Headlines News :
முகப்பு » » சம்பள உயர்வுக்காக என்ன செய்யப் போகிறார் வடிவேல் சுரேஷ் - என்­னென்ஸி

சம்பள உயர்வுக்காக என்ன செய்யப் போகிறார் வடிவேல் சுரேஷ் - என்­னென்ஸி



இ.தொ.கா.தலைமையை பகைத்துக் கொண்டு, இ.தொ.கா.விலிருந்து வெளியேறிய எவரும் அரசியல் செய்யமுடியாது என்றதொரு காலம் இருந்தது. அதற்கேற்றாப்போல், இ.தொ.கா.விலிருந்து வெளியேறி தனிக்கட்சிகள் ஆரம்பித்த பலர் காணாமல் போயுள்ளனர்.

இ.தொ.கா.வின் அசைக்கமுடியாத தூண், தளபதி சொல்லின் செல்வர் என்றெல்லாம் போற்றப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமையாற்றிய எம்.எஸ்.செல்லச்சாமி இ.தொ.கா.விலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்தார். அவருடன் பலமுக்கியஸ்தர்களும் கூட சென்றனர். ஆனால் என்ன நடந்தது? கட்சியும் அவர்களும் காணாமல் போயினர்.

பின்னர் மீண்டும் இ.தொ.கா.வில் இணைந்தார் செல்லச்சாமி. ஆனால் அவரால் பிரகாசிக்க முடியவில்லை. அவரைப் பின்பற்றிச் சென்றவர்களுக்கு கூட முகவரி இல்லாமல் போனார்கள். பலம்பொருந்திய இ.தொ.காவை. பகைத்துக் கொண்டு எதுவும் செய்யமுடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக அமைந்தது.

ஆனால், இ.தொ.கா.வை எதிர்த்துக் கொண்டு அரசியல் செய்ய முடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் அமரர்.பெ.சந்திரசேகரன். இ.தொ.கா.விலிருந்து வெளியேறி மலையக மக்கள் முன்னணியை ஆரம்பித்த போது அவர் எதிர்கொண்ட சவால்கள் கொஞ்சநஞ்மல்ல.

தன்னலம் கருதாத சமூக சிந்தனை கொண்ட தோழர்கள், விடுதலை வேட்கைகொண்ட சமூக மக்கள் போன்றவர்களின் துணையினால் இ.தொ.கா.வுக்கே சவால்விடும் வகையில் அரசியல் செய்துகாட்டினார். இன்று மலையகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சி மலையக மக்கள் முன்னணி ஆரம்பித்தது முதலே உருவானதென்பதை எவரும் மறுக்க முடியாது.

இ.தொ.கா.வை பகைத்துக் கொண்டு வெளியேறி வெற்றிகரமாக அரசியல் செய்யும் மற்றுமொருவர்தான் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன். தனியான கட்சியொன்றை சிரமப்பட்டு ஆரம்பிக்காவிட்டாலும் சந்திரசேகரனின் மறைவையடுத்து தத்தளித்துக் கொண்டிருந்த ம.ம.மு.யின் தலைமைப் பொறுப்பை ஏற்று அந்தக் கட்சிக்கு முகவரி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கல்வி இராஜாங்க அமைச்சராக நியமனம்பெற்று மலையகத்துக்கு மட்டுமின்றி முழு நாட்டுக்கும் சேவைசெய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். நுவரெலியா பிரதேச சபை தலைவராக நுவரெலியா மக்களுக்கும், மத்திய மாகாண கல்வி அமைச்சராக முழு மாகாணத்துக்கும், சேவை செய்து தற்போது முழு நாட்டுக்கும் இராஜாங்க கல்வி அமைச்சராக பதவி வகிப்பது அவரது வளர்ச்சியின் பரிணாமத்தையும், வேகத்தையும், காட்டுகிறது. இது இ.தொ.கா. எதிர்பாராத ஒன்றுதான்.

அந்தவகையில் மூன்றாவதாக இ.தொ.கா. தலைமையை பகைத்துக் கொண்டு இ.தொ.கா.வை விட்டு வெளியேறி பெரும் சோதனைகளை சந்தித்து அவற்றை இன்று சாதனையாக்கிக் கொண்டிருப்பவர்தான் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இப்படியெல்லாம் நடக்குமென்று இ.தொ.கா.வே நினைத்துப் பார்த்திருக்காது.

வடிவேல் சுரேஷுக்கு இ.தொ.கா.வின் நிர்வாகச் செயலாளர் பதவியை வழங்கி படிப்படியாக பல்வேறு நிலைகளுக்கு உயர்த்தி பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிடச் செய்து வெற்றியடையச் செய்தது. இ.தொ.கா.தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி அரசுடன் இணைந்து பிரதி சுகாதார அமைச்சரானார்.

பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தனியான தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்தார். ஊவா மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற்றதுடன் அம்மாகாண அமைச்சராகவும் செயற்பட்டார். ஊவாவில் இ.தொ.கா. பலம் பொருந்திய நிலையில் இருந்தபோதும் அதனையும் மீறி கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இவை ஒரு புறமிருக்க முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, முன்னாள் அமைச்சர் காமினி திசாநாயக்கா ஆகியோரது காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தோட்டத் தோழிலாளர்களுக்கான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலத்தில் இ.தொ.காவே மிகப் பெரும் பலம்வாய்ந்த தொழிற்சங்கமாக இருந்து வந்தது.

பல்லாயிரம் பெருந்தோட்டத் தொழிலாளர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட இ.தொ.கா.ஆசியாவிலேமே மிகப் பெரிய தொழிற்சங்கம் என்ற பெயரைப் பெற்றது. இதுவே இ.தொ.கா.வுக்கு ஆசிய தொழிற்சங்க சம்மேளனத்திலும் ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்ட சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் உள்ளிட்ட பல அமைப்புக்களில் உறுப்புரிமை கிடைக்கக்காரணமாக அமைந்தது.

தவிர இலங்கையின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக பெருந்தோட்டத்துறை இருந்ததுடன் அதன் தலைமை இ.தொ.கா.விடம் ஏகபோகமாக இருந்ததை இல்லாமல் செய்வதற்காகவே இ.தே.தோ.தொ.ச.(LJWEU) திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆளும் அரசின் தொழிற்சங்கமாக இருந்ததால் சங்கத்தை வளர்ப்பதற்கான அனைத்து வளங்களும் வசதிகளும் தாராளமாக கிடைத்தன. இது ஒரு கட்டத்தில் இ.தொ.கா.வையே அச்சுறுத்தும் அளவுக்கு அசுர வளர்ச்சியடைந்தது.

அவ்வாறான பெரிய பாரம்பரியமிக்க தொழிற்சங்கத்தின் பொறுப்புவாய்ந்த பதவியான பொதுச் செயலாளர் பதவியில் வடிவேல் சுரேஷ் எம்.பி. அமர்த்தப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச.மற்றும் தொழிற்சங்கக்கூட்டுக்கமிட்டி ஆகிய மூன்று அமைப்புக்களும் அங்கிகாரம் பெற்றுள்ளன.

கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்படும் காலத்திலிருந்தே இந்த மூன்று அமைப்புக்களும் ஒன்றாக செயல்பட்டு வந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இ.தே.தோ.தொ.சங்கத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் வடிவேல் சுரேஷ் எம்.பி.க்கு பல சவால்கள் காத்திருக்கின்றன.

முதலாவது, சுமார் ஒன்றரை வருடமாக செய்து கொள்ளாதிருக்கும் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட வேண்டும். அதற்கு இ.தொ.கா.இணைந்து செயற்பட வேண்டியதொரு கட்டாயம் உள்ளது. எனவே, தனது பகையாளியான இ.தொ.கா.வுடன் இணைந்து செயற்படுவாரா? சிலவேளை அதற்கு வடிவேல் சுரேஷ் தயாராக இருந்தாலும் இ.தொ.கா.முன்வருமா?

கூட்டு ஒப்பந்தத்தின்மூலம் பெற்றுக் கொடுக்க வேண்டிய சம்பள உயர்வாக 1000 ரூபா பெற்றுக் கொடுக்கப்படுமா? இவ்விடயத்தில் இ.தொ.கா.வுடன் ஒத்துப்போவாரா அல்லது வேறொரு சம்பளத் தொகையைக் கேட்பாரா?

2500 கொடுப்பனவுக்காக பாராளுமன்றத்தில் தீக்குளிக்க முற்பட்ட வடிவேல் சுரேஷ் 1000 ரூபா சம்பள உயர்வுக்காக இன்னொரு தடவை தீக்குளிப்பாரா? அல்லது வேறு நடவடிக்கைகளை எடுப்பாரா? இதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் மட்டுமின்றி பல்வேறு சவால்களுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையில் வடிவேல் சுரேஷ் இருக்கிறார்.

எவ்வாறாயினும் ஐ.தே.க.தலைமை பல்வேறு உள்நோக்கங்களை வைத்தே இந்த முக்கிய பதவியை வடிவேல் சுரேஷ் எம்.பிக்கு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது. அதில் இ.தொ.கா.வை பெருந்தோட்ட தொழிலாளர்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் திட்டமும் ஒன்றாக இருக்கலாம்.

வடிவேல் சுரேஷ் எம்.பி.தனக்கும் கிடைத்துள்ள புதிய பொறுப்புக்கள்மூலம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பது உண்மை.


நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates