Headlines News :
முகப்பு » , , » தீக்குளிக்க புறப்பட்ட வடிவேல் சுரேஷ் : சரியா? தவறா - என்.நெடுஞ்செழியன்

தீக்குளிக்க புறப்பட்ட வடிவேல் சுரேஷ் : சரியா? தவறா - என்.நெடுஞ்செழியன்



தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை நீண்ட இழுபறியில் உள்ளது. பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமையே இதற்குக் காரணமாகும்.

2013 – 2015 காலப்பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி விட்டது. எனவே புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 9 மாதங்களாகியும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை. சம்பள உயர்வு தொடர்பில் உடன்பாடு ஏற்படாமையே இதற்கு காரணமாகும்.

தொழிற்சங்கங்கள் நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் தம்மால் அந்தத் தொகையை வழங்க முடியாதென்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மறுதலித்து வருகின்றது.

சம்பளவுயர்வு தொடர்பில் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 7 – 8 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று விட்டன. எனினும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 14ஆம் திகதி சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்கா விட்டால் சபையில் தீக்குளிக்கப் போவதாக கூறினார். அதன்படி கடந்த சனிக்கிழமை (26ஆம் திகதி) தீக்குளிப்பதற்காக பெற்றோல் கலன்களுடன் சபைக்கு வருகை தந்தார். எனினும் காவலர்கள் பாராளுமன்ற நுழைவாயிலிலேயே அவரை தடுத்து நிறுத்தி பெற்றோல் கலன்களைக் கைப்பற்றினர்.

வடிவேல் சுரேஷ் எம்.பி.யின் இந்த அணுகு முறை பல்வேறான கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளன. இது பற்றி அரசியல்வாதிகள் தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலரிடம் வினவியபோது சாதக  பாதகமான கருத்துக்களை வெளியிட்டனர். அவை இங்கே தரப்படுகின்றன.

வே. இராதாகிருஷ்ணன்  கல்வி இராஜாங்க அமைச்சர்

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை வேளையின் போது பேசிய பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மிகவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பேசியதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் கூறினார். வார்த்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பெற்றோல், மண்ணெண்ணெயுடன் சபைக்கு வந்த போதும் சபைக் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவத்தின் பின்னர் அன்று சபை சுறுசுறுப்படைந்தது.

வடக்கு  கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், ம.வி.மு. மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு காண வேண்டுமென்று சபையில் பேசினர். இதன் மூலம் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலுள்ள தீவிரத்தை நன்றாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. அதுமட்டுமின்றி எப்போதும் இல்லாத வகையில் மலையகப் பிரதி நிதிகளின் குரல்கள் தற்போது பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளமையும் ஒரு காரணமாகும். இதன் காரணமாகவே தனியார் துறையினருக்கு அரசினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலமைச்சர் கூறுவதற்குக் காரணமாக அமைந்தது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் தூண்டுகோளே இதற்குக் காரணமாக அமைந்தது. தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்காக அவர் மேற்கொண்ட செயற்பாட்டை எந்த வகையிலும் குறைவாக மதிப்பிட முடியாது.

முத்து சிவலிங்கம் (பா.உ) இ.தொ.கா.–தலைவர்

பாராளுமன்றத்தில் தீக்குளிப்பதாக தெரிவித்தமை ஒரு பெரும் கேலிக்கூத்தாகும். இதுவரை இது போன்று எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் நடந்து கொண்டது கிடையாது. இது பாராளுமன்றத்தையும் நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு நடத்தப்பட்ட நாடகம் என்றே கூற வேண்டும். பாராளுமன்றத்துக்குள் பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல் மட்டுமின்றி தீப்பெட்டியும் கூட கொண்டு வரமுடியாது. அவ்வாறு கொண்டு வந்தால் அதனை பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததாகும். இதனையெல்லாம் அறிந்திருந்தும் பாராளுமன்றத்திற்குள் தீக்குளிக்கப்போவதாக கூறி பெற்றோல், மண்ணெண்ணெய், கொண்டு வந்தது வெறும் நாடகமாகும். அது மட்டுமல்ல பாராளுமன்றத்தின் சட்ட திட்டங்கள் நடைமுறைகள் பற்றி அறியாத செயற்பாடாகும்.

தோட்டத்தொழிலாளருக்கு மாதமொன்றுக்கு 2500 ரூபா வரை சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமென்று ஏற்கனவே அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்தி அரசின் இணக்கப்பாட்டை பெற்றுள்ளோம். இவ்வாறானதொரு நிலைமையில் தீக்குளிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டமை மக்களை ஏமாற்றுவதற்கானஒரு நாடகமாகும்.

எம். திலகராஜ் (பா.உ) ஐ.தே.க.

போராட்டங்கள் பல வடிவங்களைக் கொண்டது. அது அஹிம்சையாகவும் ஆர்ப்பாட்டமாகவும் அச்சுறுத்தலாகவும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் உரிய தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகிறன.

அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினையை அனைவரது கவனத்துக்கும் கொண்டுவந்து அதன் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுப்பதற்காகவே தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

தீக்குளிக்க முற்படுவதென்பது உயிரை மாய்த்துக்கொள்வதல்ல. அவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்வதை அனுமதிக்கவும் முடியாது. ஆனால், அவர் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக மேற்கொண்ட தீக்குளிப்பு முயற்சி முழுப்பாராளுமன்றத்தின் கவனத்தையும் நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

ஊடகங்களும் கூட முக்கியத்துவம் கொடுத்தன. அந்த வகையில் தோட்டத் தொழிளாளரின் சம்பளப் பிரச்சினை அரசாங்கத்திடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் செயற்பாடு போற்றத்தக்கது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எஸ். இராமநாதன் – (பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு)

தோட்டத் தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தல் விடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. பெருந்தோட்ட மக்களுடைய வாக்குகளினால் பாராளுமன்றம் சென்றவர் அவர்களுடைய பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசி தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர அவர் இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.

தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடமும் அமைச்சர் ஜோன் செனவிரத்தனவிடமும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கிடைக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு எமது அழுத்தங்களே காரணமாகும்.

இந்த நிலையில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்வதற்காக அவர் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

மக்கள் பிரதிநிதியான ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது.

வீ. புத்திரசிகாமணி (முன்னாள் பிரதியமைச்சர்,

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் செய்தது சரியா பிழையா என்று விவாதிப்பதை விட அவரது தற்கொலை முயற்சி எவ்வாறானதொரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என்பதே முக்கியமானதாகும். ஒன்பது மாதங்களாக இழுபறி நிலையில் இருந்த தோட்டத்தொழிலாளரின் சம்பளப் பிரச்சினை வடிவேல் எம்.பி.யின் நடவடிக்கையினால் உலகமே அறியக் கூடிய பிரச்சினையாக மாறியுள்ளது.

தோட்டத் தொழிலாளரின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் மூலமே தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதன்முறையாக தனியார் துறைக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை தோட்டத் தொழிலாளருக்கும் வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொழில் அமைச்சர் கூறியிருக்கிறாரென்றால் அதற்கு பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில் வடிவேல் சுரேஷ் அவ்வாறு செய்ததை பிழை என்று கூற முடியாது.

வே.உருத்திரதீபன் நிர்வாகச் செயலாளர் – இ.தே.தோ.தொ.ச.

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக கடந்த ஒன்பது மாதங்களாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். அந்த வகையில் தொழிலாளருக்கு சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அஹிம்சை வழியில் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் போன்றவை மூலம் போராடியிருக்கலாம். அதைவிடுத்து பிழையான வழியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்துவது மற்றவர்களையும் ஊக்குவிப்பதாக அமைந்து விடும். மக்கள் பிரதிநிதி ஒருவரே இவ்வாறு வழிகாட்டுவதைப் பின்பற்றி இளைய சமூகத்தினரும் தற்கொலை வழியை பின்பற்றுவதற்கு முயற்சிக்கக்கூடும். இது சமூகத்தையே பிழையான வழியில் கொண்டு செல்லக் கூடும். நான் ஒரு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் அஹிம்சை ரீதியில் அவர் செயற்படுவாரானால் அதற்கு ஆதரவளிப்பேன். ஆனால் பிழையான செயற்பாட்டுக்கு ஒரு போதும் ஆதரவு வழங்கமாட்டேன்.

இராமலிங்கம் சந்திரசேகர் (முன்னாள் பா.உ. ம.வி.மு)

மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றாலோ அவர்களது உரிமைகளைப்பெற்றுக் கொடுக்க வேண்டுமென்றாலோ அதற்கு பல்வேறு வழிமுறைகள் அணுகு முறைகள், இருக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு பாராளுமன்றத்துக்குள் தீக்குளிக்கப் போவதாக கூறியது மக்களை ஏமாற்றும் நாடகமாகும். அது மட்டுமின்றி சுய புகழுக்காக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே கருத முடிகிறது. வடிவேல் சுரேஷ் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில் அவர் சார்ந்துள்ள கட்சி  அரசாங்கத்தினூடாக தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதனை விடுத்து தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டது நல்லதொரு செயற்படாக தெரியவில்லை.

ஆனந்தகுமார் (தொழிலாளர் கொட்டகலை) - (ஹட்டன் நிருபர்)

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீக்குளிக்கப்போவதாக அறிவித்திருந்ததை நாங்கள் வரவேற்கின்றோம். அதேவேளை மலையக பிரதேசத்தில் இவர் இவ்வாறான தீக்குளிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு அம்சமாக இருந்திருக்கும். ஆனால் தன்னை காப்பாற்றி விடுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செய்யப்பட்ட ஒரு செயலாகவே இதை நாம் கருதுகின்றோம். எந்தெந்த வகையில் தொழிலாளர்களை ஏமாற்ற முடியுமோ அந்த வகையை கையாண்டு வருபவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்ததையடுத்து நாம் வெட்கப்படுகின்றோம். உங்கள் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமானால் தொழிலாளர்களின் பலம் என்னவென்பதை எடுத்துக்காட்டி அதற்கு ஏற்றவாறு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும். வெறுமனே தீக்குளிக்கின்றேன். உயிரை விடுகிறேன் என்ற கபட பேச்சு எல்லாம் தொழிலாளர்கள் இனிமேலும் நம்பப் போவதில்லை. தொழிலாளர்களின் சக்தியை ஏனையவர்கள் உணரும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுங்கள். ஒரே வாரத்தில் நாம் எட்டக்கூடிய சம்பளத்தை பெற்று விடலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates