Headlines News :
முகப்பு » , » கூட்டு ஒப்பந்த நிபந்தனைகள் குறைந்தபட்ச வேதன சட்டமூலத்தை மீறுகின்றன ​​​​சபையில் - திலகர் எம்பி விவாதம்

கூட்டு ஒப்பந்த நிபந்தனைகள் குறைந்தபட்ச வேதன சட்டமூலத்தை மீறுகின்றன ​​​​சபையில் - திலகர் எம்பி விவாதம்


வேலையாளர்களுக்கான தேசிய குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் முனைவைக்கப்பட்டிருக்கும் சட்டமூலத்தின் பிரகாரம் பார்க்கும்போது கூட்டு ஒப்பந்த நிபந்தனை முறைகளானது இந்த நாட்டின் குறைந்தபட்ச சம்பள நிர்ணய விதிகளை மீறுவதாக அமைந்துள்ளன. இதனால்தான் நாம் தொடர்;ச்சியாகவும் கூட்டு ஒப்பந்த முறையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுவதை கேள்விக்குட்படுத்துகின்றோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

வேலையாட்களுக்கான தேசிய குறைந்த பட்ச சம்பள நிரணயம் தொடர்பான சட்டமூலம் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன சமர்ப்பித்த இந்த சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

2016 ஆம் சனவரி 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் தேசிய ரீதியாக வேலையாட்களுக்கு குறைந்த பட்ச சம்பளத்தை நிர்ணயிக்கும் சட்ட மூலம் இன்று முன்வைக்கப்படுகின்றது. இந்த சட்டமூலத்தில் ‘வேலையாள்’ என்ற வகுதிக்குள் வீட்டுப்பணியாளர்கள் அல்லது வீட்டு வேலையாளர்களளுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சட்டம் அமுலுக்கு வரும் தினம் என சொல்லப்பட்ட அதே தினத்தில் இருந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முறைசாரா தொழிலாளகவிருந்த வீட்டுவேலை செய்தல் எனும் தொழிலாளர்களுக்கு 8 மணித்தியாலம் கொண்ட ஒரு வேலை நாளுக்காக 5642 இந்திய ரூபாய்களை அடிப்படை குறைந்தபட்ச சம்பளமாக வழங்குவதற்கு சட்டம் அமுல்;படுத்தப்பட்டுள்ளது. இந்த வேலைநேரத்திற்கு மேலதிகமாக வேலை செய்யும் ஒவ்வொரு மணித்தியாலத்துக்கும் சாதாரண மணித்தியாலங்களின்போது வழங்கப்படுவதைவிட மணித்தியாலத்துக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கப்படல் வேண்டும் எனவும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நமது நாட்டிலும் தொழில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரும்போது இவ்வாறான நல்ல விடயங்களை அமுல்படுத்த முனைய வேண்டும். மாறாக வீட்டு வேலையாளர்கள் குறைந்தபட்ச சம்பள முறைமைக்குள் அடங்கமாட்டார்கள் என்பது பொருத்தமானதாகாது.

அதேபோல இந்த சட்ட மூலத்தின் பிரகாரம் தனியார் துறையின் நாள் ஒன்றுக்கான அடிப்படைச் சம்பளம் 400 எனவும் மாதாந்த அடிப்படைச் சம்பளம் 10000 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தினால் 25 நாட்கள் தவறாமல் அவர்களுக்கு வேலை வழங்கப்படுவதனாலோ அல்லது அவர்கள் வேலை செய்வதனால் மாத்திரமே இந்த அடிப்படைச் சம்பளத்தினை அவர்கள் பெற முடியும். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கூட்டு ஒப்பந்த முறை இந்த குறைந்த பட்ச வேதைனத்தை பெறுவதற்கு தடையாக உள்ளது. ஏனெனில் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் 75 சதவீத வரவு இருந்தால் மாதிரமே நாள் ஒன்றுக்கு 620 ரூபா வீதம் சம்பளம் வழங்கப்படுகிறது. தொழிலாளி ஒருவர் 17 நாட்கள் மாத்திரம் வேலைக்கு செல்வாரெனில் அது 75 சதவீத வரவப்பதிவை அடையாததன் காரணமாக நாள் ஒன்றுக்கு 450 ரூபா வீதமே சம்பளம் வழங்கப்படுகின்றது. எனவே நாட்கூலி முறையில் சம்பளம் வழங்கப்படுகின்ற தோட்டத் தொழிலாளர்களின் மாதத்திற்கான வேலை நாட்களின் எண்ணிக்கை நிச்சயமான எண்ணிக்கை கொண்டிருக்காத நிலையிலும், கூட்டு ஒப்பந்தம் கொண்டுள்ள நிபந்தனைகளாலும் மாதாந்த வேதனம் 10000 ரூபாவை அடைவது சாத்தியமல்ல. எனவே கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கின்றபோது அரசாங்கத்தினால் சட்டம் இயற்றப்பட்டு வழங்கப்படுகின்ற அடிப்படை மாதச் சம்பளத்தொகையை எட்டும் நிலை இல்லை. எனவேதான் நாம் கூட்டு ஒப்பந்த முறையை கேள்விக்குட்படுத்துகின்றோம்.
1992 ஆ; ஆண்டு பிராந்திய கம்பனிகளுக்கு கூட்டு ஒப்பந்தமுறை மூலம் அரச தோட்டங்களை கையளித்ததன் பின்னர் கடந்த 23 வருடங்களாக அரசாங்கம் எவ்விதத்திலும் தலையிடாமலேயே இருந்து வந்துள்ளது. ஆனாலும் கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் தனியார் துறைக்கு அறிவிக்கப்பட்ட 2500ரூபா மாதாந்த சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக்கொடுக்க நல்லாட்சி அரசின் தொழில் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.   சட்டமூலங்களை சமர்ப்பித்தும் வர்த்தமானி அறிவி;த்தல்களை வெளியிட்டும் அதனைப் பெற்றுக்கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான விவாதங்கள் எதிர்வரும் வாரங்களில் இந்த சபையில் விவாதிக்கப்படவுள்ளது.

அதே நேரம் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள பிராந்திய தோட்டக்கம்பனிகள் தொழிற்சங்கங்களுடன் செய்து கொள்ளும் கூட்டு ஒப்பந்த நடைமுiறையைக் கொண்டுதான் அரச கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும், அரச பெருந்தோட்ட யாக்கமும் வழங்குகின்றன. அரச கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் பெருந்தோட்டங்கள் இவ்வாறு தனியார் நிர்ணயிக்கும் சம்பளத்தை வழங்குவது எந்தவிதத்திலும் சரியான அணுகுமுறையாகக் கொள்ள முடியாது. அதேநேரம் இந்த கூட்டுத்தாபனங்களினால் நிர்வகிக்கப்படுகின்ற பெருந்தோட்டங்கள் யாவும் மிகவும் மோசமாக முகாமை செய்யப்படுகின்றது. இதனால் பெரும் நட்டத்தை அடைந்து வருகின்றன. அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கத்தை பகுதிக்கு சென்றிருந்தபோது ஹோப் தோட்டத்தில் நான் கேள்வியுற்ற செய்தி இலங்கை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஒன்று. நிர்வாகத்தினால் முறையாக நிர்வகிக்கப்படாத காரணத்தால் காடுமண்டிக்கிடக்கும் தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்க முடியாத நிலையில், தோட்டத் தொழிலாளர்கள் வறுமை நிலையிலும், ஏழ்மைநிலையிலும் தமது உழைப்பின் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு தொகைளை தலா ஒருவருக்கு 500 வீதம் கொடுத்து பீடை நாசினிகளை தெளித்து சுத்தமாக்கி கொழுந்துபறிக்க செல்கின்றனர். இதுதான் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தொழில் மீது வைத்திருக்கும் பற்று. இது ஒரு வரலாற்று சம்பவம் என்பதை நான் இந்த சபையில் தெரிவிக்க விரும்பகிறேன்.

மறுபுறம் கடந்த ஆட்சியிலே இந்த அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனங்களில் நிலுவையாக உள்ள ஊழியர் சேமலாப நிதியை செலுத்துவதற்கு மரங்களை வெட்டி விற்று வரும் வருவாயைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போதுதான் நாம் நிலைத்துநிற்கும் அபிவிருத்திப் பற்றி பேசுகின்றோம். இஙற்கையை அழித்துவிட்டு நாம் எப்படி நிலைத்துநறிக்கும் அபிவிருத்திபற்றி சித்திக்க முடியும். எனவே முறையற்ற வகையில் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்து தீர்வ தேட முயலாமல் முறையான நிர்வாகத்தைக்கொண்டு வருவதன் மூலம் இந்த நாட்டில் அதிகப்படியான தொழிலாளர்களை கொண்டிருக்கும் தொழில்துறையான பெருந்தோட்டத் துறை தொழிலாளர்களுக்கு குரிய தொழில் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகிறது.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates