Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு

பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்தல் - செயலமர்வு

வீரகேசரி, Varite Research ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய செயலமர்வு

இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் பெருந்தோட்டக் கைத்தொழில் அண்மைக்காலமாக வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருக்கிறது. இதனால் எற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைவது மாத்திரமல்ல அந்த பெருந்தோட்டத் துறையில் தங்கிவாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. நாளாந்த சம்பளத்துக்காக கூட இன்றும் போராடிக்கொண்டிருக்கிற நிலைமை தொழிலாளர்கள் மட்டத்தில் காணப்படுகின்றது. எனவே தோட்ட முகாமைத்துவமும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களும் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலம் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருக்கும் இந்தக் கைத்தொழிலை மீளவும் சக்திமயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வீரகேசரி நிறுவனம் வரிட்டே ரிசேர்ச் எனப்படும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ஆய்வு குறித்த செயலமர்வு அண்மையில் கொழும்பு லக்ஷ்மன்; கதிர்காமர் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வீரகெசரி நிறுவனத் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெரிட்டே ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் கலாநிதி. நிஷாந்த டிமெல் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். ‘பெருந்தோட்டக் கைத்தொழிலை சக்திமயப்படுத்துவதில் தொழிற்சங்கங்களின் வகிபாகம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய ஆய்வாளர் தொழிலாளர்கள் (தொழிற்சங்கம்), முகாமைத்துவம், அரசு என மூன்று தரப்பினரும், எவ்வாறு இதற்கு பங்களிப்பு வழங்கலாம் என விரிவான விளக்கத்தை வழங்கினார்.

 உண்மையில் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் பக்கம் நின்று முழுமையாக பணியாற்றுவதில்லை என தெரிவித்த ஆவாய்ளர் தோட்ட முகாமைத்துவம் இன்னும் ‘பண்ணையார் - கொத்தடிமைகள்’ போன்ற மனநிலையில் பணியாற்றுவதாகவே தனது ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார். அதேநேரம் அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தில் பெருந்தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது அந்த மக்களின் பின்னடைவுக்கு பிரதான காரணம் எனவும் தெரிவித்தார்.

எனவே இந்த மூன்று பிரிவினரும் ஒருமித்த கருத்தொருமைபாட்டுக்கு வருவதன் மூலம் மாத்திரமே இந்த பெருந்தோட்டக் கைத்தொழிலை வெற்றிகரமானதாக மாற்ற முடியும். தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனே சம்பளத்தை மாத்திரமின்றி தமக்கான கௌரவத்தையும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த கௌரவம் கிடைக்காதபோது அவர்கள் இந்த தொழில் துறையில் இருந்து மாறி வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர். கம்பனிகள் தொழிலாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்குரிய முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்தல் வேண்டும். அரசாங்கம் இந்த மக்கள் சமூகம் குறித்து தேசிய திட்டமிடலில் கவனம் எடுக்க வேண்டும் எனும் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் முன்வைக்க வேண்டும். குறிப்பாக பிரதேச சபைகள் சட்டத்தில் உள்ள சரத்துகள் பெருந்தோட்ட பகுதிக்கு சேவையாற்றுவதற்கு தடையாக உள்ளமை, அரச நிர்வாகப் பொறிமுறையை அடிமட்டத்தினருக்கு கொண்டு செல்லும் ‘கிராம சேவகர்களின்’ எண்ணிக்கை அந்த மக்களுக்கு போதுமானதாக இல்லாமை மற்றும் அவர்கள் தமிழ் மொழி தெரியாதவர்களாக உள்ளமை போன்றன அரச தரப்பில் செய்யப்படவேண்டிய உடனடி மாற்றங்களாக உள்ளன எனவும் கலாநிதி நிசாந்த டிமெல் தெரிவித்தார்.

பங்குபற்றுனர்கள் வரிசையில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தொழிற்சங்க பிரதிநிதிகள்,  பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதிநிதிகள் மலையக பேராசிரியர்கள் கல்விமான்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க,  தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன்,  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ்,  மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.குருசாமி,  பிரதி பொதுச் செயலாளர் சண்.பிரபாகரன்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.அருள்சாமி,  பெருந்தோட்ட கம்பனிகள் சார்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை உள்ளிட்ட பெருந்தோட்ட நிறுவனங்களின் தலைவர்களும்,   கல்விச்சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர்கள் மு.சின்னத்தம்பி,  சோ.சந்திரசேகரம்,  கலாநிதி. ஏ.எஸ்.சந்திரபோஸ் எம்.வாமதேவன் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டதுடன் கலந்துரையாடலிலும் பங்குபற்றி தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தீர்க்கப்பட முடியாத நிலைமையில் அதற்கு மாற்றீடாக தோட்டத் தொழிலாளர்கள் இடையே தேயிலைக் காணிகளை பங்கீடு செய்து ‘வெளியகப் பயிரிடல்’  (Out Growing) முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்துவது எனும் முறையே உள்ள மாற்றுவழி என முதலாளிமார் சம்மேளனத் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்க அதற்கு தானும் உடன்படுவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தமையும்,  அமைச்சர் மனோ கணேசன் இதுதொடர்பாக தாம் பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்த கருத்தும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களிடையே பகிர்ந்தளிக்கப்படப்போவதனை உறுதிபடுத்துவனவாகவுள்ளது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும்போது தொழிலாளர்களுக்கு உள்ள உத்தரவாதம் என்ன என்பது பற்றியே தொழிற்சங்கங்களும்,  அரசியல் தலைமைகளும் மலையக கல்விச் சமூகமும் அதிக அக்கறை கொள்ள வேண்டிய நிலையுள்ளது.

தொகுப்பு : ஜீவா சதாசிவம்
நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates