Headlines News :
முகப்பு » » தேயிலை தொழில்துறை நட்டமடைவதில் உள்ளக தோட்டநிர்வாகங்களின் வகிபாகம் - பூனாகலை அருள்கார்க்கி

தேயிலை தொழில்துறை நட்டமடைவதில் உள்ளக தோட்டநிர்வாகங்களின் வகிபாகம் - பூனாகலை அருள்கார்க்கி



பெருந்தோட்ட துறையில் இறப்பர், தென்னை ஆகியவற்றைவிட தேயிலை தொழில்துறையே அளவில் பெரிதாகவும் பெரும் ஆளணியை கொண்டதுமாக விளங்குகிறது.தேயிலை தொழில்துறையில் இன்று சம்பள பிரச்சினை உச்சத்தை அடைந்துள்ளது. 1000 ரூபா சம்பள உயர்வு பெற்றுத்தருவதாக உசுப்பேற்றி மக்களுக்கு ஆசைக்காட்டி இன்று மக்கள் தினமும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும் நிலை தொடர்கின்றது.கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை இழுபறியில் தொடர்ந்து இன்று 770 ரூபா என்ற முடிவற்ற முடிவாக உள்ளது. இந்த தொகை நிர்ணயம் செய்யப்படுவதற்கு ஒரு வருடமாகியுள்ளது.

தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிர்ணயிப்பதில் தாக்கம் செலுத்தும் விடயங்கள் இரு தரப்பிலும் பொதுவாகவே காணப்படுகின்றன. இதுவிடயத்தில் கம்பனிகள் தமது செலவீனங்களை பட்டியல்படுத்தி உற்பத்திச் செலவின் உயரியத்தன்மையை காட்டுகின்றன.ஒரு கிலோ தேயிலைக்கான உற்பத்திச் செலவு உயர்வாக காணப்படுவதன் காரணமாக இதர அனைத்து செலவீனங்களும் ஒன்றாக சேர்ந்து இலாபத்தில் கை வைக்கின்றன.

கம்பனிகள் பட்டியல்படுத்தும் செலவீனங்களில் உள்ளக தோட்ட நிர்வாகங்களின் தான்தோன்றித்தனமான செலவுகளை கணக்கில் எடுப்பதில்லை.தோட்ட நிர்வாகங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகள் (துரைமார்) வாழும் ராஜவாழ்க்கை கம்பனிகளுக்கு தெரியுமோ? தெரியாதோ? தெரிந்தும் கண்டுகொள்வதில்லையோ புரியவில்லை.இவர்கள் பெருந்தொகை பணத்தை தோட்ட நிர்வாகங்களுக்கு செலவிடும் அதேவேளை நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றிலடிப்பதை கணக்கெடுப்பதில்லை.

தோட்ட துரைமார் தங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ள தோட்டங்களில் உள்ள அனைத்து வளங்களையும் தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். இதற்கு அவர்கள் தமக்கு உதவியாக சில தோட்ட சேவையாளர்களையும், கங்காணிமார்களையும், தோட்டத் தலைவர்களையும், கையில் வைத்துக்கொள்வர். உதாரணமாக தோட்டஅதிகாரி ஒருவரின் பங்களாவுக்கு காவலாளி, சமையலாள், தோட்டக்காரர், ஒவ்வொருவர் என மொத்தமாக மூவர் நிரந்தரமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இன்றுள்ள நடைமுறை என்னவெனில், தோட்ட அதிகாரிகள் மரக்கறிகள் பயிர்ச்செய்தல்,கால்நடை. கோழி வளர்த்தல்,(செல்லபிராணிகள் வளர்ப்பு) போன்ற மேலதிக வருமானத்திற்கான ஏற்பாடுகளை செய்துகொள்கின்றனர்.அரசியல்வாதிகளைப்போல் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட கால எல்லைக்குள் எல்லா வளங்களையும் தமக்கு சாதகமாக்கிகொள்ள தவறுவதில்லை.

இவர்கள் செய்யும் அனைத்து மேலதிக வேலைகளுக்கும் தோட்டங்களில் இருந்தே அனைத்து வளங்களையும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இவர்களின் மரக்கறி தோட்டத்தில் வேலை செய்ய 1தொடக்கம் 3௦ வேலையாட்களை தினமும் எடுத்துக்கொள்வதை வழமையாக கொண்டுள்ளனர். நானே ராஜா நானே மந்திரி கதைதான். யார் கேட்பார்.?

குறிப்பாக, கால்நடை வளர்க்க அவசியமான தொழுவங்களை பராமரித்தல், மாட்டுத்தீவனம் சேகரித்தல், பசும்பால் கறத்தல், பசும்பால் கொண்டுசெல்லல், அதேபோல் மரக்கறி பயிர்ச்செய்கை, கோழி வளர்ப்பு என பல்வேறு வேலைகளுக்கும் தோட்டத்தொழிலாளர்களே பணியாளர்கள். அதுமட்டுமன்றி, இவ்வேலைகளுக்கான போக்குவரத்து வசதிகளை கூட பெருந்தோட்டங்களில் உள்ள வாகனங்களையே பயன்படுத்துகின்றனர்.இங்கு என்ன கொடுமை என்றால் அநியாயங்களை தட்டிக்கேட்க வேண்டிய தொழிற்சங்க தலைவர்கள் காவல் வேலைக்கும், கங்காணி வேலைக்கும் அற்ப சலுகைகளுக்காகவும் தோட்ட நிர்வாகிகளுக்கும் உறுதுணையாக இருப்பது தான் வெட்கக் கேடான விடயம்.

அதேபோல் பெருந்தோட்டங்களில் சேவையாற்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தோட்ட சேவையாளர்களின் விடுதிகளிலும் பெருந்தொகையான தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.அவர்களின் பிள்ளைகளை பராமரித்தல்,பாடசாலைக்கு அல்லது முன்பள்ளி நிலையங்களுக்கு அழைத்துச்சென்று திரும்புதல்,விறகு பிளத்தல்,மரக்கறி தோட்டத்தில் வேலை செய்தல்,விடுதியில் பல்வேறு திருத்த வேலைகளை செய்தல், சமைத்தல், உடை கழுவுதல் போன்ற பல்வேறு தனிப்பட்ட வேலைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.தொழிலாளர்களும் தமக்கு அன்றைய நாளுக்கான கொடுப்பனவு வழங்கப்படுவதன் காரணமாக இவ்வாறான நடைமுறைகளை விமர்சனத்திற்கு உட்படுத்துவதில்லை. எனினும், இவை அனைத்தும் சுழற்சி முறையில் மீண்டும் தம் வருமானத்திலேயே கைவைப்பதை அறியாதவர்களாக இருப்பதில் தான் அவலம் தங்கியுள்ளது.

இதுபோன்று பெருந்தொகையான இன்னும் பல தனிப்பட்ட வேலைகளுக்கு தொழிலாளர்கள் அநாவசியமாக பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 10 தொழிலார்கள் இவ்வாறான வேலைகளுக்கு ஈடுபடுத்தபட்டால், 25 வேலைநாட்கள் வேலை வழங்கப்படின் 250 தொழிலாளர்கள் மாதமொன்றுக்கு தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு தொழிலாளியின் ஒரு நாள் கொடுப்பனவு 450 ரூபா எனின் (250*450) மாதமொன்றுக்கு சுமார் 112,500 ரூபாதொழிலாளர் கொடுப்பனவு தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக அநாவசியமாக செலவிடப்படுகின்றது. இது மிகக்குறைந்த கணக்கெடுப்பே ஆகும். ஒரு பெருந்தோட்ட கம்பனி 10 தோட்டங்களை நிர்வகித்தால் இந்த செலவீனம் 11,25,000ரூபா ஆகும்.

பச்சைத்தேயிலையை மலைகளில் இருந்து கொண்டு செல்லவும், தொழிலாளர்களின் பயண தேவைகளுக்கும் தோட்டங்களில் வாகன வசதிகள் உண்டு.அதனையும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விட்டுவைப்பதில்லை. தோட்ட அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் தமது மரக்கறிகளை கொண்டு செல்லவும் தமது சொந்த தேவைகளுக்கு தோட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

எரிபொருள் லீற்றர் ஒன்று 95 ரூபா எனின், ஒரு நாளைக்கு ஒரு லீற்றர் அநாவசியமாக செலவிடப்படுமாயின், 25 வேலை நாட்களில் (25*95) மாதமொன்றுக்கு 2,375ரூபா செலவிடப்படும்.இதுவும் மிகக்குறைந்த கணக்கெடுப்பே ஆகும். இவ்வாறான அநியாயங்களையும் தோட்ட நிர்வாகிகள் தேயிலையை உற்பத்திச் செய்யும் உற்பத்திச் செலவாகவே (manufacturing cost) கணக்குக் காட்டுகின்றனர்.

கம்பனிகளும் தோட்டங்களை நிர்வகிப்பதற்கான செலவுகளில் இதனை பதிவு செய்கின்றன.

இவ்வாறு செலவிடப்படும் பணத்தை தேயிலை மலைகளை பராமரிப்பதற்கும்,மேம்படுத்துவதற்கும் செலவுச் செய்யலாம்.இன்று பெரும்பாலான பெருந்தோட்டங்களில் மீள்நடுகை (REPLANT) செய்யப்படுவதில்லை.அதேபோல் தேயிலை மலைகளில் குறைநிரப்பல் (INFILLNG) செய்து விளைச்சலை அதிகரிக்கும் முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை.தேயிலை தொழில்துறையை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான அடித்தளம் தேயிலை மலைகளில் இடப்படவேண்டும்.உள்ளக நிர்வாகங்களின் சுரண்டல் காரணமாக இத்தொழில் துறை பின்னடைவை சந்தித்துள்ளது.

தோட்ட அதிகாரிக்கான கொடுப்பனவு எவ்வளவு என்பது உயர்மட்டத்தில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது.இவர்களின் கொடுப்பனவுகள் ஆரம்பக்காலங்களில் தோட்டக் காரியாலயங்களிலேயே தயாரிக்கப்பட்டது. எனினும் இன்று கம்பனி தலைமையகத்திலேயே தயாரிக்கப்படுகின்றது.அவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தமது சம்பளம் மற்றும் இதர சலுகைகளை அமைத்துக் கொண்டனர்.எனினும் இங்கு தோட்டத்தில் தொழிலாளியின் கொடுப்பனவை அதிகரிக்க மட்டும் புள்ளிவிபரத் தரவுகள் கம்பனிகள் நட்டமடைவதாக காட்டுகின்றது.அதுமட்டுமன்றி தோட்டங்களில் கொந்தராத்துக்களை தமக்கு வேண்டிய ஆட்களுக்கு கொடுத்து கமிசன் வாங்கிக்கொள்வார்கள்.தோட்ட சேவையாளர்களின் நலன்புரி விடயங்களுக்கென கழகங்கள் அமைத்து சந்தாப்பணம் அறவிடும் வழக்கம் உண்டு.அதையும் சில தோட்ட அதிகாரிகள் தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதுண்டு.

சில தோட்டங்களில் இன்றும் முடி திருத்துபவர், தெருக்கூட்டுபவர் ஆகிய தொழில்களுக்காக என்று தொழிலாளர் சம்பளத்தில் பணம் அறவிடப்படுகின்றது.எனினும் அவ்வாறானவர்கள் இன்று தோட்டங்களில் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயம்.இந்த பணம் எங்கு செல்கின்றது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.இவ்வாறான சுரண்டல்கள்,அதிகார துஷ்பிரயோகங்கள் மலிந்து காணப்படும் போது எவ்வாறு இத்தொழில்துறை முன்னேற்றமடையும்.அதேபோல் தொழிலாளர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகள் என்பவற்றிலும் இக்காரணிகள் தாக்கத்தை செலுத்தும்.


நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates