Headlines News :
முகப்பு » » தேயிலையின் விலை தெரியாமலா 1000 ரூபா அறிவிக்கப்பட்டது - சிவநாகராஜ்

தேயிலையின் விலை தெரியாமலா 1000 ரூபா அறிவிக்கப்பட்டது - சிவநாகராஜ்


தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என முதலில் அறிவித்தது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். அப்படி அறிவிக்கப்படும் போது நாட்டில் தேர்தல்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததை நாம் அறிவோம். அது மட்டுமல்லாது இதற்கு முன்னர் கூட்டு ஒப்பந்தம் காலாவதியான சந்தர்ப்பங்களில் இ.தொ.காவோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய இரண்டு அமைப்புக்களோ இவ்வளவுதான் வேண்டும் என எப்போதும் சொன்னதில்லை. பேச்சு வார்த்தையிலேயே தொகை தீர்மானிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள முன்னரே இ.தொ.கா ஆயிரம் ரூபா வேண்டும் அதைத்தான் பெற்றுக்கொடுப்போம் என்று கூறியதானது தேர்தல் ஸ்டண்ட் அல்லாது வேறு என்ன? அது மட்டுமா கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஒரு வருடம் கடந்த பின்னரே தேயிலையின் விலை குறைவாக உள்ளது. கூடியவுடன் பேச்சு நடத்துவோம் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் இரண்டு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். அப்படியானால் அவர் ஆயிரம் ரூபா வேண்டும் என அறிவித்த சந்தர்ப்பத்தில் தேயிலையின் விலை அதிகரித்து இருந்ததா இப்போது இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தனை வருடங்கள் கூட்டு ஒப்பந்தம் செய்த அனுபவமிக்கவர் திடீரென ஒரு தொகையை நிர்ணயித்து இவ்வளவுதான் வேண்டும் என கேட்டது எப்படி? தேயிலை விலை அதிகரிப்புக்கு ஏற்பதான் நாளாந்த சம்பளத்தொகை தீர்மானிக்கப்படும் எனில் கடந்த காலங்களில் எவ்வளவு விலை உயர்வுக்கு எப்படி தொகை தீர்மானிக்கப்பட்டது என்பதை புள்ளி விபரங்களோடு கம்பனிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்க அமைப்புகளும் வெளியிட வேண்டும். வௌயிடுவார்களா? உண்மையில் தொழிலாளர்களின் சம்பளத்தை தொழிற்சங்கங்களை விட கம்பனிகளே இத்தனை காலமும் தீர்மானித்து வந்தன. அவர்களின் செல்வாக்கே அங்கு மிதமிஞ்சி இருக்கின்றது. இல்லாவிடின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தொழிற்சங்கங்கள் தமக்கு திருப்தியான தொகை கிடைக்காதவிடத்து தொழிலாளர்களை களமிறக்கி போராட்டம் நடத்தச்செய்து அத்தொகையை பெறலாமே? ஆகவே இத்தனை காலமும் ஏன் அப்படி நடக்கவில்லை என்பது கடந்த முறை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிய பின்னர் வெட்ட வெளிச்சமானது, அதாவது பேச்சு வார்த்தையின் போது கம்பனிகளின் கைகளே ஓங்கியிருக்கின்றன.

இல்லாவிடின் 770 ரூபாவுக்கு மேல் ஒரு ரூபாயும் தர முடியாது என்று கூறிய கம்பனிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மெதுவாக பணி செய்யும் போராட்டம் ஏன் 5 நாட்கள் கூட தாக்குப்பிடிக்கவில்லை? காலம் கனியும் போது ஆயிரம் ரூபாவை உங்களுக்குப்பெற்றுத்தருவேன் என இ.தொ.கா கூறியதன் அர்த்தம் என்ன? இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை எத்தனை வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்பதை வைத்தா இ.தொ.கா அவ்வாறு அறிவிப்பு செய்தது? இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு 20 வீத சம்பள அதிகரிப்பே செய்யப்பட்டுள்ளது. அப்படிப்பார்க்கும் போது 2013 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் 450 ரூபாவும் ஏனைய கொடுப்பனவுகள் உள்ளடங்களாக 620 ரூபா கைச்சாத்திடப்பட்டது. (2011 மொத்தத்தொகை 572 ஆக இருந்தது) இதன் படி 2015 ஆம் ஆண்டு அடிப்படை சம்பளம் 550 ரூபாவாக அதிகரித்திருக்கப்பட்டிருக்க வேண்டும். எல்லா கொடுப்பனவுகளையும் சேர்த்து 750 ரூபாவாக இது அமைந்திருக்கலாம்,எனினும் கம்பனிகள் 770 ரூபாவுக்கு இணங்கின. அப்படியே 770 ரூபாவுக்கு கைச்சாத்திட்டிருந்தாலும் அடுத்த இரண்டு வருடங்களுக்குப்பிறகு (2017) இது 870 ரூபாவாக இருக்கும். எனினும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பின் படி இதை 950 ரூபா வரை கொண்டு செல்ல வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பார்க்கும் போது இ.தொ.கா கூறிய 1000 ரூபாவானது 2017 ஆம் ஆண்டுக்குப்பிறகே சாத்தியமாகக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆகவே தேயிலை விலை அதிகரிப்பு போன்ற சிறுபிள்ளைத்தனமான கதைகளை எல்லாம் விட்டு விட்டு பார்த்தால் தொழிலாளர்களுக்கு 2017 ஆம் ஆண்டு தான் காலம் கனியும் போலுள்ளது. இதை விட தேயிலை விலை அதிகரிப்புக்கு ஏற்பவே நாம் பேச்சு நடத்த முடியும் என்றால் அதையும் இ.தொ.கா விலாவாரியாக ஒரு கிலோ தேயிலை எவ்வளவாக இருக்கும் போது ஆயிரம் ரூபா கேட்க முடியும் என்பதை தொழிலாளர்களுக்கும் ஏனையோருக்கும் விளக்குமா?

நன்றி - சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates