Headlines News :
முகப்பு » » சப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா - என்னென்ஸி

சப்பிரகமுவா, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா - என்னென்ஸி


வெளிமாவட்டங்களிலிருந்து வந்து நுவரெலியா மாவட்ட பாடசாலைகளினூடாக க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு நிரந்தரமானதொரு தீர்வு காணப்படவேண்டுமென்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறைவு என்பதால் இந்த மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் க.பொ.த.உயர்தர வகுப்பில் சேர்ந்து பரீட்சைக்குத் தோற்ற வெளிமாவட்ட மாணவர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். குறிப்பாக வெளிமாவட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு இந்தக் குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மலையக மக்களின் விகிதாசாரத்திற்கேற்ப பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பதுடன், மலையக கல்வியியலாளர்களும் இதுபற்றி அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவது, இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 1 வீதத்திற்கும் குறைவான மாணவர்களே கல்வி கற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட விகிதத்திற்கமைய மலையக மாணவர்கள் அனுமதி பெறத்தவறுகின்றமையே இதற்குக் காரணமாகும். அதிலும் அநேகமாக கலை, வர்த்தக துறையில் கல்வி கற்பதற்கே அதிக மாணவர் தெரிவாகின்றனர். விஞ்ஞான, பொறியியல் மற்றும் மருத்துவ பீடங்களுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும்.

மலையகத்தில் விஞ்ஞானம், கணிதம் கற்பிக்கும் பாடசாலைகள் மிகமிகக் குறைவாகும். விரல்விட்டு எண்ணக்கூடிய சில பாடசாலைகளில் மட்டுமே விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நுவரெலியா மாவட்டத்தில் சில பிரதான (ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை) பாடசாலைகளில் மட்டுமே விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த நிலையில் மலையகத்திலிருந்து பல்கலைக்கழகங்களின் மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் பீடங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.

இதனை இரத்தினபுரி, கேகாலை பதுளை தவிர்ந்த ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றனர். கல்வியில் அபிவிருத்தியடைந்த மாவட்டங்களில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் கற்றுவிட்டு பரீட்சைக்காக மட்டும் நுவரெலியாவுக்கு வந்து பரீட்சை எழுதும் போது மிக இலகுவாக அதிக வெட்டுப் புள்ளிகளைப் பெற்று விஞ்ஞான, மருத்துவ, பொறியியல் பீடங்களுக்கு அனுமதி பெறக்கூடியதாக இருக்கும் என்பது இந்த வெளிமாவட்ட மாணவர்களின் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை இங்கு இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மலையகம் என்றால் நுவரெலியா மாவட்டம் மட்டும் மலையகமல்ல. அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் மட்டும் மலையக மக்களல்ல. பதுளை, கண்டி, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை மாவட்டங்களில் வசிப்பவர்களும் மலையக மக்கள்தான்.

இரத்தினபுரி, கேகாலை, பதுளை மாவட்டங்கள் பொதுவாக கல்வியில் வளர்ச்சியடைந்த மாவட்டங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் அந்த மாவட்டங்களிலுள்ள சிங்கள மொழி மூல பாடசாலைகள் தான் வளர்ச்சியடைந்துள்ளனவே தவிர, தமிழ் மொழிமூல பாடசாலைகள் வளர்ச்சியடையவில்லை. அங்குள்ள தமிழ் மாணவர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

உதாரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மொழிமூலமான விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பிக்கும் பாடசாலைகள் எதுவும் இல்லையென்றே கூற வேண்டும். அதேபோன்று பதுளை மாவட்டத்தில் இரண்டு தேசிய பாடசாலைகள் இருந்தபோதும் அங்கு விஞ்ஞானம், கணிதம் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லாததால் விஞ்ஞானம், கணிதம் கற்க விரும்பும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாகவே அம்மாவட்டத்திலுள்ள மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு வரவேண்டிய கட்டாயத்துக்கு உட்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான ஒரு பிரச்சினை ஏற்பட்டது.

அக்காலப்பகுதியில் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் சேர்ந்து உயர்தரத்தில் விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அம்மாணவர்களில் பலர் தத்தமது துறைகளில் பட்டதாரிகளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சப்ரகமுவ ஊவா மாகாணங்களில் தமிழ் மாணவர்கள் கற்பதற்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் நுவரெலியாவுக்கு வருவதற்கான தேவை ஏற்பட்டிருக்காது.

கடந்தகால அரசாங்கங்களில் மலையகத்தைச் சேர்ந்த பலர் பிரதான அமைச்சர்களாக இருந்தனர். அவர்கள் சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் விஞ்ஞான, கணித (உயர்தர) பாடங்களை கற்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாலோ அல்லது பாடசாலைகளை ஆரம்பித்திருந்தாலோ அம்மாணவர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக அந்த மாகாண மக்களிடம் போலியான உறுதிமொழிகளை வழங்கிய மலையக அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் தமது வாக்குறுதிகளை மறந்துவிட்டமை வரலாற்று உண்மை. எனவே இவ்விடயத்தில் அம்மாகாண மாணவர்களை குறைசொல்வதை விட மலையக அரசியல் வாதிகளையே குறைசொல்ல வேண்டும். அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.

இதேவேளை, கடந்த தேசிய அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வே.இராதாகிருஷ்ணன் ௧௦௦ நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களிலும் 25 பாடசாலைகளை விஞ்ஞான, கணித பாடசாலைகளாக தரம் உயர்த்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன்படி பதுளையில் சுமார் 8 பாடசாலைகளும் சப்ரகமுவையில் சுமார் 5 பாடசாலைகளும் தரமுயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது. மத்திய மாகாணத்தை மட்டுமன்றி ஊவா, சப்ரகமுவ, கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட மக்களையும் இந்திய வம்சாவளியினரையும் மலையகக் கட்சிகளும் அரசியல் தலைவர்களுமே பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். எனவே அந்த மாகாண மக்களின் தேவைகளையும் பூர்த்திசெய்யும் கடப்பாடு அவர்களுக்கு உள்ளது. எனவே, நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்விகற்கும் ஊவா, சப்ரகமுவ மாகாண மாணவர்களுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அதாவது, அந்த மாகாணங்களில் விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை (6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ) நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதி வழங்க வேண்டும்.

இந்த இரு மாகாணங்களிலுமுள்ள இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை தவிர்ந்த ஏனைய வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் உள்ள பாடசாலையினூடாக உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதை முற்றாகத் தடைசெய்ய வேண்டும். அதில் நியாயம் இருக்கிறது. ஆகவே சப்ரகமுவ, ஊவா மாகாண தமிழ் மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates