Headlines News :
முகப்பு » , , , , » இராமநாதன் : விருப்பும் வெறுப்பும்! (1915 கண்டி கலகம் –35) - என்.சரவணன்

இராமநாதன் : விருப்பும் வெறுப்பும்! (1915 கண்டி கலகம் –35) - என்.சரவணன்

சேர் பொன் இராமநாதன் தனது இறுதிக் காலங்களில்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறித்த கருத்துருவாக்கம் மூன்று இலங்கையின் பிரதான மூன்று இனங்கள் மத்தியிலும் மூன்று வெவ்வேறு விதங்களிலேயே நிறுவப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு புறத்தில் “இலங்கை தேசியத்தை: கட்டியெழுப்புவதில் அவரது பாத்திரத்தை மெச்சுகின்ற போதும் மறுபுறம் அவரை சிங்களவர்களுக்கு எதிரானவராக நிறுவும் போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. முஸ்லிம் தரப்பிலும் அவரைத் தமக்கு எதிரானவராக நிறுவும் போக்கைப் பற்றிய கணிசமான காரணிகளைக் சென்ற வாரம் கவனித்தோம்.

இராமநாதனின் வர்க்க பின்புலம்
இராமநாதன் அவரது 23வது வயது காலங்களில் மிகவும் தாராளவாத கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் நியாயமான மனிதராக இருந்தார் என்றும் அது பிற்காலத்தில் எவ்வாறு மாறியது என்பது குறித்தும் குமாரி ஜெயவர்தனா தனது “Nobodies to somebodies” என்கிற நூலில் விபரிக்கிறார். “அவரது முதிர்ச்சியான காலத்தில் அவர் ஒரு பழமைவாதியாக ஆனார். 20 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் போக்கோடு ஓட்டிச் செல்ல அவரால் இயலாது போனது.... ஆனால் அவரது சகோதரர் அருணாசலம் சிறந்த லிபரல்வாதியாக ஆரம்பித்து இருந்து இறுதியில் ஒரு ரெடிகல்வாதியாக ஆனார்” என்கிறார் அவர்.

1920-1930 காலப்பகுதியில் யாழ்ப்பாண பள்ளிக்கூடங்களில் சாதியமைப்பையும், படிநிலையையும் புறக்கணித்த மாணவர்களுக்கு சம ஆசனம், சம உணவு வழங்கப்படுவதை எதிர்த்தது மட்டுமன்றி இலங்கையின் தேசாதிபதியைக் கண்டு முறையிடும் அளவுக்கு ராமநாதனிடம் சாதியம் ஆட்கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி தாழ்த்தப்பட்டவர்கள் தமது சா ஊர்வலங்களில் பறையை பயன்படுத்திய போது அத்தகைய சடங்குகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று வாதிட்டார்.

அரசாங்க அதிகாரியாக அவர் உயர் மட்ட தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, உயர் கல்வியையும் வெளிநாட்டில் கற்றுக்கொண்டு உள்ளூர் – வெளியூர் நற்பெயரையும் பெற்றுக்கொண்ட போதும் அவர் போதிய வசதி படைத்தவராக இருக்கவில்லை. அவரது தந்தையார் கேட் முதலியார் தொழில் ரீதியில் பெரும் நட்டத்தை அடைந்திருந்தார். இராமநாதனின் விவாகத்தினூடாக அந்த  குறையும் தீர்ந்தது என்றே கூறலாம். செல்வந்தரான முதலியார் நன்னித்தம்பியின் புதல்வி செல்லாச்சி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். 1879 இல் இராமநாதனின் மாமனாரான சேர் முத்துக்குமாரசுவாமி ஓய்வு பெற்றபோது அவ்விடத்திற்கு தமிழ் உத்தியோக பற்றற்ற உறுப்பினராக தெரிவானார் இராமநாதன். 1892 வரை அந்தப் பதவியில் இருந்தார். 1893 இல் சொலிசிட்டர் ஜெனராலாக பதவி வகித்தார். 1905 இல் அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். மீண்டும் 1911-1930  அவர் இறக்கும்வரை சட்டசபையில் அங்கம் வகித்தார்.

இராமநாதன் தனது பிற்காலத்தில் ஒரு செல்வந்தராக இருந்தார். 1994 இல் வெளியான சேர்.பொன்.இராமநாதன் உருவச் சிலைத் திறப்பு விழா (சுன்னாகம் இராமநாதன் கல்லூரி) சிறப்பு மலரில் வெளியிடப்பட்டுள்ள அவரது சொத்துக்கள்.

இந்தியாவில்
  • கொடைக்கானலிலும், இராமேஸ்வரத்திலும் 25 ஏக்கர் நிலப்பரப்பு
யாழ்ப்பாணத்தில்
  • முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரி அதனைச் சார்ந்த நிலப்பரப்பு 25 ஏக்கர்
  • சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, அதன் நிலப்பரப்பு 25 ஏக்கர்.
  • கோப்பாய் ஆசிரிய கலாசாலையருகில் உள்ள 20 ஏக்கர் தோட்ட நிலம்
  • உடுவில் கிராம சபைக் கட்டிடமறுகில் “கரவசிட்டி” என்கிற 1 ஏக்கர் காணி
கிளிநொச்சியில்
  • இராமநாதபுரம் பகுதியிலுள்ள 300 ஏக்கர்
தென்னிலங்கையில்
  • கொழும்பிலுள்ள “வில்லா பிறாங்கா” என்ற பங்களா
  • தென் பிருந்தாவனம் எனும் 147 ஏக்கர்  தோட்டம் 

1917இல் இராமநாதனுக்கு சொந்தமாக 571 ஏக்கர் தென்னங் காணிகள் இருந்ததாக மைக்கல் ரொபர்ட்ஸ் தொகுத்த “இலங்கை தேசிய காங்கிரஸ் ஆவணங்கள்” என்கிற நூலில் பட்டியலிட்டிருக்கிறார். (Documents of the Ceylon National Congress and Nationalist Politics in Ceylon, 1929-1950, ... Department of National Archives, 1977)

சேர் பொன் இராமநாதன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பரமேஸ்வர கல்லூரியிலேயே தற்போது யாழ் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.

மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தபோது 27.11.1927 இல் இராமநாதன் கல்லூரிக்கு வந்து உரையாற்றியிருந்தார்.
இராமநாதன் சமாதி - நினைவு மண்டபம் - மருதநார் மடம், யாழ்ப்பாணம்
“சேர் இராமநாதனின் பரோகாரதிற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் நினைவாலயமாக நிலைத்து நிற்கும் இந்நிறுவனத்திற்கு வராதிருந்திருப்பேனாயின் என் வாழ்வெல்லாம் கவலைப்பட்டிருப்பேன்”
 என்று அவர் கூறியதாக 1927இல் வெளியான “இலங்கையில் காந்தி” பேசியதாக (Gandhiji in Ceylon) என்கிற நூலில் காணப்படுகிறது.

அவரது சொத்துக்களில் கணிசமானவற்றை பொதுக்காரியங்களுக்காக செலவிட்டார். பௌத்த பாடசாலைகளை நிறுவ ஆரம்பத்தில் செலவிட்டார். பின்னர் தமிழ் பாடசாலைகளையும், சைவக் கோவில்களையும் அமைத்தார். 

முஸ்லிம்கள் குறித்து
1915 கலவரத்தில் இராமநாதன் முஸ்லிம்கள் குறித்து கொண்டிருந்த பார்வை இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை முஸ்லிம் தரப்பில் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது.

•    1885 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாகச் சட்டம் குறித்த சட்டசபை விவாதத்தில் முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்களே என்று செய்த வாதம்.

•    1888இல் “இலங்கைச் சோனகர் இன வரலாறு” (Ethnology of the moors) என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையும், அதில் முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள், மதத்தால் முஸ்லிம்கள் என்கிற வாதமும். இந்தக் கட்டுரைக்கு எதிரான கருத்துக்களை அன்றே அறிஞர் சித்திலெப்பை மற்றும் ஐ.எல்.எம்.அப்துல் அசீஸ் போன்றோர் தகுந்த அளவு எதிர்வினையாற்றியுள்ளனர்.

•    1905 இல் துருக்கி தொப்பி அணிந்துகொண்டு நீதிமன்றத்துக்கு வருவதற்கு ஏற்படுத்திய தடை பற்றிய சர்ச்சையில் இராமநாதன் தடைக்கு ஆதரவாக இருந்தமை.

•    1915 கலவரத்தின் போது அவர் சிங்களத் தலைவர்களை காத்ததும், மீட்டதும். (அவர் எந்த குற்றவாளிகளையும் மீட்பதற்காக அவர் வாதிடவில்லை, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே அவரது வாதங்கள் இருந்தன என்பது தெளிவு)

இந்தக் காரணிகளை மேலதிக இனவெறுப்பு சாயம் கலந்து திரித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளையும் ஆங்காங்கு காண முடிகிறது.
அறிஞர் சித்தி லெப்பை
இராமநாதன் முஸ்லிம் இனத்துவ அடையாளத்துக்கு சார்பாக இருக்கவில்லை என்கிற வாதம் வேறு, இராமநாதன் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டார் என்கிற வாதம் வேறு. இராமநாதனை முஸ்லிம்களுக்கு எதிரானவராக நிறுவும் போக்கிற்கு தகுந்த ஆதாரங்கள் இந்த தொடருக்காக தேடிய முயற்சியில் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

மேலும் இந்த திரிபுகளின் உச்சம் என்னவென்றால் இராமநாதன் லண்டனிலிருந்து திரும்பியபோது கொழும்பில் வரவேற்றவேளை அதே நாள் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டதாகக் கூட தகவல்கள் திரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிகச் சமீபத்திய இணையத்தள கட்டுரைகளிலேயே இந்த ஆதாரமற்ற திரிபுகள் புனையப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவற்றை “மூலமாகக்”  கொண்டு எழுதப்படும் வேறு கட்டுரைகளுக்கூடாக மீள, மீள அந்த புனைவுகளை மக்கள்மயப்படுத்திவிடும் ஆபத்து உண்டு. தமிழ் – முஸ்லிம் இன முறுகலை சிக்கலடையச் செய்வதற்கான வரலாற்று திரிபுகளாகவே இவற்றைக் காணமுடிகிறது.

முஸ்லிம் – தமிழ் இன விரிசல் குறித்து ஆராயும் முஸ்லிம் தரப்பு கட்டுரைகள் இராமனாதனிடமிருந்து தொடங்குவதைப் பரவலாக காணமுடியும். அவற்றில் இராமநாதனை ஒரு இனவாதியாக சித்திரிப்பதற்கு பிரயத்தனப்படுவத்தையும் காண முடிகிறது. மேற்படி நான் அடையாளம் கண்ட காரணிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவராக இராமநாதனை நிறுவுவதற்குப் போதுமானதாகத் தெரியவில்லை. அவரது எழுத்திலும் அவற்றைக் காண முடியவில்லை.

இராமநாதன் எழுதிய “1915: கலவரமும் இராணுவச்சட்டமும்” என்கிற நூலில் அவர் பதிவு செய்துள்ள கலவரம் குறித்த பதிவுகளில் சிங்கள - முஸ்லிம் இனத்தவர்களும் கலவரத்தில் சம்பந்தப்பட்ட தகவல்களை பதிவு செய்கிறார். அதில் கரையோர முஸ்லிம்கள் கலவரத்தில் ஆற்றிய பாத்திரம் கலவரத்திற்கு தூண்டுகோளாக இருந்ததை இராமநாதன் மட்டுமல்ல அன்றைய காலத்தில் ஆய்வுகளாக வெளியிட்ட பலரும் வெளியிட்ட தகவல்கள் தான் அவை. இந்த தொடர் கட்டுரை எழுதத் தொடங்கும் போதே ஏற்கெனவே இராமநாதன் முஸ்லிம்களுக்கு எதிரானவராக எம் மத்தியில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தே தொடங்கினேன். ஆனால் எனது தேடல்களில் அப்படியொரு முடிவுக்கு வர முடியவில்லை என்றே கருதுகிறேன். உறுதியான வாதங்கள் முன்வைக்கப்பட்டால் எனது கருத்தை மாற்றிக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அதேவேளை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தை மறுக்கும் இராமனாதனின் கருத்துக்கள் முஸ்லிம்களின் இனத்துவ அரசியல் இருப்புக்கு எதிரானதே. குறிப்பாக இனவாரி பிரதிநிதித்துவ அரசியல் கோரிக்கையின் போது இனத்துவ அடையாளத்தை நிறுவுவதற்கும், முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை உறுதிசெய்வதற்கும் இராமநாதனின் வாதம் தடையாகவே இருக்கும் என்பது உண்மை.

இலங்கையில் உள்ள இனக்குழுமங்களை  “சிங்கள இந்து”, “சிங்கள முஸ்லிம்”, “சிங்கள கத்தோலிக்கர்” போன்ற அடையாளங்களாகவே காணவேண்டும் என்கின்றது இன்றைய சிங்கள பேரினவாத தரப்பு. “சிங்கள பௌத்த தேசியம்” ஒன்றே இலங்கையில் இருக்கவேண்டும் என்றும் அதற்குள் அத்தனையும் அடங்க வேண்டும் என்கிறது அப்பேரினவாதம். அப்பேர்பட்ட “மண்ணின் மைந்தர்” சித்தாந்தத்திலிருந்து தொடங்கியதல்ல இராமநாதனின் கருத்தாக்கம் என்பதும் கவனிக்கத் தகுந்தது.

சரி பிழைக்கப்பால் தமிழர்களே இஸ்லாமியர்களாக ஆனார்கள் என்றும், அவர்களது பேச்சுமொழியும் தமிழாகவே இருக்கிறது என்றும் அவர்கள் மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தபோதும் இனத்தால் தமிழர்கள் என்பது இராமநாதன் தரப்பு வாதம். எந்தவொரு இனத்துவ அடையாளத்தையும் இன்னொரு இனத்தின் மீது திணிக்க முடியாது. அதுபோல தனது இன அடையாளத்தை உறுதியாகவே முன்வைத்து தம்மை வேறுபடுத்திக் காட்டும் உரிமை எந்த இனக்குழுமத்தும் உண்டு என்கிற அடிப்படையில் இருந்து இராமனாதனின் வாதத்தை மறுக்க முடியும்.

சிங்கள – தமிழ் – முஸ்லிம் என்கிற ஒரு முக்கோணச் சமரைத் தொடக்கிவைத்ததில் பிரித்தானியரின் “பிரித்தாளும் தந்திரத்திற்கு” உரிய பாத்திரம் மறுப்பதற்கில்லை. ஆனால் வரலாற்றைப் பதிவு செய்பவர்கள் திரும்ப திரும்ப சில புனைவுகளை அடுத்ததடுத்தாக பரப்பிவிடுவதன் மூலம் மேலும் இந்த நிலைமையை சிக்கலாக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

இராமநாதனுக்கு எதிரான சிங்களத் தரப்பு
இன்றைய சிங்களப் பேரினவாத தரப்பும் தமிழ் தேசியவாதத்தை எதிர்ப்பதற்கான கதையாடல்களில் இராமநாதனையும் சேர்த்துக்கொள்ளும் போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. முஸ்லிம்கள் குறித்த அவரது அணுகுமுறையையும் அவர்கள் துணைக்கு அழைத்துக்கொள்கின்றனர். இராமநாதனை தமிழ் இனவாதியாக நிறுவதில் அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனத்திற்கான காரணம் வேறொன்றும் இல்லை, “தமிழ் இனவாதம் அத்தனை பழமையானது, தொன்றுதொட்டு வருவது” என்று நிறுவதற்காகவே இராமநாதனை வலுக்கட்டாயமாக இழுக்கும் போக்கை காணமுடிகிறது.

இராமநாதனை அப்படித் திரிக்கும் சமகால முக்கிய “சிங்கள புலமைத்துவ” உதாரணங்களாக இருவரைக் கூறலாம் ஒருவர் குணதாச அமரசேகர மற்றையவர் நளின் டி சில்வா. இவர்கள் இருவரும் பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்கள். ஒன்றாக அமைப்புகள் கட்டி பணிபுரிபவர்களும் கூட. இவர்கள் இருவரும் கடந்த மூன்று தசாப்தங்களாக இனவாத அரங்கில் முக்கிய சிங்கள பௌத்த கருத்துருவாக்க சக்திகளாகக் கொள்ளலாம். சிங்கள பௌத்த இனவாத கருத்துக்களை கோட்பாட்டாக்கம் செய்து பரப்பி வருபவர்களில் முக்கியமானவர்கள். இன்றைய இனவாத அரசியல் அரங்கில் தீவிர செயற்பாட்டாளர்களாக இருப்பவர்களுக்கு இவர்கள் முக்கிய தத்துவார்த்த ஆசான்கள்.

குணதாச அமரசசேகர எழுதிய இனவாதம் பரப்பும் நூல்கள் பல. அவற்றில் “அநகாரிக்க தர்மபால மார்க்ஸ்வாதியா” என்கிற அவரது பிரபல நூலிலும் ராமநாதனை ஒரு இனவாதியாக சித்திரிக்கிறார். இவரைவிட முக்கியமான நூல் நளின் டி சில்வா எழுதிய “பிரபாகரனும் அவரின் தாத்தா, சித்தப்பா, மச்சான்மாரும்” (ප්‍රබාකරන් ඔහුගේ සීයලා බාප්පලා හා මස්සිනාලා) என்கிற நூல். பல பதிப்புகளைக் கண்ட இந்த நூல் 1995 இல் முதல் தடவையாக வெளிவந்த வேளை அதன் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடந்தபோது நானும் பங்குபற்றியிருந்தேன்.

சிங்கள சாமான்யர்கள் மத்தியில் தமிழர்கள் வந்தேறிகள், ஆக்கிரமிப்பாளர்கள், சிங்கள நாட்டை துண்டாடிச் செல்லப்போபவர்கள், சதி காரர்கள் போன்ற கருத்துக்களை பதிப்பதற்கான நூல் அது. அது குறித்து பரவலாக சாமான்யர்கள் மத்தியில் உள்ள கேள்விகளை தொகுத்து அக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கும். இந்த நூலில் ஒரு கேள்வியும் பதிலும்.
கேள்வி :“ராமநாதன், அருணாசலம் போன்றோர் இலங்கையின் சுதந்திரத்திற்காக பணியாற்றியாற்றியிருக்கிறார்கள் அல்லவா?”
பதில் : “1915 கலவரத்தின் போது அடக்குமுறைக்கு எதிராக கதைத்திருக்கிறார்கள் தான். அவர்கள் சீர்திருத்தத்தையே கோரியிருந்தார்கள். ஒன்றை மறக்கக் கூடாது அவர்கள் காலனித்துவத்திற்கு எதிராகத் தான் கதைத்திருகிறார்கள். அதேவேளை உள்நாட்டில் அவர்கள்  சிங்களவர்கள் பெரும்பான்மையினர் என்பதை ஏற்க மறுத்தவர்கள். சிங்கள மொழி, கலாசாரம், வரலாறு பற்றி பேசினாலும் அதனோடு ஒன்றவில்லை. சிங்களவர்களை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு கிடைக்கும் இனத்துவ சலுகைகள் கிடைக்காது போய்விடும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.”

தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பிரித்தானியரிடம் இருந்து தட்டிப் பரித்துக்கொண்டவர்கள் அவர்கள் என்பதை அந்த நூலில் பல இடங்களில் நாளின் டி சில்வா கூறுகிறார்.
“சட்டசபையில் சிங்கள பிரதிநித்தித்துவத்தை 50 வீதத்துக்கும் குறைவாக பேணுவதற்கு ராமநாதன் சதி செய்தார்”
போன்ற கருத்துக்களையும் அந்த நூலில் விளக்குகிறார்.

பிற்காலங்களில் அநகாரிக தர்மபால இராமநாதனை வெறுத்தாலும் ஆரம்பத்தில் ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார்.

டீ.எஸ்.சேனநாயக்க ராமநாதனை “எல்லா காலத்திற்கும் சிறந்த இலங்கையர்” (‘the greatest Ceylonese of all times’) என்றார்.

தொடரும்...

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates