Headlines News :
முகப்பு » , , , , » “தேசத் துரோகம்!” (1915 கண்டி கலகம் –42) - என்.சரவணன்

“தேசத் துரோகம்!” (1915 கண்டி கலகம் –42) - என்.சரவணன்

ஆர்மண்ட் டீ சூசா - Armand De Aouza
தேசத்துரோகம் என்பது ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு. உலகளவில் இன்றுவரை தனிநபர்களுக்கு எதிராகவும், அமைப்புகளுக்கு எதிராகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பதம் இது. இந்த குற்றச்சாட்டுக்கு பயம்கொல்லாத எவரும் இலர். தப்பித்தவறியும் தனக்கு எதிராக எவரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை எவரும் முன்வைத்துவிடக்கூடாது என்று எவரும் பயப்படுவது போலவே. மறுபுறம் ஒரு அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கான மாபெரும் கருவியாக இந்த “பதம்” அவதூற்றுச் சொல்லாக வெகுஜன அரசியலில் உறுதிபெற்றுள்ளது.

அப்பேர்பட்ட உச்சபட்ச குற்றச்சாட்டுக்கு நியாயமான வரைவிலக்கணத்தை ஆங்கில காலனித்துவ காலத்திலும் கூட கொண்டிருக்கவில்லை. எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரித்தானிய ராஜ்யத்துக்கும், அரசருக்கும் எதிரான ராஜதுரோக குற்றச்சாட்டாக இலகுவில் நிறுவிவிடும் போக்கு காணப்பட்டது. அதுவும் ஒரு இராணுவச் சட்டத்தின் கீழ் கூறவா வேண்டும்.

1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது கடை உடைத்தல், களவு புரிதல், கலவரத்தில் ஈடுபடுதல், போன்ற சாதாரண குற்றங்கள் அனைத்தும் கூட தேசத்துரோக குற்றச்சாட்டு என்கிற வரைவிலக்கணத்துக்குள் கொண்டுவரப்பட்டது. “எமது பேரரசுக்கு எதிராக போர் பிரகடனம்” என்றே அவர்கள் அழைத்தார்கள். பிரபல “ப்லாண்டிங் கெசட்” என்கிற பத்திரிகை “இந்த மக்கள் எழுச்சி “ஐரோப்பிய எதிர்ப்பு” கலவரம் அல்ல இது என்று அறிவித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் கொண்டிருந்த மனநிலையின் வெளிப்பாடே இந்த கலவரம் என்று “ப்லாண்டிங் கெசட்” பத்திரிகை தொடர்ந்து எழுதியது.

இந்தியாவில் உள்நாட்டு எழுச்சியையும், கலகங்களையும் அதிகம் ஆராய்ந்த ஒருவர் நோர்டன். அவர் இப்படி கூறினார். “சாதாரண பொதுமக்களுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இராணுவநீதிமன்றம் தோல்வியடைந்தது” என்று கூறியது. நீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கும் ராஜதுரோக குற்றத்துக்கு உட்பட்டதல்ல. கொள்ளையடித்தவர்களோ, கலவரக்காரர்களோ, மோசமான வன்முறைக்காரர்களோ ஜோர்ஜ் அரசருக்கு எதிராக எழுச்சி கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இருக்க வாய்பில்லை. ஹரி க்ரீசி (Harry Creasy (1852-1922)) கூறுவதைப்போல பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ளவர்களிலேயே பிரித்தானிய ராஜ்யத்தின் மீது அதிக நேர்மையும் பக்தியும் கொண்ட மக்கள் அரசருக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்தார்கள் என்பது கட்டுக்கதை”

ஹரி க்ரீசி (Harry Creasy (1852-1922))
இந்தக் கலவரம் பற்றி ஆராய்ந்து நூல்லாக வெளியிட்ட பிரபல பத்திரிகையாளர் ஆர்மண்ட் டீ சூசா எழுதியவற்றை இங்கிலாந்துக்கு அனுப்பிய சில நாட்களின் பின்னர் ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் அவர்களுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டார். இந்த நேர்காணலின் அடிப்படை நோக்கம் இராணுவ நீதிமன்றத்தின் குற்றங்கள் குறித்து ஆளுநர் மேற்கொண்ட திருத்தங்கள் தொடர்பிலானது.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹரி க்ரீசி (Harry Creasy) போன்றோர் கலவரம் விடயத்தில் பிரித்தானிய ஆட்சியின் செயலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தவர்கள். இலங்கையில் அனைத்து சமூகங்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். அவர் சட்டசபையில் இது குறித்து ஒரு யோசனையை முன்மொழிந்தார். கலவரம் தொடர்பில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் குறித்து மீண்டும் விசாரணை செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்த அரசாங்கம்  அதனை விசாரிப்பதற்கு ஒரு குழுவை அமர்த்தத் தேவையில்லை என்றும் ஆளுநர் தனிப்பட்ட முறையில் சகல வழக்குகளையும் ஆராய்வார் என்றும் பதிலளிக்கப்பட்டது.

இப்படி ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டதால் பல முறையீடுகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த முறைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள சந்தார்ப்பம் கிடைக்கபெற்ற ஆர்மண்ட் டீ சூசா ஆளுநரிடம் இரண்டு காரணங்களின் அடிப்படையில் உரையாட விளைந்தார். (1) தேசத்துரோகம் என்பது சட்டத்தின் புனைவு (2) குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் குறித்து அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மீண்டும் பரிசீலிப்பது உகந்ததல்ல.

ஆளுனரால் தனிப்பட்ட ரீதியில் மீள்பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளானது மேன்முரஈட்டுக்கு சமம் என்று சூசா கருதினார். இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியாது என்கிற நிலை இருந்ததால் ஆளுனர் மேற்கொள்கின்ற விசாரணை மேன்முறையீட்டுக்கு இணையானதாகவே கருத முடிந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் முன்னைய சாட்சியங்கள் மீதே மீள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் புதிய சாட்சிகள்  கணக்கில் எடுக்கப்படாது என்பதாலும் ஆளுநரின் விசாரணையிலாவது புதிய சாட்சிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சூசா கேட்டுக்கொண்டார். அவர் அப்படி கேட்டுக்கொண்டதற்கான காரணம் இராணுவ நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து உறுதிசெய்வதற்காக அதிகாரிகள் அப்போது மேலதிக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனாலும் அந்த தகவல் சேகரிப்புகள் போதுமான அளவு அதிகாரிகளால் செய்யப்படவில்லை.

இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது ஆளுநரின் தனிப்பட்ட அறிதலுக்காக அந்த வழக்குகள் குறித்த அறிக்கையை அனுப்பும் வாய்ப்பு கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களோ தமது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே அந்த அறிக்கையை அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த விபரங்கள் ஆளுநரின் முடிவுகளுக்கு வழிகோலியது. எனவே மீள விசாரணைகள் ஆரம்பமான போது அந்த கிராம அதிகாரிகள் தாம் முன்னர் வழங்கிய தகவல்களுக்கு அப்பால் எதுவும் முன்வைக்கவில்லை. ஏற்கெனவே வாங்கிய தீர்ப்புகள் அப்படி இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் தெரிவித்திருந்த தகவல்கள் பொய்யென்று நிரூபிக்கப்பட்டு, அதனடிப்படியில் சிலர் விடுவிக்கப்பட்ட போது அந்த அதிகாரிகள் தமக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதினார்கள்.

சிறையிலிருப்பவர்கள் குற்றவாளிகளானாலும், நிரபராதிகளானாலும் அவர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அதனை தாம் எப்படியும் குறைப்பதாக ஆளுநர் ஜோன் அண்டர்சன் வாகுறுதியளித்தார்.

வீடுகளுக்கும், கடைகளுக்கும் சேதம் விளைவித்தோருக்கு கடூழியத்துடன் 20 வருட, 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பொதுவில் இத்தகைய குற்றங்களுக்கு 4 அல்லது 5 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையே கூடியபட்சம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தேசத்துரோக குற்றச்சாட்டும் இத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் இந்த அளவு தண்டனை வழங்கப்பட்டது. இது அநீதி என்று சூசா ஆளுநருக்கு விளக்கினார். அவை குறைக்கப்படும் என்றும் அண்டர்சன் உறுதியளித்தார். உறுதியளித்தது போலவே நிறைவேற்றினார்.
ஆளுனர் ஜோன் அண்டர்சன் - John Anderson

மோசமான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தண்டனை பெற்றவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டும் தண்டனையும் குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை காலனித்துவ ஆட்சியில் காண்பதரிது. அதுவும் பலருக்கு. பலர் விடுதலை பெற்றார்கள். தேசத்துரோகம் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சேதமிழைத்ததாகவும் குற்றங்களுக்கு ஆளாகிய மூவரை அவர் விடுதலை செய்ததுடன் பொய் சாட்சி கூறியவர்களுக்கு எதிராக செப்டம்பர் மாதம் வழக்கு ஆரம்பமானது.

ஆளுநர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது டெசம்பர் முதல் வாரம் தேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடையுடைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஆயுள்தண்டனை பெற்ற ஏ.ஜீ.குணதிலக்க என்பவரை விடுதலை செய்யப்பட்டார். அவர் அதுவரை 5 மாத கடூழிய சிறைத்தண்டையை அனுபவித்து வந்தார். அவர் சிறையை விட்டு வெளியேறியபோது உடல்நிலை மோசமாகி இருந்தது. அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்த ஆளுநர் “மிகப்பெரிய அநீதி” என்றார். ஆனால் அதே வழக்கில் அதேயளவு தண்டனைப் பெற்ற மற்றுமொருவர் தொடர்ந்து சிறைத்தண்டையை அனுபவித்தார். குணதிலக்க குற்றமற்றவர் என்றால் அவரும் குற்றமற்றவரே.

தேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடயுடைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் களுத்துறை சிறைச்சாலையில் கடூழிய ஆயுள் தண்டனை பெற்று வந்தார்கள். அவர்களில் ஒருவர் டைனமைட் கொண்டு தாக்குதல் நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. ஒருவர் 5000 பவுன்களை கொடுத்து ஒக்டோபரில் விடுதலையானார். மற்றுமிருவரும் அதேயளவு பணத்தைக் கொடுத்து டிசம்பரில் விடுதலையானார்கள். இவ்வாறு இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பலர் நிபந்தனையுடனோ, அன்றியோ விடுதலையானார்கள். அதேவேளை மேலும் பல அப்பாவிகளுக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.

வழக்குகளை செய்தியிடுவதற்கு தொடர்ச்சியாக தடங்கல்களை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது அரசு. அதுபோல சம்பத்தப்பட்ட நபர்கள், குற்றச்சாட்டுக்கள், விசாரணை போன்றவை குறித்த விபரங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு மறுத்தது. மக்களுக்கு இந்த செய்திகள் சென்றடைவதை தவிர்த்தது.

1915 ஓகஸ்ட் மாதம் அன்றைய பறங்கி இனத்து சட்டசபை உறுப்பினர் இராணுவ நீதிமன்ற விசாரணை குறித்த விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். சிங்கள அப்பாவி விவசாயிகள் பலர் அநியாயமாக சிறையனுபவிக்கிறார்கள் என்றார் அவர். அதுவரை 10,000 அளவில் மக்கள் சிறைத் தண்டனை அனுபிவிப்பதாக தெரிவித்த அவர் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் பற்றிய எண்ணிக்கை புள்ளிவிபர அறிக்கைகளில் சேர்க்கப்படும் வகையில் சட்ட திருத்த யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த யோசனை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஹரி க்றிஸ் 1915 ஒக்டோபர் 20 அன்று வெளியான பத்திரிகையில் தனது கருத்தை இப்படி தெரிவித்தார்

“சாதாரண அப்பாவிகள் பலர் மரண தண்டிக்கும், சிறைத்தண்டக்கும் ஆளாகி துன்பம் அனுபவித்து வருவதை என்னால் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்த அப்பாவிகளுக்கு நேர்ந்துள்ள அநீதிக்கு நியாயம் கிடைப்பதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்” என்றார்.

ஜனவரி 31 அன்று அவர் சட்டசபையில் முன்வைத்த கோரிக்கை இது..

“இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டு, மீள் விசாரணைக்குட்படுத்தி, ஏலவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும். சில வழக்குகளுக்கு மீண்டும் சாட்சிகள் வரவழைக்கப்படவேண்டுமெனில் அதனைச் செய்ய அதிகாரம் வழக்கப்படவேண்டும், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்கள் தமக்கான வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ள கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும், இவை ஒழுங்குற மேற்கொள்வதற்கான ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த யோசனை 1916 ஜூன் 9 அன்று சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை ஆளுநர் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்து தீர்ப்புகளில் திருத்தம் செய்து தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் பலரை விடுவித்தார்.

தொடரும்..




Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates