Headlines News :
முகப்பு » » பாடத் தெரிவுகளில் குளறுபடிகள் தவிர்க்கப்படல் வேண்டும் - மொழிவரதன்

பாடத் தெரிவுகளில் குளறுபடிகள் தவிர்க்கப்படல் வேண்டும் - மொழிவரதன்


மலையகப் பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரப்பிரிவுகளுக்கு பாடநெறிகளை தெரிவு செய்வது தொடர்பாக வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன.

பின்வரும் சில விடயங்களை அடிப்படையாக வைத்து இப்பாடத்தெரிவுகள் இடம்பெறுதல் காலத்தின் தேவையாகும்.

*குறித்ததொரு பாடநெறியை தெரிவதால் கிடைக்கக்கூடிய பிரதிபலன்கள்

*இன்று மலையகத்தில் தேவையாக உள்ள பிரிவுகள்

*மாணவனின் இயல்பான திறமை, விருப்பு வெறுப்பு

மேற்கூறியவற்றை விட மேலும் சில விடயங்களை மையமாக வைத்து க.பொ.த உயர்தர பாடநெறிகள் தெரிவு செய்யப்படலாம். எனினும், மிகப்பிரதானமான விடயங்களே மேற்குறிப்பிட்டவை எனலாம்.

கணிதம், விஞ்ஞானப்பாடநெறிகள் மலையகத்திற்கு கேள்வியாக (Demand) உள்ள பாடத்துறைகள் ஆகும்.

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி அனுமதி, பிற ஆசிரியர் கலாசாலை அனுமதிகள் பொதுவான ஆசிரியர் நியமனங்கள் என்பனவற்றில் இப்பாடநெறிகள் மிக அதிகமாக கவனத்திற் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி அனுமதியின் போது போதிய அளவு மாணவர்கள் இத்துறைக்கு இன்மையானது சுட்டிக்காட்டப்படுகின்றது.

தொழில் என்று பார்க்கும் பொழுது இத்துறைசார் விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை கிடைக்கின்றது. ஆனால், இத்துறையில் உள்ள பிரச்சினை பலர் இப்பாட நெறிகளுக்குச் சென்று பின்னடவை சந்திப்பதாகும். காரணம் அடிப்படையான நல்ல கணித, விஞ்ஞான அறிவு போதாமையாகும்.

க.பொ.த. உயர்தரப் பிரிவுகளில் பல பாடசாலைகளில் உரிய ஆசிரியர்கள் அவ்வாறு இருந்தாலும் போதிய அளவு இத்துறையில் ஆற்றல் இல்லாமையாகும். விடயம் தொடர்பான ஞானம் கற்பித்தல் முறைமையிலுள்ள குறைபாடுகள் போன்றவற்றைக் கூறலாம்.

இந்நிலையில், மலையக மாணவர்கள் பாரம்பரியமான பாடநெறிகளை தவிர்த்து இன்று தேவையாகவும் தொழில் ரீதியான வாய்ப்புக்கள் உள்ளதுமான பாட நெறிகளை தெரிவு செய்யலாம்.

பெருமளவில் பலர் தொடாத அதேவேளையில் தொழில் வாய்ப்புக்களை தரக்கூடிய துறைகளைத் தெரியலாம். தொழில்துறை தொடர்பான வழிகாட்டல்கள் மூலம் அதிபர், ஆசிரியர்கள், தொண்டர் நிறுவனங்கள் இதனைச் செய்யலாம்.

E–tech எனும் தொழில் நுட்பப் பாடம் பற்றிய விழிப்புணர்வு மேலும் மாணவர் மத்தியில் எடுத்துச்செல்லப்படல் வேண்டும்.

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி போன்ற கலாசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவதில் பிரதேச செயலகப்பிரிவுகளின் அடிப்படையில் தெரியும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நுவரெலியா போன்ற மாவட்டங்கள் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து மட்டுமே வெற்றிடம் உள்ள பாடங்களுக்கு மாணவர் தெரியப்படுவர்.

இதேவேளை, சில மாவட்டங்களில் மிக அதிகமான பிரதேச செயலகப்பிரிவுகள் (DIVISIONAL SECRETARIAT) காணப்படின் அதிக மாணவர்கள் தெரியப்படலாம்.

இந்நிலையில், சில பாடங்களுக்கான வெற்றிடங்கள் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படாத நிலையில் மாணவர்கள் தெரியப்படமாட்டார்கள். உதாரணமாக சமூக விஞ்ஞானப்பாடநெறிக்கு வெற்றிடம் இல்லை என்பதனால் இது தொடர்பான கற்றலை மேற்கண்ட மாணவர்கள் தெரியப்பட வாய்ப்பு இல்லை.

இந்நிலைமைகளை க.பொ.த உயர்தரப்பாடசாலைகளும் கவனத்திற் கொள்வதுடன் மாணவர், பெற்றோர் கல்வி சமூகத்தினரும் கவனத்திற்கொள்ளல் வேண்டும்.

தொழிற்றுறை வழிகாட்டல்கள் மட்டுமின்றி, எப்பாடநெறியை தொடர்வது என்பது பற்றியும் மலையகத்தில் புதிய சிந்தனைகளும் தேடல்களும் இத்துறை சார்ந்தோரிடமிருந்து பெறல்படல் வேண்டும். 1 AB, 1C பாடசாலைகளில் இதற்கான செயல் அமர்வுகள், வழிகாட்டல்கள் பாடசாலையினுள்ளே மாணவர்கள் மத்தியில் செய்யப்பட வேண்டும்.

சித்திரம், மனைப்பொருளியல், விவசாயம் போன்ற பாடநெறிகள் தொடர்பாகவும் மொழிகளை கற்றல் என்பது பற்றியும் தெளிவூட்டல்கள் அவசியம்.

குறிப்பாக, பாரம்பரியமான எமது கற்கை நெறிகளும் அதனைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் மாணவர் திறன் மாணவர் விருப்பு என்பது பற்றி கவனத்திற் கொள்ளாது க.பொ.த சா/தரம் பெறுபேறுகள் வெளிவர முன்னரே தனியார் வகுப்புகளுக்கு மாணவர்களை தெரிந்து வகுப்புக்களை ஆரம்பித்து விடுகின்றனர்.

என்ன அடிப்படையில் குறித்த ஒரு மாணவன் குறித்த ஒரு பாடநெறியினை சிறப்பாகச் செய்வான் என நம்புவது ? இதில் பெற்றோர்களும் உள்ளே புகுந்து மாணவனின் திறமை, விருப்பு பற்றி எண்ணாது தாம் விரும்பும் பாடநெறிக்கு கௌவரம், அந்தஸ்து கருதி திணிப்பதைக்காணலாம்.

அப்பட்டமான பணம் பண்ணும் இந்த நடைமுறை கண்டிக்கத்தக்கது. தொடர்ந்தும் மலையக மாணவர்கள் இந்திய வம்சாவளியினர், தோட்டத்தொழிலாளர் பிள்ளைகள் என்ற அடிப்படையில் சலுகை கேட்டுப்பெற முடியாது என்பதனையே பிரதேச செயலகம் (DIVISIONAL LEVEL) அடிப்படையிலான மாணவர் தெரிவு முறை உணர்த்துகின்றது. இலங்கை எனும் தேசிய ரீதியான கொள்கைகளுக்கு புறம்பாக இந்திய வம்சாவளியினருக்கான சில வழிமுறைகள் என்பது தொடர்ந்தும் பெற முடியாத ஒன்றென்பதை நாம் உணரல் வேண்டும். அவ்வாறு சில வழிமுறைகளை உருவாக்கக்கூடிய எமது அரசியல் சக்தி எந்தளவு உள்ளது என்பதையும் சிந்தித்தல் நலம்.

என்றாலும் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏறத்தாழ முப்பது வருடத்தை பின்னோக்கிய மலையக கல்வி வரலாறு பின் தங்கிய ஒன்றென்பதும் ஓர் உண்மையே. எனினும், தேசிய ரீதியாக நாம் சிறுபான்மையினத்தவர் என்பது இதன் மற்றொரு பக்கம் ஆகும்.

எனவே, மலையகக்கல்வி முன் பல விடயங்கள் உள்ளன. பாடசாலைகள் வெறும் பாடத்திட்டங்களையும் அரசின் கொள்கைத்திட்டங்களையும் மாத்திரம் முன்னெடுப்பதாக இல்லாது எமது மலையகத்திற்கான பாடத்தெரிவுகள், பாடநெறித்தெரிவுகள் பற்றி சிந்திப்பது நல்லது.

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates