்களை கடனுக்கு வழங் கிவிட்டுச் செல்கின்றனர்.

விற்பனை அல்லது கேள்வி தொடர்பான எதுவித மதிப்பீடுகளும் இன்றி போட்டிக்கு இவர்கள் பொருட்களை விநியோகம் செய்வதனை இன்றளவில் வழமையாகக் கொண்டுள்ளனர். விற்பனை நிலைய உரி மையாளர்களும் ஆடம்பரத்திற்கு பொருட் களை வாங்கி அடுக்கி வைத்து காத்திருக் கின்றனர். இதன்மூலம் தினமும் கடனாளி யாகவே கடையை நடத்தும் நிலைமைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களின் கைக்கு வரும் விற்பனை பணமும் சுழற்சி முறையில் மீண்டும் வேறொரு விநியோக நிறுவனத்திற்கே சென்றுவிடு கின்றது.

இவர்கள் நகர்ப்புறக் கட்டட உரிமையா ளர்களிடம் வாடகைக்கு கட்டடங்களையும் பெற்றுக் கொள்ளும்போது எதுவித சட்ட முறைமையையும் கடைபிடிப்பதில்லை. குறிப்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை போன்ற ஆவண பரிமாற்றத்தை மேற்கொள் வதில்லை.
இதன்காரணமாக திடீரென கட்டட உரிமையாளர்கள் கட்டடங்களை மீளக் கையளிக்குமாறு கேட்கும் பொழுது இவர் கள் வாங்கிய பொருட்களை அகற்றவும் முடியாமல் திருப்பி கையளிக்கவும் முடியா மல் திண்டாடி வீதியில் நிற்கும் நிலை ஏற்ப ட்ட அனுபவங்களும் உண்டு.

அதேபோல் எதிர்பாராத விதமாக ஏற்ப டும் விபத்துகளின் போதும் இவர்களின் பண்டங்கள் சேதமாகி நட்டமேற்பட்ட நடை முறைகளும் மலையக நகர்ப்புறங்களில் உண்டு. காப்பீடு செய்யாமை, முறையற்ற மின்சார விநியோகம், தடைசெய்யப்பட்ட இடங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படுவதை அன்றாடம் நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

இவ்வாறான விபத்துகளில் அதிகமாக பாதிக்கப்படுவது நடைபாதை வியாபாரி களும் சிறுகட்டடங்களில் வியாபாரம் செய்யும் நபர்களே ஆவர். பொருளாதார த்தில் ஸ்தீரமடைந்த பாரம்பரியமாக நகர்ப் புறங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முதலாளிமார்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் குறைவு. எனி னும் அவர்கள் வேறுவிதமான பிரச்சினைக ளுக்கு முகங்கொ டுக்கின்றனர்.

அண்மையில் புறக்கோட்டை பகுதியில் வியாபார ஸ்தலங்களுக்கு வருமான வரி அதிகாரிகளால் முத்திரை இடப்பட்ட சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்த தேசிய பிரச்சினை.

இதன்போது கடை உரிமையாளர்களின் குரலாக ஒலிக்க தலைநகருக்கு எந்த அரசியல்வாதியும் துணியவில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம். கேட்டால் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவையில் இல்லையாம், அதிகாரம் இல்லையாம். தலைநகர தமிழ் வர்த்தக சமூகம் விழிபிதுங்கி நின்றது.

வியாபார நிலைய உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டது மட்டுமன்றி ஊழியர்களான மலையக இளைஞர், யுவதிகளும் பெரும் சிரமங்களுக்கும் தொழில் ஸ்தீரமற்ற நிலைமைக்கும் முகங்கொடுத்தனர். அதிகாரம் இல்லை என காரணம் காட்டி மலையக தலைமைகள் மௌனம் காத்தன.

இந்நிலைமை போன்றதொரு நெருக்கடி தோட்டங்களில் நடந்திருந்தால் அரசியல் வாதிகளின் வாகனங்கள் பறந்திருக்கும். தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் இடம்பெற்றிருக்கும்.

தேயிலை மண்ணில் வீசப்பட்டிருக்கும். சற்று நேரத்தில் பிரச்சி னையை தீர்த்தவராக கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவர் தான் நாயகனாக அம்மக்கள் முன் வீற்றிருப்பார். மறுநாள் ஊடகங்களில் செய்திகள் இது தொடர்பாக நிரம்பி இருக்கும். எனவே ஏன் இவர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்வருவதில்லை என்றால் அங்கு தொழிற்சங்கம் செய்ய முடியும் நகரங்களில் அது முடியாது. தோட்டப்புறங்களில் சந்தா கிடைக்கும் இங்கு எதுவும் கிடைக்காது.

அண்மையில் ஊவா மாகாண சபையின் அனுசரணையில் நகர்ப்புற சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. எனினும் அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் நடமாடி விற்பனை செய்யும் அளவிற்கு தேகாரோக்கியம் கொண்டவர்கள் அல்லர். மாற்றுத்திறனாளிகளும் இவர்களுள் அடங்குவர். எனவே குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிலையாக அவ்வண்டிகளை வைத்து சிற்றுண்டிகள் மற்றும் பல இதர வியாபாரங்களை மேற்கொள்ளவே இவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் அதற்கு அவர்களுக்கு மாநகர, நகர சபைகளிடம் முறையான அனுமதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை. இன்று அவ்வண்டிகள் துருப்பிடித்து பாவனைக்கு உதவ முடியாத நிலையில் நகரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை செய்துகொடுக்க வேண்டியது யார்? வெறுமனே விளம்பரத்திற்காக இவற்றை கொடுத்துவிட்டு தொடர்ந்து எவ்வாறு கொண்டு நடாத்துவது என்பதற்கு இங்கு தகுந்த உத்தரவாதம் வழங்கப்படவில்லையே?

அதேபோன்று அண்மையில் சில மாநகர, நகரசபைகள் நடைபாதை வியாபாரத்தை தடை செய்தன. ஒரு சில நகர சபைகள் சாலைகளை பெரிதாக்குவதற்கு நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தின. எனினும் இந்நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான முறையான மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவில்லை. இதுபோன்ற விடயங்களில் பாதிக்கப்பட்ட மலையக சிறுவியாபாரிகள் தொழிலையும் இழந்து வாழ்வாதாரத்திற்கு சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதன்போதும் எந்த ஒரு மலையக அரசியல் தலைமையும் தீர்வுகளை முன்மொழியவோ நடைமுறையில் செயல்படுத்தவோ சிரத்தை எடுக்கவில்லை.
தோட்டங்களில் தொழில் புரிவோருக்கு ஊழியர் சேமலாப நிதியமாவது சேமிப்பு என்று உண்டு. எனினும் தினமும் நகர்ப்புறங்களில் வடைக் கூடையையும் தண்ணீர் போத்தல்களையும் சுமந்து கொண்டு கடைவீதிகளிலும் பேருந்துகளிலும் சுற்றித்திரிவோருக்கு என்ன சேமிப்பு இருக்கின்றது?

இவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் குடும்ப பொருளாதாரத்தைப் பற்றியும் எண்ணிப்பார்த்த அரசியல்வாதி உண்டா? நாகரிக நாடோடிகளாக ஒரு சமூகம் இங்கே உருமாறுவதை எண்ணி வருந்திய தொழிற்சங்கம் உண்டா?

நகர்ப்புற சிறுதொழில் முயற்சியாளர்களிடம் இருந்து தமக்கு எதுவித சாதகமான அனுகூலமும் இல்லை என எண்ணும் மலையக தலைமைகள் மூன்று வினாக்களுக்கு விடை மொழிய வேண்டும்.

இவர்களின் தாய் தந்தையர்கள் உங்களுக்கு சந்தா செலுத்தவில்லையா?
இன்றல்லது ஒருநாள் இவர்கள் உங்களை நம்பி வாக்களிக்கவில்லையா?
இவர்களின் சந்ததி உங்களுக்கு அரசியல் அடையாளம் தரவில்லையா-?

இம்மூன்று கேள்விகளுக்கும் பதிலளிக்க முடிந்த தலைமை எவரேனும் இங்கு உண்டா? என்பதுதான் இவர்களின் கேள்வி. நகர்ப்புற தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஏன் முன்னிலை வகிக்க மலையகத்தில் யாரும் இல்லை என்ற வினா இங்கு உள்ளது. தோட்டங்களில் மட்டும்தான் மலையக மக்கள் வாழ்கின்றார்கள் அவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினைகள் உள்ளது என்று எவ்வாறு கூறமுடியும். நகர்ப்புறங்களில் வாழும் மக்களும் மலையக மக்களே. அவர்களுக்கும் உரிமைப் போராட்டம் உள்ளது எனும் விடயம் அழுத்தமாகச் சொல்லப்பட வேண்டும்.

இது விடயத்தில் அரசியல் வாதிகளை கைகாட்டி மலையக சிவில் அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒதுங்கி நிற்காமல் இணைந்து குரல்கொடுக்க ஒன்றுகூட வேண்டும். நகர மயமாதலில் மலையகம் எதிர்நோக்கும் புதிய சவால் இது.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates