Headlines News :
முகப்பு » » 2500 மகிழ்ச்சி !!!? எம். நேசமணி

2500 மகிழ்ச்சி !!!? எம். நேசமணி


பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தமானது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளப்படும் ஒன்றாகும். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் மேற்கொள்ளப்படும் இவ்வொப்பந்தம் இறுதியாக 2013 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் அந்த கூட்டு ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்து அடுத்த இரு ஆண்டுகளுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் இது வரையில் கைச்சாத்திடப்படவில்லை. முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதும் அதன் மூலம் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இவ்விதமாக கடந்த கூட்டு ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்து ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள போதிலும் சம்பள உயர்வுக்காக காத்திருந்த பெருந்தோட்டத் தொழிலாளர்களது எதிர்பார்ப்புக்கள் என்னவோ கானல் நீராகிப்போயுள்ளன.

சம்பள உயர்வு விடயத்தில் பெருத்த ஏமாற்றத்துக்கு மத்தியில் ஏக்கங்களோடு காத்திருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களை பொறுத்தமட்டில் 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு பெரும் மகிழ்ச்சியே. எனவே இந்த மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவிக்காத வகையிலான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய சவால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இடைக்கால கொடுப்பனவானது பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வுப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும். நிரந்தரமானதும் நியாயமானதுமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்பதற்கு அது உந்து சக்தியாக அமைந்துள்ளது என்பது திண்ணம்.

2500 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு நாள் ஒன்றுக்கான 100 ரூபா சம்பள உயர்வுக்கு சமமானது. எனவே கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கும் போது இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது குறைந்தபட்சம் 100 ரூபா சம்பள உயர்வையாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே இந்த இடைக்கால கொடுப்பனவு எடுத்துக்காட்டுகிறது.

தோட்டத் தொழிலாளர்களது சம்பள உயர்வின்போது பல்வேறு நிபந்தனைகளுடனான கொடுப்பனவுகளை அதிகரிப்பதைவிட கூடுமானவரை அடிப்படை சம்பளத்தில் கணிசமான அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். நிபந்தனைகளுடனான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுவதானது பெரும்பாலான தொழிலாளர்களை சென்றடைவதில்லை. அதனை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது.

எனவே, இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலும் கம்பனிகள் தொழிலாளர்களை ஏமாற்றாத வகையிலும் கூட்டு ஒப்பந்தம் அமைய வேண்டும். அத்தோடு இவ்வொப்பந்தத்தில் காணப்படும் தொழிலாளர் நலன்சார்ந்த ஏனைய விடயங்களும் தற்போதைய கால சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இந்த இடைக்கால கொடுப்பனவு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கூட அந்த மகிழ்ச்சி எல்லாத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்ககப்படுகின்றன. அதாவது அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கே இந்த இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுகின்றன. எனவே இது தொடர்பிலும் உரிய கவனம் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அரசாங்க நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த இடைக்கால கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை எனவும் அதனை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பிரதமர் ரணில் விக்கரம்சிங்கவுக்கு கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.

எனவே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள அரச பொருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இந்த இடைக்கால கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இடைக்கால கொடுப்பனவை பெற்றுக் கொடுக்கும் தீவிர முயற்சியில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கடந்த காலங்களில் ஈடுபட்டது. குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இவர்கள் அமைச்சுப்பதவிகளில் இருந்து கொண்டும் கூட பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பள விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டு இந்த தீர்வினை வழங்கியுள்ளார். அந்த வகையில் பார்க்கின்ற போது தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்திய போராட்டத்துக்கு வெற்றியே. எனவே இதனை பாடமாக கொண்டு எதிர்காலத்தில் ஒற்றுமையாக குரல் கொடுத்து மலையக சமூகத்தின் பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வென்றெடுக்க வேண்டும். ஒன்றுப்பட்டால் உண்டு வாழ்வு என்றதற்கிணங்க சமூகத்தின் வெற்றி ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது.

கட்சி பேதங்கள், தொழிற்சங்க பேதங்களை மறந்து சமூகத்தின் நலன் சார்ந்த விடயங்களில் ஒற்றுமையாக செயற்பட்டால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கூட வெளியில் இருக்கும் தொழிற்சங்கங்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களை பெற்றுக்கொண்டு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates