Headlines News :
முகப்பு » » ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு? - சபையில் திலகர் எம்.பி கேள்வி

ஐந்து வருடங்களில் ஐந்து உரைகள் இதுதானா இ.தொ.கா வரலாறு? - சபையில் திலகர் எம்.பி கேள்வி


புதிதாக பாராளுமன்றம் வந்துள்ள எங்களை ‘கத்துக்குட்டிகள்’ என விமர்சிக்கும் இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்களே உங்கள் செயலாளர் ஆறுமுகன் தொணடமான் ஐந்து வருடத்திற்கு ஐந்து உரைகளை மட்டுமே பாராளுமன்றத்திலே ஆற்றியிருக்கிறீர்கள். மலையக மக்களின் பிரச்சினைகளை மக்கள் அவையில் பேசிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரலாறு இதுதானா என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்பி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 2016 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட பெருந்தோட்ட கைத்தொழில், கிராமிய (கால் நடை அபிவிருத்தி) கைத்தொழில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட எட்டு அமைச்சுகளின் குழுநிலை விவாதம் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்திலகராஜ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 இன்றைய குழுநிலை விவாதத்தில் எட்டு அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்து விவாதிக்கப்படுகின்றது. எனக்கு ஐந்து நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த ஐந்து நிடங்களைப் பெறுமதியானதாகக் கருதுகின்றேன். கிடைக்கின்ற நிமிட நேரங்களை நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பல்வேறு பிரச்சினைகளை இந்த சபையிலே முன்வைத்து வருகிறேன். புதிய உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வந்த எமக்கு ஒதுக்கப்படும் ஐந்து ஆறு நிமிடங்கள் போதுமானதாக இல்லாத போது தனிநபர் பிரேரணைகள், சபை ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைத்தும் நாம் எமது பிரச்சினைகள முன்வைக்கிறோம். இதுவரை மூன்று மாதங்களில நான் மூன்று பிரேரணைகள் உட்பட் ஒன்பது உரைகளை ஆற்றியிருக்கிறேன்.

வீடமைப்பு அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம் அவர்கள் நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானமையை வரவேற்றுப்பேசினார். அதற்காக நன்றிகள் அதேநேரம் எங்களை கற்றுக்குட்டிகள் என்றும் விமர்சித்தார். அதற்குப்பின் எமது மலையக மக்களின் பிரதிநிதிகளான அந்த சிரேஷ்ட உறுப்பினர்களின் உரைகளில் இருந்து ஏதாவது கற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற உரைகளைப்பதியும் ‘ஹன்சார்ட்’ பதிவுகளை ஆய்வு செய்தேன்.  அப்போதுதான் மலையக மக்களுக்காக மக்கள் மன்றத்தில் அவர்கள் குரல் கொடுத்த வரலாறுகள் என்னை ஆச்சரியப்படவைத்தது. சிரேஷ்ட உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவர்கள் கடந்த ஐந்து வருடங்களில் வெறும் 13 உரைகளையே இந்த சபையிலே ஆற்றியிருக்கிறார். அதில் பெரும்பாலானவை அவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சராக இருந்தபோது வரவு செலவுத்திட்ட காலத்தில் கட்டாயமாக ஒதுக்கயிருக்க கூடிய நேரத்திலான உரைகள். அவரது கட்சி செயலாளர் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஐந்து வருடங்களில் ஐந்து உரைகளை மாத்திரமே ஆற்றியிருக்கிறார். அதுவும் அவர் கால்நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்தபோது வரவு செலவுதிட்ட விவாதத்தில் அமைச்சர் ஆற்ற வேண்டிய கட்டாய உரை மாத்திரமே.

இவர்களா எங்களை ‘கற்றுக்குட்டிகள்’ என்கிறார். வாருங்கள் இந்தக் கற்றுக்குட்டிகளிடம் கற்றுக்கொள்ள வாருங்கள்.  மலையக மக்களின் பிரச்சினைகள் ஆயிரமாயிரம் உண்டு அவற்றை தமிழ் முற்போக்கு கூட்டணியாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையிலும், எங்களது அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் அமைச்சரவையிலும்  முன்வைத்து தீர்வுக்கான வழிகளைத் தேடுகிறோம்.
விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்ட ஒரு விடயம், நாங்கள் முகவுரையாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸையும் முடிவரையாக அதன் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானையும் குறிப்பிடுகிறோம் என்று. இதோ இன்றைய உரையையே நான் உங்கள் கட்சிக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன். நீங்கள் கூறும் இ.தொ.கா வரலாறு இப்படித்தான் ஹன்சார்ட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறது. உங்களின் இந்த வரலாற்றை அதே ஹன்சார்ட்டில் பதிவு செய்ய நான் இந்த ஆவணங்களை சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.

இன்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ‘தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின்’ சம்பள விடயம் குறித்து பேசினார். மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் அவர்களும் அது பற்றிய கேள்விகளை அமைச்சரிடம் எழுப்பினார். இதோ என் வசம் தொண்டமான் மன்றத்தின் உள்ளகக்  கணக்காய்வு பற்றிய அறிக்கை இருக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகளை இந்த சபையில் சமர்ப்பித்தால் இன்று நாள் முழுதும் போதாது. ஒரேயொரு விடயத்தை வாசித்துக்காட்டி இந்த அறிக்கையை ஹன்சார்ட பதிவுகளுக்காக இந்த சபையிலே சமர்ப்பிக்கின்றேன்.
‘CR புத்தகம் ஒன்றிலேயே கணக்கு வழக்குகள் (நிதி புத்தகம்) மேற்கொள்ளப்பட்டுள்ளன.திறைசேரியின் அனுமதி பெற்ற புத்தகம் அல்லது அதன் மாதிரி அமைப்பில் தயாரிக்கப்பட்ட பட்டியல் நடைமுறையில் இல்லை’ ‘நிதிப் புத்தகம் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்படவில்லை’ 
இதுதான் தொண்டமான் மன்றம் நிர்வகிக்கப்பட்ட அழகு. இதனை இந்த சபையில் ஹன்சார்ட் பதிவுகளுக்காக சமர்ப்பிக்கின்றேன்.

இந்த சபையிலே பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் இருக்கிறார். அவரிடம் ஒரு விடயத்தை கேட்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டதிலே மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘பசுமை பூமி’ காணியுறுதிக்கான ஏற்பாட்டு பத்திரத்தை முழுமையான உறுதிப்பத்திரமாக தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சு செயலாளர் மட்டத்திலே ஒரு குழு நியமிக்கப்பட்டது. தற்போது அந்த குழுவுக்கு என்ன ஆயிற்று? எப்போது ‘பசுமை பூமி’ காணியுறுதி முழுமைபெற்ற உறுதியாக வழங்கப்படும்? இந்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நவீன் திசாநாயக்க அந்த கழு இன்னும் செயற்பாட்டில் இருப்பதாக பதிலளித்தார். அவரிடம் மீண்டும் கேள்வியை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பி;னர் திலகர், நான் அமைச்சுக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் இது குறித்து பிரஸ்தாபித்திருந்தேன். அத்தகைய குழு செயற்பாட்டில் இருந்தால் பசுமை பூமி காணியுறுதிகள் முழுமையான காணியுறுதி பத்திரங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மீண்டும் கேள்வி அனுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அது பற்றிய முழுமையான விபரம் என்வசம் இப்போது இல்லை. ஆனால் குழு செயற்பாட்டில் உள்ளது. இந்த விடயம் குறித்து நான் கவனம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates