Headlines News :
முகப்பு » , » கூட்டு ஒப்பந்த முறை மீளாய்வு செய்யப்படல் வேண்டும் - ஓத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பித்தார் திலகர் எம்.பி

கூட்டு ஒப்பந்த முறை மீளாய்வு செய்யப்படல் வேண்டும் - ஓத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பித்தார் திலகர் எம்.பி



‘பெருந்தோட்டக் கைத்தொழிலின் முக்கிய அங்கமாகத் திகழும் தேயிலை, றப்பர் தொழில் துறையானது சில பகுதிகள் அரச கூட்டுத்தாபனங்களாலும் பெரும்பகுதி பிராந்திய கம்பனிகளாலும் நிர்விக்கப்பட்டுவருகின்றது.

1992 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ‘கூட்டு ஒப்பந்தம’ மூலம் பிராந்திய கம்பனிகள் வசம் இந்த பெருந்தோட்ட நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் அதில் தங்கிவாழும் லட்சக்கணக்காண தொழிலாளர்களுக்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கபடும் ‘கூட்டு ஒப்பந்தம்’ (Collective Agreement) மூலம் நாட்கூலி தீர்மானிக்கப்படுகின்ற நிலையில் கடந்த 2015 மார்ச் மாதம் 31 திகதி முடிவற்ற ‘கூட்டு ஒப்பந்தம்’ இன்னும் புதுப்பிக்கப்படாததன் காரணமாக லட்சக்கணக்காண தொழிலாளர்கள் கடந்த ஒன்பது மாதங்களாக சொல்லொனா துண்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

இரண்டாண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் நாட் சம்பள தொகை நிர்ணயத்துக்கான ‘கூட்டு ஒப்பந்த கால’ கால இடைவெளி  ஒன்றை நிர்ணியக்கவும் அதில் கையொப்பமிடும் தரப்பினர் குறித்த சட்ட வலிது தன்மை குறித்து மீளாய்வு ஒன்றை வேண்டியும் தொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரேரணை முன்வைக்கின்றேன்’ - சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

இன்று மாலை கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விஷேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து விஷேட உரையொன்றை ஆற்றியபோது இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

ஓன்று : தேசிய சம்பள ஆணைக்குழுவை தாபித்தல்
இரண்டு : பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த முக்கியமான தருணத்திலே சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றின் ஊடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை தீர்மானிக்கும் ‘கூட்டு ஒப்பந்தம்’ மேற்கொள்ளப்படும் நடைமுறையில்’ காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்திக்க கோரும் எனது யோசனைகளை முன்வைக்க கிடைத்தமையை அரிய வாய்ப்பாக கருதுகின்றேன்.

1992ஆம்  ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதோடு 22 பிராந்திய கம்பனிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களை அரச கூட்டுத்தாபனங்களான மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் அரச பெருந்தோட்டயாக்கமும், எல்கடுவ பிளான்டேசன் எனப்படும் அசர பொறுப்பில் உள்ள கம்பனிகளும் முகாமை செய்து வருகின்றன. ஏனையவை சிறு தோட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டங்கள் பிராந்திய கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது ‘கூட்டு ஒப்பந்த’ அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்படவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் தொழிலாளர்களின் நாளுக்கான சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டது.

குறைந்தபட்ச சம்பளம் என்ற விடயம் முதன் முதலில் 1927ம் ஆண்டு சம்பளக் குழுவினால் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் (Minimum Wages Ordinance) கீழ் தீர்மானிக்கப்பட்டது. சம்பள நிர்ணயசபை தாபிக்கப்படும் வரை நாட் சம்பளத்தை தோட்ட உரிமையாளர்கள் தன்னிச்சையாகத் தீர்மானித்தனர். சம்பளத்திற்குப் பதிலாக அரிசி மற்றும் ஏனைய உணவு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியான சம்பளமும் வழங்கப்படவில்லை. (ஹன்சார்ட் பதிவுக்கு வழங்க்ப்பட்ட பகுதி)

குறைந்தபட்ச கூலிச் சட்டத்தின் கீழ் சம்பள சபை தாபிக்கப்பட்டது. அதில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்கள், தோட்ட முதலாளிகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் இடம்பெற்றனர்.

1994க்குப் பின்னர் அரசாங்கம் சம்பள நிர்ணய விடயத்திலிருந்து விலகிக் கொண்டது. அதன் பின் பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களைக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் ஒன்றின் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க ஆரம்பித்தன.

ஆரம்பத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWC), உடன் மாத்திரம் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதோடு பின்னர் இலங்கை  தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்ட தொழிங்சங்க  கூட்டமைப்பு (JPTUC), ஆகியனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளாக  கைச்சாத்திட்டன. இதுவே 1996ம் ஆண்டிலிருந்து கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. (ஹன்சார்ட் பதிவுக்கு வழங்கப்பட்ட பகுதி)
அவைக்கு தலைமைதாங்கும கௌரவ உறுப்பினர் அவர்களே 

 இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு ஒப்பந்தமானது லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடையதாகும். ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சமாக உள்ளது. எனவே கூட்டு ஒப்பந்தமானது தொழிற்சங்கம் மற்றும் அரசியல் ரீதியில் மலையகத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்று வந்துள்ளன. அந்த வகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்க அமைப்புகளுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. (ஹன்சார்ட் பதிவுக்கு வழங்க்ப்பட்ட பகுதி

இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட கால எல்லைகளை நான் இந்த உச்ச சபையிலே முன்வைக்க விரும்புகின்றேன்.

Collective agreement Year
Signed date
Agreement effect from                                                                    
1998
04/12/1998
04/12/1998
2000
20/06/2000
01/07/2000
2003
24/07/2003
24/07/2003
2004
17/02/2004
17/02/2004
2006
19/12/2006
01/11/2006
2007
10/10/2007
01/11/2007
2009
16/09/2009
01/04/2009
2011
06/06/2011
01/04/2011
2013
04/04/2013
01/04/2013

1998ம் ஆண்டு முதல் இரண்டாண்டுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் உரிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படவில்லை. என்பதை அவை கையொப்பமிட்டிருக்கும் திகதிகளை வைத்து அடையாளப்படுத்த முடியும். உதாரணமாக 2006 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒப்பந்தம் முடிவுற்ற ஒரு மாத கால இடைவெளியிலும் 2009 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒப்பந்த காலம் முடிவுற்று 5 அரை மாதங்கள் கழிந்த நிலையிலும், அதாவது 2009 ஏப்ரல் முதலாம் திகதி முடிவுற்ற ஒப்பந்தம் 2009 ஆண்டு செப்தெம்பர் மாதம் 16ஆம் திகதியே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை 2013 ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் செய்யப்பட்ட ஒப்பந்தம் 2015 மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், இன்றைய திகதியில் ஒப்பந்த காலம் முடிவடைந்து 9 மாதங்கள் கழிந்துள்ள நிலையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. 
24 மாதங்களுக்கு நடைமுறைக்கு வரப்போகும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை புதுப்பிப்பதற்கு 9 மாதங்கள் காலம் கடத்துவது திட்மிட்ட செயற்பாடாகும். இது ஒப்பந்த காலத்தின் மூன்றில் ஒரு பகுதியாகும் இந்த வருடம் கடந்த ஒன்பது மாதங்களும் முன்னைய கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைப்பணம் வழங்கும்போது, இந்த ஒன்பது மாதங்களும் அவர்களது உற்பத்திறன் அடிப்படையில் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய வருமானம் எந்த விதத்திலும் நிலுவைப் பணத்திற்குள் உள்வாங்கப்படப் போவதில்லை.

எனவே பொருளியல் நோக்கில் பார்க்கும்போது Opportunity Cost எனும் அடிப்படை பொருளியல் தத்துவமான அமையச் செலவின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பாரிய அளவு வருமான இழப்பு வருகிறது. இந்த தொகை தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதி என்பதை நாம் மறந்துதுவிடக்கூடாது. 

எனவே கடந்த ஒன்பது மாத கால இழுத்தடிப்பில் கம்பனிகள் நன்மையாகப் பெற்றுக்கொள்கின்றன.   எதிர்வரும் நாட்களில் வழங்கப்படும் என எதிரப்பார்க்கப்படும் சம்பள அதிகரிப்பின் ஒரு பகுதியை இந்த இழுத்தடிப்பின் மூலம் கம்பனிகள் சிக்கனமாக்குகிறார்கள்.
எனவே இன்றைய சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் ஊடாக நான் மூன்று  முக்கிய வேண்டுகோள்களை தொழில் அமைச்சிடம் முன்வைக்கின்றேன்.


  1. ‘கூட்டு ஒப்பந்தம்’ செய்யப்படும் கால இடைவெளி நிச்சயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது இரண்டு வருடத்தின் பின்னர் ஒப்பந்த காலம் முடிவடையும் போது அடுத்த ஒப்பந்தம் செய்யப்படும் காலம் நிச்சயமானதாக தீர்மானிக்கப்படுதல் வேண்டும். 
  1. கடந்த இருபது வருடகாலமாக மூன்று தொழிற்சங்க அமைப்புகள் மாத்திரமே இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுக்கின்றன. 40மூ அங்கத்தவர்களைக்கொண்ட தொழிற்சங்கங்களுடன் இந்த ஒப்பந்தம் செய்வதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. ஏறக்குறைய 23 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இன்று கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கு மாத்திரம் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சட்ட வலிது உள்ளதா என்கின்ற கேள்வியும் எழுகின்றது. எனவே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் சட்ட வலிது தன்மை தொடர்பில் மீளாய்வு செய்யப்படல் வேண்டும். 
  1. கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் 75 வீத வரவு இருந்தால் மாத்திரமே அவர்கள் வேலை செய்த முழு நாட்களுக்கும் அந்த வரவு கொடுப்பனவு வழங்கப்படுவது தோட்டத் தொழிலாளர்களக்கு ஒப்பந்தம் மூலம் ஏட்டளவில் சம்பள அதிகரிப்பை வழங்கி நடைமுறையில் சாத்தியமற்றதாக்கும் கைங்கரியமாகும். எனவே இந்த கூட்டு ஒப்பந்த முறை மீளாய்வக்கு உட்படுத்தப்படல் வேண்டும். (ஹன்சார்ட் பதிவுகளுக்கு வழங்கப்பட்டது) 

இந்த முறை வரவு செலவுத்திட்டத்திலே அறிவிக்கப்பட்டுள்ளவாறு மேலும் 50 வருடங்களுக்கு தோட்டங்கள் தனியார் வசம் குத்தகைக்கு விடப்படுமானால் அந்த தோட்டத் தொழில் துறை சார்ந்துவாழும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடும். தவிரவும் தொழில் துறையும் பாரிய சரிவை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. 

தேசிய சம்பள ஆணைக்குழு அமையவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ள நிலையில் அந்த தேசிய சம்பள ஆணைக்குழுவில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயமும் உள்வாங்கும் வண்ணம் அரசாங்க மத்தியஸ்தத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் மாற்றப்படவேண்டும் என கேட்டுக்கொண்டு எனது பிரேரணைக்கு ஆதரவாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்ப உள்ள நிலையில் முழுமையான உரையை ஹன்சாட் பதிவுகளுக்காக சமர்ப்பித்து விடைபெறுகின்றேன். 

(ஹன்சார்ட் பதிவுகளுக்காக வழங்கப்பட்ட உரையின் மேலதிக பகுதி)
இன்று வாழ்வுக்கான வேதனம் (Living Wage) என்பது உலகளாவிய ரீதியில் முக்கிய எண்ணக்கருவாக மாறியுள்ளது. ஒரு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற வேதனம் வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். இதனை சர்வதேச தொழிலாளர் தாபனமும் வலியுறுத்தி வருகின்றது. அந்த வகையில் பெருந்தோட்ட மக்களுக்கும் வாழ்வுக்கான சம்பளத்தை வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டும். பெருந்தோட்ட மக்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் வாழ்வுக்கான சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கத்துக்கும் கடப்பாடுண்டு. இது விடயத்தில் உற்பத்தி செலவு, இலாபம் ஆகியவற்றுக்கு அப்பால் நின்று செயலாற்ற வேண்டும்.  

இன்று தற்காலிகமாக நகர் புறங்களில் தொழில் செய்வோர் நாட் சம்பளமாக சராசரியாக 600 வரையில் உழைக்கின்றார்கள். நகரப்புற கடைகளில் வேலை செய்வோர் 800 ரூபா வரையில் உழைக்கின்றார்கள்.  கட்டுமான பணிகளில் ஈடுபடுவோர் 900-1000 ரூபா வரை சம்பளம் பெறுகின்றனர். தனியார் துறைகளில் பணிபுரியும் திறனுள்ள தொழிலாளர்கள் (Skilled Labours) 1000-2000 வரையில் சம்பளம் பெறுகின்றனர். ஆயினும் உடலை வருத்தி தொழில் செய்யும், தேசிய பொருளாதாரத்திற்குப் பெரிதும் பங்களிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் 450 ரூபாய் வேதனத்தை மாத்திரமே பெறுகின்றனர். ஏனைய துறைகளில் தொழில் செய்வோரின் வேதனம் வாழ்க்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப வருடாந்தம் மீளாய்வு செய்யப்படுகிறது. அரச துறையில் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது (Increment). அத்துடன் ஏனைய துறைகளில் அதிகமானோர் மாத சம்பளத்துக்காகவே தொழில் செய்கின்றார்கள். ஆயினும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சுமார் 200 வருட காலமாக நாட் கூலிக்காகவே தொழில் செய்கின்றார்கள். இவர்களின் வேதனம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்பட்டாலும் அது நாகரீகமான மானிட வாழ்க்கையினைக் கொண்டு நடாத்துவதற்குப் பொருத்தமற்றது. வாழ்க்கைச் செலவு சுட்டிகள் தொடர்ந்து அதிகரித்து சென்ற போதும் அதற்கான சலுகைகள் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆயினும் அரச மற்றும் தனியார் துறையில் உள்ளோர் இச் சலுகைகளை அனுபவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. சம்பளத்திற்கு அப்பால்  ETF/EPF க்கான கொடுப்பனவு, வாடகையற்ற வீடு, தண்ணீர் வசதி, இலவச சுகாதாரம், சலுகை விலையில் தேயிலை போன்ற பல சேமநல வசதிகள் வழங்கப்படுவதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிடுகின்றது. ஆயினும் இவற்றின் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. இன்று அரசால் நிறுவப்பட்டுள்ள அமைச்சும் அரச சார்பற்ற நிறுவனங்களே பெருந்தோட்டப் பகுதிகளில் இம்மக்களின் சேமநல விடயங்களில் அதிகளவில் செயற்பட்டு வருகின்றன.

இந்த நாட்டின் பிரஜைகளாகவும் தேசிய பொருளாதாரத்தின் முக்கியப் பங்காளிகளாகவும் இருக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கௌரவமான வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கத்துக்குக் கடப்பாடு உண்டு. காரணம் அரசாங்கத்தினை அமைப்பதில் மாற்றுவதில் இம் மக்கள் பங்காளிகளாக உள்ளனர். பேச்சு வார்த்தையில் அரசாங்கப் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்கேற்க வேண்டும். அன்றில் தொழிலாளர்களுக்கான மாத சம்பள முறை ஒன்றினை அறிமுகப்படுத்த முடியாமல் போகும். மாத சம்பள முறையே இன்றைய தேவையாக உள்ளது. இந்த இலக்கினை அடைய சகல தரப்பினரையும் கொண்ட கூட்டிணைந்த செயற்பாடு அவசியமாகும் என கேட்டுக்கொண்டு இந்த பிரேரணைக்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.  
Share this post :

+ comments + 1 comments

4:29 PM

very help full this massage for my life

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates