Headlines News :
முகப்பு » , , , , » கொஸ் மாமாவுக்கு மரண தண்டனை! (1915 கண்டி கலகம் –39) - என்.சரவணன்

கொஸ் மாமாவுக்கு மரண தண்டனை! (1915 கண்டி கலகம் –39) - என்.சரவணன்


1915இல் இராணுவ நீதிமன்றம் மேற்கொண்ட அநீதியான தீர்ப்புகள் பிரித்தானிய காலனித்துவ வரலாற்றில் கறை படிந்த அத்தியாயம் என்றே கூற வேண்டும். அனைத்து தீர்ப்புகளையும் இத்தொடரில் குறிப்பிடாவிட்டாலும் அப்பேர்பட்ட தீர்ப்புகளில் முக்கிய சிலவற்றை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த காலப்பகுதியில் இராணுவ நீதிமன்றத்தில் நிகழ்ந்த அநீதியான வழக்குகளில் ஒன்று ஆதர் வீ டயஸ் பற்றிய வழக்கு.

மதுவொழிப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஆதர் டயஸ் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பழிவாங்கப்பட்டார். ஆதர் டயசும் அவரது சகோதர் ஹெரி டயஸ் மற்றும் மேலும் ஐவர் மீது போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜூன் 17 அன்று கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து விசாரணை நடந்தது. பாணந்துறையிலுள்ள முஸ்லிம் பள்ளி வாசலுக்கு டைனமைட் எறிந்தது, கடைகளைக் கொள்ளையடித்தது மற்றும் தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆதர் வீ டயஸ் தான் நிரபராதி என்பதை முதல் வழக்கின் போதே எடுத்துரைத்தார். ஆனால் போதிய விசாரணைகள் எதுவுமின்றி ஆதர் வீ டயஸ் மற்றும் அவரது சகோதரரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் ஹென்றி பேதிரிஸ் மரண தண்டனைக்குள்ளக்கப்பட்டிருந்ததால் இந்தத் தீர்ப்பு குறித்து நாடெங்கிலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இவர்களை விடுவிக்கக்கோரி பல முறைப்பாடுகள் பல்வேறு அமைப்புகள், மற்றும் பிரமுகர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

கலவரம் நடந்த போது வீட்டிலிருந்து வெளியே வந்து பாணந்துறை - ரன்கொத் விகாரையின் முன்னாள் இருந்தபடி கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை நோக்கி “மூடர்களே அவற்றை உடைக்காதீர்கள். அவற்றை உடைத்து பாவத்தை தேடிக்கொள்ளாதீர்கள்” என்று சத்தமிட்டபடி சென்று கலவரக்காரர்களை  கலைத்துள்ளார். அவ்வாறு சேதங்களை தடுத்து நிறுத்திய ஆதர் டயஸின் மீது அவர் தான் கலவரத்தை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

வெளியிடங்களிலிருந்து ஆட்களை வரவழைத்து அவர் கலவரத்தில் ஈடுபட்டதாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சிலர் சாட்சியமளித்தனர். பாணந்துறையில் பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபட்ட ஆதர் டயஸ் முஸ்லிம்களின் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தார் என்றும் இந்த சந்தர்ப்பத்தை அவருக்கு எதிராக அவர்களில் சிலர் பயன்படுத்தினார்கள் என்றே ஆர்மண்ட் டி சூசா குறிப்பிடுகிறார்.

அரசாங்க தரப்பு சாட்சியான பொலிஸ் மஜிஸ்ட்ரேட் சாட்சியமளிக்கையில்...
“அன்று மட்டுமல்ல அதற்கு முன்னர் கூட ஒருபோதும் மக்களை தூண்டும் நடவடிக்கையிலோ, கொள்ளை சம்பவங்களிலோ ஈடுபட்டவரல்ல ஆதர் டயஸ். டயஸ் குடும்பத்தினரைப் பற்றி நான் பல காலமாக நன்கு அறிவேன். அவர் ஒரு கௌரவமான, அமைதியான, சட்டத்தை மதிக்கும் ஒருவர். பொதுச் சேவைகளில் ஈடுபட்டுவரும் பெரியவர். அன்று கூட அவர் நல்லதையே செய்ய விழைந்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்த பொருத்தமும் இல்லாதவர் அவர்.” என்றார்.

ஆதர் டயஸின் தாயார் செலஸ்டினா தனது புதல்வர்களின் விடுதலைக்காக வாதிடுவதற்கென இங்கிலாந்திலிருந்து பிரபல வழக்கறிஞர் அர்ட்லி நோர்டன் என்கிற வழக்கறிஞரை வரவழைத்து வாதிட்டார். அந்த வழக்கு பற்றிய விரிவான பல தகவல்களை ஆர்மண்ட் டி சூசாவின் “100 நாள் இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை” என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நீதிமன்றத்தின் சட்டவிரோத போக்கு குறித்து நிறைய அதில் அமபலப்படுத்தியுள்ளார் அவர்.

இந்த வழக்கின் இறுதியில் மரண தண்டனை; கடூழிய ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. பின்னர் இரண்டு மகன்மாருக்கும் தலா ஒரு லட்சம் ரூபா பிணையில் ஆளுனரால் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். 

நிரபராதியான தன் மீது குற்றம் சுமத்தி, மரண தண்டனை தீர்ப்பும் வழங்கி, பின்னர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் அபராதப்பணம் கட்டி மீட்கப்பட்டமை குறித்து ஆதர் டயஸ் வேதனைப்பட்டார். தனது பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க முயற்சிகள் எடுத்தார்.

இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீது மேன்முறையீடு செய்யவும் முடியாத நிலை. எனவே தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வாய்ப்புகள் அடைக்கப்பட்டுவிட்டன.

சாமஸ் ஆளுநர் பதவிலிருந்து நீக்கி புதிய ஆளுநர் வந்த பின்னரும் அவர் தற்காலிக ஆளுநர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ் இடம் முறைப்பாடு செய்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து சவால் செய்தார். கடும் வசனங்களுடன் அவர் அந்த முறைப்பாட்டை செய்தார். ஆதர் டயஸ் விடுவிக்கப்பட்டு 18 மாதங்களின் பின்னர் 1917 ஜூலை மீண்டும் இறுதியாக முறையீடு செய்தார். ஆளுநரிடம் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கி தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்போது ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் சுகவீனமுற்று இருந்தார். சில தினங்களின் பின்னர் அவர் நுவரெலியாவில் மரணமானார். ஆனால் அவர் இறக்குமுன்னர் ஆதர் டயஸ் சகோதரர்களிடம் இருந்து பெற்ற அபராதப் பணத்தை திருப்பிக் கொடுக்கும் ஆணையைப் பிறப்பித்து விட்டுச் சென்றதுடன். அவர்கள் இருவரும் நிரபராதிகள் என்று ஆர்மண்ட் டி சூசாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆதர் வீ டயஸ்
இலங்கையின் சுதந்திர போராட்ட முன்னோடிகள் வரிசையில் சிங்களவர்களால் இன்றும் கொண்டாடப்படுபவர் ஆதர் வீ டயஸ் (Arthur V. Dias). பாணந்துறையில் பிரபல வர்த்தகர். தனவந்தர். சமூக சேவகர். பெரும் கொடையாளி என பலராலும் மதிக்கப்படுபவர். அதுமட்டுமன்றி அவர் பிரம்மஞான சங்கத்தின்  மற்றும் அநகாரிக தர்மபால தலைமையிலான மதுவொழிப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் கூட. அதன் பல்வேறு செயற்திட்டங்களில் தீவிரமாக செயல்பட்டார். பிரம்மஞான சங்கத்தின் முயற்சியால் ஆரம்பிக்க்கப்பட்ட ஆனந்தா வித்தியாலயம், நாலந்தா வித்தியாலயம், கண்டி தர்மராஜா வித்தியாலயம், அம்பலங்கொட தர்மாஷோகா, அனுலா வித்தியாலயம்,  பாணந்துறை ஸ்ரீ சுமங்கல போன்ற பாடசாலைகளின் உருவாக்கத்தில் இவரின் நிதிப் பங்களிப்பு கணிசமானது. 1927இல் இவரது தாயார் செலஸ்டினா டயஸின் முயற்சியில் பம்பலபிட்டியில் விசாகா வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. தமது அரசியல் பிரச்சார வேலைத்திட்டத்துக்காக ஆங்கிலத்தில் சிலோன் “இண்டபெண்டன்ட்” (Ceylon independent) என்கிற ஆங்கில பத்திரிகையையும் சிங்களத்தில் “சுவதேஷிய மித்ரயா” (சுதேசத் தோழன்) என்கிற பத்திரிகையையும் அவர் ஆரம்பித்தார்.

பெரும் செல்வந்தரான இவரது தகப்பனார் ஜெரமியஸ் தியஸ் (P. Jeremias Dias) (இந்தப் பெயரை டயஸ் அல்லது தியஸ் ஆகிய இரண்டு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன) பெருந்தோட்ட சொந்தக்காரராகவும் சாராயக் குத்தகைக்காரராகவும் செல்வம் தேடிக்கொண்டவர். இறப்பர் தோட்டங்கள் பல அவருக்கு சொந்தமாக இருந்தன. மதுவொழிப்பு இயக்கம் ஒரு வகையில் சுதந்திரத்திற்கான இயக்கமாக செயற்பட்டதையும் அதில் இயங்கிய தனவந்தர்களில் பலர் சாராயக் குத்தகைக்காரர்களாக இருந்தவர்கள் என்பது பற்றியும் ஏற்கெனவே இத்தொடரில் எழுதியிருந்தேன். பிரசித்திபெற்ற “பாணந்துறை வாதம்” 1873 இல் நிகழ்ந்தபோது அதற்கான ஏற்பாட்டு செலவுகளை கவனித்தவர் ஜெரமியஸ் டயஸ். டயஸ் குடும்பத்தினர் கராவ சாதி பின்னணியை உடையவர்கள். பாணந்துறையில் கொவிகம சாதியனரால் பௌத்த விகாரையில் பாரபட்சம் நிகழ்ந்தபோது கராவ சாதியனருக்கான தனி ஏற்பாடு செய்தவர் ஜெரமியஸ். ரன்கொத் விகாரையில் ஞாயிறு பௌத்த வகுப்புகளை ஆரம்பித்தது மட்டுமன்றி கற்பித்தலிலும் ஈடுபட்டவர்.

ஆதர் வீ டயஸ் மதுவொழிப்பு இயக்கத்துக்கு ஊடாக மாட்டிறைச்சித் தடைக்கான பிரசாரங்களிலும் ஈடுபட்டார். 

மில்லியன் பலா மரங்கள்
பொருளாதாரத்தில் தன்னிறைவான சுதேசத்தைக் கட்டியெழுப்பும் எண்ணத்துடன் அவர் பல்வேறு செயற்திட்டங்களில் ஈடுபட்டார். குறிப்பாக அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததும் பலாமரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆங்கிலேயர்களால் பலா மரம் வெட்டும் நடவடிக்கை தீவிரமாக இருந்தது அந்த நேரத்தில். அதுவும் முதலாம் உலக யுத்த காலப்பகுதியில் மக்கள் உணவுக்கு பட்ட துன்பங்களை அவர் மறக்கவில்லை பலாமரங்கள் இருந்தாலே சாதாரண மக்கள் பெரும் பலனடைவார்கள் என்று அவர் எண்ணினார். அரிசிக்கு சிறந்த மாற்று போசாக்கு மிக்க உணவு, நிழல் தரும் மரம் என்றார். தோட்டத்தில் இலகுவாக வளரக்கூடியது. தெருவோரங்களிலும் வளர்ப்போம். கிராமங்களில் அதனை ஊக்குவிப்போம் என்றார். அதனால் ஒரு மில்லியன் பலாமரக் கன்றுகளை நடும் இயக்கத்தை 11 ஜூன் 1918இல் ஆரம்பித்தார். இதற்கான விதைகளை மலேசியாவில் இருந்து வருவித்தார். ஆனந்த கல்லூரி அபிவிருத்திக்காக நிதி திரட்டுவதற்கான துண்டுப்பிரசுரங்களை; தெரிவு செய்யப்பட்ட பலருக்கு அனுப்பி வைத்த போது அந்த துண்டுபிரசுரத்துடன் பலாமரக் கன்றுகளையும் தபாலில் அனுப்பி வைத்தார் என்று கூறப்படுகிறது. அதனை இலவசமாக தபால் செய்வதற்கான உதவியை அன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவல மேற்கொண்டார். இதனால் அவருக்கு “கொஸ்மாமா” (பலா மாமா), அல்லது பலாக்கொட்டை மாமா (கொஸ் எட்ட மாமா) என்கிற பெயரிலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

பல சிங்கள வரலாற்று நூல்களிலும் இந்த விபரங்கள் காணக் கிடைக்கின்றன. பலா மட்டுமன்றி தென்னை, மாம்பழம், பப்பாளி, தூரியன், ஆப்பிள் போன்ற மரக் கன்றுகளையும் விநியோகித்தார்.  மற்றும் இன்னும் பல விவசாய உற்பத்திகளிலும் மக்களை ஊக்குவிப்பதற்காக நிதியளித்தார். இரண்டாம் உலக யுத்த காலத்தில் அரிசி, கோதுமை போன்றன இலங்கையில் பற்றாக்குறை ஏற்பட்ட போதும் சிங்களக் கிராமங்களில் பலா இருந்தது. அந்த நிலைமையை சமாளித்ததில் ஆதர் டயஸின் பங்குண்டு என்பர் சிங்கள மக்கள். தனது பள்ளிப்பருவ காலத்திலேயே அவர் “பலாமரம்” எங்கள் “சோற்று மரம்” என்கிற தலைப்பில் பாடசாலை சஞ்சிகையில் ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அப்போதிருந்தே இந்த பலா மரச் சித்தாந்தம் அவரிடம் குடிகொண்டு இருந்திருக்கிறது.

தனது மகளின் திருமணத்தின் போது பலாக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை போன்றவற்றில் செய்யக்கூடிய உணவுகள் பலவற்றை அறிமுகப்படுத்தினார். தனது கிட்டிய நண்பர்களின் வீட்டு திருமணங்களின் போது தம்பதிகளுக்கு பலாகொட்டையை பொதி செய்து அன்பளிப்பு செய்து அசத்தினார். விவசாய நிகழ்ச்சியொன்றின் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அன்றைய ஆளுநர் ரெஜினோல்ட் ஸ்டப்ஸ்க்கு பலாக்கொட்டையில் செய்யப்பட்ட மாலையை அணிவித்து வரவேற்ற சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

சேர் அன்றூ கல்டகொட் (Governor Andrew Caldecott “1937 – 1944”) இலங்கையின் கவர்னராக இருந்தபோது ஆதர் டயசுக்கு “வீரத் திருமகன்”  (knighthood) பட்டத்தை வழங்க முன்வந்தபோது அதனை நிராகரித்தார் டயஸ். அதுபோல 1957இல் எஸ்.டபிள்யு.ஆர்.டிபண்டாரநாயக்க செனட் சபை உறுப்பினராக ஆக்குவதற்கு முயற்சித்த வேளையிலும் அதனையும் அவர் நிராகரித்தார். பண்டாரநாயக்கவின் அரசியல் பிரவேசத்திற்கு டயஸின் பங்களிப்பும் முக்கியமானதாக குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக 1925இல் டயஸ் தொடங்கிய அகில இலங்கை கிராமிய மாநாடு (The All Ceylon Village Committee Conference) பண்டாரநாயக்கவின் ஆரம்ப அரசியல் பிரவேசத்திற்கு வித்திட்ட காரணிகளில் ஒன்று.

“குறைந்தது ஒரு மில்லியன் பலா மரங்களையாவது நட வேண்டும் என்று ஆதர் டயஸ் தொடங்கிய பணி, அவரை இலங்கை வரலாறு என்றும் நினைவு கொள்ளும்” என்று 1960இல் அன்றைய உள்நாட்டு அமைச்சர் சேர் ஒலிவர் குணதிலக்க கூறினார்.

1948 சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது மதுப் பாவனையை தவிர்க்குமாறு ஆதர் டயஸ் மதுவொழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த தனது பால்யகால சகாவும் புதிய பிரதமருமான டீ.எஸ்.சேனநாயக்கவிடம் கேட்டுகொண்டார். ஆனால் அதனை டீ.எஸ்.சேனநாயக்க நிராகரித்ததால் மிகவும் மனம் நொந்தார்.
22.01.1952 அன்று ஆதர் டயஸ் டீ.எஸ்.சேனநாயக்கவுக்கு தனது விரல்களைக் கீறி இரத்தத்தால் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார்.“சுதந்திரத்தின் பின்னரான போக்கு குறித்து நான் திருப்தியடையவில்லை. புதிய நிர்வாகத்தில் நமது பண்பாட்டுக்கு இடமில்லை. சிங்கள மொழிக்கும் இடமில்லை. இப்போதிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும். நீ உன் வழியைப் பார் இனி நான் என் வழியைப் பார்த்துக்கொள்கிறேன். இம்முறை சுதந்திர தினத்தன்று நான் பல தேசியக் கொடிகளை பாணந்துறையில் பறக்க விடுவேன். அதில் ஒன்று கருப்பு கொடியாக இருக்கும்.”
அதன்படி அவர் நான்கு கொடிகளை ஏற்றினார். ஒரு பௌத்தனாக பௌத்த கொடியையும், இலங்கைக்காக தேசியக் கொடியையும், சுதந்திரத்திற்காக வெள்ளைக்கொடியையும் இறுதியில் அர்த்தமில்லாத சுதந்திரத்திற்காக கருப்புக்கொடியையும் அவர் ஏற்றினார்.

ஆதர் டயஸ் 1960 இல் தனது 75வது  வயதில் காலமானார்.

1986 இல் அவரது நூற்றாண்டு ஜனன தின நினைவின் போது ஜே.ஆர்.அரசாங்கத்தால் அவரின் உருவப்படத்தைக் கொண்ட முத்திரை வெளியிடப்பட்டது.

தொடரும்...

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates